முரசொலி கடிதங்கள் · 3598
என் உடன்பிறப்புகள் ஏமாற மாட்டார்கள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3598. என் உடன்பிறப்புகள் ஏமாற மாட்டார்கள்! உடன்பிறப்பே,
உலக அளவிலும் சரி, அல்லது இந்திய நாட்டளவிலும் சரி, எந்த இயக்கமும் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை வென்றெடுப்பதற் காகவென்றே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரே குறிக்கோளை அடைவதற்காக அந்த இயக்கம் எடுக்கின்ற முயற்சிகளில் அல்லது வகுக்கின்ற வழிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அல்லது பிளவுகள் தோன்றி பல்வேறு கிளைகளாகப் பிரிந்தாலுங்கூட, குறிப்பிட்ட ஒரு மரத்தின் கிளைகள்தான் அது என்ற நிலையில் இயங்குவதும், நம் கண் முன்னாலே காணுகின்ற சரித்திர உண்மைகளாகும்.
சுதந்திரம் என்ற ஒரே இலட்சியத்திற்காக காந்தி அடிகளால் வழி நடத்தப்பட்ட காங்கிரஸ் பேரியக்கம் என்னும் விடுதலை இயக்கத்தில் மாவீரர் சுபாஷ் சந்திரபோசும், பட்டாபி சீதா ராமையாவும் பிரிந்து நின்று காங்கிரஸ் தலைமைக்குப் போட்டியிட்டபோது; “பட்டாபி சீதாராமையா தோல்வி தனது தோல்வி” என்கிற அளவிற்கு - வரிந்து கட்டிக் கொண்டு பணியாற்றிய வார்தா முனிவர், உத்தமர் காந்தியடிகள் அந்தப் போட்டியில் தோற்றுத்தான் போனார். இது வரலாற்று உண்மை.
அந்தப் போட்டியில் வென்ற சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்காக புரட்சி மார்க்கத்தைப் பின்பற்றி தேவர் திருமகனோடு இணைந்து ஐ.என்.ஏ. படையை உருவாக்கி, பிரிட்டிஷ்காரர்களோடு மோதியதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
“வெள்ளையனே வெளியேறு” என்ற இலட்சியம் நிறைவேற வேண்டுமென்று அதற்காகத் துப்பாக்கி ஏந்தி தூக்குமேடைக்குச் சென்ற பகத்சிங் ஒருபுறம்! அந்த பகத்சிங் கொள்கை, கோட்பாடு ஏற்கத் தக்கதல்ல என ஒதுங்கி நின்று அமைதி வழியில்
அகிம்சா போராட்டம் நடத்திய அண்ணல் காந்தி அடிகள் மற்றொரு புறம்!
இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக ஓரணியில் குரல் கொடுத்த பண்டித நேரு, ஜனாப் ஜின்னா இருவரும் அந்த ஓரணியிலேயே நீடிக்காமல் தனித்தனி அணியாகி, தனித்தனி நாடுகளாக - இந்தியா, பாகிஸ்தான் எனப் பிரிந்ததும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
பரந்த இந்தியாவில் மட்டுமல்ல; அந்த இந்தியாவில் ஒரு பகுதியான தமிழகத்தில் காந்தி அடிகளின் வழிநின்று காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தோர் எனச் சொல்லப்படுபவர்களில் ராஜாஜி, காமராஜரிடையே ஏற்பட்ட வேறுபாடு “கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது” என்ற சரித்திரத் தலைப்புகளாக ஆனதையும் யாரும் மறந்துவிட முடியாது.
காங்கிரசிலிருந்து “வைக்கம் வீரர்” பெரியார் பிரிந்ததும் - அவர் தலைமையை ஏற்றிருந்த சாமி சிதம்பரனார், ஜீவானந்தம், அய்யாமுத்து போன்றோர் அவரிடமிருந்து விலக நேர்ந்ததும்; அவ்வளவு ஏன்? அண்ணாவின் சேலம் மாநாட்டுத் தீர்மானத்தையேற்று, அய்யா பெரியார் முழங்கியதும்; அதன்பிறகு சில ஆண்டுகளில் “பெரியார் இன எழுச்சி சமுதாய இயக்கம் நடத்துவார்; நான் அந்த உணர்வுகள் அடங்கிய அரசியல் இயக்கம் நடத்துகிறேன்” என்று திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டதும்; இந்தியாவிலும், தமிழகத்திலும் எழுதப்பட்ட அரசியல் சரித்திரங்கள்! ஆனால், தனி வழி அமைத்துக் கொண்டு தனித்தனியே இயக்கம் நடத்திய யாரும் - (திருவாசகமணி பாலசுப்பிரமணியம்; ஒருவரைத் தவிர) - தொடக்கத்தில் கொண்ட குறிக்கோளை மாற்றிக் கொள்ளவும் இல்லை; மறந்துவிடவும் இல்லை!
“தினமலர்” பத்திரிகை திராவிட முன்னேற்றக் கழகத்தை இடித்துச் சிதைத்து குறுகலாக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி களின் தொடர்ச்சியாக, “உடன்பிறப்புகள்” என்ற பெயரால் ஒரு கற்பனைக் கட்டுரையை வெளியிட்டிருக்கின்றது. அந்தக் கட்டுரையின் உள்நோக்கத்தை உண்மையான உடன்பிறப்புகள் அனைவருமே உணர்ந்தே இருப்பார்கள். ஏனென்றால் “தினமலர்” நம்மைக் கொஞ்சி மகிழ்வது; பூதகி; கண்ணனைக் கொஞ்சி
மகிழ்வது போல் நடித்து, அவனைக் கொல்லவே துணிந்தாள் என்று பாரதத்தில் ஒரு கிளைக்கதை உண்டே, அந்தக் கிளைக்கதையின் தலையாய கதாபாத்திரமான பூதகியின் பத்திரிகைதான் “தினமலர்” நாளேடு தாங்கிக் கொண்டு புறப்பட்டிருக்கிற தென்றால் அதில் துளியளவும் தவறில்லை.
அழகிய மங்கை உருவில் வந்து தாய்ப்பாசம் காட்டுவது போல் நடித்து, கண்ணனை பாலருந்தச் சொல்லி, அவனைக் கொன்றுவிட முற்பட்ட பாத்திரம் பூதிக்கும், இன்று பசப்பு மொழி பேசி நம்மிடையே கசப்புணர்வை வளர்த்து கழகத்தை வீழ்த்திவிட பகற்கனவு காணும் படுபாவிகள் சிலருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அந்தப் படுபாவிகள் பத்திரிகை வடிவத்திலே நம்மிடையே வருவர். அந்த விஷ நாகங்களில் ஒன்று பச்சைப் பாம்பு வடிவெடுத்து, பச்சை வண்ண பசுங்கிளையிலே தன்னை மறைத்துக் கொண்டு, பாகுமொழி பேசுவதைக் கண்டு - கேட்டு - உடன்பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள்! எச்சரிக்கையாகவே இருப்பார்கள்!
அன்புள்ள, மு.க. 7-11-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 64–66. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.