அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3626

முரசொலி கடிதங்கள் · 3626

மாநில அரசே செயல்படாத நிலையில்...

நாள் 25.5.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3626. மாநில அரசே செயல்படாத நிலையில்...

உடன்பிறப்பே,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர், பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து 8-5-2012 தேதிய “முரசொலி”யில், உடன்பிறப்பு மடலில் நான் எழுதும்போது, “மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு இந்தப் பிரச்சினையிலே அக்கறையின்றி இருந்தாலும், மத்திய அரசும், இந்தத் துறையின் அமைச்சரும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு போராடுகின்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை; அழைத்துப்பேசி சுமுக முடிவுகாண முன்வர வேண்டுமென்றும், அதற்கு பிரதமர் அவர்கள் ஆவன செய்திட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டேன்.

பேரவை நடைபெற்றபோது, 3-5-2012 அன்று கேள்வி நேரம் முடிந்ததும், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நெய்வேலி தொழிலாளர் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை, எனவே மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

உடனே தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை அமைச்சர், திரு. சி.த. செல்லப்பாண்டியன் எழுந்து என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டப் பிரச்சினை தமிழக அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல, எனவே அதில் தலையிட முடியாது என்று பதிலளித்தார். (தினமணி 4-5-2012) இதிலே தலையிட முடியாது என்று பேரவையில் பதிலளித்த இதே அமைச்சர், 8-5-2012 அன்று மீண்டும் பேரவையில் என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர

மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையம் பேச்சு நடத்தித் தீர்வுகாண வேண்டும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தவில்லை. என்.எல்.சி., தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வுகாண மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்றார். (தினமணி 9-5-2012)

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினை என்பது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தொடர்கின்ற ஒன்றாகும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு பணிபுரிந்து ஒப்பந்தப் பிரச்சினை 1994ஆம் ஆண்டில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் முயற்சியின் காரணமாக ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொழில்கூட்டுறவு சேவை சங்கம் தொடங்கப்பட்டு (Neyveli Lignite Corporation Industrial Co-operative Service Society) அதில் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்து, அதன் மூலம் இடைத்தரகர்களை (Contractors) நீக்கி, அவர்களுக்கு கூட்டுறவு சங்கமே ஊதியம் வழங்கி வந்தது. பின்னர் நிர்வாகத்தில் பணி காலியாகும் பொழுதெல்லாம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சுமார் 4000 தொழிலாளர்கள் தற்போது நிரந்தரத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றார்கள். மீதமுள்ள சுமார் 800 பேர் கூட்டுறவு சங்கத்தில் நிரந்தரப்படுத்தப்படாமல் பணியாற்றி வருகின்றார்கள்.

1994க்குப்பின், தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்தவர்களை கூட்டுறவு சங்கத்திலே உறுப்பினர்களாக நிர்வாகம் தவிர்த்துவிட்டதால், மீண்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் தொடர ஆரம்பித்தது. இதனால் 2008ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியின் போது போராட்டம் நடைபெற்றது. அப்போதும் 13 ஆயிரம் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஆட்சியிலே இருந்த தி.மு.கழகம் மாநில அரசுக்கு இதிலே அக்கறை இல்லை என்று சொல்லாமல், முதலமைச்சராக இருந்த நானே இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு 16-6-2008 அன்று தொழிற்சங்கமும், நிர்வாகமும், டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 5000 பேர்களை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்வது; ஒப்பந்தத்

தொழிலாளர்கள் பெற்றுவந்த ஊதியத்தைவிட, மாதம் ரூ. 750/- உயர்வு தரவும் இசைவு தந்து ஒப்பந்தம் ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

அதன் பின்னர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பதிவு செய்வதில் நிர்வாகம் கால தாமதம் செய்ததால், 2010ஆம் ஆண்டு மீண்டும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்பொழுதும் தமிழக முதலமைச்சராக இருந்த நான்

15-10-2010 அன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அதன் பின்னர் நிர்வாகத்தை அழைத்துப்பேசி, மாதம் 1,040 ரூபாய் உயர்வாக ஏற்றுக்கொள்ளச் செய்தேன். இதனை தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர்கள் மட்டும் ஏற்றுக்கொண்டார்கள். மற்றத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனே நான் அழைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும், 26-10-2010 அன்று தலைமைச் செயலகத்திற்கே அழைத்துப்பேசினேன். அந்தக் கூட்டத்தில் தொ.மு.ச. சார்பில் செ.குப்புசாமி, மு.சண்முகம் மற்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ., ஒப்பந்தத் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் அன்பழகன், ஏ.ஐ.டி.யூ.சி. சேகர், குப்புசாமி, வெங்கடேசன், சுகுமாறன், குப்புசாமி, சக்கரபாணி மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அரசின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளராக இருந்த மாலதி, ஐ.ஏ.எஸ்., ஆகியோரும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, நிர்வாகத்தையும் சம்மதிக்கவைத்து, உயர்வு ரூ. 1,040 என்பதை ரூ. 1,560 என்ற அளவிற்கு உயர்த்தியும், மேலும் பல சலுகைகளையும் வழங்கச் செய்தேன். இந்த ஒப்பந்தத்தில் அப்போது தொழிலாளர் முன்னேற்றச் சங்கப்பேரவை, பாட்டாளி தொழிற் சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.டி.பி., ஐ.என்.டி.யூ.சி., ஆகிய சங்கங்கள் கையொப்பமிட்டனர். நான் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திருப்தியடைந்து பணிக்குத் திரும்பினார்கள். எனக்கு நன்றி தெரிவித்தார்கள். இது 2010ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நடைபெற்றது. ஆனால் இப்போது என்ன நிலைமை?

