முரசொலி கடிதங்கள் · 3606
விஷம்; ஒரு துளி போதாதா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3606. விஷம்; ஒரு துளி போதாதா?
உடன்பிறப்பே,
“ஒரே மாதத்தில் பணிகளைச் செய்து சாதனை படைத்த இதுபோல் ஒரு அரசைக் காட்ட முடியுமா?” என்று தமிழகச் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா 31-1-2012 அன்று சவால் விட்டிருக்கிறார். யாரிடம் சவால் விட்டிருக்கிறார் என்றால் தே.மு.தி.க. புகாருக்கு மறுப்புக்கூறி சவால் விட்டிருக்கிறார். எந்த தே.மு.தி.க.? கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்த தே.மு.தி.க.வுடன் தோழமை பூண்டு வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றினார்களோ, அந்தத் தே.மு.தி.க.வின் தலைவரைப் பார்த்து - சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து - அவர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும், அவருடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்காக வருத்தப்படுவதாகவும் கூறியிருக்கிறார். இந்த மாபெரும் சாதனையை வேறு எந்த ஆட்சியிலும் காண முடியாததுதான்! ஜெயலலிதா ஒருவரால்தான் இத்தகைய மாபெரும் சாதனையைச் செய்து காட்ட முடியும்.
முதலமைச்சர் இந்த ஒரு சாதனையை மட்டும்தான் செய்திருக்கிறாரா? முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த ஏழு மாதங்களில் ஆறு முறை அமைச்சரவையை மாற்றிய இமாலய சாதனையைப் போல வேறு எந்த ஆட்சியிலும் செய்யப்படவில்லையேதான். எட்டு மாத காலத்தில் 9 அமைச்சர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சாதனை என்ன? இருபது இலாகாக்கள் கைமாறியிருக்கின்றன. சட்டத் துறைக்கு மட்டும் மூன்று அமைச்சர்கள் - உணவுத் துறைக்கு மூன்று பேர் மாறியிருக்கிறார்கள். ஒரு வாரம் மட்டுமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒரு வாரம் மட்டுமே வருவாய்த் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்ட சாதனை வேறு எங்கேயாவது உண்டா?
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்து, பின்னர் ஏதோ ஒரு தவறுக்காக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட என்.ஆர். சிவபதி மீண்டும் அமைச்சராகியிருக்கிறார். அப்படியென்றால், ஏற்கனவே அவர் செய்த தவறு சரியாகி விட்டதா?
அமைச்சர்கள் மட்டுமல்ல - அ.தி.மு.க. ஆட்சியிலே அதிகாரிகளின் நிலைதான் என்ன? எந்த ஆட்சியிலும் அதிகாரிகள் மாற்றம் என்பது சகஜம்தான். ஆனால் தற்போது நிலை என்ன? கலெக்டர்கள் எந்த அளவிற்கு பந்தாடப்படுகிறார்கள்? காவல்துறை அதிகாரிகளின் மாற்றம் எந்த அளவிற்கு நடைபெறுகிறது? ஏன் முதலமைச்சருடைய பாதுகாப்பு அதிகாரிகளின் நிலை என்ன?
கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் ஆறு மாதங்களில் மாற்றப்பட்டார். நேர்மையாக அங்கே பணியாற்றி வந்ததாகவும், நிர்வாகக் காரணங்களுக்காக இல்லாமல், ஆளுங்கட்சிப் பிரமுகரின் நிர்ப்பந்தம் காரணமாக அவரை விடுமுறையில் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு மாற்றப்பட்டு விட்டார் என்றும் ஏடுகளிலே செய்தி வந்தது. கோவை கலெக்டராக அரிகரன் என்பவரை நியமனம் செய்து அவர் அங்கே சென்று பொறுப்பேற்றுக் கொண்டு சில நாட்கள்தான் பணியாற்றினார். அதற்குள் அவரை மீண்டும் பழைய பதவிக்கே மாற்றி விட்டு, ஏற்கனவே அந்த மாவட்டத்தில் பணியாற்றி, கட்டாய விடுப்பில் செல்லுமாறு பணிக்கப்பட்ட கருணாகரனை கோவை கலெக்டராக பணி நியமனம் செய்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த சிவசண்முகராஜா, ஒரு சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் ஜனவரி மாதத் துவக்கத்தில் கட்டாய விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டார். அந்தப் பதவிக்கு சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதிப் பிரிவு துணை கமிஷனராக இருந்த ஹனீஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
“தானே” புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் கலெக்டர் திருமதி அமுதவல்லி 20.1.2012 அன்று நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெறுகிற நேரத்தில் திடீரென்று மாற்றப்பட்டார். என்ன காரணம்? நிவாரணப் பணிகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்று அரசே கருதிய காரணத்தால்தானே அந்தக் கலெக்டர் சில மாதங்களிலேயே மாற்றம் செய்யப்பட்டார்?
