அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3601

முரசொலி கடிதங்கள் · 3601

இந்தப் புவியே அவர் புகழ் பாடட்டும்!

நாள் 19.11.2011சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3601. இந்தப் புவியே அவர் புகழ் பாடட்டும்!

உடன்பிறப்பே,

தமிழ்நாட்டு மக்களின் ஏமாளித்தனத்தின் காரணமாக எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்ட ஜெயலலிதா, வந்ததும் வராததுமாக வரவு செலவு திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியை சுமத்திவிட்டு; அத்துடன் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல காரியங்களையெல்லாம் தொடர்ந்து கெடுத்து வரும் முயற்சியை மேலும் தொடர்ந்து; “ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற” செயலாக இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார். “உயரப் போகிறோம்” என்றுதானே அவருக்கும், அவர் அணியின் வேட்பாளர்களுக்கும் அபரிமிதமான வாக்குகளை அளித்து அரியாசனத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அய்யோ பாவம்! நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தத் தெரியாமல், ஜெயலலிதா படும் பாட்டையும் - அவர் மக்களைப் படுத்தி வைக்கும் பாட்டையும் ஏழை, நடுத்தர மக்கள் இதயம் வெடித்து சாகிற அளவுக்கு வரி உயர்வு, கட்டண உயர்வு, விலை உயர்வு என்று இப்படி உயர்வு, உயர்வு எனக்கூறி தமிழக ஏழைபாழைகளை குழியில் தள்ளி வேடிக்கை பார்க்கும் விளையாட்டை அல்லவா இப்போது அவர் நடத்தி வருகிறார்! மக்களை பழி வாங்கும் காரியத்தை நடத்திக் கொண்டே, அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார். தி.மு. கழகம் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லையா? உயர்த்திக் கொண்டு தான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்

கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் தமிழக அரசு தாங்கிக் கொண்டு பொதுமக்கள் பாதித்து விடக் கூடாது என்பதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வில்லையா? ஆவின் கட்டணத்தை அதிகமாக உயராமல் பார்த்துக் கொள்ளவில்லையா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அதைவிடுத்து, நமக்கென்ன, சிரமப்படப்போவது மக்கள் தானே என்ற பாணியில் கண்ணை மூடிக்கொண்டு கட்டணங்களை ஜெயலலிதா உயர்த்தி அறிவித்திருக்கிறார்.

பேருந்து கட்டணங்களைப் பொறுத்தவரையில், சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை, 50 சதவிகித அளவிற்கு அதாவது மேலும் 14 பைசா என்ற அளவிற்கு உயர்த்தி, இனி கிலோ மீட்டர் ஒன்றுக்கு 42 பைசா என்று நிர்ணயித்திருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பையேற்றபோது சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா என்றிருந்த கட்டணத்தை ஐந்தாண்டுகால ஆட்சியில் ஒரு பைசாகூட உயர்த்தவில்லை என்பதையும், ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே 42 பைசா அளவிற்கு பேருந்து கட்டணத்தை கிலோ மீட்டர் ஒன்றுக்கு என்று உயர்த்தியிருக்கிறார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

விரைவு மற்றும் செமி-டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு தற்போது 32 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை ஜெயலலிதா 75 சதவிகிதம் உயர்த்தி, அதாவது 24 பைசா வீதம் உயர்த்தி, இனி கிலோ மீட்டர் ஒன்றுக்கு 56 பைசா வீதம் வசூலிக்க ஆணையிட்டிருக்கிறார்.

சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு தற்போது 38 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை, இனி 60 பைசா என்று உயர்த்தியிருக்கிறார்.

புறநகர் பேருந்துகளைப் பொறுத்து இது நிலைமை என்றால், நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக இதரப் பகுதிகளில் தற்போதுள்ள குறைந்தபட்சக் கட்டணம் இரண்டு ரூபாய் என்பதை, மேலும் 50 சதவிகித அளவிற்கு, அதாவது ஒரு ரூபாய் அளவிற்கு உயர்த்தி, இனி மூன்று ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்.

