அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3640

முரசொலி கடிதங்கள் · 3640

என்ன நடக்கிறது தமிழகத்தில்?

நாள் 13.7.2012சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3640. என்ன நடக்கிறது தமிழகத்தில்?

உடன்பிறப்பே,

நாட்டிலே ஒரு ஆட்சி உண்மையிலேயே (?) நடக்கிறது! அந்தக் காலத்தில் அரசர் அமைச்சரை அழைத்து “மந்திரி, மாநகர் தனில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” என்று கேட்டாராம். தற்போது அரசருக்குப் பதிலாக, நமது முதல் அமைச்சர், கொடைநாட்டிற்கே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து, நாட்டிலே மழை ஒழுங்காகப் பெய்கிறதா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் கொடைநாட்டில் இத்தனை நாட்கள் தங்கவும், அவரைப் பார்ப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் “யாத்திரை” செய்ய ஆகின்ற செலவு எவ்வளவு? அதெல்லாம் மக்கள் தரும் வரிப் பணம்தானே? இன்றைய அ.தி.மு.க. ஆட்சியிலே நேற்று ஒரு நாளில் மட்டும் என்னென்ன நடைபெற்றதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்திகளை மட்டும் தொகுத்துக் காட்டுகிறேன்; நீயே புரிந்து கொள், ஆட்சி நடைபெறுகிறதா இல்லையா என்று!

- சென்னை சைதாப்பேட்டையில் லஞ்சம் வாங்கியதை புகைப்படம் எடுத்தது தொடர்பாக இரண்டு தலைமைக் காவலர்கள், சங்கர் - ஷாஜகான் ஆகியோர் சாலையில் கட்டிப் புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள். - சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் க. ரமேஷ் என்ற 45 வயதான தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். - சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அருள் என்ற ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை. - ஆவடியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர் சக்திகுமார் மர்மச் சாவு. - கோவை அவிநாசி சாலையில் குடிபோதையில்

பெண்ணிடம் தகராறு செய்திருக்கிறார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் கருப்பையா.

- ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜன் வீடு தாக்கப்பட்ட வழக்கை சி.பி., சி.ஐ.டி விசாரணைக்கு உயர் நீதி மன்ற நீதியரசர் மாற்றியிருக்கிறார். - சென்னை ஆயிரம் விளக்கு குடிசைப் பகுதியில் பத்து குடிசைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. ஒரே மாதத்தில் இதே பகுதியில் நடைபெற மூன்றாவது தீ விபத்து இது. - சென்னை பல்லாவரத்தில் அரசுப் பேருந்து ஒன்று மோதி அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த 23 வயதுள்ள மாணவன் எம். சுப்பிரமணி உயிரிழந்துள்ளார். - அதே பல்லாவரம் மேம்பாலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்திருக்கிறது. - பணியிடம் ஒதுக்காத காரணத்தால் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். - பவானிசாகர் அணை நீர்மட்டம் “கவலைக்கிடம்” - கேள்விக்குறியாகும் விவசாயம் - அரிசி பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் வலியுறுத்தி இருக்கிறார். - செங்கல்பட்டு, பூவிருந்தவல்லியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாம்களை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரம் பேர் கைதாகி, விடுதலை செய்யப்பட்டுள்ளனர். - நாமக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. - கம்பம் அருகே அங்கன்வாடி மையத்தில் நான்கு வயது குழந்தை ரோஷிணிக்கு சூடு வைத்திருக்கிறார்கள்.

- மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பள்ளி மாணவி பூமாரி என்பவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். - விருதுநகர், திருச்சுழி அருகே இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சுச் சம்பவத்தில் 3 அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் நாசமடைந்துள்ளன. - ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை கிராம அஞ்சலக அதிகாரி போலியாக கையெழுத்திட்டு 51 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். - புழல் சிறையில் விசாரணைக் கைதி மணி என்பவர் தூக்குப் போட்டு தற்கொலை. - திருமுல்லைவாயலில் விவேக்குமார் என்ற அதிகாரி வீட்டில் 18 பவுன் நகை திருட்டு. - தமிழகம் முழுவதும் 11 மேம்பாலப் பணிகள் நிறைவடையாமல் உள்ளன - அந்தரத்தில் விடப்பட்ட நெடுஞ்சாலைத் துறைப் பணிகள். - ஆறு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி காலி - பதவியைப் பிடிக்க பலரும் கோட்டைக்கு படையெடுப்பு. - நெல்லுக்குத் தட்டுப்பாடு - உயர்கிறது அரிசி விலை - ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம். - மத்திய நிதியைப் பயன்படுத்தாத தமிழக அரசு - ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் ஜெயராம் கடிதம். - “சில்மிஷ” ஆசிரியர் மீது நடவடிக்கை இல்லை - முதல்வர் உத்தரவை செயல்படுத்தாமல் கல்வித் துறை அலட்சியம். - மடத்துக்குளம் அருகில் மணல் லாரி டிரைவரிடம் எஸ்.ஐ. லஞ்சம். - தூத்துக்குடியில் அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட மக்கள்.