சென்னை கலெக்டராக திருமதி எஸ். மதுமதி நியமிக்கப்பட்டார். The post of Chennai Collector has been lying vacant for more than six months. This could well be the longest period when the seat has remained unoccupied. V. Shobana, the last Chennai Collector, was transferred to Karur on June 6. 2011. ஆறு மாதத்திற்கு மேலாக தலைநகர் சென்னைக்கு கலெக்டர் நியமிக்கப்படவில்லை. மாவட்ட வருவாய்த்துறை அலுவலரே கலெக்டர் பொறுப்பு வகித்தார். அவர் தோட்டக் கலைக்குச் சொந்தமான நிலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்தார். அதனை முரசொலியில் நான் எழுதிக் காட்டிய பிறகு மீண்டும் மீட்கப்பட்டது. பிறகு கடந்த வாரம் சென்னை மாவட்டத்திற்கு திருமதி மதுமதி புதிய கலெக்டராக அறிவிக்கப்பட்டு, அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். என்ன நிலை? சென்னை மாவட்டக் கலெக்டராக மதுமதி பொறுப்பேற்று இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றால் இத்தகைய சாதனைகளை வேறு எந்த ஆட்சியிலாவது காண முடியுமா?
திருமதி டி. சபீதா, ஐ.ஏ.எஸ்., அவர்கள் ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில், முதல் அமைச்சருக்கு நெருக்கமாக பணியாற்றியவர் என்று சொல்லப்பட்ட போதிலும், தி.மு. கழக ஆட்சியிலே அவரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக நியமனம் செய்தோம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே இவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டார். எத்தனை மாதங்கள்? ஒரு சில மாதங்களில் அவரை மீண்டும் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக மாற்றியிருக்கிறார்கள். முதலில் அவரை ஏன் மாற்றினார்கள்? பிறகு ஏன் அதே பதவியில் நியமனம் செய்தார்கள்?
அதுபோலவே, தமிழகத்தில், 6 பல்கலைக் கழகங்களில் தற்போது துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை. இதுபோல், தமிழக உயர் கல்வி மன்றத்தில், துணைத்தலைவர், உறுப்பினர் - செயலர், உறுப்பினர்கள் இல்லாமல், வெற்றுக் கூடாரமாக உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி மட்டுமல்ல, பதிவாளர் பதவியும் காலியாக உள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவாளர் பதவி காலியாக உள்ளது. கல்லூரிக் கல்வி இயக்குநர்,
மண்டல இயக்குநர் பதவிகளும் காலியாகவே உள்ளன. இத்தகைய சாதனைகளை வேறு ஆட்சியிலே காண முடியுமா? முடியாதுதான்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் 3-6-2011 அன்று படித்த ஆளுநர் உரையில்; அ.தி.மு.க. அரசு தேவையான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, மக்கள் அச்சமின்றி வாழ்க்கை நடத்த வழிவகுக்கும் என்று சொன்னார்கள். என்ன நிலை?
தமிழகத்தில் கொலை நடக்காத நாட்கள் உண்டா? கொள்ளை நடக்காத நாட்கள் உண்டா? வழிப்பறி, செயின் பறிப்பு எத்தனை, எத்தனை?
மே 13, 2011 முதல் அக்டோபர் 14, 2011 வரையில் 154 கொலைகள், 165 கொள்ளைகள், 102 செயின் பறிப்புகள், 27 வழிப்பறிச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.
