அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3637

முரசொலி கடிதங்கள் · 3637

“இன்றே செல்க! இனிதே வெல்க!” என வாழ்த்தி வழியனுப்புகிறேன்!

நாள் 3.7.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3637. “இன்றே செல்க! இனிதே வெல்க!” என வாழ்த்தி வழியனுப்புகிறேன்!

உடன்பிறப்பே,

22-6-2012 அன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் என்னுடைய தலைமையில் கூடிய தி.மு.கழகத்தின் அவசரத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நாம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் - சட்ட நீதியை நிலைநாட்டவும், சர்வாதிகார அநீதியை எதிர்த்து வெற்றி காணவும் - களம் கண்டு போராட என்றைக்குமே கலங்காத கழகக் கண்மணிகள் ஒன்று திரண்டு அறப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை இந்தச் செயற்குழு சுட்டிக் காட்டுவதோடு; அதற்கான சிறை நிரப்பும் போராட்டத்தை வருகிற ஜூலை 4 அன்று காலை தொடங்கி நடத்துவதென செயற்குழு தீர்மானிப்பதோடு; அதற்கு முன்னோட்டமாக மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டம் மற்றும் பெரு நகரங்களிலும் அறப்போர் விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்துவது என்றும் செயற்குழு முடிவு செய்கிறது என்று கூறியதற்கேற்ப - தமிழகம் முழுவதும் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள், பல்லாயிரம் பேர் திரண்ட அறப்போர் விளக்கப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஜூலை 4ஆம் தேதியன்று கழகம் எதற்காக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த முன்வந்துள்ளது என்பதை விளக்கியிருக்கிறார்கள்.

தி.மு.கழகம் ஆளுங்கட்சியில் இல்லையே; எனவே சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இருக்காது என்று அ.தி.மு.க. அரசு; தொண்டர்களிடம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஆர்வம் இல்லை என்று “தினமணி”, “தினமலர்” போன்ற ஏடுகளும் செயற்கையான செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றன. ஆனாலும் தலைமைக் கழகத்திலே உள்ளவர்கள் பெருமை கொள்ளத்தக்க அளவிற்கு

மாவட்டம் முழுவதிலுமிருந்து வருகின்ற செய்திகள் இந்த அறப் போராட்டத்திற்கு எத்தகைய எழுச்சியும் ஆர்வமும் தொண்டர்களிடையே பெருகெடுத்துள்ளது என்பதை நமக்குத் தெரிவித்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளர்களும் தங்கள் தங்கள் மாவட்டங்களில் எத்தனை இடங்களில் அறப்போராட்டம் நடைபெறும், அதற்கு யார் தலைமை வகிப்பார்கள், யார் முன்னிலை வகிப்பார்கள் என்ற அறப் போராட்ட விவரங்களையெல்லாம் பட்டியலிட்டு “முரசொலி”யிலே வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறப்போரில் நானும் கலந்து கொள்ள வேண்டுமென்று எனக்கும் பேரவாதான்! ஏனென்றால் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில்கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்துவிட்டு ஒதுங்கியிருந்து ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல. ஒவ்வொரு போராட்டத்திலும் நான் கலந்து கொண்டு, நான் வழியனுப்பப்பட்டிருக்கிறேனே தவிர, வழியனுப்புவோனாக என்றைக்கும் இருந்தது இல்லை. சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்பவனாக நான் அறிவிக்கப்பட்டா விட்டாலும், தாம்பரம் கூட்டத்தில் நான் கூறியதைப்போல, இந்த வரிசையில் நின்று, அது தடைப்பட்டால் அடுத்த வரிசை, அந்த வரிசையும் தடைப்பட்டால் கடைசி வரிசை. அந்த வரிசையிலே கருணாநிதியும் இருப்பான் என்பதையும் நினைவூட்டி, முதல் வரிசையில் சிறையில் நான் இல்லாவிட்டாலும் என்னுடைய உள்ளமும் உணர்வும் சிறைக்குள்ளே சிறகடித்து உலவிக் கொண்டேயிருக்கும் என்பதை நீ நன்றாகவே அறிவாய்!

