முரசொலி கடிதங்கள் · 3614
பாவம்; பன்னீர்செல்வம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3614. பாவம்; பன்னீர்செல்வம்!
உடன்பிறப்பே,
2011ஆம் ஆண்டு மே திங்களில் ஆட்சிக்கு வந்த பிறகும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் அ.தி.மு.க.வினர் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்ற குற்றச்சாட்டு, தி.மு. கழக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் அல்லது மனைகள் தி.மு. கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தி.மு. கழக தலைமைக் கழகத்திலே பணியாற்றுபவர்களுக்கும், முதல் அமைச்சரிடம் பாதுகாவலர்களாகப் பணியாற்றியவர்களில் ஒரு சிலருக்கும் முறைகேடாக வழங்கப்பட்டுவிட்டன என்பதாகும். அந்தக் குற்றச்சாட்டுக்கு பல முறை ஆதாரப்பூர்வமாக முறைப்படி இந்த வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், தவறு எதுவும் நடைபெறவில்லை என்றும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் சுட்டிக்காட்டியதோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த யார் யாருக்கு அந்த வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்பட்டன, எந்தெந்த அதிகாரிகளுக்கும், ஏன் அ.தி.மு.க. தொழிற்சங்க அமைப்பு ஒன்றுக்கே கூட வழங்கப்பட்டன என்பதையெல்லாம் விளக்கமாக எழுதிய பிறகும், பேரவையில் அந்தத் துறையின் அமைச்சருக்கு குற்றச்சாட்டு கூறுவதைத் தவிர வேறு எதுவும் பேசுவதற்கு வக்கற்ற நிலையில், அவர்களது “அம்மா”வை அகமகிழச் செய்வதற்காக சொன்ன குற்றச்சாட்டினையே மீண்டும் கூறி அது ஏடுகளில் வெளிவந்துள்ளது.
அண்ணா அறிவாலய அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு 5 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான நிலம் 1.48 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு. வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலம், மற்றவர்களுக்கு என்ன விலைக்கு வழங்கப்பட்டதோ அதே விலைக்குத்தான் அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றுவோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான அந்த மனைகள் எவ்வளவு ரூபாய்க்கு விற்கலாம் என்று அரசின் நிதித் துறைச் செயலாளரும் இடம் பெற்றுள்ள வாரியத்தினால் முடிவெடுக்கப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட பிறகுதான் அந்த வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, அறிவாலயத்திலே பணியாற்றுவோர் என்பதால் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் குறைத்து மதிப்பிட்டு இவர்களுக்காக வழங்கப்படவில்லை. முன்மாதிரிகளின் அடிப்படையில், முறைப்படி, விதிகளுக்குட்பட்டே வழங்கப்பட்டது. அறிவாலயத்திலே பணியாற்றுவோர் என்பதற்காக சிறப்புச் சலுகை எதுவும் காட்டப்படவில்லை.
அதுமாத்திரமல்ல; நான் முதல் அமைச்சராக இருந்த போது என்னிடம் பாதுகாவலர்களாக பணியாற்றிய சிலருக்கு வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகள் தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் தரப்பட்டதில் என்ன தவறு? அவர்களுக்கு தரப்படக் கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா? அல்லது அந்த மனைகளுக்கு உரிய விலை பெறாமல் வழங்கப்பட்டுவிட்டதா? அல்லது மற்றவர்களைவிட விலை குறைத்து தரப்பட்டுவிட்டதா? அல்லது அ.தி.மு.க. ஆட்சியிலே இவர்களைப் போல பணியாற்றியவர்களுக்கு இதுபோன்ற வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்படவே இல்லையா? ஏன், அரசு செயலாளர்களாக இருந்தவர்களுக்கு, முதலமைச்சர் இல்லத்திலே பணியாற்றியவர்களுக்கு, அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றியவர்களுக்கு, அவர்களது உறவினர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் வழங்கப்பட்டதே கிடையாதா? அவர்களுக்கெல்லாம் வீட்டு மனைகளை வழங்கியபோதே, மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதைவிட அதிகத் தொகை நிர்ணயம் செய்தா வழங்கப்பட்டது? முதலமைச்சரிடம் பாதுகாவலர்களாக பணியாற்றியவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் வழங்கப்பட்டது குறித்து உயர் நீதி மன்றத்திலேயே வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு, நீதிபதி அவர்களே அந்த வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டார். எனினும் மீண்டும் மீண்டும் அ.தி.மு.க. அரசு அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு விருப்புரிமையின் கீழ் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடுகள், மனைகளில் 15 சதவிகிதம், தி.மு. கழக