கடந்த மாதம் வரை முதலமைச்சருக்கு மிக மிக வேண்டியவர்களாக இருந்தவர்கள். ஆண்டுக்கணக்கில் அவருடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தவர். தற்போது அவருக்கு வேண்டியவர்கள் எல்லாம் தோட்டப்பட்டுவிட்டார் பட்டியலில்! அவர்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகள்! அந்தக் குற்றச்சாட்டுகளுக்குக் காரணம் என்ன? முதலமைச்சருக்கு வேண்டியவர்கள் என்பதால் அந்தக் குற்றங்களைச் செய்தார்கள் என்றால், அந்தக் குற்றச்சாட்டுகளில் முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா? இத்தகைய சாதனை வேறு எந்த ஆட்சியிலேயாவது நடைபெற்றது உண்டா?
முதலமைச்சர் பொறுப்பிலே உள்ள - தமிழகக் காவல் துறையின் திறமைக்கு ஒரே ஒரு உதாரணம் - முதலமைச்சருக்கு மிகவும் வேண்டிய - தற்போது வேண்டாத - திவாகரன் என்ற தனிப்பட்ட ஒருவரைத் தேடுவதற்காக 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 4 துணை கண்காணிப்பாளர்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் என்று 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதே தவறு தி.மு. கழக ஆட்சியிலே நடைபெற்றிருந்தால், ஜெயலலிதா எத்தனை முறை “கையாலாகாத மைனாரிட்டி அரசு” என்று அறிக்கை வெளியிட்டிருப்பார்? பன்னீர்தான் பதில் அளிக்க வேண்டும்!
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த எட்டு மாதங்களில் செய்த சாதனைகளைப் போல வேறு ஒரு அரசைக் காட்ட முடியுமா? இதோ சில சாதனைகள் -
1. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்தது. 2. பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை மாற்றியது. 3. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்து சட்டம் இயற்றியது. 4. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றியது. 5. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்றப் போவதாக அறிவித்தது. 6. முத்தமிழ்ப் பேரவைக்கு இடம் கொடுத்ததை ரத்து செய்தது. 7. மேலவை ரத்து தீர்மானம். 8. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்தது. 9. குடிசை வாழ் மக்களுக்கான காங்கிரீட் வீடு வழங்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியது. 10. கழக முன்னணியினர் மீது நடவடிக்கை - குண்டர் சட்டம் - முன்னணியினர் இல்லங்களில் சோதனை நடவடிக்கைகள். 11. ஆட்சிக்கு வந்தவுடன் வரிகள் - பால் விலை உயர்வு - பேருந்துக் கட்டணம் உயர்வு - மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை.
பல ஆய்வுகளுக்குப் பிறகு, பல குழுக்கள் பரிந்துரைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டப் புத்தகங்களையெல்லாம் நாங்கள் ஏற்க மாட்டோம், பழைய பாடத் திட்டம்தான் என்று சொன்னதோடு நிற்காமல் சட்டப் பேரவையிலேயே அவசர அவசரமாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது! இதை எதிர்த்து
உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, நீதியரசர்கள் எஸ். ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே. வாசுகி ஆகியோர் “சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது, சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு விரிவாக ஆராய்ந்து, சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது, அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையைச் செலவிடுவது அவசியம்தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்கள்.
அதற்குப் பிறகும், தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் பி.எஸ். சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில், “1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்குக் கொண்டு வரப்பட்ட சமச்சீர்கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும். 2 முதல் 5 ஆம் வகுப்பு வரையும், 7 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். அந்தப் பாடத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதுகுறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, அந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்.
