முரசொலி கடிதங்கள் · 3609
இன எழுச்சிக்கு எடுக்கும் விழா!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3609. இன எழுச்சிக்கு எடுக்கும் விழா!
உடன்பிறப்பே,
திராவிட இயக்க 100ஆம் ஆண்டு தொடக்க விழா வரும் 27-2-2012 அன்று நமது தலைமைக் கழகத்தின் சார்பாக சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் மாலை 5 மணியளவில் கழகப் பொருளாளர் தளபதி தம்பி மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றிட; எனது தலைமையில், நமது இனமானப் பேராசிரியர் முன்னிலையிலே நடைபெறும் என்ற அறிவிப்பு வெளி வந்திருப்பதைக் கண்டிருப்பாய்! அந்தத் தொடக்க விழாவில் தமிழர் தலைவர், இளவல், கி. வீரமணி அவர்களும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, திரு.மோகன் அவர்களும், பேராசிரியர் நன்னன் அவர்களும், பேராசிரியர் தம்பி சுப.வீரபாண்டியன் அவர்களும் உரையாற்றவுள்ளனர். திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்தும், அதன் மேன்மை பற்றியும் விளக்கிடவிருக்கிறார்கள்.
“ஒருவன் உள்ள வரையில் - குருதி ஒரு சொட்டு உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை!”
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
1856இல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற அரிய ஏட்டை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற மொழி நூல் அறிஞர் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் என்று குறிப்பிட்டார். தென்னிந்திய மொழிகளையும், அவற்றைப் பேசும் மக்களையும் குறித்து எழுதிய போது, “திராவிடர்” என்ற பெயரை அவர்தான் முதன்முதலாக உபயோகித்தார் என்ற குறிப்புகளும் உள்ளன. தமிழுக்குத் தொண்டாற்றி ஒப்பிலக்கணம் தந்த அந்த கால்டுவெல் வாழ்ந்து மறைந்த
இடையன்குடி இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்கிட கழக ஆட்சியிலேதான் ரூ. 18.50 இலட்சம் ஒதுக்கீடு செய்து 4-2-2010 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு, கால்டுவெல் அவர்களின் மார்பளவு வெண்கலச்சிலையும் நிறுவப்பட்டு - 17.2.2011 அன்று காணொலிக் காட்சி வாயிலாக என்னால் திறந்து வைக்கப்பட்டன.
மனோன்மணியம் எழுதிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், தனது பாடலான,
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
என்பதில் “திராவிடநல் திருநாடு” என்று குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் காலம் 1855 முதல் 1897 ஆகும்.
1912 ஆம் ஆண்டு தோன்றிய அமைப்பான சென்னை ஐக்கிய சங்கம் என்ற மெட்ராஸ் யுனைடெட் லீக் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா 1913ஆம் ஆண்டு டாக்டர் நடேசனாரின் மருத்துவமனைத் தோட்டத்தில் நடைபெற்றபோது, சங்கத்தின் பெயர் அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை, எனவே அந்தப் பெயரை மாற்ற வேண்டுமென்று ஒரு சிலர் பேசிய நிலையில்தான், பெயரை எப்படி மாற்றலாம் என்று சில கருத்துக்கள் கூறப்பட்டன. அப்போது டாக்டர் நடேசனார் தான், “பார்ப்பனர் என்ற ஒரு சாதியைக் குறிப்பிட்டு, அச்சாதி அல்லாதவர்கள் என்று நாம் ஏன் சொல்ல வேண்டும்? நமக்கென்று ஓர் இனம் இல்லையா? அதற்கென்று ஒரு பெயர் இல்லையா?” என்று கேட்டு, “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம், ஏனென்றால் நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே?” என்று முடிவினைத் தெரிவித்தார்கள். அந்த முடிவினை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
டாக்டர் நடேசனாரின் கவனத்தை அந்த நேரத்தில் கவர்ந்தவர்களாக வெள்ளுடை வேந்தர் தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் இருந்தார்கள். ஆனால் இவர்கள் இருவரும் சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ஒரு பிரச்சினை காரணமாக வேறுபட்டு பேச்சு வார்த்தையின்றி இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவ்விருவரையும் இணைத்து, ஒருசேரச் செயலாற்றச் செய்ய வேண்டுமென்று டாக்டர் நடேசனார் கருதினார்.
வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர். தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசனாருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார். அப்படிப்பட்ட தியாகராயர் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, “பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தே தீரும் நால்வகைச் சாதி. இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை! பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். இராமானுஜரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்! பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக்கோட்டையைத் தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்! இதுவே தக்க வாய்ப்பு!” என்று முழங்கினார்.
பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே
வந்து விட்டார். அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும்” என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம்.
டாக்டர் நடேசனாருக்கு துணைநின்ற மற்றொரு பெருமகன் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். “தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, “இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா?” என்று கர்ச்சிப்பார்.
டாக்டர் டி.எம். நாயர் 7-10-1917 அன்று சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும் - சர். பிட்டி தியாகராயர் 20-12-1918 அன்று நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்” என்ற அறிக்கையும் -
திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் என்று போற்றப்படுகின்றன.
டாக்டர் நாயர் அவர்களின் புகழ் பெற்ற அந்த உரையில், “வீரத் திராவிடர்களே! என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் திரு. பிட்டி தியாகராய வள்ளல் அவர்களைப் போன்று, உங்களைப்
போன்ற திராவிட மக்களைக் கட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். திராவிடத் தோழர்களே! நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியர்களுக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள்! கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள்! நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்குப் பலம் வரும். நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும். உண்மை மக்களாட்சி உதயமாகும்.” என்று முழங்கியதைத்தான் நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.
“திராவிட இயக்க வரலாறு” என்ற முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால் உடனே தனது நியமன அதிகார வரம்பிற்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொடர்ந்து இருந்துவரும் வழக்கமாகும் என்று எழுதியதோடு அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890-களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது. 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்வகேட் ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு-செம்ஸ் ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தார்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று தம்பி மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் நம்மைப் பற்றி புரிந்து கொள்ள - தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள். திராவிட இயக்க 100ஆம் ஆண்டு விழாவினை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என்று நினைத்து விடக் கூடாது! ஏனென்றால் இது நம் இன எழுச்சிக்கு எடுக்கும் விழா! இடையில் இரண்டு நாட்கள்தான்! 27ஆம் தேதியன்று நேரில் சந்திப்போம்!
அன்புள்ள, மு.க. 24-2-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 140–145. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.