தற்போது நாம் நடத்துகின்ற அறப்போராட்டத்தைப் போல கடந்த காலங்களில் நாம் நடத்திய போது, அந்த அறப்போராட்டத்தை ஏற்பாடு செய்து, அதிலே கலந்து கொள்ளவும் செய்த நமது கழக முன்னோடிகள் மீது அ.தி.மு.க. ஆட்சியினர் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளிலே ஈடுபட்டு வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற அளவில் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின்படிதான் இந்தப் போராட்டமே நடைபெறுகிறது. இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து நாமும், எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து எழுப்பி வரும் வினாக்களுக்கு எந்தவிதமான பதிலும் சொல்ல முடியாத

இந்த ஆட்சியினர்; அவர்களுக்கு மிகவும் வேண்டிய, அவர்கள் இல்லத்திலேயே தங்கியிருக்கிற உடன்பிறவா சகோதரியின் கணவர், தான் கைது செய்யப்பட்டது பற்றி, இந்த அரசின் மீதும், முதலமைச்சர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து அளித்த பேட்டிக்குக்கூட இவர்களால் இன்று வரை பதிலளிக்க முடியவில்லை. எப்படியோ முதலமைச்சரின் பெயர் அன்றாடம் ஏடுகளிலே வரவேண்டும் என்பதற்காக, சட்டப்பேரவை நடைபெற்றபோது எப்படியாவது தேடிப் பிடித்து 110வது விதியின் கீழ் அறிக்கை படிப்பதைப் போல, தற்போது “அரசு செய்தி வெளியீடு” என்ற பெயரால் ஓர் அறிவிப்பை வெளியிட்டுச் செய்கிறார்கள்.

திருவேற்காடு கோயிலில் 1006 இலவசத் திருமணங்கள் என்ற பெயரால் எவ்வளவு விளம்பரங்கள்? எத்தனை ஆரவாரங்கள்? எவ்வளவு கட்-அவுட்கள்? என்று அத்தனை ஆடம்பர ஆர்ப்பாட்டங்களையும் செய்து விழா கொண்டாடினார்கள். அவர்களுக்கு வேண்டிய பத்திரிகைகளே அனைவரும் முகம்சுளிக்கும் அளவுக்கு நடந்த அந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம் கிண்டலும், கேலியும் செய்து எழுதியிருந்தன. ஆனால் என்னவாயிற்று? திருமணம் முடிந்த மறுநாளே மணமக்களில் பல ஜோடிகள், தங்களின் பிள்ளை குட்டிகளோடு காட்சி அளித்ததை புகைப்படங்களோடு எடுத்து பல வார ஏடுகள் வெளியிட்டு - எத்தகைய திருமணங்களை முதலமைச்சர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நடத்தி வைத்திருக்கிறார் என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவாக்கின. இலவசத் திருமணங்களில் கலந்து கொண்ட மணமக்களையெல்லாம் ஆளுங்கட்சியின் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தேர்ந்தெடுத்து, அதிகாரிகளிடம் அந்தப் பட்டியலைக் கொடுத்துத்தான் அந்தத் திருமணப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அம்மையார் திருமணத்தை நடத்தி முடித்து வைத்தார். ஆனால் இவர்களின் வண்டவாளத்தை வார ஏடுகள் ஐயம் திரிபற வெளியிட்டுக் காட்டியதும், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல அறநிலையத் துறையின் ஆணையரை அவசர அவசரமாக வேறு எந்தப் பணியும் வழங்கப்படாமல் மாறுதல் செய்திருக்கிறார்கள். அது மாத்திரமல்லாமல் அந்த அதிகாரிக்கு கீழே பணியாற்றிய