சென்னை ஐகோர்ட்டும் வழக்கை தொடர்ந்து விசாரித்து, உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் அளித்த தீர்ப்பில், “மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்று கூறுவதற்கு எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம். சமச்சீர் சட்டத்தின் கீழ் வரும் கல்விக்கான பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்” என்றெல்லாம் கூறினார்கள். இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் “சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது, 2-8-2011க்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டும்”
என்று தெரிவித்தது. அதையும் தமிழக அரசு மதித்து சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகிக்கவில்லை. தமிழக அரசின் வழக்கறிஞர் சமச்சீர் கல்வியை நடப்பாண்டிலேயே அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றார். உச்ச நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதிகள் பாஞ்சல், தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. எடுத்த எடுப்பிலேயே, நீதிபதிகள், “தி.மு.க. அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று 2010ஆம் ஆண்டே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் - சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வந்தது ஏன்? அதற்கான அவசியம் என்ன?” என்று கேட்டனர். அரசுக்காக வாதாடிய வழக்கறிஞர் பி.பி. ராவ் அவர்களோ, “தமிழக அரசுக்கு சரியான சட்ட ஆலோசனை வழங்கப்படவில்லை, தேவையில்லாத சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து பிரச்சினையில் சிக்கிக் கொண்டு விட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். நீதிபதிகள் இறுதியாக வழங்கிய தீர்ப்பில், சமச்சீர் கல்வியை பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும், எந்தவொரு சட்டத்தையும் ஆட்சி மாற்றம் காரணமாக மாற்றக் கூடாது, எதிர்கால விளைவுகளைக் கருத்தில் கொண்டே எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கப்பட வேண்டும், அரசியல் கட்சிகள் தங்களது விருப்பு வெறுப்புகளுக்காக கல்வி முறையை மாற்றக் கூடாது என்று கூறி, தமிழக அரசின் மனுவினை தள்ளுபடி செய்தார்கள். ஜெயலலிதாவிற்கு விழுந்த முதல் சம்மட்டி அடியாகவே இந்தத் தீர்ப்பு கருதப்பட்டது. இதுபோன்ற சான்றிதழ் வேறு எந்த அரசுக்காவது பதவிக்கு வந்த ஆறு மாதங்களில் கிடைத்தது உண்டா? இது ஒரு சான்றிதழ்தானா?
பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாக அறிவித்தார். அதுகுறித்த வழக்கில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு “இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடம் மாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே! அரசின் இந்த முடிவு உள் நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்ட
நீதிபதிகள், நூலகத்தை மாற்றுவது குறித்து விளக்கம் அளித்திட அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
டி.என்.ராஜரத்தினம் நினைவு முத்தமிழ்ப் பேரவைக்காக கழக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இடத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியிலே ஜெயலலிதா அரசு ஈடுபட்ட போது, நீதியரசர் என். பால் வசந்தகுமார் “ஒரு கையில் நிலத்தைக் கொடுத்து விட்டு, மறு கையில் நிலத்தைப் பறிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆட்சிகள் மாறினாலும் அரசு ஒன்றுதானே? ஏன் திடீரென்று இப்படி முடிவெடுத்தீர்கள்? இதை நான் நிறுத்தி வைக்கிறேன். தாங்கள் வேண்டுமானால் பதில் மனுவினை நான்கு வாரத்தில் தாக்கல் செய்யலாம்” என்று கூறி பொதுப் பணித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்தார். இப்படிப் ஜெயலலிதாவின் சாதனைகளை எழுதிக் கொண்டே போகலாம்.
மக்கள் நலப் பணியாளர்கள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, பணி நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த 8-11-2011ந்தேதி உத்தரவிட்டது. இதற்கான வழக்கில் நீதிபதி சுகுணா, பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். 21-11-2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை, மக்கள் நலப் பணியாளர்களை பணியில் சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது. உடனடியாக அவர்களை பணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும், கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை 23ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், “முதலில் மாதம் 200 ரூபாய் தொகுப்பூதியம் அடிப்படையில், 1990ஆம் ஆண்டு மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1991ஆம் ஆண்டு அரசு மாறியதால் அவர்கள் நீக்கப்பட்டனர். 1997ஆம் ஆண்டு, அடுத்த அரசு வந்தபின், இவர்கள் 500 ரூபாய் தொகுப்பூதியத்தில் மீண்டும் நியமிக்கப்பட்டனர். 2001ஆம் ஆண்டு அரசு மாறியவுடன் இவர்கள் மீண்டும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு அடுத்த அரசு வந்தபின், 1000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். மக்கள் நலப் பணியாளர்கள்
