அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3604

முரசொலி கடிதங்கள் · 3604

என்ன பதில் சொல்லப் போகிறார்?

நாள் 8.1.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3604. என்ன பதில் சொல்லப் போகிறார்?

உடன்பிறப்பே,

“நீங்கள் என்ன செய்வீர்களோ; எனக்குத் தெரியாது. அன்றாடம் என் பெயரில் ஏதாவதொரு அறிவிப்பு ஏடுகளிலே வெளி வர வேண்டும்” என்று நமது முதலமைச்சர் அவர்கள் விடுத்துள்ள வாய்மொழி ஆணைக்கிணங்க வெளிவரும் அறிவிப்புகளில் ஒன்றாக, 6-1-2012 தேதிய நாளேடுகளில் “கரும்புக்கான ஆதார விலை ரூ. 2,100 ஆக உயர்வு - ஜெயலலிதா உத்தரவு” என்ற தலைப்பில் வந்துள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” - “மானியம் வழங்க நான் உத்தர விட்டேன்” - “நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்” - “என்னுடைய இந்த நடவடிக்கைகளின் மூலம்” என்றெல்லாம் அடைமொழி அலங்காரம் கொடுத்து “இந்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலையை போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 2,100 ஆக உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று ஜெயலலிதா தெரிவித்ததாக, தமிழகத்தின் நாளேடுகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துள்ளன.

ஜெயலலிதா விடுத்துள்ள நீண்ட அறிக்கையில், கடந்த ஆண்டு எந்த அளவு கரும்பு கொள்முதல் விலையாக இருந்தது என்பதைப் பற்றி குறிப்பிட்டவே இல்லை. மேலும் “கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மனதில் கொண்டு முதற்கட்டமாக இந்த ஆண்டு இந்த விலை உயர்வு” என்றும் ஜாக்கிரதையாகத் தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னது என்ன?

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பக்கம் 3இல் “கரும்பு உற்பத்தி புரட்சித் திட்டம்” என்ற தலைப்பில் “எத்தனால் எரிபொருள் உற்பத்தியைப் பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை; டன்னுக்கு 2,500/ரூபாயாக உயர்த்தப்படும் - அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு நிர்வாகம் சீரமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்கள். தேர்தல் அறிக்கையிலே

2,500 ரூபாய் என்று சொல்லி விட்டு, தற்போது 2,100 ரூபாய் என்று அறிவிப்பதால்தான் எச்சரிக்கையாக முதற் கட்டமாக என்று கூறுகிறார்கள்! ஆனால் தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள் என்பதையும், முதற்கட்டமாக 2100 ரூபாய்தான் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் விட்டதையும் தற்போது மறைத்திருக்கிறார்கள். - மேலும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்; கரும்பு உற்பத்தி 475.5 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும் என்றும், ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும் என்றும் குறிப்பிட்டதற்கு மாறாக, நேற்றைய அறிக்கையில் ஜெயலலிதா, “342.5 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி நடப்பாண்டில் 400 லட்சம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்து, தேர்தல் அறிக்கையிலிருந்து தாங்கள் எவ்வளவு மாறுபட்டு வழுக்கி இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் 21.10.2009 ஆம் நாளிட்ட அவசர சட்டத்தில் மாநில அரசுகள் கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவிக்கக் கூடாது எனவும், மத்திய அரசு அறிவிக்கும் நியாயமான மற்றும் ஆதாய விலையைத்தான் (Fair and Remunerative Price) கரும்பு ஆலைகள் வழங்க வேண்டும் எனவும், மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 9.5 சதம் சாக்கரை பிழிதிறன் உள்ள ஒரு டன் கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக (F R P) ரூ.1298.40 எனவும், ஒவ்வொரு 0.1 சத சாக்கரை பிழிதிறனுக்கும் ரூ.13.70 எனவும் அறிவித்தது. ஆனால் அப்போதும் நமது கழக அரசு டன் ஒன்றுக்கு 1,437.40 ரூபாய் என்ற அளவில் கரும்புக்கு விலையை வழங்கியது. அது பற்றி 7.11.2009ஆம் நாளிட்ட தினமணி நாளிதழில் “கரும்பு விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்க்காதது ஏன்” எனக் கேட்டு அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, “டன்னுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பினால் டன்னுக்கு ரூ. 139 குறைவாகப் பெறக்கூடிய அவல நிலைக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது? அவர்களது கூட்ட நாடகங்களை இனி நடத்த முடியாது!” என்றெல்லாம் அவருக்கே உரிய மொழியில்

