அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3622

முரசொலி கடிதங்கள் · 3622

அண்ணா பெயரால் கட்சி; கேலிக்கூத்து!

நாள் 8.5.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3622. அண்ணா பெயரால் கட்சி; கேலிக்கூத்து!

உடன்பிறப்பே,

கடந்த ஒரு மாத காலமாக தமிழகச் சட்டமன்றப் பேரவை தொடர் கூட்டம் நடைபெற்று வருகின்றது. நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதம் முடிவுற்று, தொடர்ந்து பல்வேறு துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர்கள் நிதிகோரி ஒவ்வொரு நாளும் விவாதங்கள் நடைபெறுகின்றன. பேரவை நடைபெறுகின்ற நேரத்தில் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானங்களும், கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் அன்றாடம் தமிழகத்திலே ஏற்படுகின்ற நிலைகள் குறித்து பேரவைத் தலைவரிடம் அளிக்கப் பெற்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருள் பற்றிய கவன ஈர்ப்புத் தீர்மானத்தையோ, ஒத்திவைப்பு தீர்மானத்தையோ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்ப அனுமதிக்கப்பட்டு, அதன் மீது அந்தத் தீர்மானத்தைக் கொடுத்தவர் கருத்துக்களைக் கூறி, அதற்கு அந்தத் துறையின் அமைச்சர் பதிலளிப்பதுதான் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற அவை மரபாகும். ஆனால் தற்போதெல்லாம் ஒத்திவைப்பு தீர்மானங்களையோ, கவன ஈர்ப்புத் தீர்மானங்களையோ கொடுப்பதற்கே எதிர்க்கட்சிகளை அவைக்கே வரவிடாமல் செய்து, அன்றாடம் முதலமைச்சர் அவையிலே விதி 110இன் கீழ் அறிக்கை மட்டுமே படித்து, அதைப் பாராட்டி தோழமைக் கட்சியினர் எல்லாம் பேசுகின்ற நிலைதான் நடந்து வருகின்றது.

ஆனால் தமிழகத்திலே கடந்த பல நாட்களாக சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி, வேலை நிறுத்தத்தில் 4-4-2012 முதல் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வேலை நிறுத்தம் 17வது நாளை எட்டியுள்ளது. 7-5-2012 அன்று ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டமும், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பா.ம.க., யு.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறி நெசவாளர்கள் அது போலவே மின்வெட்டு காரணமாக தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்று கூறி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அ.தி.மு.க. அரசின் வறட்டுப் பிடிவாதம் காரணமாக முறையாக அரசிலே பல ஆண்டுக் காலமாகப் பணியாற்றி வந்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் என்று முறையிட்டு, நீதியினைப் பெற்றுக் கொண்டு, வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் போராட்டங்களைப் பற்றியோ, வேலை நிறுத்தங்களைப் பற்றியோ அ.தி.மு.க. அரசு ஏதாவது கவலைப்படுகிறதா? இந்தப் பிரச்சினைகளைப் பேரவையிலே விவாதிக்க வேண்டுமென்று ஒத்திவைப்பு தீர்மானங்களோ, கவன ஈர்ப்புத் தீர்மானங்களோ அனுமதிக்கப்பட்டு அதற்குப் பதிலளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் கிடையாது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பிரச்சினையில் தங்களுக்கு சம்மந்தம் இல்லை என்றும், மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் தமிழக அமைச்சர் பேரவையிலேயே பதில் கூறிவிட்டார். உண்ணாவிரதப் போராட்டத்தை நெய்வேலி நகருக்குள் நடத்தக் கூடாது, தேவைப்பட்டால் மந்தாரக் குப்பத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக போலீசார் தெரிவித்துள்ளனராம். போராடுகின்ற

