முரசொலி கடிதங்கள் · 3648
விவசாயிகள் வேதனையும், விதவிதமான அறிக்கைகளும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3648. விவசாயிகள் வேதனையும், விதவிதமான அறிக்கைகளும்!
உடன்பிறப்பே,
முதலமைச்சர் ஜெயலலிதா “கொடநாடு” எஸ்டேட் ஓய்வு மாளிகையிலிருந்து 25-7-2012 அன்று விடுத்த அறிக்கையில், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை அவருடைய தலைமையிலான தமிழக அரசு எடுத்துள்ளது என்றும் - தமிழ்நாட்டில் இதுவரை 4.52 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் - குறுவை சாகுபடி இந்த ஆண்டு குறைந்துவிட்டது, நெல் உற்பத்தி பெருமளவு பாதிக்கும் என்றெல்லாம் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திக் கட்டுரைகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றும் - 28-5-2012 அன்றும் 15-6-2012 அன்றும் நீர்வரத்து நிலை பற்றி, அவர் ஆய்வு செய்ததாகவும் - இந்த ஆண்டு குறுவை சாகுபடி 1,37,000 ஏக்கரில் செய்யப்படும் என்றும் - விவசாயத்திற்காக 12 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் - தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும்; ஜூலை மாத இறுதிக்குள் இன்னும் 1.52 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். தமிழகத்திலே உள்ள அனைத்து ஏடுகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை பெரிதாக வந்திருந்தது.
முதலமைச்சரே தெரிவித்த இந்தச் செய்திகள் எல்லாம் உண்மைதானா? இந்த ஆண்டு ஜெயலலிதா அறிக்கையில் கூறிய அளவிற்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறதா? முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் பாதிப்பு இல்லை என்று அறிக்கை விட்டதற்கு முதல் நாள் வந்த செய்தி என்ன தெரியுமா?
“டெல்டாவில் குறுவை சாகுபடி இல்லை - ரூ. 840 கோடி நெல் உற்பத்தி பாதிப்பு” என்ற தலைப்பில், “டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்யாததால், எட்டு லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு, மூன்று லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யவில்லை. தரிசாக விடப்பட்டுள்ளது. ஆறு லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது” என்று எழுதியிருக்கின்றன.
இதிலே எது உண்மை? முதலமைச்சர் அறிக்கையிலே கூறியது உண்மையா? நாளேடுகளில் வந்த தகவல் உண்மையா?
26-7-2012 தேதிய மற்றொரு நாளேட்டில் “குறுவை சாகுபடி பாதிப்பு - 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு - டெல்டா விவசாயிகள் வேதனை” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் - கடந்த 2011இல் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி, தஞ்சை மாவட்டத்தில் 1,00,707 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 97,250 ஏக்கர், நாகை மாவட்டத்தில் 1,07,120 ஏக்கர் என ஒட்டு மொத்தமாக 3,05,077 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை நம்பி “பம்ப் செட்” மூலம் 30 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது என்று எழுதியுள்ளது.
பாரதிய கிசான் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் திரு. அய்யாக்கண்ணு குறுவை பொய்த்தது, சம்பா தாளடியாவது தப்புமா என்று கேட்டிருப்பதோடு, விவசாயிகள் கடன் வலையில் சிக்கித் தவித்து வருவது மட்டுமல்லாமல், தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை உருவாகி வருகிறது என்று சொல்லியிருக்கிறார்.
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறும்போது, இந்த ஆண்டு சுமார் 16 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதால் இரண்டாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றும், விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் திரு. ராஜாராம் அவர்கள், “விவசாயிகள் வாங்கிய அனைத்துக்
கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு. கே. பாலகிருஷ்ணன், “ஏற்கனவே குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை, தற்போது சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகி உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
31-7-2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
நேற்றைய (2-8-2012) “தீக்கதிர்” நாளேட்டில் ஜி.வி. நாகராஜன் அவர்கள் “கானல் நீராகும் டெல்டா மாவட்ட விவசாயம்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை தீட்டியுள்ளார்.
குறுவை விவசாயம் பொய்க்கவில்லை, பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன என்று கொடநாடு எஸ்டேட்டிலிருந்து முதலமைச்சர் அறிக்கை விடுகிறார். ஆனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலை குறித்து அந்த ஏடு என்ன எழுதியுள்ளது தெரியுமா?
“காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் போதிய அளவு மின்சாரம் இல்லாத காரணத்தினால் கோடை விவசாயத்தைக் கைவிட்டனர். தற்போது மேட்டூர் அணையும் திறக்கப்படாத காரணத்தினால் நிலத்தடி நீரினைக் கொண்டு குறுவை சாகுபடியை துவக்கலாம் என்று நினைத்தனர். பருவ மழை பொய்த்துப்போன நிலையில் இதற்கும் நிலத்தடி நீர் எந்த அளவிற்குக் கை கொடுக்கும் என்று கவலையில் உள்ளனர். இந்த ஆண்டு குறுவை சாகுபடி 3 லட்சம் ஏக்கருக்கு மேல் செய்ய வேண்டிய விவசாயிகள், தற்போது வெறும் 30 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்துள்ளனர். இதன் காரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பும், உணவு உற்பத்தி பாதிப்பும் ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகளையும் - விவசாயத் தொழிலாளர்
களையும் பாதுகாக்கக் கோரி விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் கூட்டாக கோரிக்கை மாநாடு, முற்றுகைப் போராட்டம் என்று நடத்தி, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கவனத்தை ஈர்த்துள்ளனர். சாகுபடியை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் பத்தாயிரமும், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரமும் நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது” - என்று எழுதியுள்ளது.
