அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3624

முரசொலி கடிதங்கள் · 3624

காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

நாள் 21.5.2012சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3624. காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

உடன்பிறப்பே,

தமிழகத்திலே நிதியமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார்! இவருக்கு நிதி நிலை அறிக்கை என்ற புத்தகத்தை அவையிலே படிப்பதற்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பேரவையில் அவ்வப்போது எழுந்து நின்று எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசி மட்டுமே, தான் இருப்பதைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பார்! தற்போது திடீரென்று ஓர் அறிக்கை கொடுத்துள்ளார்!

ஒவ்வொரு ஆண்டும் கூட்டத் தொடர் முடிகின்ற நாளன்று, பேரவையில் தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை ஒன்றை பேரவையிலே வைப்பார்கள். அந்த அறிக்கையில் அரசின் பல்வேறு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் பற்றிய கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு ஒரு சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருப்பார்கள். அதைப் படித்து விட்டு நாளேடுகள் அந்தக் குறைபாடுகளை தங்கள் இதழ்களில் வெளியிடுவார்கள். அதைப் போலவே இந்த ஆண்டும் அந்த தணிக்கை அறிக்கை ஏடுகளிலே வெளி வந்ததும், நமது நிதியமைச்சருக்கு ஏதோ குற்றச்சாட்டுகளைப் போல சொல்லியிருக்கிறார்களே, இது நமது துறை ஆயிற்றே என்ன செய்யலாம் என்று பார்த்து, அந்த அறிக்கையிலே கூறப்பட்டிருப்பது எல்லாம் கடந்த கால ஆட்சியைப் பற்றிய விவரங்களாகும் என்று அவராகவே அவசர அவசரமாக ஓர் அறிக்கையை ஏடுகளிலே விடுத்துள்ளார். பாவம்! பேரவை நடைபெற்று முடிகிற வரை இவருக்கு எப்படியாவது 110வது விதியின் கீழ் ஓர் அறிக்கையைப் படித்தாவது, ஏடுகளிலே வெளியிடச் செய்துவிட வேண்டுமென்று நினைத்து நடக்கவில்லை. இப்போது கிடைத்தது ஒரு வாய்ப்பு என்று அறிக்கை விடுத்துள்ளார்.

“தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை; அம்மா

அவர்கள் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் தொடர்பாக எழுப்பப்படுகின்ற குற்றச்சாட்டுகள் போன்ற தோரணத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அமைச்சர் பன்னீர் செல்வம் சொல்லியிருக்கிறார். ஆனால், தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையைப் பார்த்த யாருக்கும் அத்தகைய தோற்றம் ஏற்பட்டவில்லை. அமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்குத்தான் அப்படி தோற்றம் அளிக்கின்றது போலும்! எப்படியோ அப்படியொரு காரணத்தைக் கூறிக் கொண்டு அறிக்கை விடுத்துள்ளார்.

தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை என்றாலே எந்த அரசு நடைபெற்றாலும் அரசின் பல துறைகள் பற்றியும், குறிப்பாக பொதுத் துறை பற்றியும், கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்து ஆண்டுதோறும் அறிக்கை அளித்து, அதனை பேரவையிலே உறுப்பினர்களுக்கு வழங்குவது வாடிக்கையாக நடைபெறுகின்ற ஒன்று. அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற கணக்கு வழக்குகளைப் பற்றியும் தணிக்கை அதிகாரிகள் பல அறிக்கைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றிலும் இதுபோன்ற ஒரு சில குறைபாடுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். நிதியமைச்சர் அவரது துறையின் செயலாளரை அழைத்துக் கேட்டால் இதைப் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறுவார்!

“தமிழ்நாட்டில் பொதுத் துறை நிறுவனங்கள் மொத்தத்தில் கடுமையான இழப்பை எய்தியுள்ளன” என்று தணிக்கை அறிக்கை தெரிவிப்பதாக அமைச்சர் சொல்லியிருக்கிறார். பொதுவாக பொதுத் துறை நிறுவனங்கள் இலாப நோக்கோடு நடத்தப்படுவதல்ல. அ.தி.மு.க. ஆட்சியிலேயும் எல்லா பொதுத் துறை நிறுவனங்களும் இலாபத்தோடு இயங்கவில்லை. கட்டணங்களை கடுமையாக உயர்த்தி - விலையை தாறுமாறாக அதிகரித்து மக்களைக் கசக்கிப் பிழிந்தால், பொதுத் துறை நிறுவனங்கள் இலாபத்தோடு நடத்திட முடியும். ஆனால் அது ஒரு மக்கள் நலச் சர்க்காரின் இலக்கணமல்ல! யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டணங்களை உயர்த்தினால் இலாபம் ஏற்படத்தான் செய்யும்.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது 20-11-2011 தேதிய அறிக்கையில், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கக் காரணம், கடந்த கால தி.மு.க.

