முரசொலி கடிதங்கள் · 3617
“பிறப்பொக்கும்” என்பது கூடாதாம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3617. “பிறப்பொக்கும்” என்பது கூடாதாம்!
உடன்பிறப்பே,
பள்ளிக் கல்வித் துறை பற்றிய மானியப் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கழகத்தின் சார்பில் தங்கம் தென்னரசு அவர்கள் அந்தத் துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில், என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டன என்பதை தலைப்புச் செய்தியாகக் கூறுகிறேன் என்று பேசத் தொடங்கியதுமே, அந்தத் துறையின் அமைச்சர் குறுக்கிட்டு தேவையில்லாமல் “தி.மு.க. தலைவர், கனிமொழி இவர்களைப் பற்றிய சுயசரிதைகளை எல்லாம் படிப்பதுதான் சமச்சீர் கல்வியா” என்று என்னையும் என் குடும்பத்தினரையும் இழுத்துப் பதில் சொல்லி, பேரவைத் தலைவரும் அதை அனுமதித்து அவைக் குறிப்பில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். ஏடுகளில் எல்லாம் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.தி.மு.க. அரசு, அது தி.மு.க. அரசினால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவே எதிர்த்தது. இத்திட்டம் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.எஸ். ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே. வாசுகி ஆகியோர்,
“சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது, அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையைச் செலவிடுவது அவசியம்தானா? இதைப் பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும், மேலும் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால்
உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?”
என்றெல்லாம் கேட்டார்கள். பின்னர் உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தீர்ப்பு அளித்த பிறகு வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசு அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
கல்வித் துறை சார்பில் அப்போது அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விட்டும், சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்து விட்டும் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டார்கள்.
“தி.மு.க. தலைவர் மற்றும் கனிமொழி ஆகியோரின் சுயசரிதைகளை எல்லாம் படிப்பது தான் சமச்சீர் கல்வியா?” என்று கேட்ட அமைச்சரோ, அதை அனுமதித்த முதலமைச்சரோ, அதனை அவைக் குறிப்பில் இடம் பெறச் செய்த பேரவைத் தலைவரோ எந்தச் சமச்சீர் கல்விப் பாடத்தில் என்னுடைய சுயசரிதையோ, கனிமொழியின் சுய சரிதையோ இடம் பெற்றுள்ளது என்று கூறுவார்களா? கல்வித் துறையின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியவர்கள் அப்படிப்பட்ட பகுதிகள் இருந்தால் அதையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்திருக்க வேண்டியதுதானே? சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்திலிருந்து எதை எதை மறைத்தார்கள்?
முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம்! அந்தப் பக்கங்களில் என்ன உள்ளது தெரியுமா? 69ஆம் பக்கத்தில் “வண்ணம் தீட்டுவேன்” என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படம் போடப்பட்டுள்ளது. அதில் பாதிப் பகுதிக்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. மீதிப் பகுதிக்கு மாணவன் வண்ணம் தீட்ட வேண்டும். இந்தத் தாளினையே நீக்க வேண்டுமாம். என்ன காரணம் என்றால், கறுப்பு சிவப்பு தி.மு. கழகத்தின் வண்ணமாம். அ.தி.மு.க. கொடியில் கறுப்பு சிகப்பே இல்லையாம்! நல்ல புத்திசாலிகள்....ஹி....ஹி....ஹி....
80ஆம் பக்கத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அந்த மாதங்கள் தை மாதம் முதல் தொடங்கியிருப்பதால் அந்த முழுப் பக்கத்தையும் கிழிக்கச் சொல்லி விட்டார்கள்.
3வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 67வது பக்கத்தில் “2 படங்கள் மற்றும் ஜூன் 23 - 27, 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சி, ஊர்வலக் காட்சி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்” - என்று சுற்றறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
3வது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 26வது பக்கத்தில், கடைசிப் பத்தி நீக்கப்பட வேண்டுமாம். அதிலே என்ன இருக்கிறதென்றால், “உலகத் தமிழ் மாநாடு 2010 ஜூன் மாதம் 23ந்தேதி முதல் 27ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது” என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம். இவர்கள்தான் தமிழ்த்தாய் விருது வழங்குகிறார்களாம்?
அதே புத்தகத்தின் 27வது பக்கத்தில் “அந்த மாநாட்டுக்குத் தலைவராக முதலமைச்சர் இருந்தார். மாநாட்டுக் கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது” என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம். மாநாட்டுத் தலைவராக நான் இருந்தேன் என்று கூட இல்லை, “முதலமைச்சர்” இருந்தார் என்றுதான் உள்ளது. ஆனாலும் அதனை அழிக்க வேண்டுமென்று தமிழக அ.தி.மு.க. அரசு கூறியிருக்கிறது. இதைத்தான் அமைச்சர் சிவபதி என்னுடைய சுயசரிதை என்கிறாரா?
