அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3630

முரசொலி கடிதங்கள் · 3630

விரிக்கிற பெருகும்; விரிஞ்சி விடுகிறேன்!

நாள் 8.6.2012சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3630. விரிக்கிற பெருகும்; விரிஞ்சி விடுகிறேன்!

உடன்பிறப்பே,

“ஈழத் தமிழர் சாவை தடுக்காமல் சமாதிக்கு பூவைக்க நினைக்கிறார் கருணாநிதி - தா.பாண்டியன் குற்றச்சாட்டு” - இது 7-6-2012 தேதிய “ஜனசக்தி” நாளிதழின் “பேனா” செய்தியாகும். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்தான் “தா” பாண்டியன் இவ்வாறு நம்மீது பழி சுமத்தியிருக்கிறார்.

புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 12ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதியில் ஏற்கனவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த முத்துக்குமரன் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி மாண்டதன் காரணமாக அந்தத் தொகுதியிலே இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக முத்துக்குமரன் போட்டியிட்ட போது, அவர் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியாக இருந்தவர். அ.தி.மு.க.வும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்னமும் தோழமையாகத்தான் உள்ளது. அந்த முறையில் - அரசியல் நாகரிகப்படி - ஜனநாயக நெறிப்படி புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அணியின் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் போட்டியிட வேண்டும். ஆனால் அ.தி.மு.க. கடந்த பொதுத்தேர்தலில் தனக்குக் கிடைத்த மிகப் பெரும்பான்மை காரணமாக தனது தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு சமமாகக்கூட மதிப்பதில்லை. அதற்கு அடையாளமாகத்தான், புதுக்கோட்டை தொகுதியிலே கடந்த முறை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்ற போதிலும், அவர்களை மரியாதைக்காகக்கூட அழைத்துக் கேட்காமல், தன்னிச்சையாகவே புதுக்கோட்டையில் அ.தி.மு.க. போட்டியிடப் போவதாக தெரிவித்து, வேட்பாளரின் பெயரையும் அறிவித்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்ததற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்

ஒரு சிறு வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்ற வேறு சில கட்சிகள், அந்தத் தொகுதியிலே கடந்த முறை வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவரைப் பொது வேட்பாளராகக் கருதி மற்ற கட்சிகள் எல்லாம் போட்டியிடாமல் ஆதரவு தெரிவிக்கலாம் என்றுகூடச் சொல்லிப் பார்த்தார்கள். அதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த அளவிற்கு “சுயமரியாதை”யை பெருந்தன்மையோடு(?) ஆளுங்கட்சிக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்ல; நேற்றைய தினம் தலைமைச் செயலகத்திற்கே சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களான தா.பாண்டியனும், நல்லகண்ணுவும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்கள் என்ற புகைப்படமும் “ஜனசக்தி”யிலே முதல் பக்கத்திலே வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் சந்தித்ததோடு, புதுக்கோட்டை தொகுதியிலே வெற்றிபெற்று, துர்மரணமடைந்த தோழர் முத்துக்குமரனின் மனைவியையும், குழந்தைகளையும் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவும் எங்கே புதுக்கோட்டை மக்கள் அ.தி.மு.க. வின் நன்றி கொன்ற செயலை எண்ணிப் பார்த்து, இடைத்தேர்தலில் அ.தி.மு.க. விற்கு வாக்களிக்காமல் போய்விடுவார்களோ என்றெண்ணி இவர்களைப் பார்க்க ஒப்புதல் அளித்து சந்தித்திருக்கிறார். அது அவர்களுடைய கட்சிப் பிரச்சினை. அந்தக் கட்சியின் தொண்டர்கள் பிரச்சினை, எப்படியோ போகட்டும். ஆனால் திருவாரூர் சென்று தா. பாண்டியன் தேவையில்லாமல் என்னைப் பற்றி “ஈழத் தமிழர் சாவைத் தடுக்காமல் சமாதிக்கு பூ வைக்க கருணாநிதி நினைப்பதாக” ஏன் பேட்டி அளிக்க வேண்டும்?

உண்மையிலேயே ஈழத் தமிழர் சாவைத் தடுக்க நாம் முயற்சிக்கவில்லையா?

2008-2009ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்று ஈழத் தமிழ் இனம் உதிரமும் உயிரும் சிந்திய அந்தக் கோர நிலைமைகளை - இலங்கையிலே ஏற்படாமல் தடுத்திட நாம் எதுவும் செய்யவில்லையா? கழக அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று அனைத்துக்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன் வரா விட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையா? அதையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவில்லையா? தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே பிரதமருக்கு அந்தத் தீர்மானம் தம்பி டி.ஆர்.பாலு மூலமாக அனுப்பப் படவில்லையா? அதனை ஆய்வு செய்த பிரதமர், அரசியல் ரீதியான தீர்வுகாண மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்திடும் என்று பாலுவிடம் உறுதி கூறவில்லையா? பிரதமர் அளித்த பேட்டியிலும்-

“இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இப் பிரச்சினைக்கு ராணுவம் மூலம் தீர்வு என்பது சரியாக அமையாது. இலங்கையின் இறையாண்மையையும், அங்கு வசிக்கும் தமிழர்களின் மனித உரிமையையும் மதிக்கும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முழு ஈடுபாட்டுடன் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்” என்று கூற வில்லையா?

