அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3643

முரசொலி கடிதங்கள் · 3643

“எல்லாம் நானே” என்பது நல்லோர் போற்றும் வழியல்ல!

நாள் 26.7.2012சுமார் 10 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3643. “எல்லாம் நானே” என்பது நல்லோர் போற்றும் வழியல்ல!

உடன்பிறப்பே,

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 23-7-2012 அன்றைய அறிவிப்பு - 5 அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களையும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக் கழகமாக ஆக்கப் போகிறார்களாம்! தி.மு. கழக ஆட்சியினால் எடுக்கப்பட்ட முற்போக்கு முடிவுகளையெல்லாம் மாற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுகின்ற ஜெயலலிதா, மாணவர்களின் கல்வியிலும் தலையிட்டு தமிழகத்தின் வருங்காலச் சந்ததிகளைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவது தான் மிகுந்த வேதனையாக உள்ளது. அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரையில், அம்மையார் ஜெயலலிதாவிற்கு “அண்ணா” என்றாலே அவருக்கு தி.மு. கழகம் என்ற நினைவுதான் ஏற்படுகிறது! அவருடைய கட்சிக்கே “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்று அண்ணா பெயரில் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்ததையும், அவர்களின் கட்சிக் கொடியிலேயே அண்ணா அவர்களின் படம் இடம் பெற்றிருப்பதையும் மறந்து விட்டு, அல்லது நினைவில் இருந்தாலும் அதை நெருப்பாக நெஞ்சிலே நிறுத்தி வைத்துக் கொண்டு - அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவினையொட்டி ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய அளவிற்கு நூலகம் கட்டினால், ஜெயலலிதாவிற்கு அண்ணா பெயரால் உள்ள நூலகம் என்பதை மறந்து, அதைக் கட்டியது கருணாநிதி ஆயிற்றே என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது! உடனே அந்த நூலகத்தை மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபடுகிறார்.

அதைப் போலவேதான் அண்ணா அவர்களின் நினைவிடத்தை விட, எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிட வாயில்

உயரமாக இருக்க வேண்டுமென்று திட்டம் வகுத்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில்தான் தி.மு.கழக ஆட்சியிலே 5 இடங்களில் அண்ணா பெயரில் தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள் என்றவுடன், அதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மாணவர்கள் பெருமளவுக்குப் பயன்பெறுவார்களே என்ற எண்ணம் வராமல், மாணவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, அண்ணாவின் பெயரை ஐந்து இடங்களில் இல்லாமல் செய்து விட்டேன், பாருங்கள் என்று செயல்படுகிறார். இப்படித்தான் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் வாராதுமாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்க முடியாது, அந்தப் பாடத் திட்டப் புத்தகங்களையெல்லாம் தூக்கியெறிய வேண்டுமென்று பள்ளிக் கல்வி பாழாகிடும் வகையிலே செயல்பட்டார். நல்லவேளையாக நீதிமன்றம் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட காரணத்தால் சமச்சீர் கல்வித் திட்டம் பிழைத்தது. அந்த வரிசையில்தான் தற்போது பொறியியல் உயர் கல்வியின் தாக்கை மேம்படுத்திடும் 5 அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களையும் ஒன்றாக ஒருங்கிணைக்கப் போகிறேன் என்கிறார்.

மாணவர்களின் ஆரம்பக் கல்விக்கு வித்திட்டவர் காமராஜர் என்றால், தமிழகத்தின் மாணவர்களின் உயர்கல்விக்கு உறுதியாக வித்திட்ட ஆட்சி கழக ஆட்சி என்று சொல்லுமளவிற்கு, கழக ஆட்சிக் காலத்தில் பல்கலைக் கழகங்களும், மருத்துவக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும் மாநிலம் முழுவதும் பரவலாகப் பெருகின. மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான அத்தனை முயற்சிகளும் கழக ஆட்சியில் முறையாக எடுக்கப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் உயர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கெனத் தனி அமைச்சகமே கழக ஆட்சியிலேதான் ஏற்படுத்தப்பட்டது. அதையும் யாராவது நம்முடைய முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களேயானால், கழக ஆட்சியிலே உருவாக்கப்பட்டது என்பதற்காக அதுவும் தேவையில்லை; மீண்டும் கல்வித் துறைக்காக ஒரே அமைச்சரே போதும் என்ற ஒரு முடிவினை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