ஆட்சிதான் என்று சொல்லியிருக்கிறார். அதை அப்படியே “காப்பி” அடித்துத்தான், தற்போது நிதித் துறை அமைச்சரும் கூறியிருக்கிறார். சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று “சிப்காட்”. 2001-2002ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 11.76 கோடி ரூபாய் நஷ்டம். 2002-2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 29.15 கோடி ரூபாய் நஷ்டம்.

2006-2007ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 56.69 கோடி ரூபாய் இலாபம்.

2007-2008ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 96.54 கோடி ரூபாய் இலாபம்.

2008-2009ஆம் ஆண்டு 90.38 கோடி ரூபாய் இலாபம். 2009-2010ஆம் ஆண்டு, தணிக்கைக்கு முன்பு 93.11 கோடி ரூபாய் இலாபம்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், “டிக்” - இதுவும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று. 31-3-2010 வரை இக்கழகம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 949 நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 672 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. 2009-2010ஆம் ஆண்டில் மட்டும் இக்கழகம் சுமார் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து ஏழாண்டு காலமாக இந்தப் பொதுத் துறை நிறுவனம் இலாபத்தில்தான் இயங்குகிறது. 2009-2010ஆம் ஆண்டில் மட்டும் சுமார் நாற்பது கோடி ரூபாய் அளவிற்கு இந்த நிறுவனம் இலாபம் அடைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும் போது இது மிக அதிகமான லாபம் ஆகும். அந்த முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி 36.58 சதவிகிதம்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் - மற்றொரு பொதுத் துறை நிறுவனம்.

2004-2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 39 கோடி ரூபாய் இலாபம்.

2007-2008ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 163 கோடி ரூபாய் இலாபம்.

2009-10ஆம் ஆண்டிற்கு மட்டும், நிகர இலாபம் 155 கோடி

ரூபாயாக மதிப்பிடப்பட்டது.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் என்று அரசின் மற்றொரு பொதுத் துறை நிறுவனம்.

2009-2010ஆம் ஆண்டுக்கான நிகர இலாபம் 26.08 கோடி ரூபாயாகும்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் - இதுவும் ஒரு அரசு பொதுத் துறை நிறுவனம்தான். 1979ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

2009-2010ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் தோராயமாக 19.28 கோடி ரூபாய் (தணிக்கைக்கு உட்பட்டது) இலாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 2010-2011ஆம் ஆண்டிலும் இதே அளவு இலாபம் ஈட்டும் என்று கணக்கிடப்பட்டது.

2010-2011ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 10,294.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதை நிதியமைச்சரும் சொல்லியிருக்கிறார். தற்போது அ.தி.மு.க. அரசு செய்திருப்பதைப் போல மின் கட்டணங்களை உயர்த்தியிருந்தால், பத்தாயிரம் கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால் கழக அரசு மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டாலும், மக்கள் சிரமத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்று நினைத்தது! இப்போதும் அப்படித்தான் நினைக்கிறது.

இழப்பு பற்றி இப்போதல்ல; திரு. பன்னீர் செல்வம் பேரவைக்கு அளித்த நிதி நிலை அறிக்கையிலேயே இரண்டாவது பத்தியிலேயே “மாநில அரசு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்குக் கூடுதலான கடன் சுமையில் மூழ்கியுள்ளது” என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து, மாநில அரசின் கடன் சுமையைக் குறைப்பதற்கு பல்வேறு வகையான திட்டங்களையும், யோசனைகளையும் நிதி நிலை அறிக்கையிலே தெரிவிப்பார் என்று எண்ணி அதை முழுவதும் படித்த போது - இறுதியாக 2011-2012ஆம் ஆண்டுக்கு அரசு பெறப் போகும் கடன் 17,261 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.கழக அரசு

ஏற்றி வைத்து விட்டதாகத் திரும்பத் திரும்பச் சொல்வது தவறு.

