அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3631

முரசொலி கடிதங்கள் · 3631

ஜனநாயகம் கேலிப் பொருளாகி விடுவதா?

நாள் 9.6.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3631. ஜனநாயகம் கேலிப் பொருளாகி விடுவதா?

உடன்பிறப்பே,

மத்திய உள்துறை அமைச்சர், திரு. ப.சிதம்பரம் அவர்கள் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் 2009 ஆம் ஆண்டு போட்டியிட்டு, 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மத்திய அரசில் நிதித்துறை அமைச்சராக, தற்போது உள்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ராஜகண்ணப்பன், அந்தத் தொகுதியில் ப.சிதம்பரம் அவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று வழக்கு தொடுத்துள்ளார். ராஜ கண்ணப்பனைப் பற்றிச் சொல்ல வேண்டுமேயானால், முதலில் அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்து, பின்னர் அங்கே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், தி.மு.கழகத்தில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு தி.மு. கழகச் சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றி, அமைச்சர் பதவி இங்கே கிடைக்காத நிலையில் மீண்டும் அ.தி.மு.க.விலே சேர்ந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரம் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர் ஆவார்.

திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் உள்துறை அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள் மீது தொடுத்த தேர்தல் வழக்கில் 29 குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் அவர்கள் ராஜ.கண்ணப்பன் தாக்கல் செய்த புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்து, வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். ராஜ.கண்ணப்பன் தெரிவித்த 29 குற்றச்சாட்டுகள் உண்மைதானா? அதிலே ஆதாரம் இருக்கிறதா என்று இன்னமும் நீதி மன்றம் விசாரிக்கவில்லை. இடையில் அந்த

வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்த ப.சிதம்பரம் அவர்களின் மனுவினை விசாரித்து, ராஜகண்ணப்பன் தெரிவித்த 29 குற்றச்சாட்டுகளில், இரண்டு குற்றச்சாட்டுகளில் எவ்வித ஆதாரமும் இல்லை, அந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் தள்ளிவிடுகிறேன், மற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரணை நடத்துகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறார். நீதிபதி அவ்வாறு சொல்லியது 7-6-2012 அன்றுதான்! அவ்வாறு தீர்ப்பு சொல்லி 24 மணி நேரம் கூட ஆகவில்லை; அதற்குள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவசர அவசரமாக நேற்றைய தினமே ப. சிதம்பரம் அவர்கள் உடனடியாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும், அவர் விலகாவிட்டால் பிரதமர் அவர்கள், ப.சிதம்பரத்தை பதவியை விட்டு நீக்க வேண்டுமென்றும் அறிக்கை விடுகிறார் என்றால், எப்படிப்பட்ட ஒரு முதல் அமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்? மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்துறை அமைச்சராக இருக்கிறார். அவரை பதவியிலிருந்து விலகச் செய்ய வேண்டும் என்பதிலே இந்த அம்மாவிற்கு ஆர்வக் கோளாறா? என்ன நீதி மன்றம், ப.சிதம்பரம் குற்றவாளி என்றா தீர்ப்பளித்துவிட்டது? விசாரணையை இனி மேல்தான் நடத்த வேண்டும் என்றுதானே சொல்லியிருக்கிறது. ப. சிதம்பரம் அவர்களின் கோரிக்கையை ஏற்று, ராஜகண்ணப்பன் தெரிவித்த இரண்டு புகார்களைத் தள்ளிவிட்டு, மற்றவை பற்றி விசாரணை நடத்தவேண்டு மென்றுதானே நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதற்குள் என்ன அப்படி அவசரம்?

அதுமாத்திரமல்ல; குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் உள்ள ஒருவரை பதவியை விட்டு விலக வேண்டுமென்று சொல்கின்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைமை என்ன? நீங்கள் குற்றவாளிதான் என்று இதுவரை எத்தனை நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்? டான்சி வழக்கின் கதி என்ன? நீங்கள் வாங்கிய நிலத்தையே அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மனச்சாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று உச்சநீதி மன்றமே தீர்ப்பளிக்க வில்லையா? சொத்துக் குவிப்பு வழக்கு என்னவாயிற்று? இதுவரை நீங்கள் வாங்கிய வாய்தாக்கள் எத்தனை? அதிலே நீங்கள் நிரபராதி என்று தீர்ப்பளித்தாகி விட்டதா? நீங்கள் அந்த வழக்கினை இழுத்தடிப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளே, நீங்கள் தான் குற்றவாளி, அதை மறைப்பதற்காகத்தான் இவ்வாறெல்லாம்