23-7-2012 அன்று வெளிவந்துள்ள “டெக்கான் கிரானிகல்” ஆங்கில நாளிதழில், இந்த ஒருங்கிணைப்பு பற்றி

எழுதும்போது, மூத்த கல்வியாளர்கள் வரவேற்றபோதிலும், காலப்போக்கில் இந்த முடிவு நல்லதல்ல என்று கூறுகிறார்கள் என்றே எழுதியுள்ளது. (“It was not a good move in the long run, they pointed out”) மேலும் அந்தக் கல்வியாளர்கள் கூறும்போது, “பரவலாக்குதல் என்பது கல்வி உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் நன்மை பயக்கக் கூடியதுதான். பரவலாக்குதல் மூலமாக கல்வியின் தரம் உயரும். மேலும் கண்காணித்தலும், முறைப்படுத்துதலும் எளிமையாக இருக்கும், ஆனால் இதற்கு மாறாக ஒரே இடத்தில் மையப்படுத்துதல் என்பது பல்வேறான பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்” (“The Professors argued that decentralization was always good, including in education, which would enhance the quality of education and help in easy monitoring and regulation, while centralisation would only open a Pandora’s Box.”) என்றும் “டெக்கான் கிரானிகல்” வெளியிட்டுள்ளது. அது மாத்திரமல்ல; புகழ் பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியின் முதல்வர் இதைப்பற்றிக் கூறும்போது, அண்ணா பல்கலைக் கழகத்தை இவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது பொறியியல் கல்விக்கு எந்த வகையிலும் உதவாது என்றும், சான்றிதழ்களை அச்சடித்து வழங்குவதும், தேர்வுகளை நடத்துவதும், 500க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை மேற்பார்வையிடுவதும் ஏராளமான தொந்தரவுகளை உண்டாக்கும் என்றும் கூறினார் என்று அந்த ஆங்கில ஏடு எழுதியிருக்கின்றது.

25-7-2012 தேதிய “இந்து” நாளிதழ் “Anna University merger worries part-time students” என்ற தலைப்பில் Students say their course will not be recognized by Anna University, Chennai örgjiThis will make it difficult for them to join a Ph.D. Programme in AU, Chennai என்றும் தலைப்பிட்டு பெரிய அளவிற்கு வெளியிட்டுள்ளது.

யார் எழுதினால் என்ன? யார் சொன்னால் என்ன? அவற்றையெல்லாம் கேட்டுச் சிந்திக்கக்கூடிய அரசா தமிழகத்திலே இருக்கிறது? தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சொல்கின்ற வரட்டுப் பிடிவாத அரசு அல்லவா இங்கே நடக்கிறது!

3-5-2007 அன்று பேரவையில் உயர் கல்வித் துறை மானியத்தில் அ.தி.மு.க. சார்பில் பேசிய இன்றைய அமைச்சர், திரு. சி.வி. சண்முகம், அண்ணா பல்கலைக் கழகம் திருச்சியிலும், கோவையிலும் அமைக்கப்பட்டதைக் தவறு என்று சொல்லவில்லை. பல்கலைக் கழகங்களைப் பிரிக்கக் கூடாது

என்றும் சொல்லவில்லை. என்ன சொன்னாரென்றால், “திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக் கழகம் என்று சொல்வதற்குப் பதிலாக, அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி, அண்ணா பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் - அதாவது ஐ.ஐ.எம். பெங்களூர், ஐ.ஐ.எம். டெல்லி, அலஹாபாத் என்று சொல்வது போல சொன்னால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்” என்றுதான் தெரிவித்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழகத்தின் ஐந்து பகுதிகளிலே ஏற்படுத்துகின்ற முடிவை தி.மு. கழகம் ஏதோ திடீரென்று அறிவிக்கவில்லை. 2006ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பே வெளியிட்ட கழகத் தேர்தல் அறிக்கையில் பக்கம் 39இல் “அனைத்துப் பொறியியல் கல்லூரிகளையும், அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைத்ததால் ஏற்பட்டுள்ள நடைமுறை நிர்வாகக் குழப்பங்கள் நீங்குவதற்கும் முறையான சீரான கல்வி எல்லா நிலைகளிலும் உறுதி பெறுவதற்கும் வழி காணுவோம்” என்று தெரிவித்திருந்தோம். தெரிவித்து விட்டு சும்மா இருந்து விடவில்லை. “சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்பதற்கிணங்க, 2006ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, 2006-2007ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே, பக்கம் 20, பத்தி 50இல் “தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதற்கிணங்க பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்விக்கான தேவை பெருகி வருவதாலும்; அக்கல்வியில் தனிச் சிறப்புமிக்க உயர் பட்டப் படிப்புக்கான அவசியம் வளர்ந்து வருவதாலும், சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தைப் போன்ற தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களை திருச்சியில் ஒன்றும், கோவையில் ஒன்றுமாக நிறுவிடவும் இந்த அரசு முடிவெடுத்துள்ளது” என்று அறிவித்திருந்தோம்.

