முரசொலி கடிதங்கள் · 3634
தலைமைச் செயற்குழு; தக்க முடிவெடுக்கும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3634. தலைமைச் செயற்குழு; தக்க முடிவெடுக்கும்!
உடன்பிறப்பே,
“குட்டக் குட்ட குனிவது முட்டாள்தனம்; குனியக் குனியக் குட்டுவது அதைவிட முட்டாள்தனம்” என்று கிராமங்களில் சொல்வார்கள். அதைப்போல இன்றைய ஆட்சியினர் நம்மைக் குட்டிக் குட்டிக் குனிய வைத்திட நினைக்கிறார்கள். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்து தாராளமாக ஆளட்டும். ஜனநாயகத்தில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் ஆட்சியில் அமர்ந்து விட்டோம் என்பதற்காக எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கிட வேண்டும், அழித்து விட வேண்டும், சர்வாதிகாரியாக நடந்திட வேண்டுமென்று எண்ணினால் அவர்களுடைய கட்சிக்காரர்கள் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லோரும் எப்போதும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று கருதிடக் கூடாது.
சேலம் மாவட்டக் கழகத்தின் செயலாளர் தம்பி வீரபாண்டி ஆறுமுகம், சுமார் 75 வயதுடையவர். கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றக் கூடியவர். அடக்குமுறைகளுக்கு அஞ்சாதவர். நெருக்கடி கால கொடுமைகளையே நேரில் சந்தித்தவர். இதய நோயாளி. கடந்த ஓராண்டு காலத்திற்கு முன்பு “அப்பல்லோ” மருத்துவமனையிலே இருந்த போது, நான் நேரில் இரண்டு மூன்று முறை சென்று பார்த்தேன். தப்பிப் பிழைத்தார். அவர்மீது எத்தனை வழக்குகள்?
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வாராதுமாக 15-7-2011 அன்று அங்கம்மாள் காலனி நிலத்தை மோசடி செய்ததாக, 8 பிரிவின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 17-7-2011இல் சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலத்தை மோசடி செய்ததாக,
9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 29-7-2011 அன்று தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் நிலத்தை ஆக்கிரமித்ததாக, 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், 30-7-2011 அன்று வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.
4-9-2011 அன்று கோயமுத்தூர் ஜூவல்லரி உரிமையாளர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவை சிறையில் இருந்து வெளியில் வந்த அவரை மீண்டும் இரண்டாவது முறையாக கைது செய்தனர். 6-10-2011 அன்று அக்ரோ கூட்டுறவு சங்க நில மோசடி வழக்கு,
14 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜேந்திரன் சேர்க்கப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையில் வீரபாண்டி ஆறுமுகம் பெயர் சேர்க்கப்படவில்லை. பின் நடந்த புலன் விசாரணையில் வீரபாண்டி ஆறுமுகம் பெயர் சேர்க்கப்பட்டது.
2-6-2012 அன்று நள்ளிரவு 12.45 மணிக்கு அங்கம்மாள் காலனிக்குள் புகுந்த ரவுடிகள், குடிசைகளை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர். ரவுடிகளுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஜூன் 3ஆம் தேதி, சென்னையில் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தான் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் 18-6-2012 அன்று கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்.