நியமனம், நீக்கம் என அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துள்ளது தெரிகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் என வாதத்துக்கு கருதினாலும் கூட கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர். ஒரு கையெழுத்தில் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தால் நீதியின் கொள்கைப்படியும், சட்டப்படியும் அவர்களை நீக்கும் முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அரசு கருத்து கேட்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதி சுகுணா இந்த வழக்கில் தடை உத்தரவை சரியாகப் பிறப்பித்துள்ளார். அதை நீக்க முடியாது. மக்கள் நலப் பணியாளர்களின் நிலையைப் பார்க்கும்போது கால்பந்து விளையாட்டு போல உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் நிர்ணயம் செய்து ஒருவருக்கு அரசு பணி வழங்கிய பிறகு சரியான காரணம் இல்லாமல் அவரை நீக்குவது சட்ட விரோதமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசு மாறும் போது மாறி மாறி உத்தரவு பிறப்பிப்பது கடும் கண்டனத்துக்குரியது, வேதனையானது, வருந்தத் தக்கது. எனவே அரசு கோரிக்கையை நிராகரிக்கிறோம். கடந்த ஆட்சியின் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் வந்த ஊழியர்களை வேறு பணியில் அமர்த்த வேண்டும், அதை விட்டு விட்டு அவர்களை டிஸ்மிஸ் செய்வது தவறு. இது எந்த விதத்தில் நியாயமானது. இது அரசியல் சார்புடையது என்பது தெரியும். இருந்தாலும் அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறினார்கள். ஆனால் தமிழக அரசின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உச்சநீதிமன்றத்தில்
29-11-2011 அன்று நீதிபதிகள் டி.கே. ஜெயின், தவே ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, “தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? ஆட்சி மாறும்போது முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்வது ஏன்?” என்று கண்டனம் தெரிவித்தார்கள். இந்தச் சாதனையைப் போல வேறு எந்த ஆட்சியிலாவது நடந்தது உண்டா? இவ்வளவிற்குப் பிறகும் மக்கள் நலப் பணியாளர்களை பணியிலே அமர்த்தாமல் அப்பீலுக்குப் போவேன் என்கிறதே தமிழக அரசு! அந்த ஒரு சாதனை போதாதா?
ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக வரவு செலவுத் திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே
தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியைச் சுமத்திவிட்டு; அத்துடன் இல்லாமல் இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - பஸ் கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிற சாதனைகள் தான் எத்தனை, எத்தனை? வேறு எந்த ஆட்சியிலாவது எட்டே மாதங்களில் இவ்வளவு சாதனைகளைப் புரிய முடியுமா?
கடந்த காலங்களில் ஜெயலலிதா விடுத்த ஒவ்வொரு அறிக்கையிலும், தமிழ்நாடு மின்வாரியத்தை தி.மு. கழக அரசு, முதல் அமைச்சராக இருந்த நானும் சீர்கேடு அடையச் செய்து விட்டதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி விட்டு, தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு மின் கட்டணங்களை உயர்த்த பரிந்துரை செய்திருக்கும் ஜெயலலிதாவின் சாதனையைப் போல வேறு யாராவது செய்ய முடியுமா?
இந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல் விவகாரங்களை எல்லாம் இடம் இல்லாததால் பிறகு பட்டியலிடுகிறேன். அரசினால் நடத்தப்படும் “டாஸ்மாக்” பொதுத் துறை நிறுவனத்திற்கு வர வேண்டிய வருவாய் ஆளுங்கட்சியினருக்குத் திருப்பி விடப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்தில் “டாஸ்மாக்” நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இதுவரை மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள். அதற்குக் காரணமே ஊழல் தான் என்று சொல்லப்படுகிறது.
“Favouritism Alleged” என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ் ஒன்று (26-11-2011) வெளியிட்ட செய்தியில், “Tasmac incurs loss in Tirupur - The State-run Tasmac, which operates retail liquor shops across the State, has allegedly showed favours to ruling party members in awarding bars, unmind ful of the revenue loss it caused. (திருப்பூரில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு இழப்பு - மாநிலத்தில் சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை நடத்தி வரும் அரசு நிறுவனமான “டாஸ்மாக்” தனக்கு வரும் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு “பார்” களை வழங்குவதில் சலுகை காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.)
A reply given to an RTI petition filed by Mr. M. Karthikeyan, President of Tirupur District Bar Owners Association, has revealed that
Tasmac has been incurring Rs. 60 lakh monthly loss in Tirupur alone owing to alleged irregularities in awarding bar tenders. (திருப்பூர் மாவட்ட பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு. எம். கார்த்திகேயன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து பெற்ற விவரத்தின்படி திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் பார் டெண்டர்கள் வழங்கியதில் காட்டப்பட்ட முறைகேடுகளால் “டாஸ்மாக்” நிறுவனத்துக்கு மாதம் ஒன்றுக்கு 60 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவது வெளிவந்துள்ளது.)
