முரசொலி கடிதங்கள் · 3629
தி.மு.க.வின் மாநில சுயாட்சிக்கு ஜெ. பாடிய பின்பாட்டு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3629. தி.மு.க.வின் மாநில சுயாட்சிக்கு ஜெ. பாடிய பின்பாட்டு!
உடன்பிறப்பே,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்று திட்டக்குழுக் கூட்டத்தில் மிக வேகமாக உரையாற்றிவிட்டு - மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு - அந்த உரையை ஏடுகளுக்கெல்லாம் வழங்கிவிட்டு - சென்னைக்குத் திரும்பி விட்டார்! டெல்லி செய்தியாளர் ஒருவர் இந்தப் பயணம் பற்றி வெளியிட்ட செய்தியில், “தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக டெல்லி வந்திருந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய திட்டக் கமிஷன் மற்றும் மத்திய அரசு மீது, மிகக் கூரிய விமர்சனத்தை சுமத்தினார். தமிழக அரசு சிறப்பு நிதி, கூடுதல் நிதி என, நிறைய கேட்கும், எதையும் தர மத்திய அரசு மறுத்துவிட்டது. தமிழகத்துக்கான திட்ட ஒதுக்கீட்டில் 3,000 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசின் பணம்; மீதியெல்லாம் தமிழகத்தின் சொந்தப் பணம். சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்து, எங்களது பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதற்கான அனுமதியைப் பெற்றுச் செல்லும் நிலைமை உள்ளது என்று கடுமையாகத் தாக்கிப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது” என்று விளக்கியிருக்கிறார்.
ஜெயலலிதா டெல்லி செல்லும் போதெல்லாம் மத்திய அரசை குறை கூறுவதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தபோதிலும், திட்டக் குழு பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்கள்தான்! கழகம் ஆட்சியிலே இருந்த போதெல்லாம் திட்டக் குழுவிலே நாம் தெரிவித்த கருத்துக்கள்தான்! ஆதாரத்தோடு கூற வேண்டுமேயானால் 36 ஆண்டுகளுக்கு முன்பு தம்பி முரசொலி மாறன் எழுதிய “மாநில சுயாட்சி” நூலில் 146வது அத்தியாயத்தின் தலைப்பே “திட்டக்குழு” என்பதுதான். அந்த அத்தியாயத்தில் சில பகுதிகள் வருமாறு :-
• மத்திய - மாநில உறவிலே ஒரு பெரும்பரபரப்பையும், சச்சரவையும் ஏற்படுத்தியிருப்பது திட்டக்குழு ஆகும்.
• தனது இராட்சச நிதி பலத்தை வைத்துக் கொண்டு மத்திய அரசு மாநில அரசை அடக்கி ஆள்கிறது.
• தேசிய வளர்ச்சிக்குழுவை எப்போது கூட்டலாம் என்பது பற்றிக் கூட முன் கூட்டியே எங்களைக் கலப்பதில்லை; நினைத்த போதெல்லாம் கூட்டுகிறார்கள் என்று ஒருமுறை தமிழக முதல்வர் கலைஞர் கூடக் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
• திட்டக்குழு செயல்படும் விதம் பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு எதிராக இருக்கிறது.
• கூட்டாட்சியில் அனைத்து மாநிலங்களும் ஏற்றத் தாழ்வின்றிச் சமமாக நடத்தப்பட வேண்டும்; ஆனால் திட்டக்குழுவோ இதுவரை நியாயமாக நடந்து கொண்டதாக பெயர் வாங்கவேயில்லை.
• வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறப்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களும், பின்தங்கியிருப்பதாகக் கூறப்படும் பீகார் போன்ற மாநிலங்களும் பொருளாதார சூட்சம் காண வேண்டுமானால் - அதற்கு
ஒரே வழி தங்கள் தலைவிதியைத் தாங்களே - மத்திய அரசின் கட்டுப்பாடு அறவே நீங்கி - தீர்மானித்துக் கொள்ளும் மாநில சுயாட்சிதான்!
இந்தக் கருத்துக்களைத்தான் “மாநில சுயாட்சி” என்ற தலைப்பின் கீழ் 1974 ஆம் ஆண்டு முதல் தி.மு.கழகம் எதிரொலித்து வருகிறது.