31-3-2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகு; தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும். இது ஜெயலலிதா, தி.மு. கழக அரசின் மீது ஏற்றி வைத்து விட்டுச் சென்ற கடன் சுமை. அந்தக் கடன் சுமையைக் குறைக்க தி.மு.கழக அரசு எந்த வரியையும் விதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள்ளாகவே சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரிகளைச் சுமத்திவிட்டு, பால் விலையை உயர்த்திவிட்டு, பேருந்துக் கட்டணத்தை அதிகரித்துவிட்டு, மின் கட்டணத்தை ஏற்றி விட்டு கடந்த கால அரசைக் குறை கூறுவதில் நியாயம் என்ன இருக்கிறது?

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தனது நீண்ட அறிக்கையில், “2010-2011ஆம் ஆண்டில் அரசின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 2,728 கோடி. இதைக் கருத்திற் கொண்டு, அ.தி.மு.க. அரசு வருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 2011-2012ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 536.54 கோடி அளவுக்கு வருவாய் உபரி ஏற்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள அரசுதான், மாநிலத்தின் நிதி நிலையை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். அதாவது தி.மு. கழக ஆட்சியில் வருவாய்ப் பற்றாக்குறை இருந்தது என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் 536.54 கோடி ரூபாய் அளவுக்கு பெரு முயற்சி செய்து வருவாய் உபரியாக ஆக்கியதைப் போலவும் சொல்லியிருக்கிறார்.

2011ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. பதவியேற்பதற்கு முன்பு 5-2-2011 அன்று

தி.மு. கழக அரசின் சார்பாக இடைக்கால நிதி நிலை அறிக்கை நமது பேராசிரியர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி நிலை அறிக்கையின் பக்கம் 51இல் “2011-2012ஆம் நிதியாண்டின் இறுதியில் வருவாய்ப் பற்றாக்குறை நீங்கி ரூபாய் 439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கழகம் ஆட்சியில் இருந்தபோதே தாக்கல் செய்யப்பட்ட நிதி

நிலை அறிக்கையிலேயே 439 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் உபரி இருக்கக் கூடிய அளவிற்கு நிலைமை இருந்தது என்பதை நிதியமைச்சர் பன்னீர் செல்வம் வசதியாக மறைத்து விட்டு, கழக ஆட்சியிலே வருவாய்ப் பற்றாக்குறையாகத்தான் இருந்ததைப் போலவும், அ.தி.மு.க. ஆட்சியிலேதான் வருவாய் உபரி, அவர்களின் திறமையினால் தான் செய்யப்பட்டதைப் போலவும் பீற்றிக் கொண்டிருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!

ஏனென்றால் “அன்று வந்ததும் அதே நிலா; இன்று வந்ததும் அதே நிலா” என்பதைப் போல - அப்போது கழக ஆட்சியிலே நிதித் துறைச் செயலாளராக இருந்தவர்தான், இப்போது அ.தி.மு.க. ஆட்சியிலேயும் நிதித் துறைச் செயலாளராக இருக்கிறார்! வருவாய்ச் செலவுகளில் சிலவற்றைக் குறைத்து விட்டால், வருவாய் உபரி! எனவே வருவாய் உபரி வந்து விட்ட காரணத்தினாலேயே நிதி நிலை சீரடைந்து விட்டதாகப் பொருள் அல்ல.

வருவாய் உபரியோ, பற்றாக்குறையோ ஒட்டு மொத்த நிதி நிலையில் இறுதியாக என்ன நிலை என்பதுதான் முக்கியம்!

கடந்த ஆண்டு கழக ஆட்சியில் பேராசிரியர் நிதிநிலை அறிக்கை படித்தபோது

2011-2012 ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூபாய் 13,507 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. அந்த நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவிகிதம். ஆனால் தற்போது அறிக்கை கொடுத்துள்ள நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்

26-3-2012இல் படித்த நிதி நிலை அறிக்கையில் உள்ளவாறு 2012-2013ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ. 19,832.13 கோடியாக இருக்குமென்றும், அந்த நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.87 சதவிகிதம் என்றும் கூறப்பட்டிருப்பதை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சியில் நிதி நிலைமையை வளப்படுத்தியிருக்கிறார்களா என்பதை அ.தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கையிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

