முரசொலி கடிதங்கள் · 3619
காலத்தால் மறையாத காற்றில் கலந்த கீதம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3619. காலத்தால் மறையாத காற்றில் கலந்த கீதம்! உடன்பிறப்பே,
20-4-2012 அன்று “குன்றின் மேலிட்ட விளக்காகும்; தனித் தமிழ் ஈழம்” என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினையடுத்து வாக்கெடுப்புகள் நடத்தி தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட கொசோவா, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விவரித்ததோடு, “தனித் தமிழ் ஈழம்” எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவிகளிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது என்றும் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்; ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும் என்றும், இன்றைய சூழலில் ஏற்கனவே வரலாற்றில் உள்ள முன்னுதாரணங்களைப் பின்பற்றி ஐக்கிய நாடுகள் மன்றம் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனி ஈழம் உருவாகிட உதவிட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன்.
என்னுடைய வேண்டுகோளுக்குப் பிறகு இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே என்னைக் கடுமையாக விமர்சித்துப் பேசி நாளேடுகள் எல்லாம் அந்தச் செய்தியினை வெளியிட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக 23-4-2012 தேதிய ஆங்கில நாளேடு ஒன்றில் கடுமையான தலையங்கம் - தனித் தமிழ் ஈழத்திற்கு விரோதமாக எழுதப்பட்டிருப்பதையும் கண்டேன். மேலும் இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் டி.கே. ரெங்கராஜன் அவர்களும் இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப் போல சொல்லியிருக்கிறார்கள்.
நான் எனது முந்தைய கடிதத்திலேயே “தமிழ் ஈழம்” கோரிக்கை எப்போது எழுந்தது, அதற்கு ஆதரவாக தி.மு.கழகம்
எப்போது முதல் குரல் கொடுத்து வருகிறது என்பதையெல்லாம் எழுதியிருந்தேன். தமிழ் ஈழம் கோரிக்கை ஏன் எழுந்தது என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் அந்தக் கோரிக்கையிலே இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்ள முடியும். 8,000 சதுரமைல் பரப்பில் வாழும் 35 லட்சம் சிறுபான்மை ஈழத் தமிழர்கள் 110 லட்சம் பெரும்பான்மை சிங்களவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டதாலும்; நீண்ட நெடுங்காலமாகவே தமிழர்களும் சிங்களவர்களும் வேறு வேறு மொழிகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும் பூகோள எல்லைகளையும் கொண்டிருந்தும்கூட, இந்த இரு வேறு தேசிய இனங்களின் அடிப்படை வேறுபாடுகளைக் கிஞ்சிற்றும் கருதிப் பார்க்காது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஒரே ஆட்சி திணிக்கப்பட்டதாலும்; இந்த ஒற்றையாட்சி அமைப்பின்கீழ் பெரும்பான்மை சிங்கள இனம், தமிழ் மக்களை அடிமைப் படுத்தும் புதிய எஜமானர்களாக தம்மை ஆக்கிக் கொண்டு, தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்திட முயற்சித்ததாலும்; மற்றும் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்த பத்து லட்சம் தமிழர்களின் குடியியல் உரிமைகளைப் பறித்து அவர்கள் அனைவரும் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதாலும்; 1956ஆம் ஆண்டு சிங்கள மொழியை மட்டுமே இலங்கை முழுவதற்கும் ஆட்சி மொழியாக ஆக்கி தமிழர்களுக்கு கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை ஆகியவற்றை மறுத்து அவர்களை அன்னிய நாடுகளுக்குச் சென்று குடியேற நிர்ப்பந்தம் செய்ததாலும்; 1960-61 இல் கல்விச் சாலைகளை தேசிய மயமாக்கியதன் மூலம் தமிழர்களின் கல்விக் கெதிரான பாரபட்சமான மனிதாபிமானமற்ற கொள்கைகளைப் பின்பற்றியதாலும்; தமிழர்களை சிங்கள மொழி மூலம் கல்வி கற்க கட்டாயப்படுத்தியதாலும் “தனித் தமிழ் ஈழம்” என்ற கோரிக்கை தன்னியல்பாகவே 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களிடையே எழுந்தது என்பதையும், அதன் விளைவாக பல்வேறு போராளிக் குழுக்கள் உருவாகி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்திட வேண்டிய கட்டாயம் உருவானது என்பதையும் வரலாற்றைப் பூரணமாகப் படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். இதனையடுத்து 29-7-1987 அன்று ஏற்பட்ட “கொழும்பு” ஒப்பந்தம் இக்கட்டான அன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது ஒரு சிறிய ஒளிக்கீற்றையாவது வழங்கிடுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் “குறைபாடுகள்
