அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3607

முரசொலி கடிதங்கள் · 3607

அசந்துதான் போனார்கள்!

நாள் 6.2.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3607. அசந்துதான் போனார்கள்!

உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு ஒன்றரை மணி நேரம் பதிலளித்து உரையாற்றியிருக்கிறார் - இல்லையில்லை - பதில் உரையை படித்திருக்கிறார். உரையின் தொடக்கத்திலேயே “அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர்” என்று என்னை மறைமுகமாகத் தாக்கி, அதற்கு பதில் கூற தி.மு. கழக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்து, அவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு - அதற்கு முன்பாகவே இரண்டு நாட்களுக்கு முன்பு அவையின் எதிர்க்கட்சித் தலைவர் மீது அவசர அவசரமாக உரிமைப் பிரச்சினை கொண்டு வந்து, ஆளுநர் உரைமீது கூட எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுவதற்கான வாய்ப்பினை வழங்காமல் - எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட கார், போலீஸ் பாதுகாப்பு போன்றவைகளைக் கூட பெருந்தன்மையாக அனுமதிக்காமல் - அவர்களையெல்லாம் அவைக்கு வராமல் செய்துவிட்டு - எதிர்த்துக் கேள்வி கேட்க யாரும் இல்லாத நிலையில் தனது பதில் உரையை முதலமைச்சர் ஆற்றி முடித்திருக்கிறார்.

பேச்சின் தொடக்கத்தில், “தோற்றது கழகமல்ல, வாக்காளர்களாகிய நீங்கள்”தான் என்று காஞ்சிபுரம் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் நான் பேசியதைக் குறிப்பிட்டு, அது தமிழக வாக்காளர்களையும், சட்டமன்றத்தையும் கொச்சைப்படுத்திப் பேசியதாகச் சொல்லியிருக்கிறார். நான் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் ஜெயலலிதா எதிர்க்கட்சியாக இருந்தபோது ஓரிரு நாட்கள் மட்டுமே அவையின் நடவடிக்கைகளில் பங்கேற்றார் என்பதை தமிழகம் அறியும். இன்றைய தினம் வீம்புக்காக பழைய கட்டிடத்திலேயே அவையை நடத்துவதால், நல்ல உடல்

நலத்தோடு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே, உள்ளே நடந்து சென்று தங்கள் இருக்கைகளில் அமர முடியாமல் தவிக்கின்ற போது, எனது உடல் நிலையை கருத்தில் கொண்டால், பேரவைக்குள் சக்கர நாற்காலியில் சென்றமர்ந்து உரையாற்றுவதற்கான வசதி இல்லை என்பதையும் அவை உறுப்பினர்களே நன்கறிவார்கள். அவையில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பேசிய அம்மையார் குறிப்பிட்டுள்ள எனது காஞ்சிபுரம் பொதுக் கூட்டப் பேச்சில் வாக்காளர்களையும், சட்டமன்றத்தையும் எங்கே கொச்சைப்படுத்தியிருக்கிறேன். எனது காஞ்சிப் பேச்சில் இன்றைய ஆளுங்கட்சியைப் பற்றிக் கூட நான் எதுவும் கூறவில்லையே! மொழிப் போராட்டங்கள் பற்றித்தான் பேசினேன். ஆனால் நான் 2-2-2012 அன்று எழுதிய “உடன்பிறப்பு மடலில்” ஆளுநர் உரை பற்றி எழுதும்போது, இரண்டு பக்கங்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளையெல்லாம் பட்டியலிட்டிருக்கிறேனே, அதற்கெல்லாம் முதல் அமைச்சரின் பதில் எங்கே? அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம், நீதிமன்றங்களின் தீர்ப்பு, பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, டாஸ்மாக் ஏலத்தில் நடைபெற்ற முறைகேடு, காவல் துறையினரே ஈடுபட்ட பாலியல் தவறுகள் என்றெல்லாம் சுட்டிக்காட்டியிருந்தேனே; அதற்கெல்லாம் முதல் அமைச்சரின் விளக்கம் என்ன? அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல் நான் அவைக்கு வரவில்லை என்றெல்லாம் சொல்லுவது பதிலா?

நான் ஏதோ கொச்சைப்படுத்திப் பேசியதாக முதலமைச்சர் சொல்லுகிறார்! ஆனால் அவரது நேற்றைய பேச்சிலேயே நான் அளித்த பேட்டியில், “இந்த மாதிரியான நேரங்களில் எந்த அரசாக இருந்தாலும், அந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று கருதுபவன் நான். எனவே அந்தப் பணியை முறையாகச் செய்திருக்கிறேன்” என்று கடலூரில் நான் கூறியதையும் குறிப்பிட்டிருக்கிறார். அது அண்ணா அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த அரசியல் நாகரிகம். ஆனால் நான் சட்டமன்றத்திற்கே வர முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, அதையே கிண்டல் செய்து, என்னைத் தாக்கப் பேரவையிலே பேசியிருப்பது இன்றைய முதலமைச்சர் கற்ற நாகரிகம்.

அவரது நீண்ட உரையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் “தானே” புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்புத் திட்டம் ஒன்றை, இதுபோன்று புயல், வெள்ளம்

ஏற்படுகின்ற நேரங்களில் எல்லாம் வழங்கப்படும் சலுகைகளை அறிவித்திருக்கிறார். அதிலேகூட 2000, 2008ஆம் ஆண்டுகளில் தி.மு. கழக ஆட்சியில் சிறிய இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட போது செய்யப்பட்ட நிவாரண உதவியோடு ஒப்பிட்டுக் காட்டி தற்போது மிக அதிக அளவில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதை தி.மு. கழகம் வரவேற்கவே செய்கிறது.

அடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா தனது பதில் உரையில் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி அப்பகுதி மக்களிடையே நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில் மாநில அரசால் ஒரு வல்லுநர் குழு உடனடியாக நியமிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதே ஜெயலலிதா 19-9-2011 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இந்தப் பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும் வரை, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் எதையும் தொடர வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தற்போது மாநில அரசால் ஒரு வல்லுநர் குழுவினை உடனடியாக நியமிக்கப்படும் என்று அறிவித்துள்ள ஜெயலலிதா, அப்போதே இந்தக் குழுவினை அமைத்திருக்கலாமா அல்லவா? போராடுகின்ற மக்களை ஏமாற்றுவதற்காக அப்போதே பிரதமருக்கு மாநில அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டதா? இப்போதும் அவர்களை ஏமாற்றுவதற்காகத்தான் மாநில அரசின் சார்பில் வல்லுநர் குழுவினை அமைக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரா? அது மாத்திரமல்ல; கூடங்குளம் போராட்டக் குழுவினரும், மத்திய அரசின் சார்பாக, மத்திய அமைச்சர் மாண்புமிகு நாராயண சாமி அவர்களும் முதல் அமைச்சரை சந்தித்த பிறகு, தமிழக அமைச்சரவை 22-9-2011 அன்று கூடி கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றினார்களே, அதுவும் அந்தப் பகுதி மக்களை ஏமாற்றுவதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானமா?

அடுத்து தனது பதிலுரையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜூன் மாதம் முதல் மின் பற்றாக்குறை படிப்படியாகக் குறையும் என்றும், அடுத்த ஆண்டு மத்தியில் மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றால் நான்கு மாதங்களில் மின் வெட்டு இல்லாமல் செய்வோம் என்றார்கள். ஆனால் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் மின் பற்றாக்குறை முழுவதையும் நீக்குவோம் என்கிறார்கள். கடந்த ஆண்டு ஆளுநர் உரைக்குப் பதிலளித்த போதும் முதலமைச்சர் ஜெயலலிதா நீண்ட நேரம் மின் தட்டுப்பாட்டைப் பற்றித்தான் பேசி அதற்கு நான் விரிவாக அப்போதே “வருமா; எதிர்காலத்தில் மின் பற்றாக்குறை?” என்ற தலைப்பில் 18-6-2011 அன்று “முரசொலி”யில் எழுதியிருந்தேன். தற்போது அதே கருத்துக்களைத்தான் முதல் அமைச்சர் மீண்டும் பேசியிருக்கிறார். கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க. அரசு மின் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தால் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது என்கிறார் ஜெயலலிதா.

2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு மின் உற்பத்திக்காக என்னென்ன செய்யப்பட்டது என்று விளக்குகிறேன்.

எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006இல் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் தொடங்கும்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007இல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் இயக்கத்திற்கு வரும்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007இல் தொடங்கப்பட்டது; இதன் உற்பத்தி விரைவில் நடைமுறைக்கு வரும்.

உடன்குடியில் பி.எச்.இ.எல்., மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007இல் 8 ஆயிரத்து 362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. இதில் ஓர் அலகு 2013ஆம் ஆண்டு மார்ச் திங்களிலும்; மற்றொரு அலகு 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடைமுறைக்கு வந்து உற்பத்தியைத் தொடங்கும்.

வடசென்னை அனல் மின்நிலையத்திலேயே மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 14-7-2008இல் தொடங்கப்பட்டது.

ஆயிரத்து 126 கோடி ரூபாய் செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம், 14-12-2009இல் தொடங்கப்பட்டது. மொத்தம் 4183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. 2006இல் தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையை கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011இல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012இல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013இல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014இல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்தப் புள்ளி விவரங்கள், தி.மு. கழக ஆட்சியில் புதிதாக மின்சாரத்தை உற்பத்திச் செய்யக் கூடிய திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்குத் தேவையான திடமான விளக்கமாக அமையுமென்று கருதுகிறேன்.

2006ஆம் ஆண்டு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே எதிர்காலத்

தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்குமானால், தற்போது தேவையான மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும், தமிழகத்திலே பற்றாக்குறை வந்திருக்காது.

2001 முதல் 2006 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாக இருந்தது என்று ஜெயலலிதா சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே 16-10-1992 வரை தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா? இல்லையா? அது போலவே 3-10-1982 முதல் 26-7-1984 வரை, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா இல்லையா? 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிக தொழிற்சாலைகளை தமிழகத்திலே தொடங்காமல் இருந்திருந்தால் மின் கட்டுப்பாட்டு முறை வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஓர் அரசு இருக்க முடியுமா?

அ.தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால் கழக ஆட்சியிலே மின் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியதன் பயன் நிச்சயமாக வருங்காலத்தில் மின் பற்றாக்குறையை தமிழகத்தில் இல்லாமல் செய்திடும் என்று உறுதியாக நம்பலாம்.

சில நாட்களுக்கு முன்பு பேரவையில் பேசிய முதலமைச்சர் ஆளுநர் உரைக்கு தான் ஆற்றவிருக்கின்ற பதிலுரை கேட்டு எதிர்க்கட்சியினர் அசந்து போவார்கள் என்று கூறியிருந்தார். அது உண்மைதான்! அவரது ஒன்றரை மணி நேர உரை கேட்டு ஆளுங்கட்சியினரே “இதுதானா அசந்துபோக வைக்கக் கூடிய உரை” என்று அசந்துதான் போயிருப்பார்கள்! ஏனென்றால் அவரது உரையைக் கேட்ட முக்கிய எதிர்க்கட்சியினரே இல்லையே?

அன்புள்ள, மு.க. 6-2-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 128–133. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்