அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3649

முரசொலி கடிதங்கள் · 3649

வழக்கை எதிர்நோக்குகிறோம்!

நாள் 15.8.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3649. வழக்கை எதிர்நோக்குகிறோம்!

உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதா என்மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறாராம்! “டெசோ” மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்ததால் என்மீது தொடுக்கப்பட்ட வழக்கினைப் பற்றி கவனிக்காமல் இருந்து விட்டேன். எதற்காக வழக்கு தெரியுமா?

கடந்த மாதம் 30ஆம் தேதி (30-7-2012) “முரசொலி” கேள்வி-பதில் பகுதியில்; “தமிழகத்தில் இதுவரை எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே இரண்டு மாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் போய் தங்கியது உண்டா?” என்ற கேள்விக்கு, “இதே கேள்வியைத்தான் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறார். இந்த அளவிற்கு அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது போலும். அதைப்பற்றிய கவலை, அவருக்கு வாக்களித்தவர்களுக்கு அல்லவா ஏற்பட வேண்டும்” என்று நான் பதில் அளித்திருந்தேன். என்னுடைய இந்தப் பதில் ஜெயலலிதாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக எண்ணியும், அதை வெளியிட்ட பதிப்பாளர் முரசொலி செல்வம் மீதும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஜெயலலிதா ஓய்வெடுப்பதைப் பற்றி இந்தக் கேள்வியில் பதிலாக நான் மட்டும் கூறவில்லை. டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொன்னதையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். அதற்காக என்மீது வழக்கு போட்டபோதே, ஓய்வெடுப்பதைப் பற்றி டாக்டர் ராமதாஸ் அவர்கள்தானே கேட்டார், நல்ல வேளையாக அவர்மீது வழக்கு இல்லை என்று எண்ணினேன். ஆனால் இன்றைக்கு அவர் மீதும் வழக்கு போட்டு விட்டார்கள். அவர்கூட ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று சொல்லவில்லை. அவர்

சொல்லியிருப்பது, “இந்தியாவில் எந்த முதலமைச்சராவது, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறேன்னு மாசக் கணக்கில் மலையில் உட்கார்ந்துட்டு இருக்காங்களா?” என்றுதான் கேட்டிருக்கிறார். உடனே நமது முதலமைச்சர் அவரைத்தான் டாக்டர் ராமதாஸ் களங்கப்படுத்தி பேசிவிட்டார் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள்.

30-7-2012 அன்று நான் கேள்வி-பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை. “மத்திய அரசின் திட்டங்களை மறைக்கின்ற மாய்மாலம்” என்ற தலைப்பில் மொத்தம் ஆறு கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தேன். முதல் கேள்வி காஞ்சிபுரத்தில் கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட “பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா” பற்றியதாகும். ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவின் பெயர் எழுதப்பட்டுள்ள புகைப் படத்தையே வெளியிட்டு, அந்தப் பூங்கா எப்போது அறிவிக்கப்பட்டது, அதிலே மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன, அந்தத் திட்டத்தை தற்போதுதான் ஜெயலலிதா அறிவிப்பதைப் போல கூறியிருப்பது சரிதானா என்று நான் கேட்டிருக்கும் கேள்விகளாகும். இதற்கு அரசு சார்பில் இதுவரை பதிலளிக்கவில்லை, வழக்கு போடவில்லை. காரணம் மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்து நான் எழுப்பிய கேள்வியில் இந்த ஆட்சியினரை, முதலமைச்சரைக் களங்கப்படுத்தவில்லையாம்! இந்தக் கேள்விக்காக ஏன் வழக்கு போடவில்லை? ஒருவேளை எனது இந்தப் பதிலை உண்மை என்று ஜெயலலிதா ஒப்புக் கொண்டுவிட்டாரா?