தற்போது நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை கூட்டுறவு சேவை சங்கத்தில் பதிவு செய்வதை நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி கால தாமதம் செய்து வருகிறது. அதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கிடையே 9-5-2012 அன்று கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், நண்பர் கே.எஸ். அழகிரி மத்திய நிலக்கரித்துறை அமைச்சரைச் சந்தித்து, தொழிற்சங்க நிர்வாகிகளிடம், நிறுவனத் தலைவரே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தி.மு.கழக ஆட்சியில், நெய்வேலி தொழிலாளர்களின் பிரச்சினைக்காக நானே தலையிட்டு முயற்சி எடுத்தவாறு, தற்போது எடுக்கா விட்டாலும் 10-5-2012 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை என்.எல்.சி. பயிற்சி வளாகத்திலே நடந்தது. நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மக்களவையில் தி.மு.கழக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசியிருக்கிறார். என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 30 நாட்களைத் தாண்டிவிட்டது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் குறித்து, என்.எல்.சி. நிர்வாகமும், மத்திய அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்தப் போராட்டத்தில் மின் உற்பத்தி 2,490 மெகாவாட்டாக இருந்தது, தற்போது 1,690 மெகாவாட்டாக குறைந்துள்ளது என்றும் டி.ஆர். பாலு மக்களவையிலே பேசியிருக்கிறார். மாநிலங்களவையிலும் இதே பிரச்சினைக்காக தம்பி திருச்சி என்.சிவா வலியுறுத்தியிருக்கிறார். அவர் பேசியவுடன் அந்தப் பிரச்சினையில் தாங்களும் இணைந்து கொள்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தபன்குமார் சென், கழக உறுப்பினர்கள் வசந்திஸ்டான்லி, அ.அ. ஜின்னா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நெய்வேலியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து கடந்த 15ஆம் தேதியிலிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத் தலைமை ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தபோதிலும், உடன்பாடு ஏற்படவில்லை. தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க என்.எல்.சி. நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அப்போது கூறப்பட்டுள்ளது.

தி.மு. கழக ஆட்சியில் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியபோது எத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இப்போது என்ன நிலைமை? தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா? ஆனால் அவர்கள் மத்தியில் ஒரு அரசு இருப்பதாகவே தெரியவில்லை என்று குறை கூறுகிறார்கள். அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ பேச்சுவார்த்தை நாள் கணக்கில் நடக்கிறதே தவிர, முதல் அமைச்சரோ, அமைச்சரோ இதிலே ஏன் தலையிடவில்லை? தொழிற்சங்கத் தலைவர்களை முதல் அமைச்சரோ, அமைச்சரோ அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா? ஏன் பேசவில்லை? எங்கே பத்திரிகைகள் இதைப் பற்றி எழுதி விடுவார்களோ என்பதற்காக அவர்களின் வாயை அடைக்க முழுப்பக்க விளம்பரங்கள் மக்கள் கொடுத்த வரிப் பணத்தில் அன்றாடம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

நான் தொழிலாளர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வேலை நிறுத்தம் செய்வதையெண்ணி கவலைப்பட்டு துடி துடித்துப் போகின்ற அரசு அல்ல தற்போது நடப்பது! உங்கள் வேலை நிறுத்தம் தொடருமேயானால், உங்கள் குடும்பத்தினர்தான் பாதிக்கப்படுவார்கள். வேலை நிறுத்தம் தொடருமேயானால் மின் உற்பத்தியும் மேலும் பாதிக்கப்படக்கூடும். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, விரைவில் உங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பணியிலே தொடருவதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாநிலத்தில் அரசே இல்லாத நிலையில் மத்தியிலே ஆளுகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாவது; இந்தப் பிரச்சினையிலே மேலும் கால தாமதம் செய்யாமல், அலட்சியம்

இல்லாமல், உடனடியாக நிர்வாகத்தினரை அழைத்துப்பேசி தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் சுமுக முடிவுகாண முன்வர வேண்டுமென்று அந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒரு கட்சியின் தலைவன் என்ற முறையிலே மீண்டும் ஒருமுறை வற்புறுத்தி வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அன்புள்ள, மு.க. 25-5-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 267–272. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்