கேள்வி கேட்டிருந்தார். ஆனால் அப்படிக் கேள்வி கேட்ட ஜெயலலிதாவைப் பார்த்து இப்போது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் என்று ஏன் விலை நிர்ணயம் செய்யவில்லை என்று கரும்பு விவசாயிகள் கேட்க மாட்டார்களா என்ன?

கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் 1966ன்படி, மத்திய அரசு அறிவிக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச விலை, தமிழக விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சர்க்கரை ஆலை உரிமையாளர்களையும், விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தனி அலுவலர்களையும் கொண்ட முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையை மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவித்து வழங்கி வந்தது.

ஆனால், 2001ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. 5 ஆண்டு காலம் முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டியோ, விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அலுவலர்களின் கருத்துக்களைக் கேட்டோ முடிவெடுக்காமலேயே மத்திய அரசு நிர்ணயித்த விலையை மட்டுமே வழங்கி வந்ததை கரும்பு விவசாயிகள் அனைவரும் அறிவார்கள், அதனால் அவர்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

5 ஆண்டு காலமாக மத்திய அரசின் விலையோடு மாநில அரசின் பரிந்துரை விலையும் சேர்த்து கரும்பு விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்காமல், தி.மு.க. ஆட்சியில் 8.5 சத சாக்கரை பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு 2000-2001ல் மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவித்து வழங்கிய ரூ.775/-ஐ மட்டுமே வழங்கி வந்ததை மறைப்பதற்கு, விவசாயிகள் மீது ஏதோ அக்கறை கொண்டவரைப் போல இப்போது அறிக்கை விட்டுக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்த போது 9-11-2001 ஆம் நாள் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலை மட்டும் தரப்படும், மாநில அரசின் பரிந்துரை

விலையை வழங்கமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க. அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி 2001-2002 முதல் 2004-2005 வரை நான்காண்டு காலம் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையான ரூ. 795 மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

2009-2010ஆம் ஆண்டிற்கு மத்திய அரசு 9.5 சதம் சாக்கரை பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.1077.60/-ம் ஒவ்வொரு 0.1 சாக்கரை பிழிதிறனுக்கும் ரூ.11.30/-ம் அளிப்பது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது என மாநில அரசு கருதியதால், பரிந்துரை விலையாக ரூ.359.80/- ஐ கூட்டி மாநில அரசின் பரிந்துரை விலையாக 9.5 சத சாக்கரை பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.1437.40 என்றும், சராசரி பிழிதிறன் அடிப்படையில் கூடுதலாக ரூ.2260/எனவும், வண்டி வாடகையாக டன் ஒன்றுக்கு ரூ.90/ம் சேர்த்து ஆகமொத்தம் ஒரு டன் கரும்புக்கு சராசரியாக ரூ.1550/- வழங்கிய அரசு - ஜெயலலிதா பாணியிலே சொல்ல வேண்டுமென்றால் எனது தலைமையிலே நடைபெற்ற தி.மு.க. அரசுதான்!

மத்திய அரசு 9.5 சதம் பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.1298.40 என விலை நிர்ணயம் செய்து அறிவிப்பதற்கு முன்பே, நமது மாநிலத்தில் முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை தனி அலுவலர்கள் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.1550/-விலை கிடைக்க 29.9.2009ல் ஆணையிடப்பட்டது.

