முரசொலி கடிதங்கள் · 3592
என் விருப்பத்தை வெளியிடுகிறேன்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3592. என் விருப்பத்தை வெளியிடுகிறேன்!
உடன்பிறப்பே,
தி.மு. கழகத்தை மட்டுமே தாக்கிப் பேசிவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தோழர் ராமகிருஷ்ணன் தற்போது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வையும் சிதம்பரம் கூட்டத்தில் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். அவரது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்ட “தினமலர்”,
“உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் முதல் அணி நாங்கள் (சி.பி.எம்.) தான். நாங்கள் இல்லையென்றால் அ.தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. ஏற்றி விட்ட ஏணியை உதைத்து தள்ளியிருக்கிறார். சட்டசபை தேர்தலில் பலமான அணி அமைத்து வெற்றி பெற்றோம் என்பதை மறந்து விட்டு ஜெயலலிதா செயல்படுகிறார்”
என்று பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன், இன்றைய “தீக்கதிர்” நாளிதழிலே கூட,
“அரசே தனது குடிமக்களைக் கொல்லக் கூடாது என்ற இயக்கம் உலகளவில் வலுப்பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு முற்றிலும் மாறாக அரசு வன்முறை தலைவிரித்தாடுகிறது. காவல் துறையை சீர்திருத்துவதற்குப் பதிலாக கொம்பு சீவி விடுகிற காரியத்தை சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா அரங்கேற்றினார். அதன் தொடர் விளைவாக காவல்துறை கடிவாளம் இல்லாத குதிரையாக ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் எட்டு காவல் நிலை கொலைகள் நிகழ்ந்
துள்ளன. இது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் 8 காவல் நிலை கொலைகள் நடந்தன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் 5 மாதத்தில் காவல் நிலையங்களில் 8 பேரைக் கொன்று சாதனை படைத்து விட்டார்கள். அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் காவல் துறையினர் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற புகார் பரவலாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதுதான் குற்றங்கள் குறைவாக உள்ளது என்று ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது.”
என்று எழுதப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டைப் போல இந்த ஆண்டும் உயர்த்தி ஜெயலலிதா இன்று அறிவித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1500 விலை வழங்க வேண்டுமென்று விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதை கணக்கிலெடுத்துக் கொள்ளாத தமிழக அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக அரசின் இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க உதவாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் சிதம்பரம் கூட்டத்தில் பேசிய தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் “இந்தத் தேர்தலில் தி.மு.க. வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டியது நமது கடமை” என்று நம் மீதும் தேவையில்லாமல் சீறிப் பாய்ந்திருக்கிறார். எதற்காக தி.மு. கழகத்தை படுதோல்வி அடையச் செய்ய வேண்டுமென்று ராமகிருஷ்ணன் கூறுகிறார்? திராவிட முன்னேற்றக் கழகம் என்ன கொள்கைரீதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறுபட்டதா? நூற்றுக்கு நூறு என்று இல்லாவிட்டாலும், நூற்றுக்கு 95 சதவிகிதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை எதிர்க்கட்சியாக இருந்து பிரச்சாரம் செய்ததும்
- பிறகு அந்தக் கொள்கைகள் வெற்றியடைய போராடியதும் - ஆளுங்கட்சியாக இருந்து அந்தக் கொள்கைகளை சட்ட ரீதியாக நிறைவேற்றியதும் ராமகிருஷ்ணன் அறியாத செய்திகளா? மற்ற மார்க்சிஸ்ட் தோழர்கள் அதை அறிய மாட்டார்களா?
1971ஆம் ஆண்டு தி.மு. கழக அரசில் இந்தியாவிலேயே முதல் முறையாக “குடியிருப்பு அனுபோகதாரர்கள் (உரிமை வழங்கல்) சட்டத்தைக்” கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டுமனைகள் சொந்தமாக்கப்பட்டபோது - அதற்காக திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற விழாவில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தோழர் மணலி கந்தசாமி அவர்கள் “கம்யூனிஸ்ட் கட்சியினர் ரத்தம்சிந்தியும் நடைபெறாத காரியத்தை, கருணாநிதி ஒரு துளி மையினால் சாதித்துவிட்டார்” என்று கூறியது தோழர் ராமகிருஷ்ணனுக்குத் தெரியாத ஒன்றா?
வங்கிகளை நாட்டுடைமையாக்க பிரதமர் இந்திரா காந்தி முன் வந்தபோது - சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி - அவருக்கு தி.மு.கழகம் ஆதரவு அளித்ததும் - 1969 முதல் 1971 வரை நான் முதல் அமைச்சராக தமிழகத்தில் இருந்தபோது பேருந்துகளை நாட்டுடைமையாக்கியதும், போக்குவரத்துக் கழகங்களையெல்லாம் உருவாக்கியதும், குடிசை மாற்று வாரியம் கண்டதும், மேற்கு வங்கத்திலேயே இதுவரை நடைமுறைப்படுத்தாத கைரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பாடானவைகளா?
சோஷலிச சமுதாய அமைப்பைக் காண விரும்பும் ஒரு அரசு, நிலச் சீர்திருத்தத்தில் கண் துடைப்பாக காரியமாற்றாமல் படிப்படியாக முற்போக்கான சட்டங்களைக் கொண்டு வருவதில் முனைப்பாக இருந்திடல் வேண்டும் என்ற அடிப்படையில் தி.மு. கழக ஆட்சியில் நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் உபரி நிலம் என்று கண்டறிந்து, கைப்பற்றி, அதனை தகுதியுள்ள நிலமற்ற ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதும், அதில் 61 ஆயிரத்து 985 பேர் ஆதி திராவிடர்கள் என்பதும், 204 பேர் பழங்குடியினர் என்பதும் கம்யூனிசத்திற்கு
எதிரான கொள்கையா? இவைகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதம் என்று தோழர் ராமகிருஷ்ணன் கூறுகிறாரா?
