அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3612

முரசொலி கடிதங்கள் · 3612

அராஜகத்திற்கு முடிவுகட்ட; அணி திரள்வோம்!

நாள் 8.4.2012சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3612. அராஜகத்திற்கு முடிவுகட்ட; அணி திரள்வோம்!

உடன்பிறப்பே,

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 2011 மே திங்கள் முதல் ஏழையெளிய தமிழக மக்களை வாட்டி வதைத்திடும்வண்ணம் தொடர்ந்து புதிய வரி விதிப்பு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று வரலாறு காணாத அளவில் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரமாவது முறையாக வழங்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்கள் பல மணி நேரம் மின்வெட்டு கொடுமை காரணமாக இருளில் படாதபாடு படுகிறார்கள். தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிக்க இயலாமல் திணறுகிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் இதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியினரை எந்தெந்த வழிகளில் எல்லாம் பழி வாங்கலாம், அவர்கள் மீது என்ன வழக்குகளைத் தொடுக்கலாம், முடிந்து போன வழக்குகளையெல்லாம் தூசி தட்டி மீண்டும் கிளப்பலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். இதற்கிடையே அவர்களிடையே “உள்நாட்டு” குழப்பம் வேறு. அக்காளும், தங்கையும் கும்பகோணம் மகாமகத்திற்குச் சென்று ஒருவருக்கொருவர் மாறி மாறி தீர்த்த அபிஷேகம் செய்து கொண்ட சம்பவம், பிறகு கோயில் கோயிலாகச் சென்று பூஜை புனருத்தாரணம் செய்து கொண்டு விட்டு, இப்போது தமிழக மக்கள் காதுகளிலே பூ சுற்ற எண்ணி தவறு செய்தவர்களைத் தண்டிக்கப் போகிறேன், வீட்டை விட்டே அனுப்பி விட்டேன் என்றெல்லாம் கதைகளை ஜோடித்து, அவரது ஆட்சியிலே கடந்த ஒன்பது மாத காலமாக அளப்பரிய தவறுகளைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரால் பரபரப்பை உண்டாக்கி விட்டு, தற்போது அக்காளும் தங்கையும் சேர்ந்து கோவில்களுக்கு விடியற்காலையிலேயே அபிஷேகம் செய்யப்புறப்பட்டு விட்டார்கள். இதைப்பற்றி இந்தக் கிழமை “ஆனந்த

விகடன்”; கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியினை இங்கே சுருக்கித் தருகிறேன்:

“மக்களை மடையர்களாக நினைக்கும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நாட்டில் தான் இது மாதிரி எல்லாம் நடக்கும். ஜெயலலிதா - சசிகலா நட்பு - பிரிவு - மீண்டும் நட்பு - இதைத்தான் ஞாபகப்படுத்துகிறது! சசிகலாவின் பெயரைப் பயன்படுத்தி அவரது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் தங்களைத் தாங்களே அ.தி.மு.க. பொதுச் செயலாளர்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டது சசிகலாவுக்கும் தெரியாது என்பது மட்டும் அல்ல; தனக்கும் இதுபற்றித் தெரியாது என்று ஜெயலலிதா சொல்ல வருவதையும் நம்ப முடியாது. சசிகலாவுக்கு இந்த மாதிரியான விஷயங்கள் தெரியுமா; தெரியாதா என்பது நாட்டுக்கு முக்கியமான சமாசாரம் அல்ல. ஏனென்றால் சசிகலா இந்த நாட்டு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இல்லை. ஆனால் அந்தக் கடமை ஜெயலலிதாவுக்கு உண்டு. காண்ட்ராக்ட் எடுப்பது - கமிஷன் வாங்குவது - ஆட்களை நியமிப்பது - அதிகாரிகளை மாற்றுவது - மாவட்டச் செயலாளர்களுடன் மல்லுக்கு நிற்பது - மந்திரிகளிடம் பணம் கேட்பது - எம்.எல்.ஏ.க்களிடம் மாமூல் வசூலிப்பது என்பது மாதிரியான எத்தனையோ சமாசாரங்கள் சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்ட பலரால் நடத்தப்பட்டன. எது எதுவோ நடந்தபோது எல்லாம் கண்டும் காணாததுபோல் இருந்த ஜெயலலிதா, திடீரென சதி சதி சதி என்று கிளர்ந்து எழுந்ததற்கு என்ன காரணம்? ஜெயலலிதா அவர்களே, இன்னொரு நாடகத்தைப் பார்க்கும் மன நிலையில் தமிழ்நாடு இல்லை !”

ஜெயலலிதா நடத்துவது நாடகம் என்று இவ்வாறு தோலுரித்துக் காட்டியிருக்கிறது “ஆனந்த விகடன்”.

அவையிலே தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையிலே தி.மு. கழக ஆட்சியிலே சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்று

படித்தார்கள். ஆனால் தற்போது என்ன நிலை? நினைத்தால் கைது - மனது வைத்தால் விடுதலை - எதற்கெடுத்தாலும் குண்டர் சட்டம் - நள்ளிரவிலும் கூட எவர் வீட்டிலும் நுழைந்து எதை வேண்டுமென்றாலும் பேசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்ற சூழல் - கொலை நடக்காத நாட்கள் தமிழகத்திலே உண்டா? கொள்ளை நடக்காத, செயின் பறிப்பு நடக்காத நகரங்கள் உண்டா?

எதற்கெடுத்தாலும் பழிவாங்கும் போக்கு! கடந்த கால ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல திட்டங்களையெல்லாம் தேடித் தேடிப் பார்த்து அதற்கு மூடு விழா செய்ய முனைகின்ற சம்பவங்கள் ஒன்றா? இரண்டா? ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் பொது மக்களுக்காகப் பயன்படுத்தப்படாமல் கலனாகிக் கொண்டிருக்கின்றது.

