அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3642

முரசொலி கடிதங்கள் · 3642

முரசொலி எண்ணிக்கை மும்மடங்கு பெருக வேண்டும்!

நாள் 24.7.2012சுமார் 3 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3642. முரசொலி எண்ணிக்கை மும்மடங்கு பெருக வேண்டும்!

உடன்பிறப்பே,

“பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!”

என்று கொள்கை முழக்கம் செய்து, துண்டு வெளியீடாக வெளிவந்த ‘முரசொலி’க்கு இப்போது வயது 70. ‘முரசொலி’யின் தொடக்கம் 1942ஆம் ஆண்டு என்பதைக் கணக்கிட்டு இதனைச் சொல்லுகிறேன். ‘முரசொலி’ துண்டு வெளியீடாக வெளிவருவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே;

“இராப்பகல் எந்தப் பொழுதும், தமிழின் ஏற்றம் கருதித் துடிப்பவனே! - அன்று ஈரோடு வயதில் எடுத்த கொடியை இன்றும் தூக்கிப் பிடிப்பவனே!”

என நமது இயக்கத்தின் இலட்சியக் கவிஞர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் குறிப்பிட்டிருப்பது போல, ஈரோடு வயதில் எடுத்த கொடியை இன்றும் தூக்கிப் பிடிப்பவனாக இருக்கிறேன் என்பதை என் பகைவரும் மறுக்கமாட்டார். 1937லேயே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து,

“ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள் - நீ தேடிவந்த கோழையுள்ள நாடு இதல்லவே!”

என்று பாடி திருவாரூர்த் தெருக்களில் மாணவர் பேரணி நடத்தியவன் நான்! பள்ளிச் சிறுவனாக இருந்த நேரத்திலேயே, ‘முரசொலி’ துண்டு வெளியீடு எனது கைகளை அலங்கரிக்கும். நண்பர்கள், உறவினர்கள், வேற்றார், மாற்றார் என்று மாறுபாடில்லாமல் அனைவரின் பார்வைக்கும் திருவாரூர்

கிருஷ்ணா அச்சகத்திலிருந்து நான் வெளியிடும் ‘முரசொலி’ துண்டுதான் சென்று, கனல்கக்கும் கருத்து விருந்தினை அளித்திடத் தவறியதே இல்லை!

“வரட்டுமே வள்ளலார்” என்ற தலைப்பில் ஒரு வெளியீடு! நாத்திகர்களான நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆத்திகரான பல பெரியோர்களும் “ஆமாம்” அருட்பெருஞ்சோதி இராமலிங்கர் மீண்டும் வந்தால்தான்;

“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே”

என்று அவர் சொன்னதைப் போல்; அறிவுறுத்தி வீழ்ந்து கிடக்கும் மக்களை விழிக்கச் செய்திட முடியும் என்று நகர்ப்புறத் தெருக்களிலும் நாளங்காடி வீதிகளிலும் பேசியதைக் கண்டு, நானும் என் நண்பன் தென்னனும் மகிழ்ச்சி பொங்கிடக் குதித்திருக்கிறோம்.

குழந்தைப் பருவத்தில் இருந்த ‘முரசொலி’யை அச்சியற்றி, வார வெளியீடாக வழங்குவதற்குத் துணை புரிந்த கருணை எம்.ஜமாலை - கிருஷ்ணா அச்சக உரிமையாளர் நாராயண சாமியை மறக்கத்தான் முடியுமா?

திருவாரூரில் அச்சகத்திற்குக் குறுக்கே ஓடிக் கொண்டிருக்கும் ஓடம்போக்கி நதியைத் தாண்டுவதற்குக் கட்டப்பட்டிருந்த மூங்கில் பாலத்தைக் கடந்து, 12 மணி நள்ளிரவிலும் பலத்து இடிமழையிலும் ‘முரசொலி’ வார இதழ் ஏடுகளை மூட்டையாகக் கட்டித் தலையில் தூக்கிக் கொண்டு போன அந்தக் காட்சியைத் தான் மறையும் வரையில் மறக்கத்தான் முடியுமா?

கையூன்றி ஊர்ந்திடும் குழந்தைப் பருவம் கடந்து, நடையின்று நாலா திக்கிலும் பரவிய வார ஏடு ‘முரசொலி’யின் கொள்கை வைராக்கியத்தைக் குலைத்திட யாராலும் இயலாது. மனமார ஏற்றுக் கொண்ட தலைவர்கள் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அடியொற்றி நடந்து, இன்று எழுபது ஆண்டுகளை எட்டிப் பிடித்திருக்கிறது.

‘முரசொலி’ என்றால் அது காட்டாறுகளைக் கடந்து, தென்றல் தீண்டியதில்லை, தீயைத்தான் தாண்டி வந்தோம் என்று நெஞ்சை நிமிர்த்தி நடைபோட முடிகிறது என்றால்; இந்த இயக்கத்தின் இலட்சோப இலட்சம் கழகக் கண்மணிகள் காட்டும் ஆர்வமும், தமிழ் மக்களின் பரிவும், பாசமும்தான் காரணம் என்பேன்!

