முரசொலி கடிதங்கள் · 3610
சொன்னது என்ன? என்ன? நடந்தது என்ன? என்ன?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3610. சொன்னது என்ன? என்ன? நடந்தது என்ன? என்ன?
உடன்பிறப்பே,
தமிழக அரசின் 2012-2013ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை நிதித்துறை அமைச்சர் 3 மணி நேரம் பேரவையில் படித்து முடித்திருக்கிறார். இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 91 பக்கங்கள்! நிதி நிலை அறிக்கையிலே இடம் பெற வேண்டுமென்று அவர் கருதிய தனிப் பத்தி ஒன்றையும் நிதி நிலை அறிக்கையிலே இணைத்துப் படிக்காமல் தனியாகப் படித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையினையும், கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளையும் படித்துவிட்டு ஒரு சில ஐயப்பாடுகளையும், கருத்துக்களையும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை புதிய வரிகளையே விதிக்கவில்லை.
2011-2012ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், பத்தி 102இல், “கடந்த ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை இந்த அரசு புதிதாக அறிவித்துச் செயல்படுத்தி வந்தாலும், மக்களுக்குக் கூடுதல் வரிச்சுமை எதையும் ஏற்படுத்தி விடாமல் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து இதை அறியலாம்.
ஆனால் அ.தி.மு.க. அரசு 2011 மே திங்களில் பதவிக்கு வந்தவுடனேயே மக்களுக்கு வரி போட்டது. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பத்தி 131இல்,
“இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு மதிப்புக் கூட்டு வரி விதித்ததிலும், மதுபானங்கள், பீர் ஆகியவற்றின் மீதான மாநில கலால் வரியிலும் சில மாற்றங்களை கொண்டு வந்தது. சில ஆவணங்களின் பதிவுக் கட்டணங்களிலும் சில மாற்றங்களைக்
கொண்டு வந்தோம்” என்று கூறப்பட்டுள்ளது. வரிகளை உயர்த்தினோம் என்று சொல்வதற்குப் பதிலாகச் சில மாற்றங்களைக் கொண்டு வந்தோம் என்று இந்த அரசு ஏமாற்றப் பார்க்கின்றது.
கழக ஆட்சியில் வரிவிதிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு நலத்திட்டங்களே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட வில்லையா? கழக ஆட்சியில் வரிகள் விதிக்கவில்லையே தவிர, வருவாய் உயரவில்லை என்று யாரும் கூற முடியாது.
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த 2006-2007ஆம் ஆண்டுக்கான வருவாய் வரவுகள் 38,731 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டது.
தி.மு. கழகம் ஆட்சியிலிருந்து இறங்கிய 2011-2012ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவு 79,431 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஐந்தாண்டு காலத்தில் வருவாய் வரவுகள் மட்டும் தி.மு.கழக ஆட்சியில் எந்த விதமான புது வரிகளையும் விதிக்காமலேயே, 40,700 கோடி ரூபாயாகும். எனவே வரிகள் கழக ஆட்சியில் புதிதாக விதிக்கவில்லையே தவிர, அரசின் வருவாய் உயராமல் இல்லை. எனவே வரிகளை விதித்துத்தான் வருவாயை உயர்த்த வேண்டுமென்றில்லை. ஏற்கனவே உள்ள வரியை ஒழுங்காக வசூல் செய்தாலே வருவாயை உயர்த்திக் கொள்ள முடியும்.
2011-2012ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் ரூ. 59,932.31 கோடி. 2012-2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி இது ரூ. 71,460.55 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 19.24 சதவீத வளர்ச்சியாகும் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கழக ஆட்சியில் என்ன நிலை?
2010-2011ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூபாய் 49,125 கோடி. 2011-2012ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி இது ரூபாய் 53,783 கோடி என்று மதிப்பிடப்பட்டு, திருத்த மதிப்பீட்டின்படி இது ரூ. 59,932 கோடியாக உயர்ந்தது. இது, 21.99 சதவீத வளர்ச்சியாகும். எனவே கழக ஆட்சியிலும் வரி வருவாய் அதிகமாகவே வந்துள்ளது என்பதை அறியலாம்.
2012-2013ஆம் ஆண்டிற்கான மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 10.35 ஆக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேராசிரியர் அவர்கள் 5-2-2011 அன்று படித்த 2011-2012ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் 2010-2011ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் விகிதம் 9.47 சதவீதமாக இருக்கும் என்று படித்த போதிலும், இன்றைய நிதியமைச்சர் 4-8-2011 அன்று படித்த திருத்த நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் விகிதம் 9.21 சதவீதமாக இருக்கும் என்று முன் கணக்குகளின்படி தெரிவித்தார். அதுபோலவே இந்த நிதி நிலை அறிக்கையில் மொத்த உற்பத்தி மதிப்பில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 10.35 ஆக இருக்குமென்று இப்போது படித்தாலும், முன் கணக்குகளையெல்லாம் பார்க்கும்போது இந்த விகிதம் குறையலாம்.