நகரப் பேருந்துகளில் அதிகபட்சக் கட்டணமாக தற்போது 7 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதை 70 சதவிகித அளவிற்கு உயர்த்தி, இனி 12 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயித்திருக்கிறார்.

சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்த வரையில், தற்போதுள்ள குறைந்தபட்சக் கட்டணம் 2 ரூபாய் என்பதை 3 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 12 ரூபாய் என்பதை 14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்திருக்கிறார்.

பேருந்து கட்டணங்கள் எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கு உதாரணம் கூற வேண்டுமேயானால், திருச்சிக்கு இதுவரை டீலக்ஸ் பேருந்தில் பயணம் செய்ய 105 ரூபாய் கட்டணம் என்பது, இனி 180 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மதுரைக்கு இதுவரை 145 ரூபாய் என்பது 255 ரூபாயாகவும், நெல்லைக்கு இதுவரை 200 ரூபாய் என்றிருந்த கட்டணம் 350 ரூபாயாகவும், கோவைக்கு இதுவரை 165 ரூபாய் என்றிருந்த கட்டணம் இனி 290 ரூபாயாகவும் ஜெயலலிதாவின் கருணைப் பார்வையினால் மக்கள் அ.தி.மு.க.விற்கு பெருமனது வைத்து வாக்களித்த காரணத்தால், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் ரெயில் கட்டணம் அதிகமாகவும், பேருந்து கட்டணம் குறைவாகவும் இருக்கும். அதற்காகவே வசதிமிக்கவர்கள் ரெயிலிலும், வசதிக் குறைவானவர்கள் பேருந்துகளிலும் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது பேருந்து கட்டணங்கள், ரெயில் கட்டணத்தைவிட எந்த அளவிற்கு கூடுதலாக்கப்பட்டுள்ளன என்றால் - திருச்சிக்கு ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய கட்டணம் 80 ரூபாய்தான். ஆனால் தற்போது ஜெயலலி தாவின் பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் 180 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மதுரைக்கு ரெயில் கட்டணம் 108 ரூபாய். ஜெயலலிதாவின் பேருந்து கட்டணம் 255 ரூபாய். தஞ்சைக்கு ரெயில் கட்டணம் 84 ரூபாய். ஜெயலலிதாவின் பேருந்து கட்டணம் 210 ரூபாய். நெல்லைக்கு ரெயில் கட்டணம் 132 ரூபாய். ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை காரணமாக நடைபெறும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால், அதே நெல்லைக்கு 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

2006ஆம் ஆண்டு முதல் 2011 மே திங்கள் வரை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்து கட்டணம் ஒரு

பைசா கூட உயர்த்தப்படவில்லை என்பதையும், ஜெயலலிதா பதவியிலே இருந்தபோது பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகு தற்போது மீண்டும் அவர் பொறுப்புக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே பேருந்து கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வாடச் செய்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பால் விலையையும் ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். அரசு என்பதையே மறந்துவிட்டு, தனியார் வியாபாரிபோல தனியார் நிறுவனங்களைவிட, ஆவின் பால் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். 14-2-2011 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் “பால் தட்டுப்பாட்டினை உருவாக்கி, தட்டுப்பாடுகளை உருவாக்கும் தறிகெட்ட அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. பால் உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு வழிப்பறி கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது” என்றெல்லாம் கூறியதற்கு மாறாக, தற்போது பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சையாகவே கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்தியிருக்கிறார்.

பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கொடுத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது என்று அறிக்கையிலே ஒப்புக் கொண்டுள்ள ஜெயலலிதா, பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். அதாவது கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் அந்தப் பாலை பொதுமக்களுக்கு விற்கும்போது எந்த அளவிற்கு விற்பனை விலையை உயர்த்தியிருக்கிறார் என்பதையும் மனதிலே கொள்ள வேண்டும்.

அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன் படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து - 24 ரூபாயாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறார்கள். அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6

ரூபாய் 25 பைசா அளவிற்கு ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். மிகவும் அடித்தட்டிலே உள்ள ஏழையெளிய மக்கள் நாள் ஒன்றுக்கு காலையில் ஒரு லிட்டர், மாலையில் ஒரு லிட்டர் பால் வாங்கிக் கொண்டிருப்பார்களானால், இனி அவர்கள் மாதம் ஒன்றுக்கு தங்கள் குடும்ப செலவில் 375 ரூபாய் பால் ஒன்றுக்காக மட்டுமே அதிகமாக செலவிட வேண்டிய நிலைக்கு - பாவம், அ.தி.மு.க. விற்கு வாக்களித்த ஒரே குற்றத்தின் காரணமாக தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 1-9-2009 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 13.45லிருந்து ரூ. 15.64 ஆகவும், எருமைப் பால் விலையை 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் - அதன் பின் 5-1-2011இல் பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 15.64 லிருந்து ரூ. 16.64 ஆகவும், எருமைப் பால் விலையை 23 ரூபாயிலிருந்து ரூ. 25.20 ஆகவும் - 16-2-2011 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 16.64லிருந்து 18 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை ரூ. 25.20லிருந்து 26 ரூபாயாகவும் அதிகப்படுத்திக் கொடுத்தபோதிலும், அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 17.75 என்பதிலிருந்து ஒரு பைசாகூட உயர்த்தவில்லை என்பதும், விலைவாசியை நான் ஆட்சிக்கு வந்தால் குறைப்பேன் என்றும் வானத்தை வில்லாக வளைப்பேன் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தற்போது ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு பாலின் விற்பனை விலையை ரூ. 6.25 உயர்த்தியிருக்கிறார் என்பதையும் நினைவிலே கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக மின் கட்டணத்தையும் உயர்த்தக்கோரி தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் கோரிக்கை வைத்திருக் கிறார்கள். அதையேற்று மின் கட்டணங்களை உயர்த்தும்போது 11,700 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் வரக்கூடுமென்று எதிர்பார்க்கிறார்கள். மின் கட்டணத்தை எந்த அளவிற்கு உயர்த்தப் போகிறார்கள் என்றால், யூனிட் ஒன்றுக்கு 25 பைசாவோ, 30 பைசாவோ அல்ல; யூனிட் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் கட்டணம் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

ஜெயலலிதா கடந்த மே திங்களில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சுமார் 4,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வரத்தக்க அளவிற்கு

வரிகளை உயர்த்தினார். தற்போது மேலும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கத்தக்க வகையில் உயர்த்த திட்ட மிட்டுள்ளார். அதையும் தவிர பேருந்து கட்டணங்களையும், பால் கட்டணங்களையும் உயர்த்தி அதன் மூலமாகவும் பொது மக்களை வறுத்தெடுக்க இருக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்தினால் - பேருந்து கட்டணங்களை ஏற்றினால் - பால் விலையை உயர்த்தினால் நம்முடைய மக்கள்தானே சிரமப்படுவார்கள் என்றெண்ணி, இவைகளை உயர்த்தாமல் ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய தி.மு.க. ஆட்சி எங்கே? தற்போது இந்தக் கட்டணங்களையெல்லாம் உயர்த்திவிட்டு, அதற்கெல்லாம் காரணம் கருணாநிதிதான் என்றும், மத்திய அரசுதான் என்றும் பழியைத் தூக்கி மற்றவர்கள் மேல் போடும் ஜெயலலிதா ஆட்சி எங்கே?

பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்ற இந்த மூன்று பளுக்களையும் பொதுமக்கள் தலையிலே ஒரே நேரத்தில் சுமத்திய ஜெயலலிதாவை “தினமலர்” இதழினால் இப்போதுகூட கைவிட முடிய வில்லை. “மலைபோல் கடன்தொகை அதிகரித்து திவாலாகும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை மற்றும் ஆவின் ஆகிய மூன்று துறைகளையும் காப்பாற்றும் வகையில் ஜெயலலிதா இந்த முடிவினை எடுத்தார்” என்றும் - “ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல், பல்வேறு நலத் திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தி வந்தார்” என்றும் - இந்த மூன்று உயர்வுகளையும் “கசப்பு மருந்து” என்றும் புகழ்ந்திருக்கிறது.