இதில் எந்த ஒரு வழக்கிலாவது விசாரணை நடைபெற்று, சாட்சிகள் விசாரணை முடிந்து குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதா? அதற்குள் ஏன் இந்தக் கொடுமைகள்? அவர் தவறு செய்தவர் என்றே வைத்துக் கொள்வோம். சட்டப்படி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பதையும் ஒப்புக் கொள்வோம். அவரை சேலத்திலே கைது செய்து அவர் இதய நோயாளி என்பது தெரிந்திருந்தும் அங்கிருந்து கோவைக்கு வேனில் ஏற்றி அழைத்துச் செல்வதும், அங்கிருந்து வேனிலேயே சேலத்தில் அழைத்து வருவதும், பிறகு நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்த பிறகு அடுத்தடுத்து
வழக்குகளைத் தொடுப்பதும், சென்னையில் அவர் சாப்பிட உட்காருகின்ற நேரத்தில் கைது செய்து மருந்துகளைக் கூட எடுத்துக் கொள்ளவிடாமல் இழுத்துக் கொண்டு வேனில் ஏற்றி சென்னையிலிருந்து சேலத்திற்கு அழைத்துச் செல்வதும், பிறகு திரும்பவும் சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையிலே அடைப்பதும் - அடுத்த நாள் காலையில் அவரை சிறையிலே சென்று பார்க்க நானும், ஸ்டாலினும், துரைமுருகனும் வருவதாகத் தெரிவித்தவுடன், விடியற்காலையிலேயே புழல் சிறையிலே இருந்து வேலூர் சிறைக்கு மாற்றுவதும் என்ன கொடுமை? மனித நெஞ்சம் படைத்தவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். உண்மையான குற்றவாளிகளுக்குக்கூட கருணை காட்ட வேண்டும் என்பதுதானே நீதி! ஆறுவது சினம் என்பதுதானே முதுமொழி! வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்குகளில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதா? அதற்குள் ஏன் சங்கிலித் தொடர் போல இந்தக் கொடுமைகள்? மீனவர் சமுதாயத்தில் பிறந்த கே.பி.பி. சாமி என்ன குற்றம் செய்துவிட்டார்? அவர் கழகத்தில் செய்த தியாகத்திற்காக, உழைப்புக்காக அமைச்சர் பதவி தரப்பட்டது. அமைச்சர் பதவி வகித்தது அவர் செய்த குற்றமா? அவர் மீது குண்டர் சட்டம்! அவர் தம்பி கைது! பிள்ளைகள் கைது! நள்ளிரவிலே அவருடைய வீட்டிற்குக் காவல் துறையினர் சென்று, மனைவி மக்களிடம் விசாரணை என்ற பெயரால் தாக்குதல்! என்ன நடக்கிறது இந்த நாட்டிலே? வேறு எந்த மாநிலத்திலாவது இந்தக் கொடுமைகள் உண்டா? குற்றம் செய்துவிட்டார்கள் என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். நீதிமன்றத்தில் விசாரணை நடக்கட்டும். நீதிபதிகள் தவறு என்று தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளட்டும். அதற்குள் ஏன் இந்த அவசரம்?
மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் செயலாளர் தளபதி. அவரை எத்தனை முறை கைது செய்வார்கள்? கைது செய்ததுதான் செய்தார்கள். நீதி மன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. அவர் வீட்டிற்குச் சென்று மனைவி மக்களைப் பார்க்கக்கூட விடவில்லை. மீண்டும் கைது. ஒரு நாள் பொறுத்து, அவர் வீட்டிற்குச் சென்ற பிறகு, வீட்டிலே சென்று அடுத்த நாள் மீண்டும் கைது செய்திருக்கக் கூடாதா?
மற்றொருவர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் கலைவாணன். அவரை எத்தனை முறை கைது செய்வீர்கள்?
என்ன குற்றம்? சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நடைபெற்ற அறப்போரில் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளிகளைப் புறக்கணித்தனர். அதிலே ஒரு மாணவர் கலந்து கொண்டு இல்லம் திரும்பும்போது அந்த மாணவர் சென்ற பேருந்து, லாரி ஒன்றோடு மோதியதில் அந்த மாணவன் இறந்துவிட்டான். இதற்கும் கலைவாணனுக்கும் என்ன தொடர்பு? ஆனால் அவர் மீது; போராட்டம் நடத்தியதால்தான் மாணவர் இறக்க நேரிட்டது என்று குற்றச்சாட்டு! இது அரசியல் காழ்ப்புணர்வுடன் போடப்பட்ட வழக்கு என்று கழக வழக்கறிஞர் அசன் முகமது வாதிட்டதை நீதிபதி ஏற்று ஜாமீனில் வெளியே செல்ல உத்தரவிட்டார். அவர் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு மற்றொரு வழக்கு. திருச்சிக்குச் சென்ற கழகப் பொருளாளரை வரவேற்க கலைவாணன் அங்கே சென்ற அதே நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் ஒரு வெற்றிலைப் பாக்கு கடையிலே போய் தகராறு செய்தார் என்று வழக்கு. அதற்காக குண்டர் சட்டம்! வேடிக்கையாக இல்லையா? வினோதமாக இல்லையா?
சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன். தந்தை காலத்திலிருந்து கழகத்திற்காகப் பாடுபட்டு வரும் குடும்பம். சென்னையிலே கைது செய்து, கோவைக்கு இழுத்துச் சென்றிருக்கிறார்கள். எப்படிப்பட்ட வஞ்சம் இது? என்ன ஆயிற்று அந்த வழக்கு?
விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொன்முடி, திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் கே.என். நேரு, திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் ஐ. பெரியசாமி, கோவை மாவட்டக் கழகச் செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன், காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ. அன்பரசன், விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நெல்லை மாவட்டக் கழகச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் என்று மூத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மீதெல்லாம் தேடிச் சென்று புகார்களை வாங்கி கைது செய்தார்கள். அந்த வழக்குகள் எல்லாம் என்னவாயிற்று? அத்தனை மாவட்டக் கழகச் செயலாளர்கள் வீடுகளிலும் சோதனை? சென்னையிலே பகுதிக் கழகச் செயலாளராக இருந்த தனசேகரன், கட்சிக்காக உழைத்த
தைத் தவிர வேறு என்ன செய்துவிட்டார்? அவர்மீது குண்டர் சட்டம்! வேறு எந்த ஆட்சியிலாவது ஓராண்டு காலத்தில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த இத்தனை பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது உண்டா?
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் புரசை ரெங்கநாதன் என்ன பாவம் செய்தார்? கட்சியிலே தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அது தவறா? எத்தனை வழக்குகள் அவர் மீது? குண்டர் சட்டம் வேறு! தற்போது என்னவாயிற்று? அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டுமென்று கேட்டபோது உயர் நீதிமன்ற நீதிபதி அந்த வழக்கில் போலீஸ் காவல் தேவையற்றது, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க முடியாது என்றே கூறினார்.
ஈரோட்டில் என்.கே.கே.பி. ராஜா மாவட்டக் கழகச் செயலாளர். நள்ளிரவு 2 மணி அளவில் காவல் துறையினர் காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து, வீட்டிற்குள் சென்று கைது செய்திருக்கிறார்கள். அவரை ரிமாண்டில் வைக்க எந்தச் சான்றுகளையும், காரணங்களையும் போலீசார் தெரிவிக்கவில்லை என்று நீதிபதியே சொல்லியிருக்கிறார். அடிப்படை எதுமில்லாத, பூர்வாங்க ஆதாரம் எதுவுமில்லாத இதுபோன்ற கைது நடவடிக்கைகள் சட்டப்படி அனுமதிக்கத் தக்கவையா?
பொட்டு சுரேஷ் - மதுரையைச் சேர்ந்த கழகத் தோழர். அவர் மீது குண்டர் சட்டம். என்னவாயிற்று? உயர்நீதிமன்ற நீதிபதிகள், திரு. நாகப்பன் அவர்களும், திரு. டி. சுதந்திரம் அவர்களும் அளித்த தீர்ப்பில், “குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கும் அளவுக்கு அவர் பொது அமைதிக்கும் பொது ஒழுங்குக்கும் குந்தகம் விளைவித்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று விடுதலை செய்தார்கள். எத்தனை முறை நீதிபதிகள் இந்த அரசைக் கண்டித்திருக்கிறார்கள்? இருந்தும் அதே பாதையில் இப்படிப்பட்ட பயங்கரப் பயணம் தொடர்கிறதென்றால் என்ன பொருள்?