மலிந்தது என்பது மட்டுமல்ல; தூய்மையான உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒப்பந்தமும் அல்ல” என்று 1987ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திலேயே “கரிகாலன் பதில்கள்” என்ற தலைப்பில் நான் சொல்லியிருக்கிறேன். மேலும், இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளைப் பற்றி - “கொண்டைக்கு ஒரு செண்டு மல்லிகை கேட்டாளாம், கொண்ட கணவனிடம்; அந்தக் குணக்கேடனோ கொண்டை உள்ள மட்டும் இவள் செண்டு கேட்டுத் தொல்லை தந்தபடிதான் இருப்பாள்; எனவே செண்டு தேடிடும் சங்கடம் நமக்கில்லாமல் இருக்க, இவள் கொண்டையை அறுத்தெறிவோம் என்றானாம்!” என்று அண்ணா அவர்கள் சொன்னதையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன். 1987இல் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13வது திருத்தம் என்று ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப் பரவல் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஆனால் அந்தத் திருத்தத்தை அரை மனதுடன் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவாக்கி வருகிறது. அதனால் தான் இன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே அவர்கள், “இலங்கையில் தமிழர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும்; இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும்; சாத்தியம் தானா?” என்று வினவியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 1990களில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக மங்கல மூனிசிங்கே தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு, நூற்றுக்கு மேற்பட்ட முறை கூடி, விவாதித்ததற்குப் பிறகும் அந்தக் குழுவின் பரிந்துரைகள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றும்; இதன் பிறகு அமைக்கப்பட்ட மற்றொரு நாடாளுமன்றக் குழு அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் சாசன வரைவைத் தயாரித்தளித்து, எதிர்க்கட்சியினர் இந்த வரைவை நாடாளுமன்றத்திற்குள்ளேயே எரித்ததால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது என்றும்; ராஜபக்ஷே பதவிக்கு
வந்த பிறகு அதிகாரப் பகிர்வு தொடர்பாக தீர்வு காண்பதற்கு நிபுணர் குழுவின் உதவியுடன் செயல்படக்கூடிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் யோசனைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும்; 2010ஆம் ஆண்டில் போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அமைக்கப்பட்டு, ஆணையம் அளித்த அறிக்கையை முழுமையாக அமல்படுத்த முடியாதென இலங்கை அமைச்சர்கள் பெரிஸ், நிமல் சில்வா ஆகியோர் வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர் என்றும்; கடந்த ஜனவரியில் இலங்கைக்கு வந்த இந்திய வெளி உறவுத் துறை அமைச்சர் திரு. எஸ்.எம். கிருஷ்ணாவிடம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படுமென அதிபர் ராஜபக்ஷே உறுதியளித்து விட்டு - திரு. கிருஷ்ணா இந்தியாவுக்கு திரும்பும் முன்பே அப்படியொரு உறுதியை தான் அளிக்கவில்லையென ராஜபக்ஷே மறுத்தார் என்றும்; தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முழுமையான பேச்சுக்களுக்குப் பிறகு, நாடாளுமன்றக் குழுவை அமைத்து ஒப்புதல் பெறலாமென்று ராஜபக்ஷே கூறியிருந்தும் கூட - அவர் சொன்னதற்கு மாறாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுக்களிலிருந்து இலங்கை அரசு தன்னிச்சையாக விலகிக் கொண்டதென்றும்;
இப்படி வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினையும் சுட்டிக்காட்டி சுரேஷ் பிரேமச்சந்திரன் விவரித்திருக்கிறார்.
திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது திருமதி சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்ஷே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள்தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். வெளியிட்டிருக்கும் செய்திகளில் இருந்து - முள்வேலி முகாம்களிலும் சிறைக் கொட்டடிகளிலும் ஆயிரமாயிரம் தமிழர்கள் இன்னமும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும்; காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பற்றிய தகவல்கள் கூட இல்லை என்பதும்;
இரண்டாண்டுகளுக்குப் பிறகும்கூட மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்வுப் பணிகள் முழுமை பெறவில்லை என்பதும்; தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஏன், கோயில்களிலும் கூட ராணுவத்தினரைக் குவித்துவைத்து, மனித உரிமைகளுக்கெதிராக இலங்கை அரசு தமிழர்களை எந்த நேரமும் அச்சத்தின் இறுக்கமான பிடிக்குள்ளேயே இருக்கும்படி செய்திருக்கிறது என்பதும் தெரிய வருகின்றன.
தோழர் டி.கே. ரெங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. “மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்றபோது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன். இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.
தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரெங்கராஜன் அவர்களின் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976இல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து “தனித் தமிழ் ஈழம்” தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து; அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள். தமிழ்ப் பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். “தனித் தமிழ் ஈழம்” தான் என்பது 1977ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை - உலகெங்கிலும் பரவியிருக்கும்
தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.