75வது பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது “செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்” - இது சுற்றறிக்கை. அந்தப் பத்தியில் உள்ள வாசகங்கள் என்ன தெரியுமா? “செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி. தமிழக அரசால் கோவையில் நடத்தப் பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாட்டில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் “இனியவை நாற்பது” என்ற பெயரில் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றிருந்தன. அவை தமிழ் மொழியின்
தொன்மையையும் பண்பாட்டுச் சிறப்பையும் வெளிப்படுத்தின” என்ற வார்த்தைகளில் ஏதாவது ஒரு வார்த்தை தி.மு. கழகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பெருமையாகக் கூறுவதாக இருக்கிறதா என்பதை தமிழ் மக்கள்தான் கூற வேண்டும்!
4-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111வது பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். அதாவது நாட்டுப்புறக் கலைகள் மக்களுக்கு புத்துணர்ச்சி அளித்து கலை உணர்ச்சிக்கு விருந்தளிக்கின்றன. நாட்டுப்புறக் கலைகளை வளர்த்திட தமிழக அரசு ஆண்டுதோறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது என்ற பகுதி கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் சொல்லியிருக்கிறார்கள். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது குற்றமா என்று தெரியவில்லை. இந்த வரிகளை அழிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். இதைத்தான் தமிழக கல்வி அமைச்சர், கனிமொழி பற்றிய சுயசரிதை என்கிறாரா?
5வது வகுப்பு சமூக அறிவியலில் 80-வது பக்கத்தில் 3வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படம் மிகவும் சிறிதாக புதிய தலைமைச் செயலகம் என்பது கூட தெரியாத அளவிற்கு உள்ளது. அதைக் கூட இந்தப் புத்தகத்தில் வெளிவந்து விடக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியாளரின் இதயத்தில் காழ்ப்புணர்ச்சி இடம் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
6வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 56இல் அப்துல் ரகுமானின் புதுக்கவிதை - தாகம் - முழு பக்கமும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்கிறது அரசு உத்தரவு. அந்தக் கவிதையில், “வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே, வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்? - அப்துல் ரகுமான்” என்று உள்ளது. இந்தக் கவிதையை எதற்காக ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கச் சொல்கிறார்கள் என்று தெரிய வில்லை. கவிக்கோ மீது உள்ள கோபமா?
அதே புத்தகத்தில் பக்கம் 129இல் “தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் - கவிதை - தைத் தமிழ்ப் புத்தாண்டே வருக” என்ற வார்த்தைகள் இடம் பெற்றதற்காக அந்தப் பக்கம் முழுவதையும் நீக்க வேண்டுமாம். அடுத்து 130வது பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.
6ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53இல் இரண்டாவது பத்தியில் உள்ள “தப்பாட்டம்” என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். தப்பாட்டம் என்றால் என்ன என்பதையும், சிலப்பதிகார காலத்திலே அது இடம் பெற்றிருந்தது என்பதையும் அந்தப் பத்தியில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பத்தியின் இறுதியில் “பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தப்பாட்டம் நடைபெறுவதை பார்த்திருக்கிறீர்களா?” என்று ஒரு வாக்கியம் இடம் பெற்ற காரணத்தால் அந்தப் பத்தி முழுவதையும் நீக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
6ஆம் வகுப்பு - அறிவியல் பாடப் புத்தகத்தில் 81ஆம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம். காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிவப்பு போல இருக்கிறதாம்.
6ஆம் வகுப்பு - சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் - பக்கம் 11இல் “அண்மையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் உயிர்காப்புத் திட்ட நிதி உதவியால் எங்குமுள்ள வசதியற்ற மக்களும் செலவு மிகுதியாகக் கூடிய உயர்ந்த மருத்துவமனையில் தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்பதை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டுமாம்!
பக்கம் 12இல் மூன்றாவது வரியில் உள்ள “அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்” என்ற வார்த்தைகளை நிரந்தர மார்க்கர் பேனா வைத்து அழிக்க வேண்டுமாம்! பக்கம் 17இல் “அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்”, “வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” என்ற வார்த்தைகளையும் நிரந்தர மார்க்கர் பேனா வைத்து அழிக்கவேண்டுமாம்! இவர்கள் ஆட்சியில் “அண்ணா” என்ற பெயரே ஆட்சேபணைக்குரியதாகி விட்டதா?
