அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3608

முரசொலி கடிதங்கள் · 3608

திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்கம்!

நாள் 18.2.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3608. திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்கம்!

உடன்பிறப்பே,

நாள்தோறும் உதயசூரியனோடு சேர்ந்து எழுகின்ற பழக்கமுடைய நான்; இன்றும் அவ்வாறே துயில் நீங்கி எழுந்தேன். என் செவிகளில் தம்பி சுப.வீரபாண்டியன் “கலைஞர் தொலைக்காட்சி”யில் உரை நிகழ்த்தும் குரல் கேட்டது - “ஒன்றே சொல்! - நன்றே சொல்!” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் - திராவிடர் இயக்கச் சரித்திரம் பற்றி குறிப்பிட்டு விட்டு - அந்தத் திராவிடர் சங்கத்தின் நூற்றாண்டு இந்த ஆண்டு பெப்ரவரி முதல் தொடங்குகிறது என்றும், 2013 ஆம் ஆண்டு அந்த இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியபோது, மறைந்த தம்பி முரசொலி மாறனும், மற்றொரு தம்பி மறைந்த கே.ஜி. இராதா மணாளனும், மற்றொரு தம்பி க. திருநாவுக்கரசும் எழுதிய “திராவிட இயக்க வரலாறு” எனும் நூலும் நினைவுக்கு வரவே; இது திராவிட இயக்க நூற்றாண்டு என்பதற்கான ஆண்டுக் குறிப்புகள் அந்த நூல்களில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை அறிந்திட அவற்றைப் புரட்டிப் பார்த்தேன்.

“திராவிட இயக்கத் தோற்றம்” என்ற துணைத் தலைப்பில் மாறன் எழுதியுள்ள “திராவிட இயக்க வரலாறு” எனும் நூலுக்கான முகப்புரையின் முதலாவது அத்தியாயத்தைப் படித்த போது, அதை அப்படியே வார்த்தை பிசகாமல் உனக்கு நினைவூட்ட வேண்டுமென்பதால் இந்தக் கடிதத்தில் அதனை இணைத்து எழுதுகிறேன். மாறன் எழுதியது வருமாறு :-

“இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம்...

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 1912 ஆம் ஆண்டு!

சென்னை நகரில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் சிலர்,

தாங்கள் பிராமணரல்லாதாராய் இருந்த ஒரே காரணத்தாலேயே உத்தியோகத் துறையில் புறக்கணிக்கப்பட்டதையும், வேலை உயர்வு - போன்ற நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையும் உணர்ந்து, மனம் புழுங்கிக் கலந்துரையாடவும், இணைந்து செயல்படவும், ஒன்றுபட்டுத் தங்கள் குறைகளை எடுத்துரைக்கவும் 1912ஆம் ஆண்டு “மெட்ராஸ் யுனைடெட் லீக்” (Madras United League) என்னும் அமைப்பினை உருவாக்கினர்.

இந்த அமைப்பிற்கு வழிகாட்டியாகவும், துணையாகவும் இருந்தவர் அப்போது சென்னையில் சிறந்த டாக்டர்களில் ஒருவராக விளங்கிய நடேசனார் ஆவார். அவர்தாம் திராவிட இயக்கத்தின் நிறுவனர். அவரே அந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்து அரும்பணியாற்றினார். ஓராண்டிற்குள் அந்த அமைப்பின் உறுப்பினர் தொகை 300 ஆயிற்று. “லீக்”கின் கூட்டங்கள் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த டாக்டர் நடேசனார் இல்லத்திலேயே நடைபெற்றன.

திரு. சரவண பிள்ளை (பின்னால் தஞ்சையில் “டெபுடி கலெக்டர்” ஆனவர்), திரு. ஜி. வீராசாமி நாயுடு, திரு. துரைசாமி முதலியார் (பொறியியல் துறையைச் சேர்ந்தவர்), திரு. எஸ். நாராயணசாமி நாயுடு (வருவாய் வாரியத்தின் ஷெரீப்பாகப் பணியாற்றியவர்) - போன்ற பின்னாளில் பெரும் உத்தியோகங்கள் ஏற்ற பிராமணரல்லாதார் “மெட்ராஸ் யுனைடெட் லீக்” அமைவதற்குப் பாடுபட்டதாகத் திரு. பி. ரெங்கசாமி நாயுடு கூறுகிறார்.