“கியூபா ஒரு சின்னஞ்சிறிய நாடு. அதன் மக்கள்
தொகை அறுபது லட்சம். அந்த நாட்டின் எல்லையைக்
கொண்டே, மக்கள் தொகையைக் கொண்டோ அதனை
மதித்து விட முடியாது. உலக அளவில் சிந்திக்கக் கூடிய
ஒரு நாடாக இடம் பெற காரணமாக இருந்த - இருக்கிற பிடல் காஸ்ட்ரோ, பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவராக இருந்த போது அந்த நாட்டின் வெற்றிக்கான விதையை விதைத்தார். மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவிற்கு பக்கத்திலே மிகச் சிறிய நாடான கியூபா இருந்து கொண்டு, ஏகாதிபத்தியத்திற்கு அடி பணிய மாட்டேன் என்று குரல் எழுப்பி உலக மக்களையெல்லாம் வியந்து நோக்கச் செய்யும் அளவிற்கு கடந்த ஐம்பதாண்டு காலமாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றது” என்று கியூபாவைப் பற்றியும், அந்த நாட்டின் விடுதலை வீரன் பிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் நான் 14-11-2007 அன்று “முரசொலி”யில் எழுதியிருந்ததை; தனித் தமிழ் ஈழம் என்ற இன்றைய கோரிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து திரு. டி.கே. ரெங்கராஜன் உண்மையை உணர்வார் என்று நம்புகிறேன். அரசியல் தீர்வு - அதிகாரப் பரவல் என்பதெல்லாம் செயல்முறைக்கு வராத வெறும் சொற்களாகவே இருந்து வருவதாலும்; உலக அரங்கில் எவரிடமும் தரும் எந்த உறுதி மொழியையும் காப்பாற்றும் அடிப்படை நேர்மை உணர்வு இலங்கை அரசிடம் கிஞ்சிற்றும் இல்லாததாலும்; தனித் தமிழ் ஈழம் எனும் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியிட்டும் - இலட்சக்கணக்கான தமிழர்கள் சொந்த நாட்டில் தமது உடைமைகளை இழந்து, உறவுகளைத் துறந்து, உலக நாடுகளின் தெருக்களில் அனாதைகளாகவும், அகதிகளாகவும் கதி கலங்கி கண்ணீர் சிந்தியும் - மிகப் பெரிய விலையைத் தந்து விட்டதாலும்; இலங்கைத் தமிழர்கள் தனித் தமிழ் ஈழத்திற்குக் குறைவான எதற்கும் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதற்கோ, சமாதானப்படுத்திக் கொள்வதற்கோ ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள்! இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அமிர்தலிங்கம் போன்றோரும், அயல் நாட்டவரும் முன்னெடுத்துச் சென்ற முயற்சிகள் அனைத்தும் முனை முறித்துப் போடப்பட்டன. போடப்பட்ட ஒப்பந்தங்கள் உளப்பூர்வமாகப் போடப்படாததால், அவை காகிதக் கூளங்களாக்கப்பட்டு, காற்றிலே பறக்க விடப்பட்டுவிட்டன. விடுதலைப் போராளிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டமும், ராணுவங்களின் அசாதாரணமான
பலப் பிரயோகத்தின் மூலம் நசுக்கப்பட்டுவிட்டது. தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு, சிங்களப் பேரின வாதத்திற்குச் சிறிதும் மனம் இடம் தரவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை - அடக்குமுறை அடாவடிகளாலோ, அதிகார அத்துமீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ - தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டு மென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது.
ஈழ விடுதலைக் கீதம் எழுப்பியவர்களை கொன்று புதைத்து விட்டாலும்; அந்தக் கீதம் காற்றிலே கலந்து விட்டது; காற்றிலிருந்து அந்தக் கீதத்தைப் பிரிக்க முடியாது; காற்றின் மூலம் அந்தக் கீதம் உலகத் தமிழர்களின் உணர்வுகளில் எல்லாம் இரண்டறக் கலந்து விட்டது என்னும் பொருள்பட கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய,
“வீணையை உடைத்தெறிந்து விடலாம் - மீட்டப்பட்ட பாட்டு - காற்றில்;”
என்ற பாடல் வரிகளே இப்போது எனது நினைவில்
பளிச்சிடுகின்றன.
“சோனார் பங்களா” எனச் சொல்லப்பட்ட பங்களா தேஷ் விடுதலைப் போரில், முஜிபுர்ரகுமானுக்கு உதவிட, இந்தியா கையாண்ட அணுகுமுறையைப் போன்ற ஒன்றையா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கையாள வேண்டுமென்று நான் கோரிக்கை விடுத்தேன். ஜனநாயக ரீதியில், ஐ.நா. மன்றமும், அனைத்துலகமும் ஏற்றுக் கொண்டுள்ள நடைமுறையையொட்டி, தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் பற்றி முடிவு செய்யப்பட வேண்டும் என்று தானே, அறிஞர் அண்ணா அவர்களின் வழி நின்று மக்களாட்சியின் மாண்புகளை என்றைக்கும் மதித்துப் போற்றுபவன் என்ற முறையில், குறிப்பிட்டு எழுதியுள்ளேன்!
அன்புள்ள, மு.க. 25-4-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 214–220. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.