முரசொலி கடிதங்கள் · 3628
அலைகடலென ஆர்த்தெழுவோம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3628. அலைகடலென ஆர்த்தெழுவோம்!
உடன்பிறப்பே,
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 7.50 உயர்த்தியிருக்கிறது. மாநில அரசு பால் விலையை உயர்த்தியிருக்கிறது; பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது; மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை 30-5-2012 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதிலே நீயும், உன் போன்ற உடன்பிறப்புகளும் கலந்து கொண்டு நமது உணர்வினை மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கவிருக்கிறோம். அதற்கான ஆயத்தப் பணிகளில் நீங்கள் இந்நேரம் ஈடுபட்டிருப்பீர்கள் என்பதை நான் நன்கறிவேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வுக்காக மட்டும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில்; நாம் மாத்திரம் தான் மத்திய, மாநில அரசுகளின் விலை உயர்வு நடவடிக்கைகளைக் கண்டித்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசாவது பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன, அதே நேரத்தில் இந்த முடிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது, மக்கள் உணர்வுக்கு மாறாக அரசால் செயல்பட முடியாது, சர்வதேச நிலைமைக்கேற்ப எடுக்கப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலை உயர்வு விரும்பத்தக்கதோ அல்லது மகிழ்ச்சியளிக்கும் முடிவோ அல்ல; சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு நியாயமான ஒன்றல்ல, அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது, எனவே தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை
உயர்வை வாபஸ் பெறுவது பற்றி மத்திய அரசு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக சில நாட்கள் பொறுமையுடன் காத்திருந்து நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது என்று நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசோ பால் விலை உயர்வையோ, பேருந்துக் கட்டண உயர்வையோ, மின் கட்டண உயர்வையோ திரும்பப்பெறும் எண்ணத்திலேயே இல்லை. ஏனென்றால் இவர்கள் மக்களுக்குப் பயந்தவர்கள் அல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் பயந்தவர்கள் அல்ல, ஏன் தோழமைக் கட்சிகளையே தூக்கி எறியக் கூடிய அளவுக்கு பெரும்பான்மையாக பேரவையிலே இருக்கிறார்கள்.
பெட்ரோல் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவுதான் காரணம் என்றும், உலகச் சந்தையில் ஏறிவரும் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசாங்கம் தரும் மானியம் உயர்ந்து வருகிறது என்றும், அதனைத் தொடர இயலா தென்றும், எனவேதான் பெட்ரோல் விலை உயர்வு என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டாலும், பெட்ரோலுக்கு அரசு தரும் மானியத்தை விட வரிகள் மூலம் மிக அதிகமாக மத்திய, மாநில அரசுகள் வருவாயைப் பெறுகின்றன. உதாரணமாக 2010-2011ஆம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரோலுக்காக மானியமாக தந்த தொகை நாற்பதாயிரம் கோடி ரூபாய். அதே நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் வரிகள் மூலமாக அரசு பெற்ற வருவாய் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது அரசு பெற்ற நிகர வருமானம் 96 ஆயிரம் கோடி ரூபாய். “பெட்ரோல் விலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகள் மட்டும் 46 சதவிகிதம்; அதாவது மத்திய அரசுக்கு எக்சைஸ் வரி 25 சதவிகிதம்; இறக்குமதி வரி 4 சதவிகிதம்; மாநிலங்களின் வாட் வரி 17 சதவிகிதம் என மொத்தம் 46 சதவிகிதம் வரியாக மத்திய, மாநில அரசுகளால் பெட்ரோல் விலையில் பெறப்படுகின்றன” என்று “தீக்கதிர்” இதழ் கூறுகிறது. தமிழகத்தில் மாநில அரசு பெட்ரோல் மீது வரியாக 27 சதவிகிதம் பெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே தாங்கள் பெறுகின்ற இந்த வரி விகிதத்திலிருந்து கணிசமாகக் குறைத்துக் கொண்டாலே, பெட்ரோல் விலை உயர்வு பொதுமக்களைப் பாதிக்காத அளவிற்குச் செய்ய முடியும். எனவே மத்திய, மாநில அரசுகள், அவர்களும் நம்மோடு சேர்ந்து; வருத்தப்படுவது போலக் காட்டிக் கொள்ளாமல்; தாங்களாக
முன் வந்து, தாங்கள் வசூலிக்கும் வரிகளை பெருமளவிற்குக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நம்முடைய மாநிலத்தில் என்ன நிலை?
ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்ததும் வாராதுமாக வரவு - செலவு திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியை சுமத்திவிட்டு; அத்துடன்- பஸ் கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - மின் கட்டண உயர்வு என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார். மக்களை பழிவாங்கும் காரியத்தை நடத்திக் கொண்டே, அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார். தி.மு.கழகம் ஆட்சியில் இருந்த போது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லையா? உயர்த்திக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் தமிழக அரசு தாங்கிக் கொண்டு பொதுமக்கள் பாதித்து விடக்கூடாது என்பதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக்கொள்ள வில்லையா? ஆவின் கட்டணத்தை அதிகமாக உயராமல் பார்த்துக்கொள்ளவில்லையா?
பேருந்துக் கட்டணங்களைப் பொறுத்த வரையில், சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, கிலோ மீட்டர் ஒன்றுக்கு 42 பைசா என்று ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார்.
விரைவு மற்றும் செமி-டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை ஜெயலலிதா கிலோ மீட்டர் ஒன்றுக்கு 56 பைசா வீதம் வசூலிக்க ஆணையிட்டிருக்கிறார்.
சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு 38 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, 60 பைசா என்று உயர்த்தியிருக்கிறார்.
நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக இதர பகுதிகளில் குறைந்தபட்சக் கட்டணம் இரண்டு ரூபாய் என்றிருந்ததை, மூன்று ரூபாய் என்று உயர்த்தியிருக்கிறார்.
நகரப் பேருந்துகளில் அதிகபட்சக் கட்டணமாக 7 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அதை 12 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயித்திருக்கிறார்.
சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்த வரையில், குறைந்தபட்சக் கட்டணம் 2 ரூபாய் என்பதை 3 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 12 ரூபாய் என்பதை 14 ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறார்.
முன்பெல்லாம் ரெயில் கட்டணம் அதிகமாகவும், பேருந்துக் கட்டணம் குறைவாகவும் இருக்கும். அதற்காகவே வசதிமிக்கவர்கள் ரெயிலிலும், வசதிக் குறைவானவர்கள் பேருந்துகளிலும் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது பேருந்துக் கட்டணங்கள், ரெயில் கட்டணத்தைவிட எந்த அளவிற்கு கூடுதலாக்கப்பட்டுள்ளன என்றால் - திருச்சிக்கு ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய கட்டணம் 80 ரூபாய்தான். ஆனால் தற்போது ஜெயலலிதாவின் பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் 180 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மதுரைக்கு ரெயில் கட்டணம் 108 ரூபாய். ஜெயலலிதாவின் பேருந்துக் கட்டணம் 255 ரூபாய். தஞ்சைக்கு ரெயில் கட்டணம் 84 ரூபாய். ஜெயலலிதாவின் பேருந்துக் கட்டணம் 210 ரூபாய். நெல்லைக்கு ரெயில் கட்டணம் 132 ரூபாய். ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை காரணமாக நடைபெறும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால், அதே நெல்லைக்கு 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
2006ஆம் ஆண்டு முதல் 2011 மே திங்கள் வரை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்துக் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை என்பதையும், ஜெயலலிதா ஏற்கனவே 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு பதவியிலே இருந்தபோது; பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு; தற்போது மீண்டும் அவர் பொறுப்புக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வாடச் செய்திருக்கிறார்.
14-2-2011 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்
“பால் தட்டுப்பாட்டினை உருவாக்கி, தட்டுப்பாடுகளை உருவாக்கும் தறிகெட்ட அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. பால் உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை
“முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு வழிப்பறி கொள்ளையர்களைப்போல நடந்து கொள்கிறது”
என்றெல்லாம் கூறியதற்கு மாறாக, பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சையாகவே கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்தியிருக்கிறார்.
பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கொடுத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது என்று அறிக்கையிலே ஒப்புக்கொண்டுள்ள ஜெயலலிதா, பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். அதாவது கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் அந்தப் பாலை பொதுமக்களுக்கு விற்கும்போது எந்த அளவிற்கு விற்பனை விலையை உயர்த்தியிருக்கிறார் என்பதையும் மனதிலே கொள்ள வேண்டும்.
அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து - 24 ரூபாயாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறார். அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவிற்கு ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். மிகவும் அடித்தட்டிலே உள்ள ஏழையெளிய மக்கள் நாள் ஒன்றுக்கு காலையில் ஒரு லிட்டர், மாலையில் ஒரு லிட்டர் பால் வாங்கிக் கொண்டிருப்பார்களானால், இனி அவர்கள் மாதம் ஒன்றுக்கு தங்கள் குடும்ப செலவில் 375 ரூபாய்; பால் ஒன்றுக்காக மட்டுமே அதிகமாக செலவிட வேண்டிய நிலைக்கு - பாவம், அ.தி.மு.க. விற்கு வாக்களித்த ஒரே குற்றத்தின் காரணமாக தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 1-9-2009 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 13.45லிருந்து ரூ. 15.64 ஆகவும், எருமைப் பால் விலையை 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் - அதன் பின் 5-1-2011இல் பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 15.64 லிருந்து ரூ.16.64 ஆகவும், எருமைப் பால் விலையை 23
ரூபாயிலிருந்து ரூ. 25.20 ஆகவும் - 16-2-2011 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 16.64லிருந்து 18 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை ரூ. 25.20லிருந்து 26 ரூபாயாகவும் பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி அதிகப் படுத்திக் கொடுத்தபோதிலும், அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 17.75 என்பதிலிருந்து ஒரு பைசாகூட உயர்த்தவில்லை என்பதும், விலைவாசியை நான் ஆட்சிக்கு வந்தால் குறைப்பேன் என்றும் வானத்தை வில்லாக வளைப்பேன் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாதான் ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு பாலின் விற்பனை விலையை ரூ. 6.25 உயர்த்தியிருக்கிறார்.
2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக வந்தபோது, 1-12-2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார்.
தி.மு.கழக ஆட்சிக் காலத்தில்; தமிழ்நாடு மின்சார வாரியம், 18-1-2010 அன்று மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதனை பல்வேறு கட்டங்களில் பரிசீலித்து 31-7-2010 அன்று மின் கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டிடங்கள் மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.
இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோருக்குக்கூட யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டது. தொழில் மின் நுகர்வோரில், உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும் மற்றும் தாழ்வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இன்னும் சற்று விளக்கமாக கூற வேண்டுமேயானால், தமிழகத்தில் அப்போது வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் மொத்தம் 149.86 இலட்சம் பேரில் 134.67 இலட்சம் பேருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் கழக ஆட்சியில் செய்யப்படவில்லை. 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும்
3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு கழக ஆட்சியிலே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கே அப்போது பா.ம.க. நிறுவனரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வேறு சில கட்சியினரும் கண்டனம் தெரிவித்தார்கள். குறிப்பாக இன்றைய முதலமைச்சர், ஜெயலலிதா அவர்கள் 2-8-2010 அன்று விடுத்த அறிக்கையில்,
“விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால், விலைவாசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறார் முதலவர் கருணாநிதி. இரண்டு மாதத்துக்கு 600 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் மாதம் 300 யூனிட் மின்சார பயன்பாடு என்பது சர்வ சாதாரணம். மேலும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் கூடுதல் மின்சார கட்டணத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகையும் உயரலாம். தொழிற்சாலைகள், சிறு, குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லா தரப்புக்கும் மின் கட்டண உயர்வால் கடும் பாதிப்பு ஏற்படும். மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் மேலும் உயரக்கூடும். சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் சுமையை உடனடியாக நீக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்று என்னை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட ஜெயலலிதா, இப்போது அவரே அந்த அறிக்கையினை நினைவுபடுத்திக் கொண்டு ஆவன செய்ய வேண்டும்.
ஜெயலலிதாவின் இந்தப் பொற்கால (?) ஆட்சியிலே, ஆட்சிக்கு வந்த ஓராண்டில் மின் கட்டணத்தை எந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறார்கள் என்பதை இந்த மாதம் நீங்கள் ஒவ்வொருவரும் மின் கட்டணம் செலுத்தும் போது அனுபவ பூர்வமாக நேரிலேயே உணர்ந்து கொள்ளலாம்.
மின் கட்டணத்தை உயர்த்தினால் - பேருந்துக் கட்டணங்களை ஏற்றினால் - பால் விலையை உயர்த்தினால் நம்முடைய மக்கள் தானே சிரமப்படுவார்கள் என்றெண்ணி, இவைகளை உயர்த்தாமல் ஐந்தாண்டுகள் ஆட்சிநடத்திய தி.மு.க. ஆட்சி எங்கே?
தற்போது இந்தக் கட்டணங்களையெல்லாம் உயர்த்திவிட்டு, அதற்கெல்லாம் காரணம் கருணாநிதிதான் என்றும், மத்திய அரசுதான் என்றும் பழியைத் தூக்கி மற்றவர்கள் மேல் போடும் ஜெயலலிதா ஆட்சி எங்கே?
இவற்றையெல்லாம் கண்டித்துத்தான் நாளை நாம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம். அலை கடலென ஆர்த்தெழுவோம்! அங்கே உன்னைச் சந்திக்கின்றேன்!
அன்புள்ள, மு.க. 29-5-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 279–286. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.