பக்கம் 24இல் “வருபவர் தமிழக முதல்வர் கலைஞர் என்பது குறிப்பிட வேண்டியதாகும்” என்ற வார்த்தைகளை அழிக்க வேண்டுமாம். புத்தகத்தில் என்ன உள்ளதென்றால், “கருவுற்ற தாய்மார்களுக்கு நல்ல சத்துணவு கிடைத்திட வழிசெய்ய மகப்பேறுக்கு முன் மூன்று மாதத்திற்கும், பின் மூன்று மாதத்திற்குமாக, மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறாயிரம் ரூபாய் அரசே வழங்கும் நல்ல திட்டத்தை அறிவித்து நிறைவேற்றி வருபவர் தமிழக முதல்வர் கலைஞர் என்பது குறிப்பிட வேண்டியதாகும்” என்றிருக்கிறது. இதில் கடைசியாக உள்ள வார்த்தைகளை அரசின் அறிவுரைப்படி நீக்கி விட்டால் நிறைவேற்றி..... என்பதோடு வாக்கியம் முடியாமல் அப்படியே இருக்கும். அதைத்தான் மாணவர்கள் படிக்க வேண்டுமென்று இந்த அரசு கூறுகிறது.
பக்கம் 82இல் “தமிழக முதல்வர் கலைஞரின் கருத்தினை ஏற்று, கடந்த 2004ஆம் ஆண்டு மைய அரசு தமிழ் ஒரு செம்மொழி என்று அறிவித்துள்ளது. இதிலிருந்து தமிழின் இணையற்ற சிறப்பு விளங்கும்” என்ற வார்த்தைகளை அழிக்க வேண்டுமாம். இவற்றில் என்ன தவறு என்பதை படிப்பவர்களே தெரிந்து கொள்ளலாம். அதே பக்கத்தில் தமிழ் நாடு படம் இருப்பதை மறைக்க வேண்டுமாம். காரணம் அதில் சோழர் வாழ்ந்த பகுதியை கறுப்பு வண்ணம் கொண்டும், சேரர் ஆண்ட பகுதியை சிகப்பு வண்ணம் கொண்டும், பாண்டியர் ஆண்ட பகுதியை நீல வண்ணம் கொண்டும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இந்த மூன்று வண்ணங்களில் கறுப்பு, சிகப்பு வண்ணங்கள் இடம் பெற்றிருப்பதால் அந்தப் படத்தையே மறைத்து விட வேண்டுமாம்!
7-வது வகுப்பில் 98-வது பக்கத்தில் கொ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி, என்.எஸ். கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஆர்.எஸ். மனோகர் முதலியோர் இவர்தம் அடியொற்றி நாடகக் கலை வளர உறுதுணை புரிந்தோராவர் என்ற பகுதி கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் - என்று சுற்றறிக்கையிலே காணப்படுகிறது. “தமிழ் நாடக முன்னோடிகள்” என்ற தலைப்பில் பரிதிமாற்கலைஞர், சங்கரதாச சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் போன்றவர்களைப் பற்றி விரிவாக எழுதிவிட்டு இறுதியாக ஒரு பத்தியில் மேலே சொன்ன பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு இவர்களும் நாடகக் கலை வளர துணை புரிந்தோர்கள் என்று
சொல்லும்போது என் பெயரையும் சேர்த்து விட்டார்களாம், அதற்காக அண்ணா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்களையெல்லாம் சேர்த்து கறுப்பு நிற மார்க்கரால் அடிக்க வேண்டுமென்று அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுள்ள ஆட்சியிலே ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடா அல்லவா?
9-வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203இல் “தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க விழா” என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை. அதிலே என்ன இருக்கிறது என்றால், “தமிழர் திருநாளாம் பொங்கல் விழா; தைத்திங்கள் நாள் விழா; தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க விழா; தமிழினத்தின் தனிவிழா; பண்பாட்டுப் பெருவிழா” என்பதுதான் அதிலே உள்ள வார்த்தைகள். தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க விழா என்பதை கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டுமாம்.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பக்கம் 17இல் “மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் நிறைவுற்றது” என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் உள்ளது. என்ன காரணமாம்? “தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி, 2004 வரை தொடர்ந்தது. நடுவணரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது. இத்தொடர் முயற்சி மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் நிறைவுற்றது” என்று உள்ளதில் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் நிறைவுற்றது என்பதை கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.