14-3-1974 அன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும்போது மத்திய அரசின் உதவி பற்றி சற்று விரிவாகவே பேசியிருக்கிறேன். அதில் ஒரு பகுதி வருமாறு:-
“மத்திய அரசு அல்லது திட்டக் குழு அல்லது நிதிக்குழு ஆகியவை நம்முடைய மாநிலத்திற்கு அநீதி வழங்குகின்ற சூழ்நிலை தென்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவது அரசுப் பொறுப்பில் இருக்கும் எங்களுடைய கடமையாக இருக்
கிறதே அல்லாமல் வேறல்ல. நிதி ஆணைக் குழுவில் என்ன செய்திருக்கிறார்கள்? ஒரு புதிய தலைப்பு. “நிர்வாகத்தைச் சீரமைத்து மேம்படுத்துவதற்கான மானியம்” (Upgradation Grants) என்பதே அந்த மானியம். அந்தத் தலைப்பில் சில மாநிலங்களுக்கு உதவித் தொகை சிறப்புத்தொகை அளிக்கப்படுகிறது. அதைப்பெற முடியாத மாநிலங்கள் எவை யெவை? தமிழ்நாடு, குஜராத், கேரளம், மகாராஷ்டியம் ஆகிய இந்த நான்கு மாநிலங்களும் அந்த மானியத் தொகையைப் பெற முடியவில்லை. இந்த மாநிலங்களுக்கு கல்வி, மக்கள் நல்வாழ்வுபோன்ற துறைகளில் அதிகச் செலவு செய்திருக்கிறது என்ற ஒரு காரணம் காட்டி இந்த மானியம் தரமறுக்கப்பட்டிருக்கிறது.”
10-3-1975 அன்று பேரவையில் நான் பேசும் போது, “மாநில ஆண்டுத் திட்டத்தை மத்திய திட்டக் குழுவோடு கலந்து பேசி முடிவு செய்கிறோம். மத்தியத் திட்டக்குழு மாநில திட்டத்தின் அளவு எந்த அளவில் இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசிடமிருந்து மொத்தமாகக் கிடைக்கும் உதவியின் அளவையும் குறிப்பிடுகிறது. உங்களுடைய வருவாய் (Resources) என்ன, உங்களுடைய வருவாயை எப்படிப் பெருக்குவீர்கள், வரிகளை அதிகமாக்குவதாலோ அல்லது பல்வேறு வருவாய் இனங்களைப் பெருக்குவதாலோ உங்களுடைய வருவாய் எவ்வளவு இருக்கும் என்றெல்லாம் கேட்டு திட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறார்கள்.
நாம் 160 கோடி கூட போட்டுக் கொள்ளலாம். நாம் 140 கோடி என்ற அளவுக்கும் இணங்கலாம். ஆனால் அதிலே நாம் 143 கோடி என்று இந்த ஆண்டு இணங்கியிருக்கிறோம் என்றால், அதில் மத்திய அரசு மானியமாகவும், கடனாகவும் வழங்குகிற தொகைதான் மத்திய உதவி. 143 கோடியில் மத்திய அரசு வழங்குகிற மானியம் - கடன் உள்பட மொத்தத் தொகை 41 கோடியே 15 லட்சமாகும்” என்று நான் ஏற்கனவே திட்டக்குழு, நிதிக்குழு ஆகியவற்றின் அணுகுமுறை பற்றியும், மத்திய அரசு வழங்கும் மானியம் - கடன் பற்றியும் பேசியிருக்கிறேன்.
முதலமைச்சர் ஜெயலலிதா திட்டக்குழுவில் பேசும்போது, 11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஏற்கனவே 85,344 கோடிதான் ஒதுக்கப்பட்டதென்றும் தற்போது 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இரண்டு லட்சம் கோடியை எய்துவதற்கு வரையறுக்கப்பட்டுள்ளது
என்றும் கூறி, அது 11வது ஐந்தாண்டுத் திட்டத்தைக் காட்டிலும் இரு மடங்காகும் என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார்.
தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது, பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதி ஒதுக்கீடான ரூபாய் 40 ஆயிரம் கோடியைவிட, இரண்டு மடங்குக்கும் அதிகமாகத்தான் 11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு 85 ஆயிரத்து 344 கோடி ரூபாயாக நிதி ஒதுக்கீடு செய்ய உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைத்தான் அடுத்து வருகின்ற ஐந்தாண்டுகளில் மாநிலங்கள் செலவழிக்க பகிர்ந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு அதிகம் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் பொருள் இல்லை. அத்துடன் இந்த 2012-13ஆம் ஆண்டிற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட மத்திய திட்டக்குழு ஒப்புதல் அளிக்கிறது என்றால், அது ஏதோ மத்திய அரசோ, திட்டக்குழுவோ மாநிலங்களுக்கு நேரடியாகத் தருகின்ற தொகை என்று அர்த்தம் அல்ல. மாநிலங்கள் அந்த அளவிற்கு அந்த ஆண்டில் செலவழிக்க மத்தியத் திட்டக்குழு ஒப்புதல் அளிக்கிறது அவ்வளவுதான்! இதை நான் ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்தில் விளக்கியிருக்கிறேன்.
ஐந்தாண்டுகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்று திட்டக் குழு நிர்ணயிக்கும்போதுகூட, உதாரணமாக 11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்காக கழக ஆட்சிக் காலத்தில் 85 ஆயிரத்து 344 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டபோது, மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரத்திலிருந்து திரட்டப்படும் நிதியளவு ரூ. 17,498.78 கோடி என்றும், நடுவண் அரசின் நிதி உதவி 15,873.19 கோடி ரூபாய் என்றும், மாநிலம் எழுப்பும் கடன் வழியாக பெறப்படும் நிதி ரூ. 55,708.50 கோடி என்றும், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்மறை பங்களிப்பு ரூ. 5,336.47 கோடி என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு ரூ. 1,600 கோடி என்றும் பல இனங்களின் அடிப்படையிலேதான் அமைந்தது. அது போலவே 12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்காக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான ஒதுக்கீடும் பல இனங்களின் அடிப்படையிலேதான் அமையும். எனவே தமிழ்நாட்டிற்கு திட்ட நிதி ஒதுக்கீடாக மத்திய திட்டக்குழு நிர்ணயித்துள்ள 28 ஆயிரம் கோடி ரூபாயில் வெறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசின் ஒதுக்கீடு, எஞ்சிய
25 ஆயிரம் கோடி ரூபாயும் தமிழக அரசின் நிதி என்றெல்லாம் வருத்தப்படுவதோ, குற்றம் சொல்லுவதோ சரியல்ல. ஒவ்வொரு மாநில திட்ட நிதி ஒதுக்கீடு முழுவதையும் மத்திய அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால் அது எப்படி இயலும்? எங்கள் பணத்தைச் செலவிட பாடம் நடத்துகிறது திட்டக் கமிஷன் என்றெல்லாம் முதலமைச்சராக இருப்பவர் அங்கலாய்த்துக் கொள்வது அவ்வளவு நாகரிகமும் அல்ல. ஜெயலலிதாவின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு. மான்டேக் சிங் அலுவாலியா அவர்கள், “திட்ட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைகள் மிக முக்கியம். ஏனென்றால் மாநிலங்களின் திட்டங்களுக்கு மத்திய அரசும் நிதி தருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் பணத்தை ஒதுக்குவதற்காக மட்டும் நடத்தப்படவில்லை. பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்துவதற்கும் பயன்படுகிறது. திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படவேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநிலங்கள் யோசனை கூற இந்தக் கூட்டம் உதவுகிறது. இந்த ஆலோசனை வளர்ச்சிக்கு உதவுகிறது” என்று சொல்லியிருக்கிறார்.
இதுபற்றி நான் 7-3-1973 அன்று நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசும்போது, “திட்டக்குழு மாநிலங்களுடைய திட்டச் செலவுக்காக ஒதுக்குகின்ற தொகையில் உதவியாகத் தருவது, கடன் உதவியாகத் தருவது 70 சதவீதம், மானியமாகத் தருவது 30 சதவீதம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலே நான் சொல்வது இந்த உதவி மானியத்தைப் பொறுத்த வரையில் நிதி ஆணைக் குழுவின் பொதுவான பரிந்துரைப்படி, திட்டக்குழு மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டுமென்பதாகும்” என்று குறிப்பிட்டேன். அதற்குப் பிறகு வந்த நிதி ஆணைக் குழுவின் பரிந்துரைகள் மாறியிருக்கின்றன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு அதிகம் - தி.மு.கழக ஆட்சியில் பெற்ற திட்ட ஒதுக்கீட்டுத் தொகையைவிட தற்போது அதிகத் தொகையை திட்டக் குழு ஒதுக்கியுள்ளது என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் எந்தவிதமான பொருத்தமும் இல்லை. ஏனென்றால் திட்டக்குழு ஒவ்வொரு ஆண்டும் திட்ட ஒதுக்கீட்டிற்கான ஒப்புதலைத் தரும்போது, கடந்த ஆண்டு திட்டக் குழு எவ்வளவு தொகை ஒதுக்கீட்டிற்கு
ஒப்புதல் தந்ததோ, அதைவிட அதிகமான தொகையைத்தான் அடுத்த ஆண்டு ஒதுக்கீடாக அறிவிக்கும்.