உயர்கல்விக்காக தற்போது மட்டுமல்ல; 1969 முதல் 1976ஆம் ஆண்டு வரையில் நான் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே அதற்கு முன்பு இல்லாத வகையில், 68 கலைக் கல்லூரிகள் தமிழகத்திலே தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவற்றில் அரசுக் கல்லூரிகள் 18; தனியார்கள் தொடங்கிய கல்லூரிகள் 50; அரசுக் கல்லூரிகளில் மகளிர் கல்லூரிகள் 8; தனியார் கல்லூரிகளில் மகளிர் கல்லூரிகள் 21.

1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்ற போது, இந்தியாவில் இருந்த மொத்தப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையே 20 தான். அவற்றில் தமிழ்நாட்டில் இருந்த பல்கலைக் கழகங்கள் இரண்டே இரண்டு தான். 1971இல் இந்தியாவில் இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 83. அப்போது தமிழ்நாட்டில் இருந்த பல்கலைக் கழகங்கள் மூன்று. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அந்த மூன்றாவது பல்கலைக் கழகம் 1971ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகும். அந்த வேளாண்மைப் பல்கலைக் கழகம் கூட, 1969ஆம் ஆண்டு நவம்பரில் பஞ்சாப் முதலமைச்சர் திரு. குர்ணாம்சிங் அவர்களின் அழைப்பினையேற்று குருநானக் அவர்களின் 500வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக நான் சென்றிருந்த போது, லூதியானாவில் உள்ள விவசாயப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அந்தப் பல்கலைக் கழகத்தைப் பார்வையிட்டதின் விளைவாகத்தான் கோவையில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. வேளாண்மைக்காக மட்டுமல்ல; கால்நடை ஆராய்ச்சிக்காகவே ஆசியாவிலேயே முதல் முதலாகப் பல்கலைக் கழகம் ஒன்று சென்னையிலே கழக ஆட்சியிலேதான், அடியேன் முதல் அமைச்சராக இருந்த போதுதான் தொடங்கப்பட்டது.

அதைப் போலவே சட்டக் கல்விக்கென்று தனி பல்கலைக் கழகம் ஒன்றை அண்ணல் அம்பேத்கர் பெயரில் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்களை அழைத்துத் தொடங்கி வைத்ததும் கழக ஆட்சியில், நான் முதல் அமைச்சராக இருந்த போதுதான்.

திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக் கழகமும், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும், சேலத்தில் தந்தை பெரியார் பல்கலைக் கழகமும், வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழகமும், சென்னையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டது தி.மு. கழக ஆட்சியிலேதான். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் பல்கலைக் கழகங்கள் ஒன்றுகூட இல்லாத நிலையை எடுத்துக் கூறி வலியுறுத்திய தி.மு.கழக அரசின்