அதே புத்தகத்தில் 89வது பக்கத்தில் “அறிந்து கொள்வோம் என்ற பகுதி முழுவதும் நீக்கப்பட வேண்டும்” என்கிறது சுற்றறிக்கை. அந்தப் பகுதியில் நான் எழுதிய கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனை முழுவதும் நீக்க வேண்டுமாம். 100வது பக்கத்தில் “கலைஞரின் இனிய நடையை படித்தறிக. கொடிநாள்........ வெற்றி உங்களை தேடி வந்து மாலையிடும் என்ற பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்” - இது
சுற்றறிக்கை. கொடிநாள் பற்றி நான் எழுதிய ஒரு உரைநடையை, நான் எழுதியது என்பதால் அதனை மறைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். இவைகளையெல்லாம் மறைத்தது பற்றி எனக்கொன்றும் வருத்தமில்லை.
இதிலே வேதனையிலும் ஒரு வேடிக்கை! ஒவ்வொரு புத்தகத்திலும் அய்யன் திருவள்ளுவரின் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதன் கீழே திருவள்ளுவரின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற எழுத்து எழுதப்பட்டிருந்தது. அந்த வார்த்தைகள் என் கையெழுத்திலே இருந்தன என்பதற்காக அந்த வார்த்தைகளையே எடுக்கச் சொல்லி அ.தி.மு.க. அரசு கூறிவிட்டு - தற்போது பேரவையில் ஒரு அமைச்சர் என்னுடைய சுயசரிதையும், என் மகள் சுய சரிதையும் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களிலே இடம் பெற்றது என்று சொல்லியிருக்கிறார் என்றால், எப்படியெல்லாம் உண்மைக்கு மாறாக புளுகுகிறார்கள் என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டும் வேண்டுமா?
239வது பக்கத்தில் “பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்”. இது சுற்றறிக்கை. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய ஆட்சி என்பதால் அந்த வாசகங்களை நீக்கச் சொல்லியிருக்கிறார்கள் போலும்!
பொதுவாக எல்லா வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ள செம்மொழி வாழ்த்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டுமாம். அப்படி அந்த வாழ்த்தை மறைக்க வேண்டிய அளவிற்கு அதிலே உள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான நம் தமிழ் மொழியாம்! கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் - தரும், புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி! அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - ஓதி வளரும் உயிரான உலக மொழி - நம் மொழி - நம் மொழி - அதுவே செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
இந்த வார்த்தைகளில் மாணவர்கள் படிக்கக் கூடாத - படித்தால் அவர்கள் எதிர்காலம் பாழாகிடக் கூடிய வார்த்தை ஏதாவது ஒன்று இருக்கிறதா?
ஒரே குற்றம், இந்தச் செம்மொழி வாழ்த்துப் பாடலை எழுதியது நான் என்பதுதான். நான் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும் பாருங்கள்!
அதே நேரத்தில் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது அவர் தஞ்சையிலே நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுப் பாடலில் உள்ள பின்வரும் வார்த்தைகளையும் பாருங்கள்.
“என்றும் உள்ள தென் தமிழ் போல் இனிக்கும் தமிழின் இலக்கியம் போல் என்றும் மொழிக்கு புகழ் சேர்க்க இனிய முதல்வர் வாழியவே”
“அவ்வை ஆண்டாள் அம்மையுமே அழகுறப் பாடி தமிழ் வளர்த்தார் அன்னை முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து வளர்க்கின்றார்”
“பாரதத் தாயும் தமிழ்த் தாயும் பாங்குடன் சேர்ந்து மகிழ்வது போல் வாராது வந்த மாமணியாம் வாழ்க அன்னை ஜெயலலிதா”
உலகத் தமிழ் மாநாட்டு வாழ்த்துப் பாடலில் தமிழை வாழ்த்துவதற்குப் பதிலாக இவ்வாறு ஜெயலலிதாவின் புகழ் பன்மடங்கு பெரிதுபடுத்தப்பட்டுப் பாடப்பட்டது போல, தி.மு. கழக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி வாழ்த்துப் பாடலில் முதல் அமைச்சரைப் பாராட்டி ஏதாவது ஒரு வார்த்தை இடம் பெற்றுள்ளதா? ஆனாலும் அதனைக் கிழிக்க வேண்டும் என்றார்கள்!
உடன்பிறப்பே, இப்படியெல்லாம் செய்தவர்கள் இன்று அதையெல்லாம் மறைத்து விட்டு, என்னுடைய சுயசரிதையும், என் மகள் கனிமொழியின் சுய சரிதையும் சமச்சீர் கல்வியில் இடம் பெற்றதாக ஒரு அமைச்சரே பேரவையில் பொய் கூறியிருக்கிறார். அது தவறான செய்தி என்பதை மறுத்துரைக்க கழக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு தரவில்லை. எனவேதான் சட்டமன்றத்தில் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பு இல்லாததால் மக்கள் மன்றத்திலே சொல்ல தி.மு. கழகம் முன்வந்துள்ளது.
அன்புள்ள, மு.க. 21-4-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 196–205. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.