2006-2007ஆம் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு ரூபாய் 12,500 கோடி. 2007-2008ஆம் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு ரூபாய் 14 ஆயிரம் கோடி. 2008-2009ஆம் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு மதிப்பீடு ரூபாய் 16 ஆயிரம் கோடி. 2009-2010ஆம் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு மதிப்பீடு ரூபாய் 17 ஆயிரத்து 500 கோடியாகும். 2010-2011ஆம் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு 20 ஆயிரத்து 68 கோடி ரூபாய் - அதாவது 2006ஆம் ஆண்டைவிட 2007ஆம் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு 1500 கோடி ரூபாய் அதிகம். 2007ஆம் ஆண்டைவிட 2008ஆம் ஆண்டு 2000 கோடி ரூபாய் அதிகம். 2008ஆம் ஆண்டைவிட 2009ஆம் ஆண்டு 1500 கோடி ரூபாய் அதிகம். 2009ஆம் ஆண்டைவிட 2010ஆம் ஆண்டு 2,500 கோடி ரூபாய் அதிகம். எனவே திட்ட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டின் திட்டச் செலவுத்திறன் அடிப்படையில் படிப்படியாக உயர்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றது. தி.மு. கழக ஆட்சியில் திட்ட ஒதுக்கீடு உயரவே இல்லை; அம்மையார் வந்துதான் அரும்பாடு பட்டு இதைச் சாதித்திருக்கிறார் என்பதைப் போல சில ஏடுகள் எழுதியிருப்பதில் நியாயம் எதுவும் இல்லை.
2005-2006இல் அ.தி.மு.க. அரசு தமிழகத்திலே இருந்தபோது அந்த ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடு 9,100 கோடி ரூபாய் என்பது அதற்கு முந்தைய ஆண்டான 2004-2005ஆம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடான 8000 கோடி ரூபாயைவிட 1100 கோடி ரூபாய், அதாவது 13.8 சதவிகிதம் கூடுதலாகும். ஆனால் 2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு 6-6-2006 அன்று முதலமைச்சராக இருந்த நான், டெல்லி சென்று அப்போதும் மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்த மான்டேக்சிங் அலுவாலியா அவர்களோடு விவாதித்து தமிழகத்திற்கு அந்த ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடாகப் பெற்ற தொகை 12,500 கோடி ரூபாய். அதாவது அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கு முந்தைய ஆண்டு ஒப்புதல் அளித்த 9,100 கோடி ரூபாயைவிட 3,400 கோடி ரூபாய் அதிகம். எனவே 2006 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் முதல் ஆண்டிலேயே கூடுதலாகப் பெற்ற தொகை அப்போதே 3400 கோடி ரூபாய் என்பதை மனதிலே
கொண்டால் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியினர் கூடுதலாகப் பெற்றுள்ளது 3400 கோடி ரூபாய் தான் என்பது பெரிய முன்னேற்றம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். சதவிகித அடிப்படையில் கணக்கிட்டால் கூட தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 2006-2007இல் ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியைவிட 37.16 சதவிகிதம் கூடுதலாகும். ஆனால் கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியினர்; தி.மு.க. பெற்ற ஆண்டுத் திட்ட ஒதுக்கீட்டைவிட 17.28 சதவிகித அளவிற்குத்தான் கூடுதலாகப் பெற்றுள்ளார்கள்.
