முரசொலி கடிதங்கள் · 3638
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3638. பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
உடன்பிறப்பே,
இதுவரை தமிழகம் சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு ஆட்சியை எதிர்த்து; ஜனநாயக விரோத-மக்கள் விரோத-அராஜக நடவடிக்கைகளை எதிர்த்து நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் 2,32,797 பேர் கலந்து கொண்டு கைதாகின்ற அளவிற்கு நடைபெற்று, செய்தியாளர்களே அதைப் பற்றி அதனை மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறீர்களா என்றெல்லாம் கேட்கக் கூடிய அளவிற்கு நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியாளர்களே, சிறையிலே இவ்வளவு பேர்களையும் வைத்துக்கொள்ள வழியின்றி கீழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டவில்லை என்பதைப் போல ஏதோவொரு காரணத்தைச் சொல்லி கைது செய்யப்பட்டவர்களையெல்லாம் உடனடியாக விடுவித்திருக்கிறார்கள்.
இந்த வெற்றியை ஆளுங்கட்சியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அவர்கள் நடத்தும் ஏடுகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, என்ற போதிலும் நாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லிக்கொள்ளும் “தினத்தந்தி” போன்ற இதழ்களே, ஆளுங்கட்சியின் தயவை எப்படியாவது பெற்றே தீர வேண்டுமென்ற எண்ணத்தோடு, முதல் பக்கத்தில் போராட்டம் பற்றிய செய்தியை வெளியிடும்போது “நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்துப் போராட்டம்” -- “ஜெயலலிதா உத்தரவின்பேரில் கைதான தி.மு.க.வினர் விடுவிப்பு” என்று அ.தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு எழுதியிருப்பதைக் காணும்போதுதான் “இது என்ன கூத்து?” என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
இந்த அறவழிப் போராட்டம் என்பது நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்து மட்டும் நடைபெற்ற போராட்டமா? “தினத்தந்தி” பதில் கூறுமா? 22-6-2012 அன்று நடைபெற்ற
தி.மு. கழக தலைமைச் செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில்தான் அறப்போராட்டம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“காவிரி டெல்டாப் பகுதிகளில் கனவாகிப்போன குறுவைச் சாகுபடி; கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களின் ஆரோக்கியமற்ற அணுகுமுறைகளினால் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே வரும் நதி நீர்ப் பிரச்சினைகள்; அரிசி விலை உயர்வு, மளிகைப் பொருள்கள் - காய்கறிகள் விலை உயர்வு; பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, இல்லாத மின்சாரத்திற்கு இதுவரை இல்லாத கட்டண உயர்வு; ஆசிரியர்கள் இட மாறுதலிலிருந்து கட்டட அனுமதி வரை அனைத்துத் துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல் சாம்ராஜ்யத்துக்கே உரிய முறைகேடுகள் - கையூட்டுக் கலாச்சாரம்; பொதுத் தேர்தலின்போது போட்டி போட்டுக்கொண்டு செய்யப்பட்ட அறிவிப்புகளின் அலங்கோல நடைமுறைகள்; நீதிமன்றக் கண்டனங்கள் என தமிழகத்தின் கழுத்தை நெரித்து நிலைகுலையச் செய்திடும் நிர்வாகப் பிரச்சினைகள் எண்ணிக்கையிலும், பரிமாணத்திலும் நாள்தோறும் வளர்ந்து அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்து; திசை திருப்பும் தந்திரமாகவே, “விளம்பர மேலா”, “காணொலிக் காட்சி மாயா ஜாலங்கள்”, “கழகச் செயல்வீரர்கள் கைது - குண்டர் சட்டம்” “நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படாததும், சுட்டிக்காட்டி தலையில் குட்டிக்காட்டப்பட்டதுமான கழகத்தை நெரிக்கும் காட்டு மிராண்டித்தனமான சட்டப் பிரயோகங்கள்” ஆகியவற்றை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்பதைக் தமிழ்நாட்டவர் உணரத் தலைப்பட்டுவிட்டனர்” என்றெல்லாம் விரிவாக எழுதிவிட்டுத்தான் “இதையெல்லாம் கண்டித்து” சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் “தினத்தந்தி” நாளேடு இவ்வளவையும் மறைத்துவிட்டு, நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்து தி.மு.க. போராட்டம் நடத்துவதாக தலைப்புக் கட்டி செய்தி வெளியிடுவது பத்திரிகா தர்மத்திற்கு உகந்தது தானா?