உச்சநீதிமன்றம் கரும்பு விலை நிர்ணயம் சம்பந்தமாக அளித்த தீர்ப்பில் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையோடு மாநில அரசு கூடுதலாக பரிந்துரை வழங்கலாம் என 5-5-2004 அன்று தீர்ப்பு வழங்கிய பிறகு, அந்தத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தாமல், அதன் பிறகு 16 மாத காலம் சும்மாயிருந்துவிட்டு, 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்ததை முன்னிட்டு ஒரு டன் கரும்புக்கு 1014 ரூபாய் என்று ஜெயலலிதா ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதே தவிர அந்தத் தொகை வழங்கப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சி புரிந்த அந்த நான்காண்டுகளுக்கு மட்டும்

விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டம் ஏறத்தாழ ரூ.440 கோடி என்பதை இன்றைய முதலமைச்சர் அவர்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

கரும்பு விலையைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டுமேயானால், 2006-2007இல் கழக அரசு பொறுப்பேற்றுக் கொண்டபின், அந்த ஆண்டு மத்திய அரசு டன் ஒன்றுக்கு கரும்பு விலையை 802.50 ரூபாய் என்று நிர்ணயித்தபோது, தமிழக அரசு 221.50 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 1,024 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தது.

2007-2008ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்த கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ. 811.80 என்பதை, ரூ. 222.20 உயர்த்தி, டன் ஒன்றுக்கு 1,034 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தோம்.

2009-2010ஆம் ஆண்டு ஏற்கனவே நான் மேலே குறிப்பிட்டதைப் போல போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகையெல்லாம் சேர்த்து டன் ஒன்றுக்கு 1,550 ரூபாய் என்று கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது பின்னர் 1,650 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது.

2010-2011ஆம் ஆண்டு மேலும் 350 ரூபாய் டன் ஒன்றுக்கு உயர்த்தி, 2000 ரூபாய் என்று கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆக ஒவ்வொரு ஆண்டும் தி.மு. கழக ஆட்சியில் 200 ரூபாய் என்றும், 300 ரூபாய் என்றும், 350 ரூபாய் என்றும் கரும்புக்கு விலை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டதற்கு மாறாக, தற்போது ஜெயலலிதா அரசு டன் ஒன்றுக்கு 2000 ரூபாய் என்பதை 2100 ரூபாயாக, அதாவது 100 ரூபாய் மட்டுமே டன் ஒன்றுக்கு உயர்த்தியுள்ளது. இதைத்தான் தமிழகத்தில் உள்ள ஏடுகள் எல்லாம் கரும்பு விலையை ஜெயலலிதா உயர்த்தியிருப்பதாக பூதாகாரமாக செய்து வெளியிட்டிருக்கின்றன.

ஏடுகள் அவ்வாறு செய்து வெளியிட்ட போதிலும், கரும்பு விவசாயிகளும், தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விலை நிர்ணயத்தை கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

“வழக்கமாக விவசாயிகள், ஆலை அதிபர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தான் விலை

அறிவிப்பது வழக்கம். ஆனால் தமிழக அரசு தன்னிச்சையாக விலை அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2500 ரூபாயைக் கூட வழங்காமல், மின் தட்டுப்பாடு, கூலி உயர்வு போன்ற காரணங்களால் டன் ஒன்றுக்கு 3,000 ரூபாய் விலை அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோளையும் ஏற்காமல், தனியார் ஆலை உரிமையாளர்களுக்குச் சாதகமாக விலை அறிவிக்கப்பட்டது” என்று கூறி, அரசு மறு பரிசீலனை செய்து டன் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்று அறிவிக்காவிட்டால், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்கட்சியாக அ.தி.மு.க. இருந்த போது, தி.மு. கழக ஆட்சியிலே ஜனநாயக ரீதியாக கரும்பு விலை நிர்ணயம் செய்யப்பட்ட போதெல்லாம், அதைக் குறை கூறிக் குற்றம் சொன்ன ஜெயலலிதா, தற்போது கரும்பு விவசாயிகளின் செவிகளில் கசப்பான செய்தியைப் பாய்ச்சியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

அன்புள்ள, மு.க. 08-01-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 102–107. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்