3-5-2010 அன்று கழக ஆட்சியில், திட்டக் குழு விவாதம் நடைபெற்று முடிந்தவுடன், நானும், திட்டக் குழுத் துணைத் தலைவர் திரு. அலுவாலியா அவர்களும் இணைந்தே செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திரு. அலுவாலியா அவர்கள் செய்தியாளர்களிடம் “இன்றைய தினம் நாங்கள் ஒரு நல்ல சிறப்பான கூட்டத்தை நடத்தினோம். இந்தக் கூட்டத்தில் நன்றாக விரிவான விவாதத்தை நடத்தியிருக்கிறோம். திட்டக்குழு உறுப்பினர்களும் நானும் தமிழக அரசையும் குறிப்பாக முதல் அமைச்சர் அவர்களையும் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் சிறப்பான திட்டங்களுக்காக வெகுவாகப் பாராட்டினோம். சமூக நலத் திட்டங்கள், நீர் மேலாண்மை திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுவதைப் பற்றி திட்டக்குழு உறுப்பினர்கள் பாராட்டினார்கள்” என்று கழக அரசின் செயல் திறனைப் பாராட்டிச் சொன்னார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேற்றைய டெல்லிப் பயணம் பற்றி “தினமலர்” நாளேடு வர்ணிக்கும்போது, “மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்ய வரும் முதல்வர் எப்போதுமே திட்ட ஒதுக்கீடு எவ்வளவு என்பது பற்றி திட்டக் கமிஷன் அலுவலகத்தில் கமிஷனின் துணைத் தலைவர் உடனிருக்க அறிவிப்பது வழக்கம். ஆனால் நேற்று நிலைமை வேறு மாதிரி இருந்தது. முதல்வரைச் சந்திப்பதற்காக நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை முதல்வர் தவிர்த்துவிட்டார். பத்திரிகையாளர்கள் குழம்பினர். தமிழ்நாடு இல்லத்திற்கு வரும்படி நிருபர்களுக்கு அவசர அழைப்பு வரவே, அங்கு அனைவரும் விரைந்தனர். அங்கு முதல்வர்
சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். நிருபர்களைச் சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. முதல்வர் காரில் ஏறப்போகும் இடத்தில் நிருபர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். முறையான “மைக்” வசதியும் செய்யப்படவில்லை. சில பத்திரிகையாளர்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் மூண்டு பிரச்சினை உருவாகியது. பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா நிருபர்களிடம் ரத்தினச் சுருக்கமாக நிதி ஒதுக்கீடு பற்றிய கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்” என்று எழுதியிருக்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா திட்டக் குழுவில் பேசும்போது தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களை வரிசைப்படுத்தி, மத்திய அரசு அதற்கெல்லாம் நிதி உதவி செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அது பொதுவான நடைமுறை. யார் முதலமைச்சராக இருந்தாலும் அப்படித்தான் கேட்பது வழக்கம். உதாரணமாக நான் முதலமைச்சராக இருந்தபோது, 6-6-2006 அன்று திட்டக் குழுவிலே பேசும்போது, விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன் ரத்துச் செலவினைத் திட்டச் செலவாகக் கருத வேண்டுமென்றும்; சிறிய, நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள், குளங்களைச் சீரமைக்க மானியத்தை விரைவில் வழங்க வேண்டுமென்றும்; அனைத்துக் குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும்; ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாள், எனவே கல்வியை வளர்க்க, குழந்தைகளின் ஊட்டச் சத்து நலத்தினை உயர்த்த அதிக நிதி தாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டேன். மாநில அரசின் இந்தத் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசின் முழு உதவியைப் பெறுவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அதைப் பின்பற்றித்தான் இந்த ஆண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது பேச்சில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய திட்டக் குழுக் கூட்டம், அதில் மாநில முதலமைச்சரின் உரை என்பதெல்லாம் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு. மாநிலத்தின் சார்பில் “பத்து” வேண்டுமெனக் கேட்பதும், விரிவான விவாதத்திற்குப் பிறகு மத்தியத் திட்டக் குழு “ஆறுதான்” தர இயலுமென ஒப்புக்கொள்வதும் அனுபவ ரீதியாக ஆண்டாண்டு காலமாக நாம் கண்டுவரும் நடைமுறைதான். இப்பொழுதும்
அப்படித்தான் நடைபெற்றிருக்கிறது. இதிலே மத்திய அரசின் மீதும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீதும் தனக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தவும், குற்றம் சுமத்தவும் திட்டக் குழுக் கூட்டத்தை ஒரு வாய்ப்பாக ஜெயலலிதா பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதில் புதுமை காணவோ, புரட்சியை நடத்தி விட்டதாகச் சொல்லிக் கொள்ளவோ தகுதியான அடிப்படை எதுவும் இல்லை! தி.மு.க.வின் மாநில சுயாட்சிக்கு திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பின்பாட்டுப் பாடியிருக்கிறார்!
அன்புள்ள, மு.க. 7-6-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 287–295. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.