முரசொலி கடிதங்கள் · 3594
அன்றும், இன்றும் ஒரே நிலைதான்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3594. அன்றும், இன்றும் ஒரே நிலைதான்! உடன்பிறப்பே,
“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்று தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்! அதைப்போல இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான மனப் போக்கும், செயல்பாடும் ஊரறிய வெளியாகியுள்ளன. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாதாடி, சட்டமன்றத்தின் சார்பிலும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்ட நேரத்தில் முதலில் பிடிவாதமாக அதை மறுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இறுதியாக தமிழர்களின் இன எழுச்சியைக் கண்ட பிறகு பேரவையிலே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியபோது ஜெயலலிதா தனது உரையில், அரசியல் அமைப்புச் சட்ட விதி 161 இன் கீழ் மாநில முதலமைச்சருக்கு இதில் அதிகாரம் இல்லை என்றும், மாநில கவர்னருக்கும் அதிகாரம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இன்று வரை ஜெயலலிதா அதே கருத்தைத்தான், அதாவது இதிலே மாநில முதல் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று தான் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார். இருந்த போதிலும், அவர் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதையே மூன்று பேர்களின் உயிர்களையும் “அம்மா” காப்பாற்றிவிட்டார் என்றெல்லாம் கூறி நன்றி அறிவித்து “போற்றி” பாடினர் சிலர்!
ஆனால் தமிழகச் சட்டப் பேரவையில் 30-8-2011 அன்று அவர் 110வது விதியின்கீழ் படித்த அறிக்கையில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று மேதகு ஆளுநர் அவர்கள்
21-4-2000 அன்று ஒப்புதல் அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். நாம் கடைப்பிடித்த அதே முறையில்தான் இந்த மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறை தமிழக அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் உண்மையிலேயே இருக்குமேயானால், தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டுமென்று நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தோம். இருந்தும் இன்று வரை அதனைச் செய்ய ஜெயலலிதா முன்வரவில்லை. அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முன்வராத நிலையில் தற்போது தமிழக அரசின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த கோரிக்கை மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கூறியிருப்பதில் இருந்தே, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்பது ஜெயலலிதாவிற்கு “புகழ் பாடிக்” கொண்டிருந்த சிலருக்கு நன்கு புலப்படும் என்று நம்புகிறேன்.
தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்றதைத்தான் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்றையதினம் செய்தியாளர்களிடம் கூறும் போது நினைவூட்டியதோடு இன்றைய தமிழக அமைச்சரவை 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். நான் அப்போது செய்ததையும், இப்போது சொன்னதையும் அவர் நினைவூட்டிய போதிலும், என்னையும் ஜெயலலிதாவையும் “ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” என்று கூறி தனது ஆத்திரத்தைக் கக்கியிருக்கிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அவர் கழகத்திலே ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும் - கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கழுத்தறுப்பு வேலை செய்த ஜெயலலிதாவும் வைகோவுக்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தெரிகிறார்கள் என்றால், அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. என் செய்வது? “பூனை இளைத்தால் எலி கூட “மச்சான்” முறை கொண்டாடும்” என்பது பழமொழி அல்லவா?
தூக்குத் தண்டனை கைதிகளுக்காக உயர் நீதிமன்றத்தில் திரு. ராம்ஜேத் மலானி அவர்களோடு இணைந்து வாதாடிய மற்றொரு மூத்த வழக்கறிஞர் திரு. காலின் கன்சால்வஸ் (Colin Gonsalves) கூறியதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டுள்ள செய்தியில், “The Chief Minister has the power to reduce Capital Punishment to life in Jail, and it is the right time to convene a Meeting and take a Cabinet Decision; ....... Jayalalithaa can exercise her power to stay the death sentence under Article 161 of the Constitution .... said one of the three advocates, Colin Gonsalves, who appeared before the High Court for the convicts.”
(“மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான அதிகாரம் முதல் அமைச்சருக்கு இருக்கிறது, அது தொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுப்பதற்கான சரியான தருணம் இது..... அரசியல் சட்டம் 161 வது பிரிவின் கீழ் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரத்தை ஜெயலலிதா பயன்படுத்த முடியும்..... என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வாதாடிய மூன்று வழக்கறிஞர்களில் ஒருவரான திரு. காலின் கன்சால்வஸ் கூறியிருக்கிறார்.)