நான்கைந்து அரசு அதிகாரிகளையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். அங்கன்வாடி, சத்துணவு காலிப் பணி இடங்களை எந்தவித பரிந்துரைக்கும் கையூட்டுக்கும் இடமின்றி நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாலாஜி என்பவரை மாறுதல் செய்து வேறு பணி இடம் எதுவும் கொடுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இந்த அரசு வைத்திருக்கிறது. ஏற்றுக்கொண்டாலும் இந்த ஆட்சியினர் செய்கின்ற தவறுகளுக்கெல்லாம் அரசு அதிகாரிகள் தான் பலிகடாக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசு அதிகாரிகளின் வயிற்றெரிச்சலும், மனப்புண்ணும் ஆளு வோரை என்றாவது ஒரு நாள் நிச்சயம் பதில் சொல்ல வைக்கும். இந்தப் பிரச்சினைகள் பற்றியே கவலைப்படாமல் முதலமைச்சர் “குளுகுளு” கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயரில் மட்டும் அன்றாடம் ஒரு அறிவிப்பு! செய்திக் குறிப்பின் வாயிலாக நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இதே தவறு தி.மு. கழகம் ஆளுங்கட்சியாக இருந்த போது நடைபெற்றிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள மற்றக் கட்சிகள் எல்லாம் எந்த அளவிற்கு சீறிப்பாய்ந்து அறிக்கை விட்டிருப்பார்கள். அடுத்த நிமிடமே முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், ஆட்சியைக் கலைக்க வேண்டும், மத்திய அரசே நடவடிக்கை எடு என்றும் ஜெயலலிதா அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுத் தள்ளியிருப்பார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் எல்லாம் எந்த அளவிற்கு ஊழல் செய்கிறார்கள், வஞ்சம் வாங்குகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் அல்ல, அதே கட்சியைச் சேர்ந்த முதலமைச்சரே ஒப்புக் கொண்டு பட்டவர்த்தனமாகப் பேசி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏடுகளும் அதனை பக்கம் பக்கமாக வெளியிட்டுள்ளன. எனவே ஆளுங்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தவறு செய்யவில்லை என்று சொன்னால், முதலமைச்சர் தவறாகக் குற்றஞ்சாட்டியதாக பொருளாகிவிடும். முதலமைச்சர் அவர்களை யெல்லாம் கடிந்து கொண்டால் போதுமா? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாமா? வரி கொடுக்கும் மக்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்களா? அந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் திரும்பக் கேட்கிறார்களே, நாங்கள் தான்

இளிச்சவாயர்களா? அமைச்சர்கள் தவறு செய்யவில்லையா? மாவட்டச் செயலாளர்கள் தவறு செய்யவில்லையா, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்யவில்லையா? தலைமைக்குத் தர வேண்டுமென்று கூறி வாங்குகிற கமிஷன் தொகையைக் குவித்து வைத்திருப்பவர் யார்? என்று பொதுமக்கள் கேட்காமல் கேட்கும் கேள்விகளுக்கு இந்த ஆட்சியினரின் பதில் என்ன? கொட நாட்டிலே ஓய்வு எடுப்பதுதானா?

ஜூன் மாதம் முடிந்து, ஜூலையும் பிறந்து விட்டது. ஜூன் மாதம் 12ஆம் தேதியே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இன்னமும் திறக்கப்படவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை இந்த ஆண்டு அவ்வளவுதானா என்று வேதனைக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும், யாருக்குத் தெரியும்? ஆட்சி என்று ஒன்று தமிழ்நாட்டில் நடக்கிறதா? அல்லது கொடநாட்டில் உறங்கி ஓய்வு எடுக்கிறதா?

