முரசொலி கடிதங்கள் · 3613
புத்தியுள்ள தமிழா; நீ புரிந்துகொண்டால் சரி!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3613. புத்தியுள்ள தமிழா; நீ புரிந்துகொண்டால் சரி!
உடன்பிறப்பே,
நான் நேற்றையதினம் எழுதிய கடிதத்தில், “மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்ப் புலவர்கள் 500 பேர் கூடி முடிவெடுத்த தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்க மறுத்து “ஆரியமாயை”க்கு கைலாகு கொடுத்துவிட்டார் ஜெயலலிதா! -விரைவில் வருகின்ற “சித்திரை” முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று அரசிடமிருந்து வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்” என்று எழுதியிருந்தேன். ஆனால் நேற்று மாலையிலேயே ஏடுகளில் வந்த செய்தி, வாய்மொழி ஆணையாக அல்ல, அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள செய்தி, “சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும்” என்றும், அந்த நாளை மிகமிக கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஏப்ரல் 13ந்தேதியன்று இதற்காக நடத்தப்போகும் விழாவில் முதல் அமைச்சர் பங்கேற்று விருதுகளை வழங்கப்போகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
நான் நேற்றையதினம் எழுதியிருந்ததைப் போல கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்தது முதல், அதுவே நிரந்தரமான வெற்றி - இனி தோல்வி என்பதே இல்லை என்ற இறுமாப்பில்; தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கியத் திட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில்,
“பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921ஆம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு “தனி ஆண்டு” தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே “தமிழ் ஆண்டு” எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள். அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புதுஎழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ்மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்”
என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார். தி.மு.கழக ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பு இது என்ற ஒன்று போதாதா ஜெயலலிதாவுக்கு? உடனே அதற்கு எதிர் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார்.
மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப்பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தப்பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :-
1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது;
2. அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது;
3. வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு.31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதை மேற்கொள்வது என்பனவாகும்.
அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார், பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் கூறியது.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ “தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் “தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும், விவசாய வாழ்வு சார்ந்தும் தைத் திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற
திருநாளாகும். மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்” என்று தெரிவித்திருந்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், “தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித்திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடுகிறார்கள். எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு. தமிழர்களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடையாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரை கருத்துலகத்தின் அளவுகோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலாகவும் திருவள்ளுவரைக் கருத்துச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும்” என்று எழுதியிருந்தார்.
மலேசிய நாட்டில் தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் மு.வரதராசனார் அவர்கள், “முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” என்று விளக்கியுள்ளார்.
ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விருப்பத்துக்காக, மக்கள் மன உணர்வை புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டமாற்று செய்யப்பட்டுவிட்டது” என்றார்.
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல்ல முயற்சியில் நஞ்சைக் கலந்து நாக்கு வதைபோல், தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே தமிழையே பகைத்துக்கொள்கிற - செம்மொழி என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற பெரும் பிற்போக்குத்தனமான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக்கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி நான் அப்போதே ஒரு கதையின் மூலம் விளக்கியிருக்கிறேன்.
நக்கீரன் காலத்திலே குயக்கொண்டான் என்று ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்திலே “ஆரியம் நன்று, தமிழ் தீது” என்று சொல்ல - உடனே நக்கீரனுக்குக் கோபம் வந்து, “தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ, சாகக் கடவாய்” என்று அறம் பாடினாராம். உடனே குயக் கொண்டான் கீழே விழுந்து இறந்துவிடுகிறார். உடனே அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்து; குயக் கொண்டாரைப் பிழைக்க வைக்க கேட்டுக் கொண்டார்களாம். அதைக் கேட்ட நக்கீரன், “ஆரியம் நன்று தமிழ் தீதென்றுரைத்த காரியத்தால் காலன்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந்தமிழே தீர்க்க சுவாகா!” என்றுபாட, குயக் கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம்.
தமிழக அரசின் அறிவிப்பு வந்த அந்த நேரத்திலேயே மிகச் சிறந்த தமிழ்க் கல்வெட்டு ஆய்வாளரும் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள்,
“இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் - ஆராய்ந்து திருத்திக்கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு?” என்றார்.
தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு சட்ட முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1-2-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்றுக் காங்கிரஸ் கட்சியின் சார்பில்
ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை.சிவபுண்ணியமும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது.
இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட்ட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக்கொண்டு வரப்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது அப்படியே உயிரோடு இருக்கலாமா என்று எப்போதும் எண்ணுகின்ற அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டுவிட்டது. அவரது அந்த அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது. அதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்துக் கேட்ட போது அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலைவணங்குகிறேன் என்று அப்போதே பதில் கூறினேன். அதன் பின்னர், பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மையாகக் கண்டித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய இந்தத் தமிழ் உணர்வுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்திருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே,
“நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்கவந்த ஆரியர்
கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
என்று பாடியதையும் நினைவு கூர விரும்புகிறேன். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சற்று ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல் செய்த தவறின் காரணமாக எப்படியெல்லாம் கேடுகள் தமிழுக்கும், தமிழகத்திற்கும் நேர்ந்து வருகின்றன என்பதைக் காணும்போது நெஞ்சம் விம்முகிறது!
மறைமலை அடிகளாரது மண்ணாங்கட்டியாவது! பாரதிதாசனாவது! பலநூறு புலவர்களாவது! இவர்களையெல்லாம் மதிக்கவேண்டுமென்று என்ன இருக்கிறது! ஆரியம், இவர்களையும் இவர்களது கொள்கைகளையும் தமிழ் உணர்வுகளையும் காலில் போட்டு மிதிக்குமே தவிர மதிக்கவே மதிக்காது என்பதற்கு தமிழக அரசு இப்போது எடுத்துள்ள இந்த நிலைதான் உதாரணம்! புத்தியுள்ள தமிழா; இதை நீ புரிந்துகொண்டால் சரி!
அன்புள்ள, மு.க. 9-4-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 168–174. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.