இரண்டாவது கேள்வி, இந்த ஆட்சியில் விலைவாசி பற்றியதாகும். அதற்கும் முதல் நாள் பொதுவான ஏடுகளில் வெளிவந்த விலைவாசிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, அ.தி.மு.க. ஆட்சியிலே எந்த அளவிற்கு விலைகள் உயர்ந்திருக்கின்றன என்ற புள்ளி விவரங்களைக் கொடுத்திருந்தேன். அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசியினாலும் இந்த ஆட்சியினருக்கு களங்கம் ஏற்படுத்தப்படவில்லையாம்! இதற்காக ஏன் என் மீது வழக்கு தொடுக்கவில்லை? அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசிகள் உயர்ந்து விட்டன என்று தன்னிலை விளக்கம் தருகிறார்களா?

மூன்றாவது கேள்வி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு “மாமூல்” கொடி கட்டிப் பறக்கிறதே என்ற கேள்வியாகும்.

அதற்கும் “காவல் நிலையத்தின் கதை” என்ற தலைப்பில் “ஆனந்தவிகடன்” வார இதழில் வெளிவந்த விவரங்களையே கொடுத்து எந்த அளவிற்கு “மாமூல்” கொடி கட்டிப் பறக்கிறது என்பதை விளாவாரியாக எழுதியிருந்தேன். காவல் துறையைக் கையிலே வைத்துள்ள முதல் அமைச்சருக்கு “மாமூல்” பற்றிய விவரங்களாலும் களங்கம் ஏற்படவில்லையாம்! ஏனென்றால் ஒவ்வொரு நாளும் காவல் துறையின் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?

இன்னொரு கேள்வி “இந்தியா டுடே” பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் செங்கோட்டையன் பதவி நீக்கம், கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் மீண்டும் வருவதைக் காட்டுகிறது என்பது பற்றியதாகும். வெளிச்சத்திற்கு வரும் உள்கட்சி நிலைமைகளாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எந்தக் களங்கமும் இல்லையாம்!

ஐந்தாவது கேள்வி, அரசின் மிகப் பெரிய திட்டங்களையும் பாலங்களையும் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே திறந்து வைக்கும் முதலமைச்சர் ஒரு வங்கியின் சிறிய ஏ.டி.எம். மையத்தை நேரில் கலந்து கொண்டு திறந்து வைத்திருக்கிறாரே என்பதாகும். அதிலும் பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்க முடிவெடுக்காத நிலையில் சிறிய ஏ.டி.எம். மையத்தைத் தொடங்கி வைத்ததில் எந்த ஆட்சேபணையும் இல்லையாம்!

ஆனால் “தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும் போதே, இரண்டு மாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா” என்ற கேள்விக்கு, “இதே கேள்வியைத்தான் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறார். அந்த அளவிற்கு அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது போலும்! அதைப் பற்றிய கவலை அவருக்கு வாக்களித்தவர்களுக்கு அல்லவா ஏற்பட வேண்டும்” என்று பதில் அளித்திருந்தேன். இந்தப் பதிலிலே முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்துவது போல ஏதாவது உள்ளதா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள், நடுநிலையாளர்கள் விருப்பு வெறுப்பின்றிச் சிந்திக்கக்கூடியவர்கள்தான் கூற வேண்டும்.

அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் கொடநாடு எஸ்டேட்டில் முதலமைச்சர் ஓய்வு எடுத்ததாகச் செய்தி

போடப்பட்டுள்ளது. அந்தச் செய்தி தவறானதாகும், உண்மைக்கு மாறானதாகும், முதலமைச்சர் கொடநாட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில்கூட முதலமைச்சர் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றினார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறார், அது தவறு என்று நான் என் பதிலில் கூறவே இல்லை. இதற்கு முன்பு எந்த முதலமைச்சராவது அவ்வாறு ஓய்வு என்ற பெயரில் தங்கியது உண்டா என்ற கேள்விக்கு, இதே கேள்வியை டாக்டர் ராமதாஸ் அவர்களும் கேட்டிருக்கிறார், அந்த அளவிற்கு அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது போலும், அதைப் பற்றிய கவலை அவருக்கு வாக்கு அளித்தவர்களுக்கல்லவா ஏற்பட வேண்டும் என்றுதான் பதில் அளித்திருக்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது?