இதற்கெல்லாம் பதில் சொல்ல வகற்ற ஆட்சியினர், எதிர்க்கட்சியினரையும், தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் தேடிப்பிடித்து ஏதோ ஒரு அரைகுறைப் பொய்ப் புகாரை எழுதி வாங்கிக் கொண்டு அதன் மீது நடவடிக்கை என்ற பெயரால் கைது செய்வதும், சிறையில் அடைப்பதும், நீதிமன்றம் வழங்கும் ஜாமீனில் வெளியே வந்தால் மீண்டும் ஒரு வழக்கைப் போடுவதும், அதிலும் வெளியே வந்து விட்டால் “குண்டர் சட்டம்” என்று போட்டு வாட்டி வதைப்பதும் என்ற அராஜகத்தை அட்டியின்றி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

எந்த அளவிற்கு இந்த அரசினர் பொய் வழக்குகளைப் போட்டு பழி வாங்குகின்றனர் என்பதற்கு இதோ நேற்றையதினம் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பே பொருத்தமான உதாரணம்!

மதுரை மாநகர கழகப் பிரமுகர் வி.கே. குருசாமி மற்றும் அவருடைய மருமகன் வழக்கறிஞர் எஸ். பாண்டி மீது மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் - 2010ஆம்

ஆண்டு பிப்ரவரி மாதம், அவரது 7 சென்ட் நிலத்தையும், அதில் இருந்த கட்டிடங்களையும், மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராக இருந்த வி.கே. குருசாமியும், அவரது மருமகன் வழக்கறிஞர் பாண்டியும் அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசின் காவல் துறை எந்த விதமான விசாரணையும் நடத்தாமல் உடனடியாக வி.கே.குருசாமியையும், பாண்டியையும் கைது செய்தார்கள். அந்தச் சொத்துக்களை 2008ஆம் ஆண்டிலேயே எஸ். பாண்டி உரிய விலை கொடுத்து வாங்கியதற்கான ஆவணங்கள் உள்ளன என்றும், காவல்துறை விசாரிக்காமல் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், வழக்கினை ரத்து செய்ய வேண்டுமென்றும் மதுரை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ. செல்வம் அவர்கள், 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 29-7-2011 அன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாமதத்துக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற மனுதாரரின் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் உள்ளது. எனவே மனுதாரர்கள் மீதான இந்த நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பிலிருந்து அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்குப் பொய்ப் புகார்களை கொடுத்து, காவல் துறையின் மூலம் கழகத்தினரை பழி வாங்குகிறது, கைது செய்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இதற்கெல்லாம் விடிவையும், விடையையும் தேடித்தான் செல்லப்படும் உண்மையான எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு. கழகம் நாளை சிறை நிரப்பும் அறப் போராட்டத்தை அறிவித்து நடத்துகின்றது. இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் இதயபூர்வமான ஆதரவினைத் தந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த அறப்போரினை மிகப் பெரிய வெற்றியாக - ஆட்சியினருக்கு நல்ல பாடம் புகட்டுகின்ற அளவிற்கும் ஆக்க வழிகாட்டுகின்ற முறையிலும் நடத்திட

தொண்டர்களும், கழக முன்னணியினரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அறப்போர் நமக்கு புதிதல்ல; எப்போதும் போல இதனையும் சிறப்பாகச் செய்து முடிப்பாய் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்! வீணர்கள் புலம்பட்டும்; வீணர்கள் ஏதாவது உளறிக் கொண்டிருக்கட்டும்! வீரனே! தீரனே! விழிக்கணல் வழியப் புறப்படுவாய்! மொழிப்போர் நடத்திய உன் வரலாற்றை இன்றும் பழிப்போர் சிலர் உளர்! அந்த இழி செயலை இடறிவிட்டு - மக்கள் குறை தீர்க்க - அவர்தம் இன்னல்களை - அறிவிக்கப்பட்டுள்ள அறப்போர்க்களத்திற்கு இனிதே செல்க! இனிதே வெல்க! என்று வாழ்த்துகிறேன்! வழியனுப்புகிறேன்!

அன்புள்ள, மு.க. 3-7-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 336–342. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்