முரசொலி கடிதங்கள் · 3593
அய்யகோ! அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிலம் அரோகரா!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3593. அய்யகோ! அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிலம் அரோகரா!
உடன்பிறப்பே,
சென்னை மாநகரத்தின் இதயம் போன்ற பகுதியில் அண்ணா மேம்பாலத்தை ஒட்டி அரசுக்குச் சொந்தமான 13 காணி 4 கிரவுண்ட் 1262 சதுர அடி நிலம் “தோட்டக்கலைச் சங்கம்” என்ற ஒரு அமைப்பின் பெயரில் தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்ற அ.தி.மு.க. பிரமுகரால் சுயலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது அங்குள்ள கட்டிடத்தை அவருடைய சொந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துவதாகவும், 1989 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது, வந்த புகார்களை யொட்டி நடவடிக்கை எடுத்து, விலை மதிப்பற்ற இந்த நிலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்விதப் பாதிப்புமின்றி தோட்டக் கலையை வளர்த்து, தோட்டக்கலை தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி ஊக்குவித்திட இந்த இடத்தை அரசு கையகப்படுத்துவதென முடிவு செய்து, தோட்டக்கலைச் சங்கத்துக்குத் தாக்கீது அனுப்பப்பட்டது.
கழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த முறையீட்டினை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் வருவாய்த் துறைச் செயலாளர்; தோட்டக்கலைச் சங்கத்திற்கு நேரடி விசாரணைக்கு; வாய்ப்பினை வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி வருவாய்த் துறைச் செயலாளர் நேரடியாகவே விசாரித்து, நிலம் முழுவதையும் அரசே திரும்ப எடுத்துக் கொள்வதென முடிவு செய்து, அதனடிப்படையில் அரசாணையும் 5-8-1989 அன்று
வெளியிடப்பட்டது. அரசாணையின்படி, சென்னை மாவட்ட ஆட்சியரும் நிலத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டதாக அரசுக்கு அறிக்கையும் அனுப்பினார்.
பொது நோக்கத்திற்காக, கழக அரசு மேற் கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, தோட்டக் கலைச் சங்கத்தின் சார்பில் மீண்டும் சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 1989இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு நிலுவையிலே இருந்த போதே, 1991இல் ஆட்சி மாறிய காரணத்தால் 1996ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர்நீதிமன்றம் 19-6-1998 அன்று பிறப்பித்த உத்தரவில், நிலத்தைத் திரும்ப எடுத்துக் கொண்ட கழக அரசின் ஆணையை ரத்து செய்தது. ரத்து செய்த இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு (தி.மு.க. அரசு) உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்தது. அதன் மீது 20-8-1998 அன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் (Status quo as on date shall be maintained) என்று தற்காலிகமாக உத்தரவிடப்பட்டது.
2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல்; வழக்கு நிலுவையில் இருந்தநிலையில்; 21-1-2004 அன்று அ.தி.மு.க. ஆட்சியில் - அரசின் எழுத்துப்பூர்வமான- அனுமதி இல்லாமலேயே; அரசு வழக்கறிஞர் - “நான் பெற்றிருக்கும் அறிவுரைகளின்படி, அரசு சார்பில் செய்துள்ள மேல் முறையீடுகளைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதி தரவேண்டும்” (As per instructions, I may be permitted to withdraw appeals) என்று உயர் நீதி மன்றத்தில் தெரிவித்து, தி.மு. கழக ஆட்சியில் தொடுத்திருந்த வழக்கினைத் திரும்பப் பெற்றுவிட்டார். இதில் அரசு வழக்கறிஞர் பின்பற்றிய முறை, அரசின் அலுவல் நடைமுறைகளுக்குக் கிஞ்சிற்றும் பொருந்தாததும், பொருத்தமில்லாததும் ஆகும்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்; அரசு வழக்கறிஞரே அப்படிக் கேட்டதற்குப் பிறகு உயர் நீதி மன்றமும் வேறுவழியின்றி தி.மு.கழக ஆட்சியில் தொடர்ந்த வழக்கினைத் திரும்பப் பெற அனுமதித்து; மேல் முறையீட்டினை ரத்து செய்து உத்தரவிட்டது. உடனடியாக
3-3-2006 அன்று, நிலத்தைத் திரும்பவும் தோட்டக்கலைச் சங்கத்திடமே ஒப்படைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே 2006ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால்; 3-3-2006 அன்று வெளியிடப்பட்ட அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், தி.மு. கழக ஆட்சியில் 7-7-2006 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்; தோட்டக்கலைச் சங்கத்தின் பிரச்சினை விவாதிக்கப்பட்டு தனிநபர் சுய லாப வேட்டையை ஆதரித்திடும் அ.தி.மு.க. ஆட்சியின் முடிவை ரத்து செய்து; உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கினைத் தொடர முடிவு செய்யப்பட்டது. அந்த மனு மீது, சென்னை உயர்நீதிமன்றம் 4-4- 2007இல் வழங்கிய ஆணையில் மேல்முறையீட்டு வழக்கினை நடத்திட அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, தோட்டக் கலைச் சங்கம் இந்திய உச்ச நீதி மன்றத்தில் பதிவு செய்த வழக்கு, 16-5- 2007 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதி மன்றத்தில் கழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களின் மீதான வழக்கில், உயர்நீதிமன்றம் 11-4-2008 நாளிட்ட தீர்ப்பில்; கழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுக்களை அனுமதித்தும்; நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள பிறப்பித்த கழக அரசின் ஆணையினை ரத்து செய்து தனி நீதிபதி 19-6-1998 அன்று வழங்கிய தீர்ப்பினை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. 11-4-2008 அன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் :-