2012-2013இல் வணிக வரியின் மூலம் பெறப்படும் வரவுகள் ரூபாய் 46,678.10 கோடியாக இருக்கும். இது கடந்த வரவு செலவு திட்ட மதிப்பைவிட 17.4 சதவீதம் வளர்ச்சி கொண்டதாக இருக்கும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2011-2012இல் திருத்த வரவு செலவுத்திட்டத்தின்படி, வணிக வரிகளின் வரவு ரூ. 37,196 கோடி - அது 2010-2011ஆம் ஆண்டு முன் கணக்குகளைவிட 20.50 சதவீத வளர்ச்சியைக் கொண்டது என்று திரு. பன்னீர்செல்வம் அவர்களே 4-8-2011 அன்று அவையில் படித்ததிலிருந்து கழக ஆட்சியிலும் வணிகவரி முறையாகவே வசூல் செய்யப்பட்டது என்பதை அறியலாம்.
“2012-2013இல் சம்பளம் குறித்த ஒதுக்கீடு ரூ. 29,212.36 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு ரூ. 13,023.50 கோடியாகும். இவ்வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவுகள் மொத்த வருவாய்ச் செலவுகளில் 43 சதவீதமாகும்” என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் நமது முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்ட ஒரு
நிகழ்ச்சியில் அவர்கள் அரசு அலுவலர்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் அரசு மொத்த வருவாய்க் கணக்கில் 94 சதவீதம் செலவழிக்க வேண்டியுள்ளது என்று அரசு அலுவலர்களின் மனம் நோகப் பேசியதற்கு; அதை மறுத்து நாமெல்லாம் அப்போது புள்ளி விவரங்களுடன் விரிவாகப் பதில் கூறியதற்கு; மேலும் ஆதாரபூர்வமாக இப்போது இந்த நிதி நிலை அறிக்கையிலேயே அது 94 சதவீதமல்ல, 43 சதவீதம்தான் என்று நிதியமைச்சர் திரு. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார் என்று கருதுகிறேன்.
2012-2013 ஆம் ஆண்டில் வருவாய் உபரி ரூ. 2,376.07 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தாலும், 2012-2013ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ. 19,832.13 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.87 சதவீதமாகும். தி.மு. கழக ஆட்சியிலும் இதே அளவுக்கும், இதைவிட குறைந்த அளவிற்கும் தான் நிதிப் பற்றாக்குறை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“கடந்த 2011 ஆம் ஆண்டு மே திங்களில் இந்த அரசு பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் நிதி நிலை மோசமான நிலையிலிருந்தது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 2009-2010ஆம் ஆண்டில் 3,531 கோடி ரூபாயாகவும், 2010-2011ஆம் ஆண்டில் 2,729 கோடி ரூபாயாகவும் இருந்தது” என்று நிதி நிலை அறிக்கையில் பத்தி 135இல் கூறியிருக்கிறார்கள். ஒரு அரசு பற்றாக்குறை பட்ஜெட் போடுகின்ற காரணத்தினால் மட்டுமே நிதி நிலை மோசமான நிலையில் இருந்தது என்று அர்த்தமல்ல. இன்னும் சொல்லப்போனால் தற்போது அ.தி.மு.க. அரசு அவையில் படித்த நிதி நிலை அறிக்கையிலேயே இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 19,832.13 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை வரலாற்றில் இந்த அளவிற்கு நிதிப்பற்றாக்குறை இருந்ததா என்று தெரியவில்லை. எனவே நிதிநிலை தற்போது ஜெயலலிதா ஆட்சியிலே மோசமாக உள்ளது என்று சொல்லிவிடலாமா? அதை இந்த அரசு ஏற்றுக் கொள்கிறதா?