ஆட்சிக் காலத்திலே மட்டுமல்ல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 10 சதவிகிதமாக இருந்த இந்த ஒதுக்கீட்டு அளவு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் 15 சதவிகிதமாக ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது அதிகப்படுத்தினார். இன்னும் கூற வேண்டுமேயானால், தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் இந்த விருப்புரிமை முறை பற்றி சிலர் குறை கூறியவுடன், அந்த அரசு விருப்புரிமையே இனி ரத்து செய்யப்படும் என்று கழக ஆட்சியில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில், ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போதுதான், தலைமைச் செயலாளராக இருந்த திரு. என். நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு 1993ஆம் ஆண்டு 4,115 சதுர அடி, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசனுக்கு பெசன்ட் நகர் பகுதியில் 1995ஆம் ஆண்டு 4,535 சதுர அடி, முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமீலாவுக்கு கொட்டி வாக்கத்தில் 1993ஆம் ஆண்டு 2,559 சதுர அடி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம், அ.தி.மு.க.வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம், 2004ஆம் ஆண்டு தேவாரம், ஐ.பி.எஸ்., கே விஜயகுமார், ஐ.பி.எஸ்., ஆர். நடராஜ், ஐ.பி.எஸ்., உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோழிங்கநல்லூரில் தலா 4,800 சதுர அடி, முதல் அமைச்சரிடம் செயலாளராக இருந்த டி. நடராஜன் ஐ.ஏ.எஸ்.க்கு 1995ஆம் ஆண்டு திருவான்மியூரில் 6,784 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இவ்வாறு கொடுத்ததை தவறு என்று நான் கூறவில்லை. ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து வழக்கமாக வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீட்டு மனைகள் வழங்கப்பட்டு வருவதைப் போலத்தான், தி.மு. கழக ஆட்சியிலும் வழங்கப்பட்டன. இது வழங்குவதற்கு மாறானதோ, விதிமுறைகளை மீறியதோ எதுவும் இல்லை. அதை எடுத்து வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப இந்த ஆட்சியினர் குற்றம் சாட்டுவதால், அ.தி.மு.க. ஆட்சியில் இத்தகைய வீட்டு மனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்களை நான் தெரிவிக்க வேண்டியதாகிறது.
இவ்வாறு வீடு பெற்ற வேறு சில பெயர்களையும் சொல்ல வேண்டுமேயானால், சி.ஆர். சரஸ்வதி, பி. காளிமுத்து,
ஐ.பி.எஸ்., மாலிக் பெரோஸ்கான் ஐ.ஏ.எஸ்., சி.ஆர். ராஜேஷ், தங்கத் தமிழ்ச் செல்வன், பி.ஏ. ராமையா ஐ.ஏ.எஸ்., அனுராதா காதி ராஜிவன் ஐ.ஏ.எஸ்., எஸ். கபிலன் ஐ.ஏ.எஸ்., எச்.பி.என். ஷெட்டி ஐ.ஏ.எஸ். அவர்களின் மகன் டாக்டர் தீபக், கே. செல்வராஜ், மார்கபந்து, குருவிக்கரம்பை சண்முகம், கோவைத் தம்பி, ராகவன் ஐ.ஏ.எஸ்., ராமதாஸ் ஐ.ஏ.எஸ்., இன்றைய மேயர் சைதை துரைசாமி, வரதராஜுலு ஐ.ஏ.எஸ்., அவர்களின் மகன் சியாம் சுந்தர், சீனிவாசன் ஐ.ஏ.எஸ்., ஏ.ஆர். வெங்கடேசன், எல். சுதாகர் ரெட்டி, ஆதி ராஜாராம், இக்பால் முகமது ஐ.பி.எஸ்., லால் ரெய்னா சைலோ ஐ.ஏ.எஸ்., சரஸ்வதி எம்.எல்.ஏ., பால்கங்காவின் மனைவி சந்திரிகா, திருமதி மல்லிகா எம்.எல்.ஏ., ஆறுமுகம் எம்.எல்.ஏ., மோகன் ராவ், டி.என். ரெங்கநாதன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். ஒட்டுநர் பூபதி, ஏ.பி. முகமது அலி ஐ.பி.எஸ்., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. மோகன் துணைவியார் பி. பூங்காவனம், எஸ். ஆண்டிக் தேவர் மனைவி பிலோமினா, வி.எஸ். பஞ்சவர்ணம், ஆர். கண்ணன் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.பி. பாஸ்கரனின் மனைவி பி. உமா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ். அன்பழகனின் துணைவியார் வி. தமிழரசி, முதல்வரின் செயலாளர் எஸ்.எஸ். ஜவகர் பாபு ஐ.ஏ.எஸ்., வி. ராமு ஐ.ஏ.எஸ்., எஸ். போஸ், ஐ.ஆர்.எஸ்., இன்னும் பட்டியல் நீளமாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மனைகளைப் பெற்றவர்கள் என்று பார்த்தால் பி. செந்தில், கீதா, கே. சுந்தரராஜ், பி. வினோத் குமார், டி. பாலமுருகன், டி. பாலசுப்ரமணியன், டி. சக்திவேல், எம். லெட்சுமிகாந்தன், பி. மாணிக்கவாசகம், எஸ். சுந்தரேசன் என்று பட்டியல் போய்க் கொண்டே இருக்கின்றது. ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்சில் பணியாற்றியவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் வீட்டு மனைகள் இலவசமாகவே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. அதுமாத்திரமல்ல, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பாதுகாப்பு அதிகாரிகளாகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், திருமலைச்சாமி, பெருமாள்சாமி, வீரபெருமாள் போன்றவர்களுக்கும், இன்னும் அவர்கள் வீட்டிலேயே இருந்த கிருஷ்ணமராஜ், அசோகன், பாலாஜி, வடிவேல், சுப்பிரமணியம் போன்ற காவலர்களுக்கு அரசின் விருப்புரிமை அடிப்படையில்தான் இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இத்தனை வீட்டு மனைகள்
வாரி வழங்கி முறைகேடு நடைபெற்றது என்று பேரவையில் அந்தத் துறையில் அமைச்சர் வெளியிட்டது ஏன்? எதிர்க்கட்சியினர் அதைப்பற்றி விளக்கமளிக்க அனுமதி தர மறுப்பதேன்? ஆனால் தற்போது அதை பெரிய குற்றமாகக் கூறி அந்த மனைகளைப் பெற்றவர்களின் இல்லங்களுக்குச் சென்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையிடுவதும், அதனை சில ஏடுகள் வேண்டுமென்றே புழுதிவாரித் தூற்றும் நோக்கத்தோடு பெரிய அளவிலே விளம்பரம் செய்வதும் நியாயமா என்பது தான் நம்முடைய கேள்வி.
வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டிலே மாத்திரமல்ல; கோவையிலே குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கழக ஆட்சியில் கட்டப்பட்ட சில வீடுகளில் ஏதோ குறைபாடு என்றதும், முறைப்படி கழக ஆட்சியிலேயே அதற்கான நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு, அந்தத் துறையின் அமைச்சரே நேரில் சென்று அண்ணா பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பப் பேராசிரியர்களை அணுகி அவர்களின் கருத்துக்களையும் பெற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டப்பேரவையிலேயே இந்தப் பிரச்சினையை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வினர் எழுப்பியபோது, அந்தத் துறையின் அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார். ஆனால் அதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு குடிசையிலும் கொள்ளை, கோட்டையிலும் கொள்ளை என்றெல்லாம் அடுக்கு மொழியில் அவதூறு பேசுவதும், அதற்குப் பதிலளிக்க கழகத்தினர் எழுந்தால் அனுமதி மறுப்பதும் கூண்டோடு வெளியேற்றுவதும் என்ன நாகரிகமோ?
கோட்டையிலே அமர்ந்து கொண்டு இன்று கொள்ளை அடிப்பது யார்? கொடை நாட்டை கொள்ளை அடித்தவர்கள் யார்? சிறுதாவூரை கொள்ளை அடித்தவர்கள் யார்? 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து விட்டு, பெங்களூரு நீதி மன்றத்திலே வாய்தா கேட்டு வழக்கு விசாரணையை பல்லாண்டு காலமாக இழுத்தடித்துக் கொண்டிருப்பவர் யார்? சுற்றியிருந்தவர்கள் மீதெல்லாம் அன்றாடம் கொள்ளையடித்த புகாரங்கள் புகார்களாக வந்து கொண்டிருக்கிறதே? இவையெல்லாம் ஊருக்குத் தெரியாது என்ற நோக்கில் எப்படியோ வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற இறுமாப்போடு, அவையின் முன்னவரே ஏதற்கெடுத்தாலும் அவையில் அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அவரே 2ஜி, அலைக்கற்றை ஒதுக்கீடு என்றெல்லாம் வாய்நீளம் காட்டுவதுதான்
அவையை நடத்துகின்ற இலட்சணமா? அலைக்கற்றை வழக்கு நடந்து கொண்டிருக்கிறதே தவிர தீர்ப்பு வழங்கப்பட்டு விடவில்லையே? அலைக்கற்றை அனுமதி பெற்றவர்களிடம் கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்று - அந்தக் கடனையும் வங்கிகள் மூலமாக முறைப்படி காசோலையாகப் பெற்று, பிறகு வட்டியுடன் காசோலையாகவே திரும்ப அந்தக் கடனையும் அடைத்ததற்குப் பிறகும், அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் எந்தவிதமான தொடர்பும் இல்லாத, அதே நேரத்தில் அதிலே ஒரு பங்குதாரராக மட்டும் இருந்த நிலையில் அதை பெரிய தவறு இழைத்து விட்டதைப் போல - “பெங்களூரு” வழக்கைப்போல பேரவையிலே சொல்லி வருகிறார் பன்னீர்செல்வம்! அலைக்கற்றை பற்றிய வழக்கு இந்திய உச்ச நீதி மன்றம் உள்ளிட்ட நீதி மன்றங்களிலே நடந்து கொண்டிருக்கும் போது பேரவையில் பேசக் கூடாது என்ற மரபினைக் கூட, அவையின் முன்னவரே மதிக்கவில்லை என்றால், பாவம், அவர் அப்படியெல்லாம் அடாவடியாகச் செயல்பட்டால்தான் முதல்வரின் நம்பிக்கையைப் பெற முடியும், தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியும் என்ற நிலைதானே அங்கே உள்ளது.
அன்புள்ள, மு.க. 14-4-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 175–180. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.