“அரசாங்கத்தின் முன் அனுமதி பெறாமல்; வேளாண்
தோட்டக் கலைச் சங்கம் “உட்லண்ட்ஸ்-டிரைவ்-இன்
ரெஸ்டாரண்ட்”க்கு இந்த நிலத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே உள்குத்தகைக்கு விட்டிருந்தது. திரு.கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் கெளரவச் செயலாளராக ஆன பிறகு தனது சொந்த சொத்து போல இந்த நிலத்தைக் கையாள்வதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இச்சங்கத்தின்
நிதி முறைகேடுகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாவட்டப் பதிவாளர், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார். சங்கத்தின் மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கும்போது; அரசு பொது நோக்கங்களுக்காக நிலத்தைத் திரும்பப் பெறுவதற்குச் சொன்ன காரணங்களைப் புறக்கணித்துவிட்டு; நிரூபணமாகாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், “அரசியல் காழ்ப்புணர்வு காரணம்” என்று கூறி அவர்கள் தொடுத்த நீதிப் பேராணைகளை தனி நீதிபதி அனுமதித்துள்ளார். அரசின் அனுமதி பெறாமல் மிகப் பெரிய விளம்பரப் பலகைகளை நிறுவியுள்ளதாகவும் மற்றும் தரைப் பகுதிக்கு சிமெண்ட் வேலைகள் செய்திருப்பதாகவும் கழக ஆட்சியின் போது, தலைமைச் செயலாளர், தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆண்டு ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் செலவில் மலர்க் கண்காட்சியை நடத்தியதைத் தவிர கடந்த 20 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் சங்கத்தால் செய்ததாகக் காட்டப்படவில்லை. இத்துடன், மலர்க் கண்காட்சியை நடத்தியது தொடர்பாக அதிக அளவில் பணம் வசூல் செய்தும், அதில் குறைந்த அளவே செலவு செய்தும், நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் அச்சங்கத்தின் மீதும், அதன் செயலாளர் மீதும் உரிய அலுவலரால் விசாரணை செய்யப்பட வேண்டும். வருவாய் நிலை ஆணைகளின்படியும், அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படியும் காலங்காலமாக குடியிருக்க வசதியின்றியுள்ள ஏழை யெளிய மக்களுக்கு இருப்பிடம் வழங்க வேண்டுமென்ற நெறிமுறைகள் ஒரு புறம் இருக்க; இச்சங்கத்தின் வசம் நிலங்கள் உள்ளதாலும், அதன் ஒரு பகுதியை மட்டுமே தோட்டக் கலை வளர்ச்சிக்காக அவர்கள் பயன்படுத்தி வருவதாலும், அரசால் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை சங்கத்தின் கெளரவச் செயலாளர் திரு.வி.கிருஷ்ண மூர்த்தி தனது சொந்த உபயோகத்திற்காக அதாவது வாடகைக்கார் மற்றும் மீனா அட்வர்டைசர்ஸ் என்ற பெயரிலான
விளம்பர நிறுவனத்திற்கும் பயன்படுத்தி வருவதாக ஆவணங்களின் மூலம் தெரிய வருவதால், மேற்படி நிலங்களைத் திரும்பப் பெறுவது குறித்த அரசின் நட வடிக்கையில் எவ்விதத் தவறும் இருப்பதாகக் கருத இயலாது. திரு.வி.கிருஷ்ணமூர்த்தி தனது மனுவில் கார் மற்றும் விளம்பர நிறுவன வியாபாரம் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நிலம் ஏற்கனவே அரசின் வசம் உள்ளதைக் கருத்தில் கொண்டும் அரசின் தலைமைச் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலும் இந்நிலங்கள் பொதுக் காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உள்குத்தகைதாரர் தானாகவே இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. உடன்பிறப்பே, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணையின் தொடர்ச்சியாக; தோட்டக் கலை கிருஷ்ணமூர்த்தி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், உச்சநீதிமன்றம் 13-11-2009 அன்று வழங்கிய இடைக்கால ஆணையில் இந்த நிலம் ஏற்கனவே அரசின் கைவசம் உள்ளதால், தோட்டக் கலையின் மேம்பாட்டிற்காக அதைத் தொடர்ந்து அரசு பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி விட்டது. எனவே சென்னை மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலைச் சங்கத்திடமிருந்து நிலத்தை எடுத்து, அரசு-தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலத்தில் - சுற்றுப்புறச் சூழலைப் பேணிக் காத்திடவும், மலர்கள் - மூலிகைகள் - தாவரங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பொது மக்கள் உணர்ந்திடவும், தோட்டக்கலை ஆராய்ச்சிகளை ஊக்குவித்திடவும், பெரிய பூங்கா ஒன்றினை உருவாக்கிடத் திட்டமிட்டு; அதனைப் படிப்படியாக நிறைவேற்றிட முடிவு செய்து; முதலில் “டிரைவ்-இன்- உட்லண்ட்ஸ்” இருந்த பகுதியில் மிகச் சிறந்த பூங்கா ஒன்றினை உருவாக்கி அதனை நான் திறந்து வைத்தேன். அந்தப் பூங்காவை இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் அன்றாடம் கண்டுகளித்து வருகின்றனர்.
