அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3611

முரசொலி கடிதங்கள் · 3611

அண்ணாவின் கனவை அழிக்கத் துடிக்கும் ஆரியமாயை!

நாள் 3.4.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3611. அண்ணாவின் கனவை அழிக்கத் துடிக்கும் ஆரியமாயை!

உடன்பிறப்பே,

தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு தி.மு.கழகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முயற்சி செய்து, 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ந்தேதி யன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி மற்றும் என்னுடைய முன்னிலையிலே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மதுரைக்கே வருகை தந்து, அந்தத் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, திட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வந்த நேரத்தில், அந்தத் திட்டம் நிறைவுற்றுவிட்டால் தி.மு.கழகத்திற்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் மிக முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்திய சாதனையின் காரணமாகச் சிறப்பான பெயர் வந்துவிடும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு கூட்டம் அதனைக் கெடுக்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு, நீதிமன்றம் வரை சென்று அந்தச் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைபோடும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டது. அவர்களின் அந்த முயற்சிக்கு அந்தக் கூட்டம் “ராமர் பாலம்” வழியிலே உள்ளது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் பாலத்திற்கு குந்தகம் ஏற்படும் என்று காரணம் கூறியது. அவர்களின் அந்த முயற்சிக்கு மேலும் துணை புரியும் வகையில்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் 23.7.1967 அன்று முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்

கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எழுச்சி நாள் கூட்டங்கள் நடத்த முடிவு செய்தார். அதனையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் அனைவருடைய ஆதரவையும் கோரினார். அப்போது முதல் அண்ணா அவர்கள்,

“சேது கால்வாய்த் திட்டம் - தூத்துக்குடி துறைமுகத் திட்டம் இரண்டும் ஒருங்கிணைந்தால் அதைத் தமிழகத்தின் 'சூயஸ் கால்வாய்' என்று கருதலாம்.

இப்போது சிலோனைச் சுற்றி கொழும்பு துறைமுகத்திற்குப்போய் கிட்டத்தட்ட 600 மைல்கள் சுற்றிக்கொண்டு வருகின்ற வெளிநாட்டுக் கப்பல்கள், இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் அந்நிலைமையை தவிர்த்துவிட இயலும்.

வெளிநாட்டுக் கப்பல்கள் - பிரமாண்டமான கப்பல்கள் இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிற்க முடியாது. ஆழ்கடல் துறைமுகமாக இருக்குமானால் பெரிய கப்பல்கள் வர பல நாட்டுக் கப்பல்கள் வரத்தக்க பெரிய அனைத்து நாட்டுத் துறைமுகமாக மாறும்.

அப்படி மாறும்போது பல்வேறு வகையான தொழில்கள் கிடைக்கும். அப்படி கிடைக்குமானால் பொருளாதார வளர்ச்சி நிரம்ப ஏற்படும்”

- என்று கூறி தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தினார்.

இந்தச் சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடைபெற முயன்றனர்.

அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்சு,

“தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதி மன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திர திட்டம் நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது எல்லோருக்கும்

தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். இந்தக் கால்வாய்த் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு தடை கிடையாது”.

- என்று கூறி தீர்ப்பளித்தது.

சேது சமுத்திரத் திட்டம் வந்துவிடக் கூடாது என்று தற்போது உள்மனதில் கெட்ட நோக்கோடு திட்டமிட்டு செயலாற்றும் அ.தி.மு.க.வினர் 2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே சேது சமுத்திரத் திட்டம் பற்றி என்ன குறிப்பிட்டார்கள் தெரியுமா?

“சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப்பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத்தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை முக்கியத்துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக்கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்”

மீண்டும் 10.5.2004 அன்று வெளியிடப்பட்ட அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில்,

“தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசு அ.தி.மு.க. வலியுறுத்தும்.”

என்று கூறியிருந்தார்கள்.

இதற்குப் பிறகுதான் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வந்த நேரத்தில், அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்ட நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2009ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் -

“தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான சேதுக்கால்வாய்த் திட்டம் தமிழக முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தியதின் காரணமாக 272005 அன்று தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நேரத்தில் மத காரணங்களைக் காட்டி தடை செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு விரைந்து முடித்து, இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளை முடித்து தமிழ்நாட்டின் தென்மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் வழிகோல வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும்”

என்று தெரிவித்திருந்தோம்.

ஆனால் 16-4-2009 அன்று, அ.தி.மு.க. சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத்திட்டம் பற்றி இறுதியாகக் கூறப்பட்டிருப்பது என்ன?