நான் கடைப்பிடித்த மார்க்சிஸ்ட் கொள்கையின் விளைவாகத்தான் - மாக்ஸிம் கார்க்கி என்ற ரஷ்ய படைப்பாளியின் எழுத்தோவியமான “தாய்” காவியத்தை கவிதை வடிவில் எழுதி, அதற்கு முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களான தோழர்கள் என். சங்கரய்யா அவர்களும், ஆர். நல்லகண்ணு அவர்களும் அணிந்துரைகள் வழங்கியிருக்கிறார்கள். அந்த அணிந்துரைகளை தோழர் ராமகிருஷ்ணன் ஒருமுறை படித்துப் பார்த்தாலே கம்யூனிசத்தில் எனக்குள்ள ஈடுபாட்டினை அவர் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
அவ்வளவு ஏன்? தோழர் ராமகிருஷ்ணன் என்னுடன் கலந்து கொண்ட எத்தனையோ கூட்டங்களில், நான் பேசும்போது தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் என் வாழ்வில் சந்திக்காமல் இருந்திருப்பேனே யானால், நான் ஒரு கம்யூனிஸ்டாகத்தான் இருந்திருப்பேன் என்று குறிப்பிட்டதை அவர் மறந்திருக்க முடியாது!
நான் என்ன, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மாதிரி, குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி அவர்களை பதவியேற்பு விழாவிற்கு அழைத்தவனா? அல்லது அவர் அண்மையில் மேற்கொண்ட மூன்று நாள் உண்ணாவிரதத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி ஆதரவு தெரிவித்தாரே, அப்படி ஆதரவு கொடுத்தவனா? ஆனால் இதையெல்லாம் கண்ட பிறகும், அந்த அ.தி.மு.க. வோடு உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் உடன்பாடு கண்டிட முன் வந்து, அலையாய் அலைந்து மூன்று நாட்கள் பத்திரிகையில் வந்ததுபோல குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்காமல் அலைக் கழித்து பேரம் படியாமல் வெறுங்கையோடு திரும்பி வரும் நிலையை ஏற்படுத்தியவனா?
நான் முதலமைச்சர் பதவியிலே இருந்த போது, இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்னை கோட்டையிலே சந்தித்து, ஜெயலலிதாவும் அவருக்கு வேண்டியவர்களும் சிறுதாவூர் கிராமத்தில் தலித்துகளுக்காக
ஒதுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திக்கொண்டு விரட்டி விட்டார்கள், அதைப் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கேட்டவுடன், அந்தக் கோரிக்கையை ஏற்று நீதியரசர் சிவசுப்பிரமணியம் விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிட்டேனே தவிர, மார்க்சிஸ்ட்களின் இந்தக் கோரிக்கை எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமானது என்று கூறியா புறக்கணித்தேன்? எதற்காக தோழர் ராமகிருஷ்ணன் தி.மு.கழகத்தை படுதோல்வி அடையச் செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடான எத்தனை காரியங்களை தி.மு. கழக ஆட்சியிலே அடுக்கடுக்காக அறிவித்து நிறைவேற்றியிருப்பேன்? தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்து மூன்று இலட்சம் வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெறத் தொடங்கியதே, தற்போது அந்த வீடுகள் எல்லாம் என்ன ஆயிற்று? கம்யூனிஸ்ட்களுக்குத் தெரியாதா?
மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை; சென்னையில் மே தினப் பூங்கா; அரசு அலுவலர்களுக்கு ரகசிய குறிப்பேட்டு முறையை ஒழித்தது; மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதித் திட்டம்; பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிட சட்டம்; விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல்; உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிர்க்கு 33 சதவிகித ஒதுக்கீடு; பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்; அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பல்வேறு நல வாரியங்கள்; விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியச் சட்டம்; நமக்கு நாமே திட்டம்; போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம்; விவசாயிகளுக்கு கடன்ரத்து; சமச்சீர் கல்விச் சட்டம் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாமே; அனைத்தும் மார்க்சிஸ்ட்களுக்கு உடன்பாடான திட்டங்கள்தானே? எதற்காக தி.மு.க. வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டுமென்று தோழர் ராமகிருஷ்ணன் ஆசைப்படுகிறார்?
தோழர் ராமகிருஷ்ணன் இவ்வாறு கூறிய போதிலும், அந்தக் கட்சியில் உள்ள மற்ற தோழர்கள் அதனை ஏற்க மாட்டார்கள்
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகள் அல்ல. அவ்வப்போது நடைபெறுகின்ற தேர்தல்களில் உறவுகள், உடன்பாடுகள் வராமல் போகலாம். ஒரு தேர்தலில் தனித்தனி அணியிலே இருக்கலாம், மற்றொரு தேர்தலில் ஒரே அணியிலே இருக்கலாம். எனவே அடிப்படையிலே எதிரெதிர் முகாமிலே இருக்க வேண்டிய கட்சிகள் அல்ல என்பதையும், தேர்தலிலே ஓரிரு இடங்களில் பெறுகின்ற வெற்றி பெரிதல்ல என்பதையும் இனிமேலாவது தோழர் ராமகிருஷ்ணன் மனதிலே கொண்டு கருத்துக்களை தெரிவிப்பது நல்லது என்பதே எனது விருப்பம்!
அன்புள்ள, மு.க. 5-10-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 24–29. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.