‘முரசொலி’ தொடங்கிய காலத்திற்கும் இந்த காலத்திற்கும் இடையே இயக்கம் வளர்க்க, இலட்சிய முரசு கொட்ட எத்தனையோ அறிஞர்கள், காவலர்கள், ஏடுகள் மூலம் எடுத்து வைத்த முயற்சிகள் எல்லாம் அதே அளவில் இன்று தொடராத நிலையிலும்; ‘முரசொலி’ மட்டும் என்னைப் போல, இன்னும் ஆயுள் நீண்டும் ஓங்கி வளர்ந்தும் வருவதற்குக் காரணம் என்னைவிட - என் குடும்பத்துப் பிள்ளைகளை விட - ‘முரசொலி’யை நான் மூத்த பிள்ளையாகக் கருதி, அதன் முழக்கத்தை நிறுத்தாமல், பாதுகாத்து வருவதால்தான் என்பதை உடன்பிறப்புகளாகிய நீவிர் நன்கறிவீர்!

இடையிலே ஓரிருமுறை இடைக்காலமாக ‘முரசொலி’யை நிறுத்த நேரிட்டபோது; இலக்கிய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் கருத்து வேறுபாடு கொண்டு கடுமையாக என்னை எதிர்த்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்; ‘முரசொலி’ அலுவலகத்திற்கே வந்து, “இதை ஏன் இடையிலே நிறுத்த நினைக்கிறாய்! தமிழ்நாடு இன்றுள்ள நிலையில், இன எதிரிகள் அனைவரின் கையிலும் பல ஏடுகள் இருக்கும்போது ‘முரசொலி’யை நிறுத்திவிட்டால் அவர்களுக்குப் பதில் சொல்ல யார் இருக்கிறார்கள்?” என்றும்; “அதனை மீண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும்” என்றும் அன்புக் கட்டளை பிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் போன்ற பேரறிஞர்கள், பிரியமுள்ள நண்பர்கள், தன்மான உணர்வுடைய தமிழினக் காவலர்கள் அனைவருமே வற்புறுத்தி ‘முரசொலி’யைத் தள்ளாட விடாமல் தடுத்து நிறுத்தியதால்;

வாட்டம் போக்கி, வலிமை பெற்று தட்டுதோள் தட்டி முழங்கிடும் வீரனாக

மீண்டும் ‘முரசொலி’ தமிழர்களின் இல்லந்தோறும், உன்போன்றோர் உள்ளந்தோறும் ஒலிக்கத் தொடங்கியதை நீ நன்றாகவே அறிவாய்!

‘முரசொலி’ அலுவலகத்தைச் சுற்றி இரவு 12 மணிக்கு எதிரிகளின் படையெடுப்பு! என்னையும் முரசொலி மாறனையும் கைது செய்து போலீசார் அணிவகுப்பு! எங்களுக்கோ கழகத் தொண்டர்கள் மட்டுமே பாதுகாப்பு! இந்த நிலையிலும் புலவர் பெருஞ்சித்திரனாரின் பொன்மொழிகளை மறக்காமல் - இறுதியாக அண்ணாவின் ஆணையை ஏற்று - ‘முரசொலி’ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஓர் ஏடு வரை - அதனால் நாடு மகிழ இயக்கம் செழித்திட இலட்சியத்தை வென்றிட

இன்றுள்ள சமுதாய - பொருளாதார... அரசியல் களத்தில் வென்றிட மட்டுமல்ல; தலைநிமிர்ந்து நின்றிடவும் ‘முரசொலி’ போன்ற ஓர் ஏடு தேவை என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம்; அனுபவ ரீதியாகவும் உணர்ந்திருக்கிறோம். அறிந்தால் மட்டும் - உணர்ந்தால் மட்டும் போதுமானதல்ல என்பதால்; அறிந்தவர்களும் உணர்ந்தவர்களுமான உடன்பிறப்புகளாகிய நீங்கள் - ஒரு போரில் நால்வகைச் சேனைகளும் ஈடுபடுவது போல - ஒவ்வொருவரும், நமது பிரச்சார பலத்திற்கு உண்மையாக விளங்கக்கூடிய ‘முரசொலி’ போன்ற ஏடுகளை முனைந்து வலுப்படுத்திட வேண்டுமல்லவா? அதற்கு கடைகளில் விற்பனையாகும் ‘முரசொலி’ இதழ்களின் எண்ணிக்கை மும்மடங்கு பெருகவேண்டும். ஊருக்கு ஓர் நமது கிளைக் கழகங்கள் உள்ள இடங்களில் எல்லாம் ‘முரசொலி’ இதழைப் படித்திடும் ஆர்வமுடையோர் ஒவ்வொரு நாளும் பெருகிட வேண்டும்! இதற்கு ஆவன செய்திட ‘முரசொலி’ அலுவலகத்தின் சார்பில் வகுக்கப்படும் திட்டங்களை - அறிவிக்கப்படும் வேண்டு கோள்களை ஆட்டியின்றி நிறைவேற்றிட ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

அன்புள்ள மு.க. 24-7-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 367–370. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்