ஆனால் இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனைத்து உத்திகளையும் தனது தலைமையிலே உள்ள அரசு கடைப்பிடித்து வருவதாகவும், கர்நாடக அரசு ஜூன் மாதம் முதல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் திறந்து விடாத நிலையிலும், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை தனது தலைமையிலான தமிழக அரசு எடுத்துள்ளது என்று 25-7-2012 அன்று அறிக்கை விடுத்திருக்கிறார். நமது முதலமைச்சர் இந்த அளவிற்கு அறிக்கை விடுத்த பிறகு, கர்நாடக அரசு எப்படி மேட்டூர் அணைக்கு தண்ணீரை திறந்துவிடும் என்று ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.
டெல்டா மாவட்ட ஏழையெளிய விவசாயிகள் கூட, ஆடிப் பதினெட்டாம் தேதியன்று தங்கள் ஊர்களிலே உள்ள சிறிய சிறிய ஆறுகளுக்குச் சென்று மகளிர் எல்லாம் ஒன்று கூடி விழா எடுத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் அம்மையாரின் தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இந்த ஆண்டு தாய்மார்கள் ஆடிப் பதினெட்டாம் பெரு விழாவினைக்கூடக் கொண்டாட வழியின்றி வேதனையில் ஆழ்ந்திருக்கும் போது, உண்மைக்கு மாறான அறிக்கைகளை முதலமைச்சரே வெளியிடுகின்ற நிலைதான் உள்ளது.
மேலும் முதலமைச்சர் தனது அறிக்கையில், கடந்த மே மாதம் 28ஆம் நாளன்று இதுகுறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றினை நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் மே 29ந் தேதியிட்ட
அவர்களுடைய அதிகாரபூர்வ பத்திரிகையிலேயே அம்மையார் அத்தகைய ஆய்வுக் கூட்டம் ஒன்றினை நடத்தியதாக எந்தச் செய்தியும் வரவில்லை. ஒருவேளை அம்மையார் ஆய்வு நடத்தி, எளிமை கருதி அந்தச் செய்தியை ஏடுகளுக்குத் தராமல் கூட இருந்திருக்கலாம். ஏனென்றால் அம்மையார்தான் விளம்பரம் விரும்பாதவர் ஆயிற்றே?
ஆனால் அம்மையார் ஆய்வு நடத்தியதாகச் சொல்லும் அதே மே 28ஆம் தேதியன்று டெல்லியில் அம்மையாரின் வலியுறுத்தலை ஏற்று, காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித் துறைச் செயலாளர் எம். சாய்குமார், பொறியாளர்கள் சிவசங்கரன், ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாகவும் செய்தி வந்திருக்கின்றது. எனவே டெல்லியில் தலைமைச் செயலாளரும், பொதுப்பணித் துறை செயலாளரும் இருந்திருக்கின்ற நிலையில், சென்னையில் அவர்கள் எவ்வாறு ஆய்வுக் கூட்டம் நடத்தினர் என்று தெரியவில்லை.
அதைப்போலவேதான் ஜூன் 15ஆம் நாளன்று பயிர்ச் சாகுபடி மற்றும் நீர்வரத்து நிலையை ஆய்வு செய்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருக்கிறார். அதுபற்றிய செய்தியாவது அவர்களுடைய அதிகாரபூர்வ ஏடு உட்பட எதிலாவது வந்திருக்கிறதா என்று பார்த்தால், அந்தச் செய்தியும் வரவில்லை. மாறாக அன்றைய தினம் தான் புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அனைவரும் வெற்றிக் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் அம்மையார் பயிர்ச் சாகுபடி மற்றும் நீர்வரத்து நிலையை ஆய்வு செய்ததாக அறிக்கை விடுத்துள்ளார். இனிமேல் அவர்கள் ஆமாம், அந்த நாட்களில் நாங்கள் ஆய்வு நடத்தினோம், ஏடுகளுக்குச் செய்தியினைக் கொடுக்க விரும்பவில்லை, ஏனென்றால் நாங்கள் விளம்பரத்தை விரும்பாதவர்கள் என்று வேறு ஒரு அறிக்கைக் கூட விடலாம். ஆனால் குறுவை பாதிப்பு இல்லை என்றோ, விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என்றோ முதலவரின் அறிக்கையிலே சொல்லியிருப்பது முற்றிலும் தவறான செய்தியாகும்.
மக்களை “முட்டாள்களின் சொர்க்கத்தில்” நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு, இந்தக் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு என்னென்ன உதவிகளைச் செய்யலாம் என்பது பற்றி இனியாவது உண்மையான ஆய்வு ஒன்றினை அதிகாரிகளைக் கொண்டு நடத்தி, அதிலே நல்ல முடிவுகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு கடன் நிவாரணமளித்தல், தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு அளித்தல் போன்றவற்றை வழங்குவது குறித்த முடிவெடுத்து; ஏடுகளின் வாயிலாக அவற்றை நாட்டுக்குத் தெரிவிக்க முதலமைச்சர் முன்வரவேண்டுமே தவிர - தவறான தகவல்களைத் தெரிவித்து நாட்டு மக்களை, குறிப்பாக விவசாயிகளைக் குழப்பாமல் இருப்பதே நல்லது.
அன்புள்ள, மு.க. 05-08-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 388–393. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.