சீரிய முயற்சிகளின் பயனாக திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட மத்திய அரசு அனுமதி வழங்கி, அதற்குத் தேவையான நிலத்தையும் கழக அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அப்படி என்ன பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகமா? 27.6 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2500 பல்கலைக் கழகங்களும், 12.7 கோடி மக்கள் கொண்ட ஜப்பானில் 726 பல்கலைக் கழகங்களும், 8.2 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் 350 பல்கலைக் கழகங்களும், தமிழ்நாட்டை விட குறைந்த அளவில் 6 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் 125 பல்கலைக் கழகங்களும் உள்ளன. ஆனால் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 415 பல்கலைக் கழகங்களே உள்ளன. அவற்றில் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 28 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உட்பட மொத்தம் 53 பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளன. இந்த இலட்சணத்தில்தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா ஐந்து பல்கலைக் கழகங்களுக்கு மூடுவிழா நடத்துகின்ற மாபெரும் சாதனையிலே ஈடுபட்டுள்ளார். புதிய புதிய கல்வி நிறுவனங்களை - பல்கலைக் கழகங்களை உருவாக்குவதில்தான் எல்லோரும் முனைப்போடு ஈடுபடுவார்கள். ஆனால் ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற ஐந்து பல்கலைக் கழகங்களை மூடுகின்ற முயற்சியிலே ஈடுபடுகின்ற ஒரு முதலமைச்சரை எங்கேயாவது பார்க்க முடியுமா? மற்றவர்கள் எல்லாம் ஆக்குகின்ற முயற்சியிலே ஈடுபடுகிறார்கள் என்றால் இவர் மட்டும்தான் அழிக்கின்ற முயற்சியிலே ஈடுபடக்கூடிய ஆற்றலுடையவர் (?) என்பதை மெய்ப்பிக்க முயலுகிறாரோ? அவருடைய ஒரே நோக்கம் எல்லாம் “கருணாநிதி” செய்த காரியமா? மூடுவிழா நடத்துங்கள் முதலில் அதற்கு என்றுதான் கருதுகிறாரே தவிர, மக்கள் நலன், மாணவர்கள் நலன் என்பதை யெல்லாம் பார்ப்பவராக இல்லை.

2009ஆம் ஆண்டு டாக்டர் யஷ்பால் அவர்கள் தலைமையில் உயர் கல்வியைப் புதுப்பித்தலுக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த அறிக்கையில், “பாடத்திட்டம், தேர்வு, கல்லூரிகளின் தரம் ஆகியவற்றை நிர்வகிப்பதில் இந்த இணைவிப்புக் கல்லூரி முறை பல்கலைக் கழகங்களுக்குப் பெரும்

சுமையாக உள்ளது. மேலும் பல்கலைக் கழக அதிகாரிகளின் தாமதம், கட்டுப்பாடு, போதிய ஆதரவின்மை ஆகியவற்றால் ஆற்றல் மிக்க கல்லூரிகள் சிரமப்படுகின்றன. அதே வேளையில் கல்லூரிகளின் குறுகிய நோக்கம், பல்கலைக் கழகச் செயல்பாடுகளில் அவற்றின் எதிர் மறையான பங்களிப்பு ஆகியவற்றால் ஆற்றல் மிக்கப் பல்கலைக் கழகங்களின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு ஒருசில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. அங்கும் ஒருசில ஆசிரியர்கள் மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். அங்கு மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்பது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. ஆனால் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதுடன், அங்குள்ள பெரும்பான்மையான ஆசிரியர்கள் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் மத்திய அமைப்புகளிடமிருந்தும், அயல் நாட்டு அமைப்புகளிடமிருந்தும் பெற முடிகிறது. எனவே, ஆற்றல் மிக்கவர்களின் மையமாகப் பல்கலைக் கழகங்கள் ஆகிவிடுவதால் புதிதாகத் திட்டமிடவும், புதிய பாடத் திட்டங்களைக் கொண்டு வரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இணைவிப்புக் கல்லூரிகள் என்ற சுமையுடன் திறமையாக நிர்வகிக்கப்பட முடியாத அளவிற்கு பல்கலைக் கழகங்கள் பெரிதாக இல்லாமல், அதன் வளர்ச்சிக்கு உகந்த அளவில் பல்கலைக் கழகங்கள் இருந்தால் புதிய பாடத் திட்டங்களை விரைவாகவும், சரியாகவும் நடைமுறைப்படுத்த இயலும்.

இந்தியாவில் உயர்கல்வி முறையை ஆய்வு செய்து, அதன் வளர்ச்சிக்குத் தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக மத்திய அரசு 1948இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு, 1966இல் டாக்டர் கோத்தாரி கல்விக் குழு, 2006இல் டாக்டர் சாம் பிட்ரோடா குழு, 2009இல் டாக்டர் யஷ்பால் குழு ஆகியவற்றை நியமித்தது. இந்தக் குழுக்கள் அனைத்துமே இந்தியாவில் உயர் கல்வி வளர்ச்சிக்கு புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டு, பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின. டாக்டர் சாம் பிட்ரோடா குழுவும், டாக்டர் யஷ்பால் குழுவும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில்

1500 பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தன. ஆனால் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கெல்லாம் தோன்றாத புரட்சிகரமான(!) யோசனை அல்லவா நம்முடைய முதலமைச்சருக்குத் தோன்றியுள்ளது.