இழுத்தடிக்கிறீர்கள் என்று தமிழ் நாட்டு மக்களே பேசிக் கொள்ளவில்லையா? உங்கள் நிலை அவ்வாறு இருக்கும்போது, இன்னொருவரைப் பார்த்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று சொல்வதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

இது ஒரு உதாரணம் மாத்திரமல்ல; 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நீதிமன்றத் தீர்ப்புகள் அவரைக் குற்றவாளி என்று கூறி வெளிவந்திருந்தன. இருந்தாலும் அவர் நான்கு தொகுதிகளில் தனது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார். அதனால் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்போது 6-5-2001 தேதிய “ஆனந்தவிகடன்” இதழ் தனது தலையங்கத்தில் “இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் அணுகுமுறை நியாய தர்மங்களை யெல்லாம் மீறிய ஒன்றாக இருந்து வருகிறது. வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும், சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கான தகுதியை தான் இழந்துவிட்ட பிறகும், தன்னுடைய திட்டத்தை ஜெயலலிதா மாற்றிக் கொண்டதாகவே தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்தால்; தானே முதல்வராக இருப்பேன் என்று போகும் இடமெல்லாம் அவர் பறைசாற்றி வருகிறார். அரசியல் மரபுகள் பற்றியெல்லாம் மக்களுக்கு என்ன தெரியும் என்ற நினைப்பில் தன்னை முதல்வராக முன்னிறுத்திப் பேசினால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற சிந்தனையில் மக்களையே முட்டாளாக்கத் துணிந்திருப்பது வேதனைக்குரிய விஷயம். போட்டியிடுவதற்கு தடை ஏற்பட்ட பிறகு, அந்தத் தீர்ப்பை முழு மனதோடு ஏற்று “எங்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள், அப்படி செய்தால், என் சார்பாக உங்களுக்கு ஏற்புடைய ஒரு தலைவரை முதல்வர் பதவியில் அமர்த்துவேன், நல்லாட்சி வழங்கப் பாடுபடுவேன்” என்று ஜெயலலிதா சொல்லியிருந்தால், அது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இருக்கும்” என்று எழுதியது.

ஆனாலும் ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் தெரியுமா? தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற நேரத்தில், தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த அதே நாளில், சட்டமன்றக் கட்சித் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி, ஆளுநரைச்

சந்தித்து அன்றையதினமே பதவிப் பிரமாணமும் செய்து கொண்டார். தமிழக ஏடுகள் எல்லாம் அதனைக் கண்டித்து எழுதின. அவ்வாறு முறைகேடாக பதவியேற்ற ஜெயலலிதா 13-11-2001 அன்று பதவியை விட்டு விலக வேண்டிய நெருக்கடிக்கு ஆளானதெல்லாம் தமிழ்நாட்டு வரலாறு.

இப்படிப்பட்ட பெரும் புகழுக்குரிய (?) ஜெயலலிதாதான், தற்போது நீதி மன்றம் இன்னமும் விசாரணையைத் தொடங்காத நிலையில் மத்திய உள்துறை அமைச்சரைப் பார்த்து பதவி விலகு என்றும், பிரதமரிடம் அவரை பதவியை விட்டு விலக்குங்கள் என்றும் கூறி அறிக்கை விடுத்துள்ளார்.

“வேலிக்கு ஓணான் சாட்சி” என்பதைப் போல முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையை யொட்டி பா.ஜ.க.வும் மத்திய அமைச்சரவையிலிருந்து ப.சிதம்பரம் அவர்களை நீக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளது. அந்தச் செய்தியை வெளியிட்ட “இந்து” நாளிதழே கூட, சிதம்பரம் அவர்களைப் பற்றி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த ஒருசில மணிகளில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அவரை பதவி விலக்கக் கோரி அறிக்கை விட்டுள்ளதாக எழுதி யிருக்கிறது. மேலும் “இந்து” நாளிதழ் இதைப் பற்றி இன்று (8-6-2012) எழுதியுள்ள தலையங்கத்தில்,