- போலீஸ் வெப்சைட்டில் திருட்டு - அனானிமஸ் குழு மீது சந்தேகம். - மதுரையில் வீடு ஒதுக்குவதில் முறைகேடு. - சேலம் மத்திய சிறையில் கஞ்சா கடத்திச் சென்ற சிறை அதிகாரி. - விருதுநகரில் கலெக்டர் நியமனம் தாமதம் - வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு. - கூடலூர் அருகில் 17 டன் வெடி பொருள்களுடன் லாரி பறிமுதல். - அம்பத்தூரில் திறந்தவெளியில் சத்துணவு சமையல் - அரசு பள்ளியில் அவலம். - பூவிருந்தவல்லியில் மீனாட்சி என்ற பெண்ணிடம் செயின் பறிப்பு. - கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் முளைக்கும் ஆக்கிரமிப்புக் கடைகள் - கண்டு கொள்ளாத நிர்வாகக் குழு - சென்னை நகருக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா - கிருஷ்ணா நீர்வரத்து குறைந்தது. - கூடுதல் கட்டணம் கேட்டு பள்ளிக் குழந்தை மதுமிதாவை ஆசிரியர் அறைந்தார். - மதுச்சாலையில் முறைகேடு - டாஸ்மாக் உதவி மேலாளர் சஸ்பெண்ட். - கோவை அருகே கார் கண்ணாடியை உடைத்து 3.50 லட்சம் ரூபாய் திருட்டு. - வாலாஜா அருகே இலவச ஆடுகளை விற்ற முப்பது பேர். - திருப்பூரில் தொழிலாளி வீட்டில் ஐம்பொன் சிலை - பொதிகை ரயிலில் பெண்ணிடம் முறைகேடு.

உடன்பிறப்பே, இன்று காலையில் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைத்தான் இங்கே எடுத்து எழுதியிருக்கிறேன். இவற்றைப் பற்றியெல்லாம் கவனிக்க முதல் அமைச்சரோ, மற்ற

அமைச்சர்களோ தலைநகரிலே இருக்கிறார்களா? ஆனால் அன்றாடம் முதல் அமைச்சர் பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும்; துப்புரவுப் பணியாளர் நியமனம், வருவாய்க் கிராமங்கள் உயர்வு, கவுரவ விரிவுரையாளர் நியமனம் என்று மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே “பேக்ஸ்” மூலமாகவே வந்து கொண்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் எல்லாம் முறையாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகு வெளிவர வேண்டியவை அல்லவா? அவ்வாறு அந்த அறிவிப்புகள் வருகின்றவா? செயல்படுத்தப் போகின்ற அறிவிப்புகள்தானே விவாதித்து முடிவெடுக்கப்பட்டு அதன் பிறகு வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம், வெறும் அறிவிப்புகளாக மட்டும்தானே என்று கேட்கலாம்! அரசு என்று ஒன்று அமைந்த பிறகு, அந்த அரசு செயல்படுகிறதோ இல்லையோ, செயல்படுவது போன்ற தோற்றமாவது இருக்க வேண்டாமா? முதலமைச்சர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார்! அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார். தற்போது அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்ட ராவணனை கொடைநாட்டிற்கே அழைத்துப் பேசுகிறார் என்பது உண்மை என்றால் இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகின்ற செயல்கள்? அவர்கள் மீதெல்லாம் போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? நடராஜன் மீது புகார் என்றார்கள். பிறகு கொடுக்கப்பட்ட புகார்கள் திரும்பப் பெறப்பட்டன என்கிறார்கள். அப்படி என்றால் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? அந்தப் புகார் பொய்யானதா மெய்யானதா என்று காவல் துறை முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? காவல் துறையினரின் அந்தத் தவறான நடவடிக்கைக்குக் காரணம் என்ன? அந்த வழக்கிலே சம்பந்தப்பட்டவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவரை “என்கவுண்டர்” செய்ய முயற்சி நடைபெற்றதாக இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினாரே; அதற்கு இந்த அரசின் பதில் என்ன? அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையே அவர்தான் தயாரித்துக் கொடுத்தேன் என்றார். முதல் அமைச்சருக்கு பேசவே தெரியாது, நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்றார். அவைகள் எல்லாம் உண்மைகளா? இந்த அரசு அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்து, அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றுதானே மக்கள் நம்புவார்கள். அதன்பிறகு அவர் வாய் திறக்கவில்லையே?

என்ன காரணம்? வாயைத் திறக்கக் கூடாது என்று அடக்கி வைக்கப்பட்டு விட்டாரா? இந்த அரசினால் பயமுறுத்தப்பட்டு விட்டாரா?

குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்ட ராவணன் முதல் அமைச்சரைச் சந்திப்பதற்காக கொடைநாடு வந்தார் என்று ஏடுகளில் வந்த செய்தி உண்மையா இல்லையா? அது உண்மை என்றால், அவர் என்ன பேசுவதற்காக வந்தார்? அந்த உண்மைகள் எல்லாம் நாட்டிற்குத் தெரிய வேண்டியது இல்லையா? எதிர்க்கட்சியினரைப் பழி வாங்குவது ஒன்றுதானே முறையாக நடக்கிறது! வேறு என்ன நடக்கிறது நாட்டிலே? இதற்கு ஆட்சி என்றா பெயர்; “காட்சி”கள் தானே மாறி மாறி அரங்கேறுகின்றன!

அன்புள்ள, மு.க. 13-7-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 356–361. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்