திருச்சியில் மாவட்டக் கழகத் துணை செயலாளர், குடமுருட்டி சேகர் மீது குண்டர் சட்டம். என்னவாயிற்று? இன்னும் எத்தனை கழகத் தோழர்கள் மீது வழக்கு? சட்டப் பேரவை உறுப்பினர் கரூர்
கே.சி. பழனிச்சாமி - நாடாளு மன்ற உறுப்பினர் ரிதீஷ் - அனிதா ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் - கோவை மாநகரச் செயலாளர் வீரகோபால் - முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவை மணி - திருச்சியில் மாநகரச் செயலாளர் அன்பழகன் - மதுரையில் அட்டாக் பாண்டி, எஸ்.ஆர். கோபி - ஜெயராமன் கைது - காஜாமலை விஜய் - கோவை பாரி - மதுரை வி.கே. குருசாமி - சட்டப்பேரவை உறுப்பினர் லால்குடி சவுந்தரபாண்டியன் - அன்பில் பெரியசாமி - கோவை மாவட்ட துணைச் செயலாளர் இ. ஆனந்த், பகுதிச் செயலாளர் சிவா, பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, மாநகர துணைச் செயலாளர் மதனகோபால், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் என். புருஷோத்தமன், வட்டச் செயலாளர் காயத்திரி பாலன் - கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் ஆர். பாலச்சந்திரன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் - சேலத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீரபாண்டி ஆ. இராசா, கவுசிகப் பூபதி, பாரப்பட்டி சுரேஷ், பகுதிச் செயலாளர் எஸ். சுப்பிரமணி - ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் விசுவநாதன், குமார் முருகேஷ், ராஜேந்திரன் - திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.கே. நாகராசன் - திண்டுக்கல் மாவட்டம் முரளி, க. விஜயன், த. மாரியப்பன், முருகேஸ்வரி, எஸ். முகமது இப்ராகிம், த. அசோக் - திருச்சி மாவட்டத்தில் செல்வம், ரவி, பெரியசாமி - மதுரையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கொடி. சந்திரசேகர், டாக்டர் நவநீதகிருஷ்ணன், கிருஷ்ணபாண்டி, முரளி என்கிற பத்மநாபன், பாண்டி, ஒச்சப்பாலு என்று நீண்ட பட்டியல் - கைது செய்யப்பட்டவர்கள்.
கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்து நடவடிக்கை எடுப்பதில்தான் காவல் துறை அக்கறை காட்டுகின்றது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பரஞ்சோதி மீது புகார் கூறப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்படி நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் காவல் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தயக்கம் காட்டி வந்தனர். எனவே புகார் கொடுத்தவர் மீண்டும் நீதி மன்றத்தில் இதைப் பற்றி முறையிட்டதன் பேரில் ஜூன் 19ஆம் தேதிக்குள் பரஞ்சோதி மீதான குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் திருச்சி
ஜே.எம். 4வது நீதிமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மாஜிஸ்திரேட் ராஜாராம் பரஞ்சோதி மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று காவல் துறையினரிடம் கேட்டபோது, “எம்.எல்.ஏ., பரஞ்சோதி போலீசாருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, மேலும் அவரது கையெழுத்தை சரிபார்க்க கால தாமதமாகிறது” என்று பதிலளித்திருக்கிறார்கள். நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, அன்றையதினம் பரஞ்சோதி மீது போலீசார் கண்டிப்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.
இந்தக் கொடுமையும் பழிவாங்குதலும் தொடர்ந்து கொண்டே வருகிறது. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற போக்கு! கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமல்ல; தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீதெல்லாம், தங்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டுமென்பதற்காக காவல் துறையினரின் துணையோடு இந்தக் கைது நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அண்ணாவின் பெயரை கட்சியிலே வைத்துக்கொண்டு இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறலாமா? அதற்காகத்தான் நாளை 22-6-2012 அன்று காலையில் கழகத்தின் அவசரச் செயற்குழு நடைபெறவுள்ளது. இந்த அடக்குமுறையைக் கண்டித்து ஜனநாயக ரீதியாகவும், சட்ட விதிமுறைகளின் படியும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பற்றி நமது செயற்குழுவிலே விவாதித்து முடிவெடுப்போம்!
அன்புள்ள, மு.க. 21-6-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 322–328. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.