29-8-2011 அன்று 110வது விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிக்கை படித்த முதலமைச்சர் ஜெயலலிதா, 19- 4-2000 அன்று தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போது நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தன்னையும் அறியாமல் நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைவதற்கு; அடிப்படையில் தி.மு. கழக அரசு தான் காரணம் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் நளினி உள்ளிட்ட இந்த நால்வரின் தூக்குத் தண்டனையை 11-5-1999 அன்று உறுதி செய்தது. அதே உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு 8-10-1999 அன்று நிராகரிக்கப்பட்டுவிட்டது. 17-10-1999 அன்று ஆளுநரிடம் அளித்த கருணை மனுக்களை அவர்
27-10-1999 அன்று நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்தான்; 25- 11-1999 அன்று; ஆளுநர் நிராகரித்த ஆணையை தள்ளுபடி செய்துவிட்டு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்கிட தீர்ப்பளித்தது. அந்தச் சூழ்நிலையில்தான் 19- 4-2000 அன்று கழக அமைச்சரவை கூடி முடிவெடுத்தது. ஜெயலலிதா படித்த அதே அறிக்கையில் - “இந்த மூன்று நபர்களும் மேதகு குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28-4-2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது” என்றும் சொல்லியிருக்கிறார். அவ்வாறு 28-4-2000 அன்று தி.மு. கழக அரசு மத்திய அரசுக்கு அந்த கருணை மனுக்களை அனுப்பி வைத்ததின் காரணமாகத்தான் அவர்கள் மூவரின் தண்டனை நிறைவேற்றப்படாமல் இந்த 11 ஆண்டுக் காலமும் அவர்கள் சிறையில் நீடிக்க முடிந்தது என்பதை ஜெயலலிதாவே தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வாறு அமைச்சரவையில் முடிவெடுத்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய மனு மீது கடந்த 11 ஆண்டுக் காலமாக குடியரசுத் தலைவர் அலுவலகம் முடிவெடுக்காமல் இருந்த காரணத்தால்தான் தற்போது உயர்நீதி மன்றத்தில், அதையே ஒரு காரணமாக வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறி, நீதி மன்றம் தண்டனையை ஒத்தி வைத்திருக்கிறது. ஜெயலலிதா, 23-10-2008 தேதிய “நமது எம்.ஜி.ஆர்.” இதழில் வெளியிட்ட அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “தமிழகத்தில் அமைதி நிலவ பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசை வற்புறுத்தினேன். என்னுடைய பெருமுயற்சியின் காரண மாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் 14- 5-1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக
வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவான செயல்கள் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் நடைபெற்று வருகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரைப் பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான, தேச விரோத கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து களைத் தெரிவிப்பவர்கள் மீது கருணாநிதி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை......... தற்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன். எனது ஆட்சிக் காலத்தில் இது போன்று பேசியவர்கள் மீது “பொடா” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைச் சிறையில் அடைத்தேன். தற்போது “பொடா” சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேசவிரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்து விட்டனர். “பொடா” இல்லா விட்டாலும், தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பது என்பது ஒரு தேச விரோதச் செயல். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் கிடையாது.” என்றெல்லாம் 2008ஆம் ஆண்டு ஜெயலலிதா அறிக்கை விட்டார்.
ஏற்கனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தி.மு. கழக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட இருவர் கொடுத்துள்ள வாக்கு மூலங்களை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக தோழர் தியாகு - தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்ட இடதுசாரி இயக்கத் தோழர்களில் ஒருவர். அவர் கூறியதை அப்படியே சொல்கிறேன், “கட்சி எடுத்த முடிவின்படி ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த முத்துதங்கப்பா என்பவர் 1970இல் படுகொலை செய்யப்படுகிறார். இதில் நான் உட்பட தோழர்கள் ரெங்கசாமி லெனின், குருமூர்த்தி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகிறோம். எங்கள் மீதான வழக்கு செசன்ஸ் கோர்ட்டில் நடந்து 1972இல் எங்கள் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறோம். ஆனால் உயர் நீதிமன்றமும் எங்களின் தூக்குத் தண்டனையை உறுதி செய்கிறது. அப்போது தமிழக முதல்வராக கலைஞர் இருந்தார். உயர் நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு ஆளுநரிடம் நாங்கள் விண்ணப்பித்தோம். ஆளுநரும் தமிழக அரசிடம் இது குறித்து கருத்துரு கேட்டார். அப்போது கலைஞர் தனது அமைச்சரவையைக் கூட்டி எனது கருணை மனு மீது விவாதித்து ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று முடிவு செய்து அதை ஆளுநருக்குப் பரிந்துரைத்தார். அதன்படி ஆளுநர் எங்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். இதன் மூலம் தூக்குக்கயிற்றை முத்தமிட இருந்த நாங்கள் காப்பாற்றப்பட்டோம். தேசத்தின் குடியரசுத் தலைவருக்கும் மாநிலத்தின் ஆளுநருக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் கருணை மனுக்கள் அனுப்பலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவரிடமோ ஆளுநரிடமோ மாநில அரசு பரிந்துரைக்க முடியும். நமது அரசியல் சட்டத்தில்; அதிகாரம் உண்டு, அதிகாரம் இல்லை என்கிற சர்ச்சைகள் எப்போதும் நடப்பதுதான். அதுதான் இப்போது நடக்கிறது. அதிகாரம் இருக்கிறது என்கிறோம் நாம். ஆனால் ஜெயலலிதாவோ தனக்கு அதிகாரம் இல்லை என்கிறார். “அதிகாரமிருந்தால் காப்பாற்றுவேன்” என இதில் அர்த்தம் தொனிப்பதால், அதிகாரம் இருக்கிற குடியரசுத் தலைவருக்கு
மூவரையும் காப்பாற்றும்படி ஒரு வேண்டுகோளை ஜெயலலிதா விடலாமே? சட்ட அதிகாரமில்லை என்பவர் இதையாவது செய்யலாமே” என்று தோழர் தியாகு கூறி, அதனை “நக்கீரன்” வெளியிட்டுள்ளது. தியாகுவைப் போலவே பெண்ணாடம் புலவர் கலிய பெருமாளின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்யப்பட்டது. அவர் தற்போது உயிரோடு இல்லை. 2007இல் மறைந்து விட்டார். அவரது இளைய மகன் சோழநம்பியார் “நக்கீரன்” இதழுக்கு அளித்த பேட்டியில், “போலீஸ் இன்ஃபார்மர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பா கலியபெருமாள், எனது சகோதரர் வள்ளுவன், நான் மற்றும் என் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்படுகிறோம். வழக்கு விசாரணை கடலூர் அமர்வு நீதி மன்றத்தில் நடந்தது. 1971இல் அப்பா கலிய பெருமாளுக்கும் அண்ணன் வள்ளுவனுக்கும் நீதிபதி சிங்காரவேலு தூக்குத் தண்டனை விதித்தார். மற்ற எங்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை. அண்ணன் வள்ளுவன் மட்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து உயர்நீதி மன்றமே அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அப்போது தோழர் கல்யாணசுந்தரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால், அவர் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரியைச் சந்தித்து கலியபெருமாள் பற்றி கூறியபோது, நீங்கள் மக்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வையுங்கள் என்று ஒரு கருத்தை வெளிப்படுத்தினார் கிரி. அதன்படி பெண்ணாடத்தில் மாநாடு நடத்தி ஒரு லட்சம் கையெழுத்து பெற்று 1974இல் தமிழக ஆளுநருக்கு அனுப்பினோம். அவர் அதனை அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்கு அனுப்பினார். கலைஞர் தனது அமைச்சரவையில் இதனை விவாதித்து, மாநில அரசுக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி புலவர் கலிய பெருமாளின் தண்டனையைக் குறைக்கலாம் என்று சொல்லி அதன்படி முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைத்தார் கலைஞர். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று எனது அப்பாவின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் ஆளுநர். எனவே மாநில முதல்வர் மனது வைத்தால் தூக்குத் தண்டனையிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியும், மாநில முதல்வருக்கு அப்படிப்பட்ட மனது இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது” என்று விவரித்திருக்கிறார்.
இந்த இருவரின் கூற்றினை மனதிலே கொண்டுதான் மரணத்தின் பிடியிலிருந்து சிலர் விடுவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161 இன் கீழ் இந்த மூவரையும் காப்பாற்றிடத் தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன்னதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஜெயலலிதா காலங்கடத்தாமல், இதில் தனக்கிருக்கும் அதிகாரத்தை இப்போதாவது உணர்ந்து கொண்டு தூக்குமேடைக்கும் - தொடரும் வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் உயிர்களையும் காப்பாற்றி உலகத் தமிழர்களின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும். இதில் பிடிவாதம் காட்டுவதும், காலங் கடத்துவதும் பின்னடைவுகளையே ஏற்படுத்தி விடும். அன்புள்ள, மு.க. 30-10-2011 (குறிப்பு :- பொதுவாக “தூக்குத் தண்டனை” என்பதையே ஏற்றுக் கொள்ளாதவன் நான் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறேன். இந்தக் கருத்தை கட்சி வேறுபாடு கருதாமல் பலமுறை வெளியிட்டிருக்கிறேன் - குறிப்பாக, தருமபுரி விவகாரத்தில் கூட! )
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 37–44. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.