முரசொலி கடிதங்கள் · 3595
உதவாதினி ஒரு தாமதம்; உடனே விழி; தமிழா!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3595. உதவாதினி ஒரு தாமதம்; உடனே விழி; தமிழா!
உடன்பிறப்பே,
பழைய கால மன்னர்களின் படை வரிசையில் “ரத, கஜ, துரக, பதாதி” என்ற நான்கு வகை படைகள் இருக்குமாம்! அதாவது தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று படைப்பிரிவுகள் போர்ப் படைத் தளபதிகளின் கீழ் அணிவகுத்து நிற்பார்களாம். நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. ஜனநாயக இயக்கமாம் நமது கழகத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்படவுள்ளது. அதற்கு முன்பு புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், பழைய வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கல் ஆகிய பணிகளில் விரைந்து ஈடுபடுமாறு நமது பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். அந்தப் பணிகளை உடன்பிறப்புகளான நீங்கள் விரைவில் மேற்கொள்ள விருக்கிறீர்கள். ஓய்வு நேரத்தைக் குறுக்கி, உழைக்கும் நேரத்தை விரிவாக்கி, உறுப்பினர் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். நம்முடைய கழகம் உங்களைப் போன்ற லட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் எழில் வடிவம்! இன்றும் கழகத்தினுடைய இளமைப் பொலிவுக்கு உம் போன்ற உடன்பிறப்புகள் தரும் வலிவன்றோ காரணம்! எத்தனை எத்தனையோ சோதனைகளைத் தாங்கிப் பழக்கப்பட்ட எனக்கும் உங்களுக்கும் தற்போது வந்துள்ள சோதனைகள் பெரிதல்ல! சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கித் தாங்கி, எதிர்ப்புகளையெல்லாம் புறங்காணச் செய்து வெற்றி பெற்றுப் பழக்கப்பட்டவர்கள் நீங்கள். நீங்களே கழகம்! கழகமே நீங்கள்! நீங்கள் சிந்திய வியர்வைத் துளிகளின் விளைவே கழகம் ஈட்டிய வெற்றிகள்! கழகம் பெற்ற பெருமைகள்! கடந்திடும் சோதனைகள்! எனவே, கழகத்தை நான்; உங்கள் அசைவிலே, நடையிலே, பேச்சிலே, மூச்சிலேதான் காணுகிறேன்.
என்னென்ன விமர்சனங்கள்? எப்படி யெல்லாம் எழுதுகிறார்கள்? பேசுகிறார்கள்? அப்பப்பா? “குலைந்தது கட்சி! தொலைந்தது இனிமேல்! சீந்துவார் யாருமில்லை! சீராட்டும் பாராட்டும் பெறாமல் “சீ” என்றிகழப்பட்டு, தெருப்புழுதியிலே சேர்க்கப்பட்டுவிடும்! சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க் கட்சியாகக் கூட வர முடியவில்லை! அதையொட்டி நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலிலே ஒரு மாநகராட்சியைக் கூடப் பிடிக்க முடியவில்லை! இடைத் தேர்தலிலோ வித்தியாசம் இரு மடங்காகி விட்டது! என்றெல்லாம் கூறி மாட கூடங்களில் இருந்து மமதையை மலையென மனத்தில் வளர்த்துக்கொண்டு, “வீழ்ந்தது கழகம், இனி எழவே முடியாது” என்றெல்லாம் எக்காளமிடுகின்றனர்! 1976ஆம் ஆண்டு “நெருக்கடி நிலை” அறிவிக்கப்பட்டு நடைபெற்ற கொடுமைகளைக் கண்டவர்கள் தானே நாம்! தலைவர்கள் எல்லாம் சிறையிலே! அங்கேயும் வன்முறைகள்! என்னைப் பார்த்தாலே சிறை! எனக்குக் காரோட்டினால் சிறை! ஏன், எனக்கு சாப்பாடு போட்டாலே சிறை! என்றெல்லாம் நடைபெற்று, கழகமே அவ்வளவுதான், இனி எழுந்திருக்கவே முடியாது, என்று இதயக் கோட்டை எழுப்பியோர் எத்தனை பேர்? அவர்களின் கனவுகளையெல்லாம் இடித்து நொறுக்கி, உடன்பிறப்பே! நீ யல்லவா நிமிர்ந்து நின்று சுடர் முகம் தூக்கி கோடிக் கதிரவன்கள் கூடி வந்ததுபோல ஒளி