மக்கள் தலையில் இந்தச் சுமைகளையெல்லாம் ஏற்றி வைத்துள்ள ஜெயலலிதா, தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்ற வரையில் இதற்கெல்லாம் காரணம் கடந்த கால தி.மு. கழக ஆட்சிதான், அந்த ஆட்சியில் கடன் பளு அதிகமாகிவிட்டது, அவற்றைக் குறைக்கத்தான் என்று பழியை நம்மீது போட்டிருக்கிறார். பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மைதான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழையெளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் கழக

ஆட்சியிலே அதிகப்படுத்தவில்லை. ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக இருப்பதே தவிர, அவர்களைக் கொடுமைப் படுத்தி, கட்டணங்களை உயர்த்தி அதிலே இன்பம் காண்பதற்காக அல்ல. கழக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் நிறுவனங்களுக்குள்ள கடன் சுமைகளைக் குறைக்க இந்தக் கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்த வேண்டுமென்று என்னிடமும் கூறுவார்கள். ஆனால் பொதுமக்கள் தானே, அதை ஏற்க வேண்டும்? அவர்கள் எங்கே போவார்கள்? அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்றுதான் கூறியிருக்கிறேன். யார் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன, மக்கள்தானே இந்த உயர்வுகளை யெல்லாம் சந்திக்கப் போகிறார்கள், ஏற்றுங்கள் கட்டணங்களை, அதிலும் ஒரே நேரத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் கட்டணம் என்று அறிவிக்கலாம் என்று சொல்கின்ற மனப்பான்மை எனக்கில்லை. ஏனென்றால் என் இதயத்தில் இரக்கம் இருக்கிறது. ஒரு அரசு சிந்திக்க வேண்டாமா? ஒரே நேரத்தில் இந்த மூன்று கட்டணங்களையும் உயர்த்தினால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், மாதச்சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலவு 500 ரூபாய் அதிகமானால் எப்படி அவர்களால் சமாளிக்க முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? மற்ற மூத்த அமைச்சர்களாவது இதுபற்றி முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா? அமைச்சரவைக் கூட்டம் அதற்காகத்தானே நடக்கிறது! கொலு பொம்மைகளைப் போல வீற்றிருந்து, பாராட்டுரைகளை, புகழுரைகளை வழங்குவதிலேயே கவனத்தைச் செலுத்துவது மட்டும் நல்லதா? இந்த உயர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்களில் திருவள்ளூரைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர், விலை உயர்வு காரணமாக, இனி குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்குப் பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை, மீண்டும் கற்காலத்துக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார். ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பத் தலைவி, விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்கள் மிகவும் சிரமப்படுவர் என்று கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா தனது அறிக்கையில் இறுதியாக வெள்ளம் வரும் முன்பே அணை போட வேண்டும், மரணப் படுக்கையில் உள்ள இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது

ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால், அவை செயலற்றுவிடும் என்பதற்காகத்தான் இந்த முடிவினை மேற்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். உண்மையில் அவர் “ஆக்சிஜன்” தருகின்ற முயற்சியில் ஈடுபடவில்லை. பொதுமக்கள் தலையிலே இந்தச் சுமைகளையெல்லாம் சுமத்தி, இதுவரை அவர்களுக்குச் செலுத்தப்பட்டு வந்த “ஆக்சிஜன்” குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார் என்பதுதான் உண்மையாகும். இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகிய மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றி அவர்கள் தலைகளை நொறுங்கிட வைத்த பெருமைக்குரியவர் ஜெயா என்று இந்தப் புவியே அவர் புகழ் பாடட்டும்!

அன்புள்ள, மு.க. 19-11-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 80–87. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்