திரு. பன்னீர்செல்வம் அண்மையில் படித்த நிதி நிலை அறிக்கையில் பத்தி 137இல்;

“2012-2013ஆம் ஆண்டின் இறுதியில் மாநிலத்தின் மொத்தக் கடன் 1,35,060.47 கோடி ரூபாயாக இருக்கும். எனினும், இது பதின்மூன்றாவது நிதிக் குழு அனுமதித்துள்ள அளவான, மாநில உற்பத்தி மதிப்பில் கடனின் விகிதாச்சார அளவு 24.8 சதவீதம் என்பதை விட குறைவாக, 19.6 சதவீத அளவிலேயே இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே; தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நிதிக் குறியீட்டில் எந்தத் தவறையும் கழக ஆட்சி செய்துவிடவில்லை என்பதை அறியலாம். ஆனாலும் தி.மு.கழக அரசு கடன் சுமையை வைத்துவிட்டதாக அமைச்சர் தனது அறிக்கையிலே சொல்லி இருக்கிறார்.

இன்னும் கூற வேண்டுமேயானால் தமிழக அரசின் கடன் சுமை பற்றி பேரவையில் ஒரு உறுப்பினர் பேசியபோது முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு “மாண்புமிகு உறுப்பினர் பேசுகின்றபோது, மாநிலத்தின் மொத்தக் கடன் அளவு கவலையை அளிப்பதாக இங்கே தெரிவித்தார். மாநில அரசுக்கு உள்ள மொத்தக் கடன் அளவு 1,18,610 கோடி ரூபாய். மாநில அரசின் தற்போதைய கடன் சுமை,

2011-2012ஆம் ஆண்டின் இறுதியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 20.39 விழுக்காடு அளவே இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது 13வது நிதிக் குழு நிர்ணயித்துள்ள அளவான 24.50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும். ஆக 13வது நிதிக் குழு என்ன சொல்லியிருக்கிறதென்றால், ஒரு மாநில அரசுக்கு 24.50 விழுக்காடு வரை கடன் இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறது. ஆகவே மாநில அரசின் கடன் 20.39 விழுக்காடு என்ற அளவில் அதைவிடக் குறைவாகவே இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று 8-8-2011 அன்று பதிலளித்திருப்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழக அரசின் கடன் அளவு 13வது நிதிக் குழு தெரிவித்ததற்கு குறைவாகவே உள்ளது என்று அம்மையாரே அவையிலே சொல்லிவிட்டு, அவரும் அமைச்சரும் தற்போது கழக ஆட்சியில் ஏராளமான கடன் சுமையை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்று கூறுவது நியாயமா?

கழக ஆட்சி வாங்கி வைத்துவிட்டுப் போன கடன் சுமையை எல்லாம் தாங்கள் குறைக்க வேண்டியதாக உள்ளது என்று

சொல்கிறார்களே, ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறதே; எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார்கள்? கடனை அடைக்க வேண்டாம், வாங்காமலாவது இருந்தார்களா? நிதி நிலை அறிக்கையிலேயே 12,873.81 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடப்பாண்டில் கடன் பெற்றிருப்பதாக பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல, வரும் ஆண்டில் வாங்கப் போகும் கடன் அளவை 18,387.47 கோடி ரூபாய் அளவிலேயே கட்டுப் படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த லட்சணத்தில்தான் ஆட்சிக்கு வந்தவுடன் - 2006ஆம் ஆண்டுக்கு முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்த போது அ.தி.மு.க. அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதையே மறந்து விட்டு, கழக அரசு கடன் சுமையை வைத்து விட்டுப் போனதாகத் திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தணிக்கைத் துறை அறிக்கை பற்றி கழக ஆட்சியிலே நடைபெற்ற சம்பவங்கள் என்று தேவையில்லாமல் வம்புக்கு இழுத்த அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

திரு. தீ. தீத்தன்! இவர் யார் தெரியுமா? மாநிலக் கணக்காய்வுத் தலைவர், (தணிக்கை) II, தமிழ்நாடு. இவரது பெயர் 2-8-2004 வரை தமிழகத்திலே பெரும்பாலோருக்குத் தெரியாது. ஆனால் 6-8-2004 அன்று அவரது பெயர் இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. யாருடைய உபயம் தெரியுமா? சாட்சாத் இன்றைய நமது தமிழக முதலமைச்சரின் உபயம்தான்.

இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் மார்ச் 31, 2003 உடன் முடிந்த ஆண்டிற்கான அறிக்கை; தமிழக சட்டப்பேரவையிலே 31-7-2004 அன்று வைக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்த சில விவரங்களை அந்த அறிக்கையிலே கையெழுத்திட்ட அதிகாரியான தீத்தன் நிருபர்களிடம் 2-8-2004 அன்று தெரிவித்தார் என்பது செய்தி.

அப்போது ஆண்டுவாரியாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கூறி 1999-2000ஆம் ஆண்டு முதல் 2003-2004ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் எந்த அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்

காட்டியிருந்தார். அதில் அவர் ஆண்டுவாரியாகத்தான் சொல்லியிருந்தாரே தவிர, எந்தக் கட்சி ஆட்சியிலே என்று கூறிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த அதிகாரி தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த 1999-2000ஆம் ஆண்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதையும் நிருபர்களிடம் எடுத்துக் கூறியிருந்தார்.

இவ்வாறு தமிழ்நாட்டிலுள்ள மாநிலக் கணக்காயர் (தணிக்கை) நிருபர்களிடம் கூறியது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளதாகவும், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்று எப்போதும் நடந்ததில்லை என்றும், அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் எடுத்துக் கூறி அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரு முழுப் பக்க அறிக்கையினை ஒரு அதிகாரிக்குப் பதில் கூறி சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு அறிக்கையாகக் கூட அல்ல, அரசின் சார்பாக விளம்பரமாகவே முழுப் பக்கத்திற்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள ஏடுகளுக்கு மட்டும் விளம்பரக் கட்டணமாக இந்த அரசு அப்போது செலவிட்ட தொகை 52 இலட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய். வேடிக்கை இத்துடன் முடிந்து விடவில்லை! இன்னும் பாருங்கள்!

அந்த ஒரு பக்க அறிக்கை கல்கத்தாவிலிருந்து வெளியிடப்படும் ‘ஸ்டேட்ஸ்மேன்’ நாளேட்டிலும், டெல்லியிலும் சண்டிகாரிலும் வெளியாகும் ‘பயோனீர்’ ஆங்கில நாளேட்டிலும், ‘பைனான்ஷியல் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டிலும், ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழிலும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழிலும், ‘எகானமிக் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழிலும் ஒரு பக்கம் விளம்பரம் செய்வதற்காக மட்டும் தமிழக மக்களின் வரிப்பணம் 1 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 100 ரூபாய் கொட்டி அழிக்கப்பட்டது. கேட்டால், தற்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்து விட்டதைக் கொண்டாடுவதற்காக தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் செய்யப்பட்ட விளம்பரத்திற்கான தொகை 25 கோடி ரூபாய்க்கு மேல் என்று சில ஏடுகள் வெளியிட்டிருப்பதைக் காணும்போது, தணிக்கை அதிகாரிக்காக செலவிட்ட ஒரு கோடி ரூபாய் அதிகம் இல்லை

என்பார்கள்.

அந்தத் தணிக்கைத் துறை அதிகாரியை இதோடு விட்டார்களா? இல்லை. இது தொடர்பாக அன்றைய அ.தி.மு.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பி.ஜி. நாராயணன், மலைச்சாமி, எம்.பி., ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அதில், தணிக்கை அதிகாரி தேவை இல்லாமல் பேட்டியளித்ததாகவும், சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கருத்தை பத்திரிகைகளிலே வெளியிட்டதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கோரியிருந்தனர்.

இப்படியெல்லாம் ஓர் அதிகாரி மீது, அவர் தன் கடமையை ஆற்றினார் என்பதற்காக நடவடிக்கை எடுத்தவர்கள் ஆட்சியிலேதான், நிதியமைச்சர் தணிக்கை துறை அறிக்கையில் காணப்பட்ட சில புள்ளி விவரங்களை முன் வைத்து கழக அரசின் மீது சேறு வாரி வீச முற்படுகிறார். “கரைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ? காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ” என்ற புரட்சிக் கவிஞரின் வைர வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

அன்புள்ள, மு.க. 21-5-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 252–261. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்