பரப்பி, எட்டுத் திசையும் முரசு கொட்டி முழக்கமிட்டாய்! எரிச்சல் கணை - ஏசல் பாணம் - கண்டனச் சொற்கள் - சுடுமொழி - கடும் பார்வை - இத்தனையும் கொண்ட தீய சக்திகள், பிற்போக்குப் பிறவிகள், கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கழகத்தை ஆதரித்து கருத்துக்கள் சொல்லப்பட்டால், அதற்கு ஏடுகளிலே இடம் கிடையாது, அதே நேரத்தில் கழகத்திற்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லப்பட்டால் முதல் பக்கத்திலேயே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் போக்கு! அதிலே ஓர் இன்பம் காணும் நிலை! துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு
சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர். கழகமே நீயாக - நீயே கழகமாக ஆகிவிட்ட என் இதய மலர்களே! அந்த மலர்கள் தரும் மணமே! அந்த மணம் தரும் சுகமே! உயிரினும் மேலான உடன்பிறப்பே! துரோகத்தைத் தூள் செய்து பகையைப் புறங்கண்டு நீ தூக்கி உயர்த்தியிருக்கிற இரு வண்ணக் கொடியை காணும்பொழுதும், அந்தக் கொடியின் பட்டொளியில் 62 ஆண்டுக் கால இயக்கச் சரித்திரத்தைப் படிக்கும் பொழுதும், ஓரம்போகியார் எனும் ஒரு பெரும் கவிஞர் எழுதிய புறப்பாடல் ஒன்றை நான் உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன். அந்தக் கவிஞர் பெருமான் எழுதிய பாடலில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடுகிறார்கள்.
“வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை சூடிக் காலின் தமியன் வந்த மூதி லாளன் அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வா டிருத்தாத் தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே!”
போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒருவன் உடனே களம்புகுமாறு வீரர்களுக்கெல்லாம் செய்தி அனுப்புகிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளிலிருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். போர் தொடங்கி விடுகிறது. அந்தப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம் போகியாரின் விழிகள் வட்டமிடுகின்றன. அவன் தேர்ப்படையிலோ, யானைப் படையிலோ, புரவிப்படையிலோ இடம் பெற்று அந்தக் களத்திற்கு வரவில்லை. தன்னந் தனியனாக, நூலரி மாலையை அணிந்து கொண்டு, கையில் ஓர் வாளுடன் காலாட் படை வீரனாக களத்திலே நுழைகிறான். கடும் போரிடுகிறான்.
மானம் காக்கப்போரிடும் அந்தத் தமிழ்மறவர் குல திலகத்தையே ஓரம் போகியார் உற்றுப் பார்த்துக் கொண்டு
நிற்கிறார், உயர்ந்ததோர் குன்றின் உச்சி மீது ஏறி! புலவர் அல்லவா? எனவே குன்றேறி நின்று போர்க் களக் காட்சி காணுகிறார்! அந்த மாட்சியைத்தான் கவிதையாக வடிக்கிறார்!
அவர் உள்ளம் கவர்ந்த அந்த வீரன்; காலாட்படை வீரன்; எதிரிப் படை வீரனை நோக்கிப் பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன்! இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகெனக் கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான். அந்த வாள் வீச்சு, மாரிக்கால மின் வெட்டின் வீச்சு! யானை கீழே விழுகிறது, வீழ்கிறது. யானையை வீழ்த்திய அவன் வாளும் வளைந்து கோணி விடுகிறது. யானையின் மீதிருந்து விழுந்த வீரன், எழுந்து வந்து அவனைத் தாக்கி அழிப்பதற்குள் வாளை நிமிர்த்தியாக வேண்டும். என்ன செய்தான் தெரியுமா? ஓரம்போகியார் கவிதையிலே கூறுவதைக் கேள்!