“..........அதிக வேகமும் மிக அதிக எடைகொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறனும் கொண்ட கப்பல்கள் பயன்படும் இன்றைய நவீன யுகத்தில், இது தற்காலத்திற்கு ஒவ்வாத திட்டம் என்ற உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. இப்போது திட்டமிட்டுள்ளபடி இந்தக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுவதால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்”

என்றெல்லாம் அ.தி.மு.க. கூறி, இந்தத் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றார்கள்.

சேதுத் திட்டம் வேண்டுமென்று நாமெல்லாம் குரல் கொடுக்கின்ற நேரத்தில் - மதத்தைக் காட்டி சிலர் எதிர்க்கிறார்கள், புராணத்தைக் காட்டி எதிர்க்கிறார்கள்; கடவுளின் பெயரைச் சொல்லி, அந்தப் பாலத்தை இடித்தால் நாட்டிற்கே ஆபத்து, இந்தியாவிற்கே ஆபத்து என்றெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள்; நீதிமன்றம் செல்கிறார்கள்; இன்னும் சிலர் இவர்களுக்கு ராமனைப் பிடிக்காது, ராமனுக்கு விரோதிகள், ஆகவேதான் ராமர் பாலத்தை இடிக்கத் தொடங்குகிறார்கள் என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். ராஜாஜி அவர்களின் நினைவிடத்திற்கு என்ன சின்னம் வைக்கலாம் என்று என்னிடம் கேட்டபோது, அவருக்குப் பிரியமான கடவுள் ராமர், அவருடைய கிரீடத்தையே கோபுரமாக வையுங்கள் என்று நான் கூறி, அதைத்தான் அங்கே வைத்திருக்கிறார்கள். ராமர் பெயரால் உள்ள எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காகவா அந்தப் பாலம் வேண்டாமென்றோம். இல்லாத பாலத்தை இடிப்பதாக ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றுதான் கேட்கிறோம்.

இன்னும் சொல்லவேண்டுமேயானால், வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்திலேயே எங்களின் வலியுறுத்தலின் பேரில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய அரசின் சார்பாக தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், நாக்பூரில் உள்ள தேசிய

சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சுற்றுச் சூழல் ஆய்வுப் பணியை வழங்கியது. அக்டோபர் 2002இல், அந்த “நீரி” நிறுவனத்தின் பரிந்துரையான “ஆடம்ஸ் பிரிட்ஜ்” எனப்படும் (இதைத்தான் ராமர் பாலம் என்கிறார்கள்) ஆதாம் பாலத்தை வெட்டிச் செல்லும் வழித் தடம்தான் சிறப்பானது என்று முடிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க. தனது 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே பக்கம் 83-84இல்,

“இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேதுசமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்”

என்று “ஆடம்ஸ் பிரிட்ஜ்” என்றும் மணல் மேடுகள், பாறைகள் என்றெல்லாம் வர்ணித்து விட்டு, இப்போது திடீரென பிரதமருக்கு, “ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்” என்று தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார் என்றால் ஏன் இந்த இரட்டை வேடம் - முன்னுக்குப் பின் முரண்பாடு என்று தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?

கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்கும்போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு, பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, அத்திட்டம் முடிவடைகின்ற நேரத்தில் அந்தத் திட்டம் கூடாது என்று எதிர்ப்பது எப்படியோ, அப்படித்தான் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டபோது வாயை மூடி மெளனமாக இருந்துவிட்டு, தற்போது பல கோடி ரூபாய்களைச் செலவழித்து முடித்துவிட்ட நிலையில் ராமர் பாலம் என்ற பெயரைப் பயன்படுத்தி முட்டுக்கட்டைபோட்டு நினைப்பது

சரிதானா - தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்றது தானா - அறிவியல் ரீதியாக ஏற்புடையது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதனால்தான் நமது கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி சோனியா காந்தி அவர்களையும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும் நேரில் சந்தித்து சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் முடித்திட உதவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்கள். கழகத்தின் சார்பில் நானும் அந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் ஏதாவதொரு கற்பனைக் காரணத்தை முன்வைத்து, இத்திட்டத்திற்கு ஊறு விளைவிக்க நினைப்போர் யார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவர்கள் கொள்கை குழப்பவாதிகளா? தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குழி தோண்டும் குதர்க்க வாதிகளா? என் செய்வது? “ஆரிய மாயை” - எழுதிய அண்ணாவின் கனவையே அழிக்கத் துடிக்குதே “ஆரியமாயை!”

அன்புள்ள, மு.க. 03-04-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 156–162. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்