கடந்த கால அரசை குறை கூற வேண்டும் என்ற எண்ணத்தோடு நிதி நிலை அறிக்கை பத்தி 138இல் மோசமான நிதி நிர்வாகம், பொறுப்பற்ற செலவினம், மாநிலத்தின் நிதி நிலையில் கடும் சீரழிவு, பெரிய சுமை என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள். நிதித்துறையில் கடந்த கால அரசு எந்தத் தவறும் செய்துவிடவில்லை என்பதற்கு நான் ஏதோ உதாரணம் கூற வேண்டுமேயானால் - கடந்த கால அரசு எந்த நிதிச் செயலாளரை வைத்துக் கொண்டு இங்கே பணியாற்றியதோ - அதே நிதிச் செயலாளரைத்தான் இந்த அரசும் இப்போது வைத்துக் கொண்டு இந்த நிதி நிலை அறிக்கையை தயாரித்து, கடைசிப்பத்தியில் இந்த பட்ஜெட்டை தயாரிக்க உதவிய சண்முகம், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு நன்றி, நன்றி என்று கூறியிருப்பதிலிருந்தே கடந்தகால அரசை பின் தொடர முயலுகிறார்கள் என்றுதான் பொருள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் பந்தாடுகின்ற இந்த அரசு நிதித் துறை செயலாளரை மட்டும் மாற்றாமல் இருக்கக் காரணம் என்ன? கடந்த காலத்தில் நிதிப் பிரச்சினை சரியாக இல்லாமல் இருந்திருந்தால் அவரை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து இந்தப் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டிருக்குமா?
அதுமாத்திரமல்ல; மேலும் நிதி நிலை அறிக்கை பத்தி 137இல் “13வது நிதிக்குழு நிர்ணயித்த நிதிக் குறியீடுகளுக்கு உட்பட்டே நமது வரவு செலவுத் திட்ட நிதி நிலைக் குறியீடுகள் உள்ளது என்பதை நான் இங்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதில் வரையறுக்கப்பட்டபடி, மாநில அரசு வருவாய் உபரி தொடர்வதுடன், நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீத அளவிற்கும் குறைவாகவே இருக்கும். 2012-2013ஆம் ஆண்டின் இறுதியில் மாநிலத்தின் மொத்தக் கடன் 1,35,060.47 கோடி ரூபாயாக இருக்கும். எனினும், இது பதின்மூன்றாவது நிதிக்குழு அனுமதித்துள்ள அளவான, மாநில உற்பத்தி மதிப்பில் கடனின் விகிதாச்சார அளவு 24.8 சதவீதம் என்பதைவிட குறைவாக, 19.6 சதவீத அளவிலேயே இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தே தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நிதிக் குறியீட்டில் எந்தத் தவறையும் செய்துவிடவில்லை என்பதை அறியலாம்.
2004-2005இல் தமிழகத்தில் வறுமை நிலை 29.4 சதவிகிதம் என்று இருந்ததற்கு மாறாக; 2009-2010இல் 17.1 சதவிகிதம் என்று குறைந்திருக்கிறது என்றும்; அதாவது 72 லட்சம் பேர் ஏழ்மை நிலையிலிருந்து உயர்ந்திருக்கிறார்கள் என்றும் மத்திய திட்டக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக 21-3-2012 தேசிய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளிதழ்
வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்திலிருந்தே கழக ஆட்சிக் காலத்தில் நிதிநிலை மோசமாக இருந்ததா, மாறாக நன்றாக இருந்ததா என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.
கழக ஆட்சி வாங்கி வைத்துவிட்டுப்போன கடன் சுமையை எல்லாம் நாங்கள் குறைக்க வேண்டியதாக உள்ளது என்று சொன்னார்களே, ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆயிற்றே? எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்கள்? கடனை அடைக்க வேண்டாம், புதிதாக வாங்காமலாவது இருந்தார்களா? நிதி நிலை அறிக்கையிலேயே 12,873.81 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடப்பாண்டில் கடன் பெற்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அது மாத்திரமல்ல, வரும் ஆண்டில் வாங்கப் போகும் கடன் அளவை 18,387.47 கோடி ரூபாய் அளவிலேயே கட்டுப்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தான் ஆட்சிக்கு வந்தவுடன் - 2006ஆம் ஆண்டுக்கு முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தபோது அ.தி.மு.க. அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதையே மறந்துவிட்டு, கழக அரசு கடன் சுமையை வைத்துவிட்டுப் போனதாகத் திரும்பத் திரும்பக் குற்றஞ் சாட்டினார்கள். இப்போது அவர்களே பதவிப் பொறுப்பிலே இருக்கும்போது என்ன நிலைமை என்பதை மக்களிடம் மறைத்தாலும் மறைக்கலாம்; மனச்சாட்சியிடம் மறைக்க முடியுமா?