அந்தப் போர்க்களத்தில் அவன் வாளை நிமிர்த்திக் கொள்ள உடனடியாக எந்த வசதியும் கிட்டவில்லை. எதிரியோ எழுந்து விட்டான்! விரைவில் நெருங்கி விடுவான்! நில அபகரிப்பு வழக்கு என்பான்! சொத்து சேர்த்து விட்ட வழக்கு என்பான்! பளிச் செனத் தோன்றியது ஒரு அரிய யோசனை அந்த மாவீரனுக்கு! கோணிய வாளை எடுத்தான் - அங்கே தன்னால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த யானையின் மத்தகத்திலே அந்த வாளை அழுத்தி நிமிர்த்துக் கொள்கிறானாம். அவனது வளைந்து போன வாளை நிமிர்த்துக் கொண்டான் என்பதைக் கண்டதும் எதிரிப்படையின் வீரன் எடுக்கிறான் ஒட்டம் - புறங்காட்டி ஓடுகின்ற அவனைப் பார்த்து அந்த வீரன் நகைக்கத் தொடங்கினான்.
உடன்பிறப்பே, ஓரம்போகியார் சித்திரிக்கும் அந்தத் திறன் மிகு தீரனாகத்தான் உன்னை -ஆம் - நமது கழகத்தை - நான் கருதுகிறேன். நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல நமது விரோதிகள் ரதங்கள் ஏறி வந்து நம்மைத் தாக்க முயலலாம். நமக்கெதிரான விமர்சனங்கள் யானைகள் மீது ஏறி வந்து நம்மை எதிர்க்கலாம். துரோகிகளோ குதிரைப்படை கொண்டு வந்து நம்மை நிலை குலையச் செய்ய யத்தனிக்கலாம். நமது புறநானூற்றுப் புலவர் வியந்து பாராட்டிய வீரன் எதிரிப்படையை விரட்டியது போல, கொல்ல வரும் பகையை - தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும். அந்த வெற்றி; கையிலே வேலோ வாளோ ஏந்திப் பெறுவதல்ல! இதயத்தில் உறுதியும்,
கொள்கையும் ஏற்றிப் பெறுவதாகும்! புறநானூற்று வீரன், தன்னந் தனியனாகக் காலாட்படையில் ஒருவனாக வருகிறான் என்கிறார் புலவர். கழகமோ, கடமையெனும் கட்கம் ஏந்தி, கண்ணியம் எனும் கவசம் பூண்டு, கட்டுப்பாடெனும் கேடயம் கொண்டு, தனிமையில் விடப்பட்ட போதிலும், தளரா உறுதியுடனும், ஊக்கத்துடனும் எதிர்ப்புகளைப் புறங்கண்டு வெற்றிப் புன்னகையை ஈட்டிட வேண்டும்.
வெற்றி - வெற்றி - இடையிலே உள்ள ஒரு எழுத்து அகன்றால், இதுவே “வெறி” என்றாகி விடும்! எதிரிகள் அந்த “வெறி”யோடு செயல்படுகிறார்கள். அவர்களை எதிர் கொண்டு நாம் “வெற்றியினைப் பெற்றிட உழைப்போம் - ஒற்றுமையோடு உழைப்போம் - ஓய்வில்லாமல் உழைப்போம் - உறுதியோடு உழைப்போம்! கண்மணியாம் நமது கழகத்தை வளர்ப்போம்! உறுப்பினர்களை அணி அணியாகச் சேர்ப்போம்! புதிய வாக்காளர்களை பட்டியலில் இணைப்போம்! உதவாதினி ஒரு தாமதம்; உடனே விழி; தமிழ!
அன்புள்ள, மு.க. 31-10-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 45–49. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.