18-10-2008 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நேரடியாகவே தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசவில்லையா? 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிடவில்லையா? 24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான “மனித சங்கிலி” ஒன்றினை நாம் நடத்தவில்லையா? 26-10-2008 அன்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசவில்லையா? பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நார்வே நாட்டின் முயற்சியின் பேரில் ஏற்பட்ட சண்டை நிறுத்தம் தொடருவதை உறுதி செய்ய வேண்டுமென்று

கலைஞர் வலியுறுத்தினார். போர்ப்பகுதிகளில் அவதிப்படும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் இந்திய அரசின் மூலமாக மனிதாபிமான உதவிகள் அளிக்க இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது” என்று கூறவில்லையா? 12-11-2008 அன்று இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட வில்லையா? அந்தத் தீர்மானத்தையும் ஜெயலலிதா அதே சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க பாண்டியனுக்கு மனம் வரவில்லையா? 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வில்லையா? அதன் பின்னர் பிரணாப் அவர்கள் இலங்கைக்கு நேரிலேயே சென்று ராஜபக்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லையா? 27-12-2008 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவிலே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வில்லையா?

12-1-2009 அன்று தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் என்னைச் சந்தித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலுவையும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியையும் பிரதமரிடமும், சோனியாகாந்தியிடமும் நிலைமைகளை விளக்கச் செய்யவில்லையா?

இதையெல்லாம் நாம் செய்து ஈழத் தமிழர் சாவை தடுப்பதற்கான முயற்சிகள் இல்லையா? இவ்வளவையும் செய்த நாம் ஈழத்தமிழர் சாவைத் தடுக்க நினைக்கவில்லையாம்; ஆனால் 18-1-2009 தேதிய நாளிதழ்களில் ஜெயலலிதாவின் பெயரால் வந்த ஒரு பேட்டியில், “இலங்கை வேறு நாடு, எனவே அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள

ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது இயல்பு. இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல” என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதாதான் ஈழத் தமிழர் சாவை தடுக்க நினைத்தார் என்று தா. பாண்டியன் அவரைப் போய் சந்தித்துவிட்டு, என்மீது பழி போட்டுப் பேசுவது நியாயமா?

28-3-2009 அன்று நான் இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா உதவிட வேண்டுமென்று கேட்டு பிரதமருக்கும், திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு, 31-3-2009 அன்று திருமதி சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய நீண்ட பதில் கடிதத்தில், “நம்முடைய பிரதமர் அவர்கள் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரின் சார்பாக இலங்கையில் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவரித்திருப்பதைப் பற்றி நானும் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்........ தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போர், அதன் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது. அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களைப் பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர் பார்க்கிறோம். உள்ளபடியே அதற்கான முதல் கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நமது அரசு இலங்கை அரசுடன் பல்வேறு வகையான கருத்துருக்களின் மீது தொடர்பு கொண்டு வருகிறது. குறிப்பாக போர் நிறுத்தத்தைப் பற்றியும் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர முடியும்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார்களே; அதெல்லாம் உண்மை இல்லையா?

அதன் பின்னர் 5-4-2009 அன்று என்னைச் செய்தியாளர்கள் சந்தித்தபோது, “இலங்கையில் விடுதலைப் புலிகளின் அனைத்து இடங்களையும் ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், அவர்களது ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், பிரபாகரனும்,

அவருடைய புதல்வரும் தமிழர்கள் வாழ்கிற பகுதியில் மறைந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கிறதே” என்று என்னைக் கேட்ட நேரத்தில் “போர் நிறுத்தம் வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எங்கள் குரலை மதித்து வெளிநாடுகளிலே உள்ள அரசுகள், ஐ.நா. மன்றத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மூலமாக இலங்கைக்குச் சொல்லி வருகிறார்கள். போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்சே போரை நிறுத்தவில்லை. அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று நான் கூறியது, ஈழத் தமிழர் சாவைத் தடுக்க வேண்டும் என்பதற்காக இல்லையா?

7-4-2009 அன்று பிரதமர் மன்மோகன்சிங், திருமதி சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில் “இலங்கையில் ஒட்டு மொத்த தமிழின மக்கள் கூண்டோடு அழிக்கப்படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், அங்கு போர் நிறுத்தத்தை உறுதி செய்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டேனே, தா. பாண்டியன் அதை அறிய மாட்டாரா? இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக நான் மட்டுமல்ல, இந்திய அரசு மாத்திரமல்ல, பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்றவைகள் வெளியிட்ட அறிக்கையிலேயே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும், பாதுகாப்பான பகுதி மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டுமென்றும் சொன்னார்கள். அதற்கும் மேலாக ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர், பான்-கி-மூன் தொலைபேசி மூலமாகவே இலங்கை அதிபர் ராஜபக்சேயை தொடர்பு கொண்டு இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும், மனிதாபிமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ஐக்கிய நாட்டுச்சபை உயர் அதிகாரி ஒருவரும் அப்போது ராஜபக்சேயுடன் பேசியிருக்கிறார்.