Tirupur district generated a profit of Rs. 61.10 lakh every month from the 250 IMFL shops during the previous fiscal, while it has gone down to Rs. 1.66 lakh per month from the 209 shops under operation in the current financial year, the RTI reply reveals. (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்துள்ள செய்தி; கடந்த நிதி ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 250 டாஸ்மாக் கடைகளை டெண்டர் மூலமாக கொடுத்ததில், மாதம் 61.10 லட்சம் ரூபாய் அரசுக்கு இலாபம் கிடைத்து வந்தது. தற்போது இந்த நிதியாண்டில் செயல்பட்டு வரும் 209 கடைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கும்)
For instance, shops No. 1906, 1923, and 1927 located on P.N. Road, Kovai Main Road and Mangalam Road, have been auctioned for just Rs. 100 more than the upset price. Most of the shops were auctioned for less than Rs. 1000 more than the upset price, the RTI reply revealed.
(உதாரணமாக, பி.என். சாலை, கோவை மெயின் சாலை, மங்கலம் சாலை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடை எண்கள் 1906, 1923, 1927 ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச விலையை விட வெறும் 100 ரூபாய் அளவிற்கே ஏலம் விடப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகளை ஏலம் விடப்பட்ட போது குறைந்த பட்ச விலையை விட ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான தொகைக்கே ஏலம் விடப்பட்டுள்ளன)
Mr. Karthikeyan attributed the loss to deliberate undervalue of the auction price by local Tasmac officials to favour ruling party members. Of the 41 shops not auctioned this year, most were withheld only to favour nearby shops awarded to members of the ruling AIADMK,
he charged, adding that several applications were received after the deadline on the night before opening the tenders. Those who questioned the irregularities were booked under charges of bootlegging. (Deccan Chronicle-26/11/2011).
(உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சாதகமாக டாஸ்மாக் அதிகாரிகள் ஏலத் தொகையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டதால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று திரு. கார்த்திகேயன் கூறுகிறார். 41 கடைகளை ஏலம் விடாததற்குக் காரணம், அவற்றின் அருகில் அ.தி.மு.க.வினரின் “பார்”கள் இருப்பதால், அவர்களுக்கு சாதகம் செய்வதற்காகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். மனுக்கள் வந்து சேர வேண்டிய காலத்திற்குப் பிறகு டெண்டர் திறக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவோடு இரவாக பல விண்ணப்பங்கள் பெறுவதற்காகவும் இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்டவர்களை கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பதாக பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.)
நெடுஞ்சாலைத் துறையிலே நடைபெற்ற டெண்டர் பற்றி ஆளுங்கட்சி ஆதரவு பத்திரிகை ஒன்றில் 27-11-2011 வெளியிட்ட செய்தியில், “விழுப்புரம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில், 24, 25ஆம் தேதிகளில் விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் சாலைப் பணிகளுக்கான டெண்டர் நடந்தது. மாலை 3 மணியுடன் டெண்டர் நேரம் முடிந்தது. இருப்பினும் மாலை 5 மணிக்கு விழுப்புரம் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில், அ.தி.மு.க. பிரமுகர்களின் கார்கள் அணிவகுத்து நின்றன. டெண்டர் நேரம் முடிந்தும், கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், ஒரு பத்திரிகை போட்டோகிராபர் படம் எடுத்தார். இதைப் பார்த்த கண்காணிப்புப் பொறியாளர் சிவக்குமார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், டெண்டர் எடுக்க வந்திருந்த கட்சிப் பிரமுகர்களுடன் சேர்ந்து போட்டோகிராபரை, அறைக்குள் வைத்து கதவைப் பூட்டினர். புகைப்படத்தை “டெலிட்” செய்யுமாறு கூறி மிரட்டினர். டெண்டர் நேரம் முடிந்து இரண்டு மணி நேரமாகியும் அ.தி.மு.க. பிரமுகர்கள், கண்காணிப்புப் பொறியாளர் சிவக்குமார் அறையில், தனிமையில் பேசியதை போட்டோ எடுத்ததால், ஆத்திரமடைந்த அதிகாரிகள்,
போட்டோகிராபரை மிரட்டியதோடு, படங்களை “டெலிட்” செய்ய வைத்து வெளியே அனுப்பினர்.