முதன் முதலாக அவர்கள் ஏற்றுக் கொண்ட சமுதாயப்பணி முதியோர் கல்வியாகும். அதன் உறுப்பினர்களாகவிருந்த அரசு ஊழியர்களே தங்களது மாலை நேர ஓய்வு காலத்தை இந்தப் பணிக்குச் செலவிட்டனர். ஆண்டுதோறும் பல்கலைக் கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத இளம் பட்டதாரிகளுக்கு வரவேற்பு நடத்தி, அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி, அவர்களது சமுதாயக் கடமையை நினைவுறுத்துவதும் அந்த அமைப்பின் பணிகளில் ஒன்றாக இருந்தது. அப்போதெல்லாம் பல்கலைக் கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத மாணவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருந்தமையால் இது சாத்தியமாயிற்று.

ஒருமுறை திவான்பகதூர் பி. கேசவப் பிள்ளை தலைமையில் அத்தகைய வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. (சர்) பி. தியாகராயர், பனகல் அரசர் போன்றோர் அந்த வைபவத்திற்கு வருகை தந்திருந்தனர். பட்டதாரிகளின் சார்பாக வரவேற்பிற்கு நன்றி கூறிப் பேசிய ஓர் இளைஞர் தமது பேச்சுத் திறனால் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தார். அவர்தாம் பின்னாளில் நீதிக் கட்சிப் பிரமுகராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும் விளங்கிய (சர்) ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) ஆவார்.

1913ஆம் ஆண்டு “மெட்ராஸ் யுனைடெட் லீக்”கின் முதலாவது ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் டாக்டர் நடேசனாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் நடைபெற்றது. அன்று அங்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓர் இனத்தின் தனித்தன்மையைக் கண்டறிந்து, ஓர் இயக்கத்திற்கே பெயர் சூட்டிய தீர்மானமாகும். அது “மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்கிற பெயரை மாற்றுவது பற்றிய தீர்மானம்! சங்கத்தின் பெயர் அதன் நோக்கங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை - என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டு அதற்குச் சரியான பெயரைச் சூட்டும் விவாதம் நடைபெற்றது.

பிராமணரல்லாதார் சங்கம் - எனப் பெயரிடலாம் என்கிற கருத்து சொல்லப்பட்டது. அது எதிர்மறைப் (negative) பெயராக இருப்பதால் அப்பெயருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இறுதியில், “மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்னும் பெயரை “திராவிடர் சங்கம்” (Dravidian Association) என்று மாற்றுவதென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் அந்தச் சங்கம் இயக்கிவிட்ட உணர்வுகள் திராவிட இயக்கம் என்று பெயர் பெறலாயின.

திராவிடர் சங்கம் - என்று பெயர் மாற்றப்பட்ட பிறகு அதன் உறுப்பினர் தொகை 500 ஆயிற்று.

1914ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி உயர் நிலைப் பள்ளி ஒன்றின் மாடியில் உள்ள கூடத்தில் திராவிட சங்கத்தின் முதலாண்டு நிறைவு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியோடு பிராமணரல்லாத பட்டதாரிகளுக்கு ஒரு வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்குத் தலைமை வகிக்க ஒப்புக் கொண்டிருந்த வெங்கடகிரி அரசர் உடல்நலக் குறைவு காரணமாக வர இயலவில்லை. அப்போது ஸ்மால்காஸ் கோர்ட்டுகளின் பிரதம நீதிபதியாகவும் (Chief Judge of Small Cause Courts), பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்த தி. கிருஷ்ணன் அந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அன்றைய தினம் சிறப்புரையாற்றியவர் டாக்டர் டி.எம். நாயர் ஆவார். கூடியிருந்த மாணவர்களும், அரசு ஊழியர்களும் என்றும் நினைவுகூரத்தக்க அரியதோர் உரையை அவர் ஆற்றினார். இளைஞர்கள் துணிவு பெற வேண்டுமென்றும், தங்கள் குறைபாடுகளைத் தைரியத்துடன் எடுத்துவைக்க வேண்டுமென்றும், அந்த அமைப்பின் தேவையைப் பொதுமக்கள் உணருமளவிற்கு அதை வலிவுள்ளதாக்கப் பாடுபட வேண்டுமென்றும் அவர் வற்புறுத்தினார்.

“விழியுங்கள்! எழுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்துபட்டோராவீர்!!!” (“Awake, Arise or be for ever fallen!”) என்று கூறி அவர் தமது சொற்பொழிவை முடித்தாரென்றால் அன்றைய பிராமணரல்லாத இளைய தலைமுறையினரிடையே அவர் எத்தகைய எழுச்சியுரையாற்றினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போதிய நிதி வசதி இல்லாத நிலையில் திராவிட சங்கம் இரண்டு கருத்து விளக்க நூல்களை 1915இல் வெளியிட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கது “பிராமணரல்லாதார் கடிதங்கள்” (“Non-Brahmin Letters”) என்பதாகும். அப்போதைய சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதாரின் இழிநிலையை விளக்கி, அவர்களை ஒன்றுபட்டு இயங்கக் கோரும் 21 கடிதங்கள் அந்தப் பிரசுரத்தில் அடங்கியிருந்தன.