இன்னும் சொல்லப்போனால், இதற்கு அடுத்த கேள்விக்கு நான் பதில் கூறும்போதே, “நமது முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு சென்றும் ஓய்வெடுக்கவில்லை, அன்றாடம் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்” என்று எழுதியிருக்கிறேனே தவிர, முதலமைச்சர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அந்தப் பதிலிலே கூறப்படவில்லை. இந்த நிலையில் என்மீது வழக்கு தொடுத்திருப்பது வேடிக்கையாக இல்லையா?

முதலமைச்சர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகுகூட தலைநகரம் திரும்பியிருக்க வேண்டியதில்லை. விரும்பி மாற்றிக் கொண்ட சென்னை, கோட்டை அலுவலகத்துக்கே வராமல்; கொடநாட்டில் இருந்தபடியே வழக்கம் போல அவர் தன் பணிகளைத் தொடரலாம். அவர் மட்டுமல்ல; அவரது அமைச்சரவையிலே உள்ள ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது ஊர்களிலேயே தங்கிக் கொண்டு, கடமை ஆற்றலாம். ஏன் அதிகாரிகள் எல்லாம் கூட அவரவர்கள் வீடுகளிலேயே தங்கிக் கொண்டு கோப்புகளையெல்லாம் வீட்டிலே இருந்தபடியே கையெழுத்திட்டு அனுப்பலாம். இது பேச்சுரிமை-எழுத்துரிமை-கருத்தை வெளியிடும் உரிமையுள்ள ஜனநாயக நாடு என்று நினைத்துக் கொண்டு அதைப்பற்றி யாராவது வாயைத் திறந்தால் உடனே அரசு வழக்கறிஞர்களைக் கொண்டு நீதிமன்றங்களிலே வழக்குகளைத் தொடுக்கலாம்.

ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு. ஆனால் தமிழகத்திலே எத்தனை வழக்குகள்? என் மீது வழக்கு - என் மகன், மு.க. ஸ்டாலின் மீது வழக்கு - இன்றைக்கு டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு - எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்கு - பத்திரிகைகள் மீதெல்லாம் வழக்கு - நக்கீரன் மீது வழக்கு - முரசொலி மீது வழக்கு - தினகரன் மீது வழக்கு - இந்தியா டுடே மீது வழக்கு - இந்து பத்திரிகை மீது வழக்கு - டைம்ஸ் ஆப் இந்தியா மீது வழக்கு - ஆனந்த விகடன் மீது வழக்கு! என்ன நடக்கிறது தமிழ்நாட்டிலே?

நான் எழுதிய பதிலில் அதாவது முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு சென்றும் ஓய்வெடுக்கவில்லை என்ற வார்த்தைகளுக்குப் பிறகும் என் மீது அவதூறு வழக்கைத் தொடுத்துள்ள ஜெயலலிதா அவர்கள், கடந்த காலத்தில் தி.மு. கழக ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த என்னைப் பற்றி வெளியிட்ட ஒரு சில விமர்சனங்களை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

● கோடி கோடியாய்க் கொட்டி வைத்திருக்கும் கஞ்சப் பிரபு!

● எச்சில் கையால் காக்கையைக் கூட விரட்டாத மனிதர்!

● புத்தக வியாபாரம் நடத்தி வேடிக்கைப் பிச்சையெடுத்து வீட்டுக்குப் பணம் சேர்க்கிறார்.

● அவர் ஒரு தீய சக்தி.

● மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மையாலும், சுயநலப் போக்கினாலும், தீவிரவாத ஆதரவுப் போக்கினாலும், தமிழக மக்கள் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

● ஓகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற துணிவில்லாத, வக்கில்லாத, திராணியற்ற முதலமைச்சர், கோழைத்தனமான முதலமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும். இத்தகைய முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை.