தீர்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்ல; 25-6-2012 தேதிய “முரசொலி”யில் கேள்வி-பதில் பகுதியிலும், இந்த அறப்போராட்டம் என்னென்ன காரணங்களுக்காக நடத்தப்படுகிறது என்பதையும் நான் விளக்கியிருக்கிறேன். அதையும் “தினத்தந்தி” மறைத்துவிட்டதன் மர்மம் என்னவோ? “தினத்தந்தி”க்கும் “மாலை முரசு”க்கும் நடைபெறும் பங்காளிச் சண்டையில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இல்லையென்ற ஆதங்கத்தில் இப்படியெல்லாம் செய்தி வெளியிட்டால், அம்மையாரின் கடாட்சம் தங்கள் பக்கம் திரும்புமா என்று “தினத்தந்தி” எதிர்பார்த்து நிற்பதை நாம் அறிவோம். அதற்காக தி.மு.க. மீது காழ்ப்பினைக் காட்டுவது நியாயம்தானா?
“தினத்தந்தி” இப்படியெல்லாம் வெளியிடுகின்றபோது “அவாள்” ஏடான “தினமலர்” ஏடோ, இந்த அறப்போராட்டம் அறிவித்த நாளிலிருந்து, இந்தப் போராட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆதரவு இல்லை, தொண்டர்கள் சிறை செல்லத் தயாராக இல்லை, போராட்டத்தில் அதிகம் பேர் கலந்துகொள்ள மாட்டார்கள், தி.மு.க.வில் பலத்த எதிர்ப்பு என்றெல்லாம் அன்றாடம் எந்த அளவிற்கு உண்மையைத் திரித்தும், குறைத்தும், திசை திருப்பும் முறையிலும் செய்திகளை வெளியிட முடியுமோ அந்த அளவிற்குச் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால் “தினமலர்” ஆசிரியர் முகத்தில் கரியை அள்ளிப் பூசுவதைப்போல கழகக் கண்மணிகள் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எதற்கும் தயார் என்று கலந்து கொண்டு இந்த அறப்போராட்டத்தை அனைவரும் போற்றிடும் மாபெரும் வெற்றிப் போராட்டமாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். அதைக் கண்ட பிறகாவது “தினமலர்” திருந்த வேண்டாமா? மாறாக அவர்களுடைய இன்றைய இதழில், சிறை நிரப்பும் போராட்டம் தோல்வியில் முடிந்தது என்றும் தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டம் புஸ்ஸ்... என்றும், நாகப்பாம்பு தனக்கேயுரிய “உஸ்” ஒலி எழுப்புவது போல “புஸ்” என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகிறதென்றால் ஏன் இந்தப் பொய் பிழைப்பு? இப்படியெல்லாமா பொய்களைக் காசாக்க முயலுவது?
இதற்கும் மேலாக - ஒரு மாத காலமாக “கொட நாடு” எஸ்டேட்டில் தங்கி தமிழ்நாட்டு மக்களுக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கின்ற அம்மையார் முதலவர் ஜெயலலிதா - அவசர அவசரமாக விடுத்துள்ள அறிக்கையில், தான் ஏற்கனவே
பலமுறை தெரிவித்தபடி நில அபகரிப்பு புகார்கள் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போதே பொதுமக்களால் கொடுக்கப்பட்டிருந்தன. எனினும், நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.வினர் என்பதால், புகார்களின் மீது நடவடிக்கை எதுவும் முந்தைய தி.மு.க. அரசால் எடுக்கப்படவில்லை, எனவே தற்போதும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே இந்தப் புகார்கள் எல்லாம் தி.மு. கழக ஆட்சிக் காலத்திலா கொடுக்கப்பட்டன?
கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் மீது புகார் அரசுக்கு எப்போது தரப்பட்டது?
29-11-2011 அன்றுதான். அப்போது எந்த ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றது? அ.தி.மு.க. ஆட்சி தானே? தி.மு.கழக ஆட்சியில் வந்த புகார் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருப்பது பொய்தானே? முதலமைச்சர் பொய் சொல்லலாமா? சொந்த கையெழுத்தையே தன் கையெழுத்து இல்லை என்று நீதி மன்றத்திலே சொன்னவர், பொய் சொல்வது புதிதல்ல!
மதுரை கழகத் தோழர் வி.கே. குருசாமி மீது அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. அவர் மீது புகார் அரசுக்குக் கொடுக்கப்பட்டது எப்போது தெரியுமா? 29-7-2011. அப்போது ஆட்சியிலே இருந்தது யார் தெரியுமா? தி.மு.க. அல்ல, அ.தி.மு.க! ஜெயலலிதாவின் கூற்று பொய் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?
ஐ.பி.எஸ். அதிகாரி துக்கையாண்டி மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டு, அவர் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாரே, அவர்மீது அரசிடம் புகார் கொடுக்கப்பட்டது எப்போது? 29-6-2012. அந்தத் தேதியில் தி.மு.க. அரசா ஆட்சியிலே இருந்தது? அம்மையார் பதில் சொல்வாரா?
ஏன் ஜெயலலிதா அம்மையாருக்கு மிகவும் வேண்டிய சசிகலா நடராசன், திவாகரன், ராவணன் போன்றவர்கள் மீதெல்லாம் அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்ததே, அவர்கள் மீதெல்லாம் புகார்கள் எப்போது வந்தன? தி.மு.க. ஆட்சிக் காலத்திலா? அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தானே? இந்தப் புகார்கள்
எல்லாம் எந்த ஆதாரத்தோடு ஏற்றுக் கொள்ளப்பட்டன? அவைகள் எல்லாம் இன்று என்ன ஆயின?
நில அபகரிப்பு குறித்து தி.மு. கழக ஆட்சியிலும் புகார்கள் வந்தது உண்டு. உதாரணம் கூறட்டுமா? சி.பி.எம். கட்சியின் தலைவர்கள் எல்லாம் தலைமைச் செயலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்து புகார் மனு கொடுத்தார்கள். நில அபகரிப்பு பற்றித்தான் புகார். அதில் முதலமைச்சருக்கு வேண்டியவர்கள் சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான இடத்தை அபகரித்து விட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டு புகார் கொடுத்தார்கள். அந்தப் புகார்கள் குறித்து தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியிலே திடீர் நடவடிக்கை எடுத்து கைது செய்வதைப் போலச் செய்யாமல், முறைப்படி நீதியரசர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த நீதிபதியும் அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கை அரசிடம்தான் உள்ளது. அ.தி.மு.க. அரசு அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தது? பதில் சொல்வார்களா?
உடன்பிறப்பே, “வாய்மையே வெல்லும்” என்பதற்கேற்ப, எப்படியோ “தினத்தந்தி”யை மீறி - “தினமலர்” இதழை மீறி - அ.தி.மு.க. ஆட்சியினரை மீறி - காவல் துறையை மீறி - நாம் நடத்திய அறப்போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. அந்த வெற்றிக்குக் காரணமான உன் பாத கமலங்களில் என் நன்றியைக் குவித்திருக்கிறேன். “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?”
அன்புள்ள, மு.க. 6-7-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 344–348. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.