எஸ்.என்.கே. என்னும் புனைபெயரில் இந்த நூல் எழுதப்பட்டிருந்தது. இன்னொரு நூல் சர். சி. சங்கரன் நாயர் எழுதிய Dravidian Worthies என்பதாகும்.

● பிராமணரல்லாதார், பிரித்துக் கொட்டிய நெல்லிக்காய் மூட்டை போல ஒற்றுமையிழந்து சிதறிக்கிடக்கின்றனர்.

● ஒன்றுபட மறுப்பது மட்டுமல்ல; ஒருவருக்கொருவர் பொறாமையால் பிளவுபட்டும் இருக்கின்றனர்.

● கல்வி கற்பதில் கவனம் செலுத்தாமல், தங்கள்

பரம்பரைத் தொழிலையே மேற்கொண்டு அதிகபட்சம் “துபாஷி”களாக வேண்டும் - என்பதற்கு மேல் அவர்கள் குறிக்கோள் செல்வதில்லை.

● பிராமணரல்லாத முதலாளிகளாலேயே அவர்களது பிராமணரல்லாத சகோதரத் தொழிலாளிகள் இழிநிலையில் நடத்தப்படுகின்றனர்.

● இந்த இழிநிலைக்குப் பிராமணரல்லாதார் தங்களைத் தாங்களேதான் குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும்.

● ஏனெனில், அவர்கள் அரசாங்கத் துறையில் உத்தியோக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியிருக்கின்றனர்.

● அதே நேரம் பிராமணர்களைப் பாருங்கள்! கல்வியின் முக்கியத்தை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு எவ்வளவு ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள்!

● ஆனால், பிராமணரல்லாதார் “மனு ஸ்மிருதி”யின் மயக்கத்திலாழ்ந்து தங்களது கேடு கெட்ட நிலைக்குத் தாங்களேயல்லவா காரணமானவர்களாக இருக்கிறார்கள்!

● பிராமணரல்லாத சமூகத்தினர் சென்னை மாகாணப் பொது வாழ்வில் தங்களுக்குரிய இடத்தைப் பெற வேண்டுமானால் திராவிடர்கள் அனைவரையும் அமைப்பு ரீதியில் ஒன்று சேர்க்க வேண்டும்; திராவிடத் தாய் மொழிகளில் கற்பிக்கும் “தேசிய”க் கல்லூரியைத் துவக்க வேண்டும்.

● இத்தகைய உண்மைப் படப்பிடிப்பைக் கொண்ட பிரசுரங்கள், படித்த பிராமணரல்லாதாரிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தன.”

உடன்பிறப்பே,

தம்பி முரசொலி மாறனின் இந்தப் புத்தகத்திலிருந்தும், தம்பி சுப. வீரபாண்டியன் ஆற்றிய தொலைக்காட்சி உரையிலிருந்தும்

நடேசனார் தொடங்கிய அந்த “திராவிடர் சங்கம்” தான் இன்றைக்கு வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதிக்கெல்லாம் அடித்தளம் போன்றது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய நமது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு முழுவதும் தமிழர்களாகிய, திராவிடர்களாகிய நாமனைவரும் கொண்டாட வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா நமது கழகத்தின் சார்பில் - இந்த 2012ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரையில் சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். திராவிட இயக்கம் வளர்த்த பெரியவர்களின் பெருமைகளையெல்லாம் அந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் நாம் பேசவேண்டும். திராவிட இயக்க நூற்றாண்டு விழா தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா என்பதை மனதிலே கொள்வோம். அதற்காக விழாவினை நாடெங்கும் எடுப்போம். திராவிட இயக்க நூற்றாண்டு விழா நாம் கொண்டாட வேண்டிய தன்மான உரிமைத் திருவிழா! குறிப்பிட்ட அந்த நாள்; எந்த நாள் என்று இல்லாமல் - இந்த ஆண்டு முழுவதுமே அந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முனைவோம் - அதற்கு இன்று முதல் முரசு ஒலிப்போம் - அந்த முழக்கம் இன்று பிப்ரவரி 18ல் தொடங்கட்டும்! பின்னர் மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கி இந்த நூற்றாண்டு விழா எழுச்சி நிறை விழாக்களாக நடக்கட்டும்! அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்! நடக்கட்டும்!

அன்புள்ள, மு.க. 18-2-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 134–139. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்