● டிக்கெட் இன்றி சட்டை பாக்கெட்டில் பணமின்றி திருவாரூரிலிருந்து திருட்டு ரெயில் ஏறி வந்தவர்.

இவ்வாறு என்னைப் பற்றி குறிப்பிடுவது மாத்திரமல்ல; மேலும் பல அகில இந்தியத் தலைவர்களைப் பற்றி ஜெயலலிதா தெரிவித்த களங்கமில்லாத சில வார்த்தைகளைச் சொல்லட்டுமா?

● திருமதி சோனியா காந்தி பற்றி வெளிநாட்டுக்காரி என்றும், இந்திய பணத்தைக் கொள்ளை அடிக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

● திரு. வாஜ்பாய் அவர்களைப் பற்றி நடுநிலை தவறி நடக்கிறார் என்றார்.

● திரு. அத்வானி அவர்களைப் பற்றி செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

● திரு. நரசிம்மராவ் அவர்களைப் பற்றி செயல்படாத பிரதமர் என்றும் அவருக்கும் தனக்கும் தலைமுறை இடைவெளி என்றும் குறிப்பிட்டார்.

● திரு. ராஜீவ்காந்தி கொலையில் மூப்பனாருக்கும் பங்கு உண்டு என்று சேலத்தில் பேசினார்.

● திரு. சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பேரவையிலேயே சொன்னார்.

● திரு ராஜீவ் காந்தி பத்து மணிக்கே தூங்கச் சென்று விட்டார் என்றார்.

● திரு. சந்திரபாபு நாயுடு மோசடி பேர்வழி என்றார்.

● மக்கள் திலகம், எம்.ஜி.ஆரை ஜானகி அம்மையார் மோரில் விஷம் வைத்துக் கொன்று விட்டார் என்றார்.

● திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தை இவ்வளவு அகம்பாவம் கூடாது என்றார்.

● கர்நாடக மாநில அரசையே கலைக்க வேண்டுமென்றார்.

இப்படியெல்லாம் பேசி அகில உலகப் புகழ் பெற்றவர் தான் நான் ஏதோ எழுதி அவரைக் களங்கப்படுத்தி விட்டதாக வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கைச் சந்திக்க நான் தயார். வழக்கு வரட்டும். அப்போது இந்த உலகத்திற்கு சொல்லப்பட வேண்டிய பல செய்திகள் வெளிவரும். முதன் முதலாக முதல் அமைச்சரே சென்று மாதக்கணக்கில் தங்குகின்ற அளவிற்கு

உள்ள அந்த கொடநாடு எஸ்டேட் யாருடையது? அது எப்படி வாங்கப்பட்டது? என்ன விலை? அந்தக் கொடநாடு அரண்மனையை ஜெயலலிதா முதலமைச்சர் என்ற முறையில் அதிகாரப்பூர்வமாகத் தங்குவதற்கு சட்டம் இடமளிக்கிறதா? அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்றால், அங்கே ஒரு முதலமைச்சர் சென்று தங்குகின்ற காரணத்தால், அந்தத் தனியார் இந்த அரசிலே உள்ளவர்களிடம் செல்வாக்கைக் காட்டி காரியம் சாதித்துக் கொள்ள முடியுமல்லவா? உள்ளூரிலே உள்ள மக்களுக்கு அந்த எஸ்டேட் வழியாக செல்லக் கூடிய வாய்ப்பு இருந்ததுகூட தடுக்கப்பட்டு, அது உச்ச நீதிமன்றம் வரை நடைபெற்று, அந்தப் பாதையை அனுமதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றமே அனுமதித்ததே, அது பற்றிய விவரம் என்ன? முதலமைச்சர் அங்கே சென்று தங்கிய காரணத்தால், அவரைச் சந்திக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் சென்றார்களே, அதற்கான செலவு எவ்வளவு? அது யாருடைய பணம்? மக்களின் வரிப்பணமா அல்லது சொந்தப் பணமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பதற்காகவாவது வழக்கை எதிர்நோக்குவோமாக!

அன்புள்ள, மு.க. 15-8-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 394–400. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்