தொழிலாளர்களின் கோரிக்கைகளில் ஒன்று, நெய்வேலி அனல் மின்சார உற்பத்தி முழுவதையும் தமிழ்நாட்டின் பயன்பாட்டுக்கே வழங்கிட வேண்டும் என்பதுமாகும். எனவே மாநில அரசுக்கு நேரடியாக இதிலே தொடர்பு இல்லாவிட்டாலும் மத்திய அரசிடம் வலியுறுத்தி அங்கே பாதிக்கப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்திருக்கலாம். 2008ஆம் ஆண்டு நெய்வேலி தொழிலாளர்கள் இதே பிரச்சினைக்காக தி.மு. கழக ஆட்சியில் போராட்டம் அறிவித்தவுடன் அந்த ஆலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்துப் பேசி, அங்கே ஒரு சுமுக முடிவு கண்டு உடன்பாடு ஏற்பட வழிவகை வகுத்தது தி.மு.கழக ஆட்சி. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முயற்சித்த போது, அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய அனைத்துத் தொழிற் சங்கங்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டி, மத்திய அரசுக்கு நானே கடிதம் எழுதி, அந்தப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. ஆனால் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு இந்தப் பிரச்சினையிலே அக்கறையின்றி இருந்தாலும், மத்திய அரசும், இந்தத் துறையின் அமைச்சரும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு, போராடுகின்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை, அழைத்துப் பேசி சுமுக முடிவு காண முன் வரவேண்டுமென்றும், அதற்கு பிரதமர் அவர்கள் ஆவன செய்திட வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோலவேதான் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினை. சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு என்பது தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்களுடன் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய தொழிற் சங்கங்கள் பேசி ஒப்பந்தங்கள் காணுவதாகும். 2001-2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு, தொழிலாளர் சங்கங்களை அழைத்துப் பேசிடாமலேயே, 17- 1-2006இல் தன்னிச்சையாக ஓர் அரசாணையைப் பிறப்பித்து, ஒப்பந்தக் காலத்தை தானாகவே நீடித்து விட்டது. ஆனால் 2006ஆம் ஆண்டு மே திங்களில் தி.மு. கழக ஆட்சி பொறுப்புக்கு

வந்த பிறகு, தொழிலாளர்களின் கோரிக்கைகளையேற்று, குறிப்பாக தொ.மு.ச. பேரவையின் வேண்டுகோள்படி, தனியார் ஆலைகளைப் போலவே, கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைத் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு 1-4-2009 முதல் வழங்கிட 8-10-2008 அன்று அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது என்பதை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் நன்றாகவே அறிவார்கள். அதன் பிறகு தனியாருடன் தொழிற் சங்கங்கள் செய்து கொண்ட ஊதிய ஒப்பந்த பலனில் 90 சதவிகிதத்தை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களுக்கும் வழங்கிட தி.மு.கழக அரசு 14-9-2010 அன்று ஆணை பிறப்பித்து, அதன் மூலம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 80 சதவிகித ஒப்பந்த பலன் வழங்கப் பட்டது. இதற்குப் பிறகு பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள், அத்துறை களில் ஒரு சிலர் பெற்று வந்த அரசு ஊழியருக்கு இணையான ஊதியத்தைப்போல வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்றது. இவர்களின் இந்தக் கோரிக்கை குறித்து - அப்போது பொதுத்தேர்தல் நடைபெற வேண்டிய காலம் நெருங்கிவிட்டதால் 1-3-2011 அன்று, தி.மு.கழக அரசு ஒரு குழுவினை அமைத்து ஆய்வு செய்திட வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது. அதற்கடுத்த இரண்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், 1-8-2011 அன்று அந்தக்குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. ஆனால் அந்தப் பரிந்துரைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றித்தர வேண்டிய அ.தி.மு.க. அரசு, பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கால தாமதம் செய்து கொண்டே இருக்கிறது. அதிலே எந்த முடிவும் எடுக்கப்படாததால், சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் தற்போது போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இலட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் குடும்பங்களும் - விளைந்த கரும்பை ஆலைக்கு அனுப்ப இயலாத காரணத் தால் பெரும் இழப்புக்கு ஆளாகிய நிலையில் - சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டுறவு சர்க்கரை

ஆலைகள், அரசு சர்க்கரை ஆலைகள் எதுவும் இயங்காத காரணத்தால், உரிய நேரத்தில் கரும்பு வெட்டுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு கொள்முதல் விலை 2500 ரூபாய் டன் ஒன்றுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது அந்த விலையைக்கூட வழங்க முன் வராமல், 2100 ரூபாய் என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசு தற்போது சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினையையும் தீர்க்க முன்வராமல் உள்ளது.