அந்தக் கட்டிடத்தை ஒட்டி எழுப்பப்பட்ட தலைமைச் செயலகத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் முழுமையடையாமல் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. கையிலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதைப் போல ஜெயலலிதா வீம்புக்காக இந்தப் பணிகளை அப்படியே விட்டு விட்டு, நாமக்கல்லார் மாளிகையை 28 கோடியிலே புதுப்பிக்கப் போகிறேன் என்று புறப்பட்டிருக்கிறார். அதுபோலவே அண்ணா நூற்றாண்டு நினைவுநூலகம் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய அளவிலே கட்டப்பட்டது; அதை மாற்றப் போகிறேன் என்றார் ஜெயலலிதா. தற்போது அது நீதிமன்றத் தடையினால் தப்பிப் பிழைத்திருக்கின்றது. செம்மொழி ஆய்வு நிறுவனமும், தமிழர்களின் எத்தனை ஆண்டுக் காலக் கனவு அது. ஆனால் இப்போது செம்மொழி என்று சொன்னாலே அம்மையாருக்குப் பிடிக்கவில்லை. ஏன்; செம்மொழிப் பூங்காவைக்கூட வறண்ட பாலைவனமாக்குவேன் என்கிறார். மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்ப் புலவர்கள் 500 பேர் கூடி முடிவெடுத்த தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்க மறுத்து “ஆரியமாயை”க்கு கைலாகு கொடுத்து விட்டார். விரைவில் வருகின்ற “சித்திரை” முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று அரசிடமிருந்து வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். 1800 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் - மதுரவாயிலை இணைக்கக் கூடிய, சென்னை

மாநகருக்குப் பெரிதும் பயன் தரக்கூடிய “பறக்கும் சாலை” திட்டம் இந்தியப் பிரதமர் அவர்களே நேரில் வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் - 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டு விட்டது - மத்திய அரசின் அந்தத் திட்டத்தை நிறுத்து என்று ஆணையிடுகிறார். மத்திய அரசின் செயலாளரே நமது தலைமைச் செயலாளருக்கு அந்தத் திட்டம் பற்றிய அத்தனை ஆய்வுகளும் நடந்து முடிந்த பிறகுதான் திட்டம் தொடங்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார். அதுபோலவே தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான சேது சமுத்திரத் திட்டத்திற்காக அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோதே எழுச்சி நாள் நடத்தி, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி, 2005ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கிடைக்கப்பெற்று, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா அம்மையார் முன்னிலையில், பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தத் திட்டத்திற்கான பணிகள் எல்லாம் முடிவுறும் கட்டத்தில் “ராமர் பாலம்” என்ற பெயரைப் பயன்படுத்தி அத்திட்டத்தையே கிடப்பில் போட்டுப் பார்க்கிறார்!

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆறு மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்து தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் தற்போது கிடைத்துக் கொண்டிருக்க வேண்டியதையே மாற்றிடுகின்ற அளவிற்கு, போராட்டக்காரர்களுடன் சேர்ந்து அந்தத் திட்டத்தை தொடற்கூடாது என்று அமைச்சரவையிலே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதி, தற்போது அதிலேயும் இரட்டை நிலை எடுத்து தன்னைக் காட்டிக் கொண்டிருக்கின்ற மாபாதக செயல்!

பாவம், பரிதாபத்திற்குரிய மக்கள் நலப் பணியாளர்கள்! அவர்கள் தி.மு. கழக ஆட்சியிலே நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக - அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர்களை பணியிலிருந்து நீக்குகின்ற குரூரம்! உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை; அவர்களை மீண்டும் பணியிலே சேர்க்க வேண்டுமென்று தீர்ப்புக்கு மேல் தீர்ப்பு கூறியும், பணியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தால் இதுவரை 20க்கு மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்கள் இன்னுயிரையே பலி கொடுத்ததற்குப் பிறகும் மனம் இரங்காமல்

13 ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவிலே நிற்க வைத்துப் பிடிவாதம் காட்டுகின்ற முதலமைச்சரின் ஈவு இரக்கமற்ற போக்கு!

சட்டமன்ற மரபுகளையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டு, எதிர்க்கட்சியினர் முழுமையாக கருத்துக்களைச் சொல்வதற்கு அனுமதி மறுத்து ஜனநாயகத்திற்கெதிராக சதிராட்டம் போடுகிறது ஜெயலலிதா அரசு! “நானே எல்லாம்; நானே இந்த மாநிலம்!” என்ற தன்முனைப்பு!

ஜெயலலிதா அரசின் இத்தனை அடாவடிச் செயல்களையும், அடக்குமுறை நடவடிக்கைகளையும், தமிழ் - தமிழர்க்கெதிரான போக்குகளையும் கண்டிக்கின்ற வகையிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை - ஏப்ரல் 9 திங்கள்கிழமையன்று, மாவட்டத் தலைநகரங்களில் எல்லாம் அறப்போர் ஆர்ப்பாட்டங்களும் - அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15 ஞாயிற்றுக்கிழமையன்று, தமிழகம் முழுவதிலும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்களும் நடைபெறவுள்ளன. எனவே ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகின்ற அறப்போர் ஆர்ப்பாட்டங்களிலும், ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறுகின்ற கண்டனப் பொதுக் கூட்டங்களிலும் கழகத் தோழர்களும், பொது மக்களும் ஆயிரம், இலட்சம் எனக் கலந்து கொண்டு, அ.தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சிக்கு எச்சரிக்கை கொடுப்போம்! அராஜகத்திற்கு முடிவு கட்ட; அணி திரள்வோம்!

அன்புள்ள, மு.க. 08-04-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 163–167. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்