1978ஆம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டில் இருந்த பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் சென்னை மற்றும் மதுரைப் பல்கலைக் கழகங்களுடன் இணைவிக்கப்பட்டிருந்தன. 1978இல் அ.தி.மு.க. ஆட்சியில்தான் சென்னை கிண்டியில் இருந்த பொறியியல் கல்லூரி மட்டும் அண்ணா பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது. மற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் 2001 வரையில் தமிழ்நாட்டில் உள்ள ஆறு கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்களுடன் இணை விக்கப்பட்டிருந்தன. 2001இல் தமிழ் நாட்டில் இருந்த 247 பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணை வித்து அதை ஒரு இணைவிப்புப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது. அந்தப் பல்கலைக் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதுமுள்ள 247 பொறியியல் கல்லூரிகளை நிர்வகிப்பது என்பது ஓர் இயலாத நிலை என்பது உணரப்பட்டது. அதனால்தான், 2006இல் கோயம்புத்தூரில் 200 பொறியியல் கல்லூரிகள் இணைவிப்புடன் கூடிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகமும், திருச்சியில் 85 கல்லூரிகளுடன் கூடிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகமும் 1-2-2007 முதல் செயல்படத் தொடங்கின. 2007இல் திருநெல்வேலியில் 67 கல்லூரிகளுடனும், 2010இல் சென்னையில் 170 கல்லூரிகளுடனும், மதுரையில் 49 கல்லூரிகளுடனும் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன.

ஆகமொத்தம் தமிழ்நாட்டின் ஐந்து அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களும் ஆராய்ச்சியில் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம், ஒருமைப் பல்கலைக் கழகமாகவும் செயல்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள் ஒழிக்கப்பட்டு, தமிழ் நாட்டில் உள்ள 571 பொறியியல் கல்லூரிகளும் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைவிக்கப்படும் என்று,

கல்வியாளர்களைக் கலந்தாலோசிக்காமலேயே மாணவர்களின் நலனையும், ஆராய்ச்சியின் சிறப்பையும் கவனத்தில் கொள்ளாமலேயே ஒருதலைப்பட்சமாக அறிவித்து, அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது.

உலக நாடுகள் எல்லாம் ஆண்டுக்கு ஆண்டு பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையை அதிகமாக்கிக் கொண்டு செல்லும் நேரத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு புதிய கருத்தை தனது கண்டுபிடிப்பாகச் சொல்லியிருக்கிறார். அதாவது “அதிக எண்ணிக்கையில் பல்கலைக் கழகங்கள் தொடங்கினால் மட்டும் கல்வியின் தரத்தில் எந்தவிதமான உயர்வும் ஏற்படாது” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் கருத்து ஏற்கத்தக்க ஒன்று என்றால், சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ்தான் தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கல்லூரிகளும் இடம் பெறும் என்ற அறிவிப்பை அல்லவா செய்ய நேரிடும்? வருங்காலத்தில் ஜெயலலிதா அப்படியொரு அறிவிப்பைச் செய்யப் போகிறாரா? தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேவையில்லை. அனைத்தும் தலைமைச் செயலாளரின் நேரடிப் பார்வையிலே இயங்கும் என்றும், மாவட்டங்களிலே உள்ள காவல் துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு நேரடியாக டி.ஜி.பி. தலைமையிலே ஒருங்கிணைத்து இயங்கும் என்றும் ஜெயலலிதா அறிவிக்கப் போகிறாரா? பரவலாக்கப்பட்டதை யெல்லாம் மாற்றி, மையப்படுத்தி ஒரு குடைக் கீழ்க் கொண்டு வரப்போகிறாரா?

ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள் இயங்கும்போது, வளர்ச்சிக்காக அப்பல்கலைக் கழகங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவும். பல்கலைக் கழகங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் உயர் கல்வி முன்னேற்றத்திற்காக இயங்குவதால் நாட்டில் அவை அமைந்துள்ள பகுதிகளிலே நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடும். பல்கலைக் கழகங்கள் அமைந்துள்ள மாவட்டங்களிலும், அவற்றைச் சார்ந்துள்ள பகுதிகளிலும், அவற்றின் தன்மை மற்றும் தரத்திற்கேற்றவாறு ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மிகுதியாகவும் விரைவாகவும் செயல்படுத்தப்படும்.