அடுத்து, மின் கட்டண உயர்வை எதிர்த்து, மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறிக் கூடங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை விசைத்தறியாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் 49 கோடி ரூபாய் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, தெக்கலூர், பெருமாநல்லூர், மங்கலம், திருப்பூர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சோமனூர், சூலூர் பகுதிகளில் மட்டும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகளுக்கு முதல் 500 யூனிட்டுக்கு மட்டும் இலவச மின்சாரம் இருந்த போதிலும் அதற்குமேல் ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற தொழில்களோடு ஒப்பிடும்போது விசைத்தறிக்கான மின் கட்டணம் 110 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கூறி போராட்டம் நடத்துகிறார்கள். இவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். ஆனால் இதுபற்றியும் அ.தி.மு.க. அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மக்கள் நலப் பணியாளர்கள் பற்றி நீதி மன்றங்கள் மீண்டும் பணி கொடுக்க உத்தரவு கொடுத்த பிறகும் அ.தி.மு.க. மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதில்தான் அக்கறை செலுத்துகிறதே தவிர, மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பளிக்க முன்வருவதாக இல்லை.

இதுவரை 19 மக்கள் நலப்பணியாளர்கள் தங்கள் இன்னுயிரை அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் வறட்டுப் பிடிவாதத்திற்காக பலி கொடுத்தும்கூட, மனம் இரங்குவதாகத் தெரியவில்லை.

இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பேரவைக்கு வந்தால் எங்கே தி.மு.க. உறுப்பினர்கள் பேசி விடுவார்களோ என்பதற்காக, வராமலிருக்க என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டார்கள். ஆளுங்கட்சி, தனது எதிர்க் கட்சி உறுப்பினர்களிடமிருந்து என்ன கருத்து சொல்லப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து செயல்பட்டால்தான் முறையான ஆட்சியாகத் தொடர முடியும். அதைத்தான் அய்யன் வள்ளுவரும் “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்றார். நான் இப்படிச் சொல்வதால், “தி.மு.கழக ஆட்சியில் அப்படித்தான் செயல் பட்டீர்களா?” என்று யாராவது கேட்கக் கூடும். ஆமாம், அப்படித்தான் செயல்பட்டோம். உதாரணமாக, 13-11-2008 அன்று மின்சாரம் பற்றிய விவாதம் நடைபெற்ற போதுகூட - நான் அவையிலே இல்லாத நேரத்தில் - பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியினை அறிந்து - அய்யோ, அவர்கள் மின்சாரம் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டுவிட்ட காரணத்தால், மின்சார விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே என்று எண்ணி - நானே தொலைபேசியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியிலே பேசிட முயற்சித்து - அது கிடைக்காத காரணத்தால் - ஆளுங் கட்சியைச் சேர்ந்த தம்பிகள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு ஆகிய அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு - எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கே சென்று அ.தி.மு.க.வினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்திலே கலந்து கொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன். மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியிலே பேசி, வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, அவர்களையெல்லாம் கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையிலேயே அழைப்பு விடுக்கவும் கேட்டுக்கொண்டேன். அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார்.

ஆனால் இத்தனைக்கும் பிறகு என்ன காரணத்தாலோ அவர்கள்

அவைக்கு வரவும் இல்லை. மின்சார விவாதத்திலே கலந்து

கொள்ளவும் இல்லை. ஆனாலும் அண்ணா கற்றுக் கொடுத்த

அந்தப் பண்பாட்டுடன் நாம் நடந்து கொண்டோம் என்ற மன

ஆறுதல் எனக்குக் கிடைத்தது. ஆனால் அண்ணா பெயரால் இன்னமும் கட்சி நடத்துபவர்களோ?

அன்புள்ள,

மு.க.

8-5-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 239–245. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்