9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் “இலங்கை அரசே போரை நிறுத்து” என்று முழக்கமிட்டவாறு பிரம்மாண்டமான பேரணி ஒன்று நடைபெற்றது. இலங்கை

அதிபர் ராஜபக்சே இலங்கையில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சி எம்.பி.க்களை இந்தியாவிற்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்தது. 12-4-2009 அன்று ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் அளித்த பேட்டியில் “முதல்வர் கலைஞரின் ராஜ தந்திரமான வேண்டுகோள் தான் இலங்கைப் போர் நிறுத்தத்திற்கு காரணமாக அமைந்தது” என்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சர், நண்பர்

ப.சிதம்பரம் அவர்கள் 14-4-2009 அன்று விடுத்த அறிக்கையில் இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்ந்திட வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தும் என்றார். தமிழர் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் “உலக நாடுகளின் வற்புறுத்தல்கள் காரணமாக 48 மணி நேர போர் நிறுத்தத்தை ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் கலைஞர் தரும் இடையறாத அழுத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். இந்திய அரசும் இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

21-4-2009 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில், “இலங்கையில் போர் நிலைமை ஆபத்தானதாக உள்ளது. தமிழர்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் மிக அபாயமான நிலையை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட அனைத்து நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி இலங்கை அரசு மீது நிர்ப்பந்தம் செலுத்தியுள்ளன. இலங்கையிலுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கையில் உடனடியாகவும், நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடும்படி வலியுறுத்துகிறேன்” என்று கேட்டுக் கொண்டேன். இவைகள் எல்லாம் எதற்காக? ஈழத் தமிழர் சாவை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதற்காகத்தானே?

“நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள்” என்ற தலைப்பில் உருக்கமிகு உடன்பிறப்புக் கடிதம்

ஒன்றை 21-4-2009 அன்று நான் எழுதியதோடு, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு அறிக்கை விடுத்தேன். அந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டுமென்று கேட்டு, காங்கிரஸ், அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., திராவிடர் கழகம், பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், எம்.ஜி.ஆர். கழகம், பா.ம.க. புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதினேன். அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

நான் அனுப்பிய தந்தியின் அடிப்படையில் 22-4-2009 அன்று இரவு டெல்லியில் பிரதமர் அவர்கள் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட அவசரக் கூட்டம் ஒன்றினைக் கூட்டி, அப்பாவித் தமிழர்கள் மீதான போரை இலங்கை உடனடியாக நிறுத்தவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதனை இலங்கை அரசுக்கு நேரில் வலியுறுத்துவதற்காக பிரதமரின் சிறப்புத் தூதுவர்கள் கொண்ட உயர் மட்டக்குழு ஒன்று கொழும்பு சென்றது. அதே நாளில், இலங்கையில் பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களுக்காக 936 மெட்ரிக் டன் எடை கொண்ட 6 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் 40 ஆயிரம் சிப்பங்களில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உயர்மட்டக்குழுவினர் கொழும்பில் ராஜபக்சேயை நேரில் சந்தித்து, உடனடியாக போரை நிறுத்த ஆவன செய்ய வேண்டுமென்ற இந்தியாவின் வேண்டுகோளைத் தெரிவித்தனர். 24-4-2009 அன்றிரவு அண்ணா அறிவாலயத்திற்கு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் வந்து, என்னைச் சந்தித்து விவரங்களையெல்லாம் விளக்கினார். அதே நாளில் பிரதமர் அவர்களும் தொலைபேசியில் என்னுடன் பேசி மத்திய அரசு எடுத்த முயற்சிகளையெல்லாம் கூறினார். இவைகள் எல்லாம் ஈழத் தமிழர் சாவை தடுத்திட தி.மு. கழகமும், அதன் தலைவராகிய நானும், கழக அரசும் எடுத்த முயற்சிகள் இல்லையா? ஆனால் தா.பாண்டியன் இதையெல்லாம் மறைத்துவிட்டு சமாதிக்கு பூ

வைக்க நினைக்கிறேன் என்று பேட்டி அளித்திருப்பது சரி தானா?

புதுக்கோட்டையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சியின் தொண்டர்கள் எண்ணத்திற்கு மாறாக; தனது வேட்பாளரை நிறுத்தாமல் அ.தி.மு.க.விற்கு விட்டுக் கொடுத்ததற்கு காரணம்; மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அ.தி.மு.க. ஒப்புக் கொண்டதுதான் என்று “தினமணி”யில் எழுதப்பட்டிருந்ததே, அதற்கு தா.பாண்டியன் பதில் சொல்லட்டும்! தேவையில்லாமல் தி.மு.க. மீது தா. பாண்டியன் குறை சொல்வதை இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! விரிக்கிற பெருகும்; விரிஞ்சி விடுகிறேன்!

அன்புள்ள, மு.க. 8-6-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 296–304. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்