பூங்காவுக்கு எதிர்ப்புறம், தோட்டக்கலைச் சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தில் பூங்காவினை விரிவாக்கம் செய்வதற்கு முன்; இடத்தைக் காலி செய்து அரசிடம்
ஒப்படைக்கக் கோரி தோட்டக்கலைச் சங்கத்திற்கு 15-12-2010, தி.மு. கழக ஆட்சியின் போது அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் அனுப்புவதற்கு முன் நூறாண்டுகளுக்கு வில்லங்கங்கள் சரிபார்க்கப்பட்டு அந்த நிலம், அரசு நிலம் தான் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டீசுக்கெதிராக, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் அந்தச் சங்கத்திற்கு நேரடி விசாரணைக்கு வாய்ப்பளித்திடும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கிணங்க 2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் நேரடி விசாரணைக்கு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் மே திங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் வரை நேரடி விசாரணைக்காக தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆஜராகவில்லை. பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, 15-7-2011 அன்று அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் முன்பு திடீரென ஆஜராகி சில ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார்.
சென்னை மாவட்ட ஆட்சியரும், எங்கிருந்தோ செலுத்தப்பட்ட செல்வாக்கிற்கும், நெருக்கடிகளுக்கும், அரசியல் மேலாதிக்கத்திற்கும் பணிந்து - அரசு வழக்கறிஞரின் கருத்துரையினை ஒப்புக்காகப் பெற்று, தோட்டக்கலைச் சங்கம் அமைந்துள்ள 4 காணி 18 கிரவுண்ட் 1683 சதுர அடி நிலம் அந்தச் சங்கத்திற்கே உரியது என்று 22-8-2011 அன்று அ.தி.மு.க. ஆட்சியிலே உத்தரவிட்டுள்ளார்.
நிரந்தர நிலப்பதிவேட்டில் இந்த நிலம் அரசு நிலம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லங்கம் சரி பார்த்ததில் இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானதென்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த நிலம் தொடர்பாக நடந்து வரும் வழக்குகளில் எந்தக் கட்டத்திலும் இந்த நிலம் தோட்டக்கலைக்குச் சொந்தமானது என்று சொல்லப்படவில்லை. இந்த நிலம் அரசு நிலம் என்பதால்தான் தோட்டக்கலைச் சங்கத்திடமிருந்து கைப்பற்றி, தமிழக அரசின் துறைகளில் ஒன்றான தோட்டக் கலைத் துறையிடம் 8-5-2008 அன்று கழக ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டது.
நிலைமைகள் இவ்வாறிருக்க, இந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் சங்கத்திற்குச் சொந்தமானதென முடிவு
செய்ய, எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அரசுக்குச் சொந்தமான இடம் என்று ஏற்கனவே முடிவு செய்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர்தான். தற்போதுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அந்த இடம் அரசுக்குச் சொந்தமானதல்ல என்று கூறச் செய்து, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு தாரைவார்க்க; ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள்தான் ஊழல் இல்லா நிர்வாகத்தை நடத்தப் போகிறார்களாம்.
உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் - அ.தி.மு.க. ஆட்சியினர் செய்துள்ள இந்தப் பெரிய ஊழலை வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்தத் தேர்தல்களில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமேயானால் ஊழல்கள் தொடர வழி பிறக்கும் என்பதை நாட்டு மக்கள் நினைவிலே கொள்ள வேண்டுகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் “நில அபகரிப்பு” என்ற பெயரில் எதிர்க்கட்சியினர் மீது ஏராளமான பொய் வழக்குகளைப் புனைந்து வரும் வேளையில்; சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில், 200 கோடி ரூபாய்க்கும் குறைவில்லாத மதிப்புடைய அரசு நிலம்; அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஆசிகளோடும், அதிகாரிகளின் துணையோடும் அபகரிக்கப்படும் அநீதியை நல்லவர்களும், நடுநிலை நாளேடுகளும் தட்டிக் கேட்க முன் வர வேண்டாமா? “நல்லவர்கள் நமக்கென்ன என்று இருந்துவிட்டால் நாடு என்னாவது?” என்று அறிஞர் அண்ணா அவர்கள் அன்று கேட்டதை; இம்மாநிலத்தில் உள்ள அனைவர்க்கும் இன்று நினைவூட்டுகிறேன்!
அன்புள்ள, மு.க. 10-10-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 30–36. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.