சென்னையில் மட்டும் ஒரே ஒரு பல்கலைக் கழகம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எந்த ஒரு வேலைக்கும் குறிப்பாக மதிப்பெண்கள் குறித்த விசாரணைகள் செய்வது, ஆய்வுக் கட்டுரை சார்ந்த பணிகள் போன்றவற்றிற்காக மாணவ மாணவிகள் தொலைதூர நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதன் மூலம் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் வீண் அலைச்சலும் மன உளைச்சலும் பண விரயமும் கால விரயமும் உண்டாகும்.

பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை (Department of Science and Technology) போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள இது போன்ற கழகங்களும் இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்விக்கு மானியம் வழங்குகின்றன. இத்தகைய மானியங்கள் மிகுந்த அளவில் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, ஐந்து கோடி ரூபாய் மானியம் ஒரு பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்படுமெனில், ஆறு பல்கலைக் கழகங்கள் மொத்தமாக முப்பது கோடி ரூபாய் மானியம் பெறும் அளவுக்கு நிலை உயரும். இதன் மூலம் பல்கலைக் கழகங்கள் உரிய வளர்ச்சியினை எவ்விதத் தடங்கலும், தடையுமின்றி பெறும்.

தேசிய அறிவுசார் கழகம் (National Knowledge Commission) மற்றும் இதர இந்திய தொழில் நுட்பக் கழகங்கள் சம்பந்தத்தில் நடத்திய கணிப்பில், இன்னமும் 1,500 பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்குத் தேவை என்றும், அவை விரைவில் நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது. எனவே, தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, குறைக்கப்படக் கூடாது.

ஐந்து தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களை ஒன்றாக்கி ஒரே தொழில் நுட்பப் பல்கலைக் கழகமாக்கினால், தமிழகத்திலுள்ள பல அறிவியல் மற்றும் கலைத் துறைக்கான பல்கலைக் கழகங்களும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டுமென்ற ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.

பல்கலைக் கழகங்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைவதால் அந்தந்தப் பகுதிகளிலும் தனித்தனியாக தொழில்

வளர்ச்சியடையும். மேலும் பல மாணவ மாணவியர் அவரவர் பெற்றோர்களுடன் தங்கி உயர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறலாம். இதனால் மாணவர்களுக்குப் பாதுகாப்பும், ஆரோக்கியமான உணர்வும், இருப்பிடமும், மன அமைதியும் அதிக அளவில் கிடைப்பதால், அவர்களின் அறிவு வளர்ச்சி ஆராய்ச்சியிலும் மற்ற முன்னேற்றத்திற்காகவும் உறுதுணையாக அமைகின்றன. அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலங்களிலே தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைவதால், சென்னை மாநகரில் ஏற்படும் மக்கள் தொகை நெரிசல் குறையும்.

ஒரு பல்கலைக் கழகத்துடன் சுமார் 100 கல்லூரிகள் வரையில் இணைவிக்கப்படலாம் என்றுதான் பல்கலைக் கழக மானியக் குழு கூறியுள்ளது. ஆனால் தற்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவின்படி 571 கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைவிக்கப்பட்டுள்ளன. இதனால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நிர்வாகச் சுமை அதிகரிக்கும். அங்குள்ள ஆசிரியர்கள் ஆராய்ச்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

கழக ஆட்சியில் ஐந்து பல்கலைக் கழகங்களை புதிதாகக் கொண்டு வந்தோம்; அ.தி.மு.க. ஆட்சியில் மேலும் ஐந்து பல்கலைக் கழகங்களை உருவாக்கினோம் என்றால் பெருமையா? தி.மு. கழக ஆட்சியில் உருவாக்கிய ஐந்து பல்கலைக் கழகங்களை இல்லாமல் செய்து பெருமையா? முற்போக்கு நடவடிக்கையை மாற்றி, பிற்போக்காக்குவது தான் வளர்ச்சியா? ஏன்தான் எதிர்மறை எண்ணம் கொண்ட இந்த அ.தி.மு.க.விற்கு வாக்களித்தோமோ என்று எண்ணுகிறார்களா? அது போதும் இப்போது!

அன்புள்ள, மு.க. 26-07-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 371–381. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்