இரு தினங்கள் நடந்த டெண்டரில், அமைச்சர்களின் பரிந்துரை எனக்கூறி, சிலருக்கு பணியை வழங்க முடிவு செய்தனர். இதனால் மற்ற விண்ணப்பதாரர்களை அழைத்து, அடுத்த முறை உங்களுக்குப் பணி வழங்குகிறோம் என்று கூறி நிராகரித்தனர். சிலருக்கு அதிகாரிகளே குறிப்பிட்ட தொகை கொடுக்கச் செய்து, அவர்களை சரிகட்டினர். ஸ்பீடு போஸ்டில் வந்த 165 தபால்களை நேரத்தில் வாங்கி, டெண்டரை முறையாக நடத்தாமல் நிராகரித்து, போட்டியின் பலத்தைக் குறைத்து, தங்கள் விருப்பத்திற்கேற்ப டெண்டரை ஒதுக்கியுள்ளனர். இதனால் அரசுக்கு கூடுதலாக பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, மூத்த காண்ட்ராக்டர்கள் தெரிவித்தனர். டெண்டரில் கணிசமான தொகை கை மாறியதால், தரமான முறையில் சாலை பணிகள் நடக்குமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த இதழில் செய்திகள் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன. அரசின் செயல்பாடுகளுக்கு இதெல்லாம் ஒரு சில உதாரணங்கள்.
திருக்கோவிலூர் அருகில் மண்டபம் என்ற ஊரில் இருளர் இனத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை நள்ளிரவில் போலீசார் பலாத்காரம் செய்ததை யொட்டி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி புகார் மனு அளித்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் “போலீசாரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண்களை நள்ளிரவில் கைது செய்வது தவறு என்று அரசு வக்கீல் கூறியதை ஏற்றுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களை உடனே மருத்துவ சோதனைக்கு அனுப்பாமல் ஒரு மாதத்துக்கு பின்பு அனுப்புவீர்களா? உடனடியாக அவற்றின் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் எஸ்.பிக்கு உத்தரவிடுகிறோம். 2 வாரத்தில் அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.” என்று கூறினார்கள்.
பரமக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு திரு. ஜான் பாண்டியன் வரவிருந்ததை தேவையில்லாமல் தமிழக அ.தி.மு.க. அரசு தடுத்து தடை விதித்தது. அப்பாவிப் பொதுமக்கள் மீது குறிப்பாக ஆதிதிராவிடர்கள் மீது காவல் துறையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த
இடத்திலேயே 6 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்து இன்னமும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இதுபோன்ற சாதனை வேறு எந்த ஆட்சியிலாவது உண்டா?
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அ.தி.மு.க. அரசு கழகத்தினர் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்குகளைப் புனைந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. வழக்குகளைப் போடுகிறது. அது போன்ற சாதனையைத்தான் வேறு எந்த ஆட்சியாவது செய்திட முடியுமா?
அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறை விவகாரங்களில் கட்சிக்காரர்கள் தலையிடமாட்டார்கள் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒரு மாதத்திற்குள் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. சென்னையில் 12-6-2011 அன்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரும், ஏன் அமைச்சர் ஒருவரும் காவல் நிலையத்திற்கே அதுவும் இரவிலே சென்று காவல் நிலையத்தில் காவல் துறையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஏழு பேரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காவல் துறை துணை கமிஷனர் மீது ஒரு அமைச்சரே புகார் கூறியிருக்கிறார். நியாயமாக நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரி ஒரே நாளில் பட்டாளியனுக்கு மாற்றப்பட்டு விட்டார். என்னே நியாயம்? இந்த ஒரு சாதனை போதாதா?
இப்படி நான் எழுதிக் கொண்டே போகலாம்! எழுதாமல் இருக்கலாம் என்றுதான் எண்ணினேன். அம்மையார், பேரவையில் சாதனை பற்றி - சவால் விட்டதாக ஏடுகள் எல்லாம் எழுதிய காரணத்தால், உடனடியாக என் நினைவுக்கு வந்தவைகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன். இந்த ஆட்சியின் சாதனைகளில் இது ஒரு துளிதான்! விஷம்; ஒரு துளி போதாதா?
அன்புள்ள, மு.க. 3-2-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 114–127. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.