நிதியமைச்சர் படித்த நிதி நிலை அறிக்கை பத்தி 135இல், “2011-2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஓரளவு வருவாய் உபரியாக 173.87 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதைய இறுதி மதிப்பீட்டில் 536.54 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு பேராசிரியர் அவர்கள் 2011-2012ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை அவையிலே வைத்தபோதே, பத்தி 106இல் “மொத்த வருவாய் வரவு ரூபாய் 79,413 கோடி என்றும், மொத்த வருவாய் செலவு ரூபாய் 78,974 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2011-2012ஆம் நிதியாண்டின் இறுதியில் வருவாய்ப் பற்றாக்குறை நீங்கி, ரூபாய் 439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென
மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறியிருப்பதை அப்படியே மறைத்துவிட்டு, வருவாய் உபரியாக 173.87 கோடி ரூபாய் என்று இந்த ஆட்சியிலேதான் வருவாய் உபரி என்பதைப்போல பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நிதியமைச்சர் திரு. பன்னீர்செல்வம் படித்த நிதி நிலை அறிக்கை பத்தி 139இல், “பல முக்கியமான முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவிக் கரம் நீட்ட முன் வராத சூழ்நிலையிலும் கூட, நமது சொந்தக் கால்களின் வலுவிலேயே நின்று இந்தச் சாதனைகளைப் புரிந்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால் நிதி நிலை அறிக்கையின் பக்கம் 95இல் “மத்திய அரசு பகிர்ந்திடக் கூடிய மத்திய வரிகளில் 2012-2013ஆம் ஆண்டிற்கான பங்கு 15,032.47 கோடி ரூபாய் என்றும்; மத்திய அரசிடமிருந்து உதவி மானியங்களாக 8,064.29 கோடி ரூபாய் என்றும்” அவரே சுட்டிக்காட்டியிருப்பதை மறந்துவிட்டு சொந்தக் கால்களின் வலுவிலே நின்று சாதனைகளைப் புரிந்துள்ளோம் என்கிறாரே; அங்கேதான் இடிக்கிறது!
2011ஆம் ஆண்டு மே திங்களில் ஆட்சிக்கு வந்த பிறகு, மதிப்புக் கூட்டு வரி விகிதத்திலும், மதுபானங்கள், பீர் ஆகியவற்றின் மீதான மாநில கலால் வரியிலும், சில ஆவணங்களின் பதிவுக் கட்டணங்களிலும், வரியை உயர்த்திய அ.தி.மு.க. அரசு இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலும் 1500 கோடி ரூபாய்க்கு கூடுதல் வரிகளை சுமத்தியுள்ளது. ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்தவிதமான வரிகளையும் உயர்த்தாத தி.மு.க. அரசு எங்கே? ஆண்டுக் காண்டு வரிகளை உயர்த்தும் அ.தி.மு.க. அரசு எங்கே? என்பதை தமிழக மக்கள் ஒப்பிட்டுப் பார்த்தாலே உணர்ந்து கொள்ளலாமே!
தி.மு. கழக ஆட்சியில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக ஆண்டுக்கு 3 லட்சம் காங்கிரீட் வீடுகள் வீதம் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்த நேரத்தில், அந்தத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியதோடு, சூரிய ஒளி மூலம் மின் வசதி பெறும் 60 ஆயிரம் பசுமை வீடுகளை 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அ.தி.மு.க. அரசு 2011-2012ஆம் ஆண்டில் கட்டித்தரும் என்று நிதி நிலை அறிக்கையில் பத்தி 106இல் அறிவித்தார்கள். 60 ஆயிரம் வீடுகளில் எத்தனை வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்?
நிதி நிலை அறிக்கை பத்தி 23இல் காவலர்களுக்கான குடியிருப்பு வசதியில் 100 சதவீத தேவையையும் நிறைவு செய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் இதற்காக கடந்த ஆண்டு 288 கோடி ரூபாய் செலவில் 3,440 குடியிருப்புகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 2012-2013இல் 4,340 கூடுதல் குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட 3440 குடியிருப்புகளில் 1463 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வீடுகளையே இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் மேலும் 4,340 வீடுகளைக் கட்டப்போவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை பத்தி 68இல் “அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் 22,800 கோடி ரூபாய் முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்” என்று சொன்னார்களே? என்னவாயிற்று?
பத்தி 71இல் ஆண்டுக்கு 20,000 தெரு விளக்குகள் வீதம் 1000 கிராமங்களில் 248 கோடி ரூபாய் செலவில் சூரிய சக்தியில் எரியும் ஒரு லட்சம் தெரு விளக்குகளை அமைக்கும் ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் என்று சொன்னார்களே? என்ன வாயிற்று? ஒரு லட்சம் தெரு விளக்குகளில் எத்தனை விளக்குகளை அமைத்திருக்கிறார்கள்?
அதே பத்தியில், 2011-2012ஆம் ஆண்டில் 200 கிராமங்களில் 20 ஆயிரம் தெரு விளக்குகள் சூரிய எரி சக்தியை பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று சொன்னார்களே, எத்தனை கிராமங்களில் அமைத்திருக்கிறார்கள்?