“The High Court’s decision allowing the trial against Mr. Chidambaram to take place should not be interpreted - as some of his political opponents have chosen to - as evidence of his guilt. No conclusion should be drawn about the merits of the petition and the calls for his resignation over this are unreasonable. The Court’s decision only means that the charges, with the exception of two that have been struck off, will now be examined in detail during the trial. However, in the interest of justice and in recognition of the centrality of elections to our constitutional framework, this should take place as expeditiously as possible” (திரு. சிதம்பரம் அவர்களுக்கு எதிரான வழக்கில் விசாரணையை அனுமதித்து உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள உத்தரவை - அவரது அரசியல் எதிரிகள் சிலர் புரிந்து கொண்டிருப்பதைப்போல - குற்றத்திற்கான ஆதாரம் என்று கருதிவிடக் கூடாது, அவருக்கெதிராக

உள்ள வழக்கின் தகுதிகளைப் பற்றி இப்போது எந்த முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது. எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கேட்பதில் எந்த வித நியாயமும் கிடையாது. அவருக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகளை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மற்றக் குற்றச்சாட்டுகளைப் பற்றி விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. எனினும், நீதிநிலை நாட்டப்பட வேண்டுமென்பதற்காகவும், நமது அரசியல் சட்டத்தின் பாரபட்சமற்ற தன்மையை அங்கீகரிக்கும் நோக்கிலும் விசாரணை எவ்வளவு விரைவாக நடைபெற வேண்டுமோ, அவ்வளவு விரைவாக நடத்தி முடியவேண்டும்)

என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

“அவசரக் குடுக்கை” என்பார்களே, அதைப் போல நமது முதலமைச்சர் ஜெயலலிதாவும், வேறு சிலரும் சிதம்பரம் அவர்கள் பதவி விலக வேண்டுமென்று கொடுத்துள்ள அறிக்கை பற்றி, அருமை நண்பர், ப. சிதம்பரம் அவர்களே பதில் அளித்து கூறும்போது, “சில அரசியல் தலைவர்களின் அறியாமையை நினைத்து திகைப்பாக இருக்கிறது. தற்போதைய எம்.பி.க்களுக்கு எதிராக 111 தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன. விசாரணை இன்னும் தொடங்கவே இல்லை. ஒரு சாட்சி கூட விசாரிக்கப்பட வில்லை. குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய மனு தாக்கல் செய்தோம். அந்த மனு, பாதியளவுக்கு ஏற்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டால், அது தேர்தல் வழக்கு தொடர்ந்தவருக்குத்தான் பின்னடைவே தவிர, எனக்கல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். என்ன இருந்தாலும், ப. சிதம்பரம் அரசியல்வாதி மட்டுமல்லவே; திறமையான மூத்த வழக்கறிஞரும் அல்லவா?

குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட உடனேயே ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சட்ட விதிமுறைகளின்படி நியாயமாகாது. குற்றச்சாட்டு, விரிவான விசாரணையின் மூலம், ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா

ஆட்சியில்தான் புகாரைப் பெற்றுக்கொண்டு அதில் பூர்வாங்க ஆதாரம் ஏதுமிருக்கிறதா என்று விசாரித்து ஆராயாமல் அவசர அவசரமாகக் கைது நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. (இதற்கு உதாரணம் வேண்டுமென்றால், ஜெயலலிதா தன் பக்கத்திலே உள்ள தன் உடன்பிறவாச் சகோதரியின் கணவரிடமோ, உறவினரிடமோ கேட்டால் நான் சொல்வது உண்மைதான் என்று கூறுவார்கள்). அதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான அரைகுறை நடவடிக்கையைத் தேர்தல் தொடர்பான வழக்குகள் அனுமதிப்பதில்லை. ஜெயலலிதாவும் வேறு சிலரும் சொல்வதைப்போல முதல் நிலையிலேயே - விசாரித்து தீர்ப்பு அளிப்பதற்கு முன்பே ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் சட்ட நெறிமுறைகளும், இந்திய ஜனநாயகமும் கேலிப் பொருள்களாகிவிடும்! கணக்கற்ற ‘வாய்தா’ வாங்குவோருக்கும் இது பொருந்தி விடும்!

அன்புள்ள, மு.க. 9-6-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 305–310. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்