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும் என்று சொன்னார்களே, எங்கே அந்த பூங்கா உள்ளது என்று பதிலுரையில் சொல்வார்களா?
தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பல மின் உற்பத்தி திட்டங்களை நிதி நிலை அறிக்கையிலே அறிவிக்க வேண்டுமென்பது பல வல்லுநர்களின் கருத்து என்றும், ஆனால் வெறும் 1500 கோடி ரூபாய் மட்டுமே
அந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் மின் துறை வல்லுநர்களும், பொருளாதார வல்லுநர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது. சென்னைப் பல்கலைக் கழகப் பொருளாதார அளவியல் துறை பேராசிரியர் சீனிவாசன் மின் உற்பத்திக்கான முதலீடுகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது, பல்வேறு நிதிக் கட்டுப்பாடுகளுடன் உருவாக்கப்பட வேண்டிய மாநில நிதி அறிக்கையில் இத்திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எந்த வழியைப் பின்பற்றி மின்வெட்டை அரசு தீர்க்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு தமிழக பட்ஜெட்டில் விடை எங்கும் இல்லை. ஒரு வேளை, கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மின் உற்பத்தியைத் தொடங்கும்போது மின் வெட்டு மறைந்து விடும் என்ற உண்மையினை மறைத்திட முயற்சிக்கிறார்களா?
பத்தி 72இல் உலக வங்கியின் நிதி உதவியுடன் 2,500 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை 5000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணியை இந்த அரசு மேற்கொள்ளும் என்று சொன்னார்களே, அதற்கான விவரம் தெரியவில்லை. கூறுவார்களா?
2011-2012ஆம் ஆண்டில், தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 இலட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கு, 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று படித்தார்கள். ஆனால் 3லட்சம் மடிக்கணினிகள் வாங்க உத்தரவு கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் வந்து சேரவில்லை என்கிறார்கள். என்ன உண்மை?
புதிய நில ஆர்ஜித கொள்கை வகுக்கப்படும் என்று கடந்த ஆண்டு சொன்னார்களே, என்னவாயிற்று?
பத்தி 94இல், “கிராமங்களில் வாழும் இளம் பெண்களுக்கு ‘சானிடரி நாப்கின்’ இலவசமாகவே வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் செலவாகும்” என்று பேரவையில் படித்தார்கள். எத்தனை பேருக்கு இதுவரை கொடுத்துள்ளார்கள்?
விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 35 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் 2 கோடியே 13 லட்சத்து 55 ஆயிரத்து 884 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு,
அவர்களில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 692 அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு தி.மு. கழக ஆட்சியில் 1011 கோடியே 62 லட்சத்து 81 ஆயிரத்து 687 ரூபாய் உதவித் தொகை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த வாரியங்கள் தொடருமா, அந்த உதவித் தொகை அளிக்கப்படுமா என்பது, இந்த வரவு செலவு திட்டத்தை வரவேற்பவர்களுக்குத்தான் வெளிச்சம்!
அரசு அலுவலர்கள் மேல் இந்த அரசுக்கு எப்போதும் உள்ள கோபம் நீடிக்கிறது என நினைக்கிறேன். கழக ஆட்சியில் இருந்த போதெல்லாம் மத்திய அரசு எவ்வெப்போது அகவிலைப்படியினை உயர்த்துகிறதோ, அதே நாளிலிருந்து தமிழக அரசும் தனது அலுவலர்களுக்கு அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கிடும் நடைமுறையைப் பின்பற்றி வந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு தனது அலுவலர்களுக்கு 7 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள போதிலும், தமிழக அரசு இந்த நிதி நிலை அறிக்கையிலே அது பற்றி மூச்சே விடவில்லை.
மொத்தத்தில் அ.தி.மு.க. அரசின் 2012-2013ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில்; விலைவாசியைக் குறைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ - வேலை வாய்ப்புகளை உருவாக்கி மக்களிடம் வாங்கும் சக்தியைப் பெருக்குவதற்கோ - எவ்விதக் குறிப்பும் இடம் பெறவில்லை. பல உண்மைகளை மறைத்து, சிலவற்றைத் திரித்து திசை திருப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடன் சுமை குறைக்கப்படவில்லை; ஆனால் வரிச் சுமை புதிதாக ஏற்றப்பட்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களே நிறைந்திருக்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடப் பயன்படுமா?
சொன்னது என்ன? என்ன? நடந்தது என்ன? என்ன?
அன்புள்ள, மு.க. 28-3-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 146–155. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.