முரசொலி கடிதங்கள் · 3596
சிற்றூர், பேரூர் தேர்தல்களிலும் சில்மிஷங்கள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3596. சிற்றூர், பேரூர் தேர்தல்களிலும் சில்மிஷங்கள்!
உடன்பிறப்பே,
உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் எப்படி நடைபெற்றன, வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றிய விவரங்கள் ஒரு சில நாளேடுகளில், வார இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற எதிர்க் கட்சியினர் தோற்றதாகவும், தோற்றுப்போன ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றதாகவும் அங்கங்கே அறிவிக்கப்பட்டன என்றும், அந்த முறைகேடுகளில் சிலவற்றை ஏடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியுற்ற இடங்களில் அ.தி.மு.க.வினர் தோல்விகளை தாங்கிக் கொள்ளாமல் அராஜகத்தின் உச்சத்திற்கு சென்று - வெற்றி பெற்றவர்களை தாக்குவது, அவர்களின் இல்லங்களை சூறையாடுவது, கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்குவது, ரவுடிகளின் துணையோடு வீடு புகுந்து வீட்டில் இருக்கும் பெண்களை தாக்குவது என்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். காவல் துறை அதிகாரிகளே அதற்கு துணை போகிறார்கள்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் 21ம் தேதி இரவு சீயாத்தமங்கை தி.மு.க. தேர்தல் அலுவலகத்திற்குள் புகுந்து மேசை, நாற்காலிகள், மின் விசிறிகள் ஆகியவற்றை அடித்து உடைத்து நொறுக்கியதுடன் அலுவலக வாசலில் இருந்த 11க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினார்கள். மேலும் அருகில் இருந்த தி.மு.க. கிளைச் செயலாளர்
முருகவேல், அவரது அக்கா இந்திராணி ஆகியோர் வீடுகளை உடைத்ததுடன் - தி.மு.க. வினரையும் தாக்கியுள்ளனர். இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த சீயாத்தமங்கை நடுத்தெருவைச் சேர்ந்த முன்னாள் கிளைச் செயலாளர் குணசேகரன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அ.தி.மு.க. வினரின் வன்முறைக் கும்பல் தி.மு.க. தேர்தல் ‘பூத்’ அலுவலகத்திற்கு தீ வைத்தனர். தி.மு.க.வினர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அ.தி.மு.க.வினர் மீது உடனே நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும் சீயாத்தமங்கை ஊராட்சி மன்றத் தலைவருமான அன்பழகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அ.தி.மு.க.வினரை தி.மு.க.வினர் தாக்கியதாக திட்டச்சேரி போலீசில் அ.தி.மு.க. வினர் பொய்ப் புகார் கொடுத்தனர். இதையடுத்து தி.மு.க. கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசார் ஆளும்கட்சிக்கு ஆதரவாக தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி மன்றத் தலைவராக தி.மு.க. வேட்பாளர் திருநீலகண்டன் 201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருநீலகண்டன் வெற்றி பெற குத்தாலம் ஊராட்சி புலவநல்லூரைச் சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சுரேஷ் (எ) கோவிந்தராஜ் தேர்தல் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 21ம் தேதி சுரேசின் மனைவி லதாவிற்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடன் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்க வீட்டை பூட்டிவிட்டு சுரேஷ் குழந்தைகள் இருவரையும் தனது தந்தை ராமலிங்கத்திடம் விட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் 22ம் தேதி மாலை 6 மணியளவில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தி.மு.க.விடம் தோல்வி அடைந்த ரவி (எ) சிவக்குமார் தனது அ.தி.மு.க.வை சேர்ந்த ரவுடி குண்டர்களுடன் பயங்கர ஆயுதங்களுடன் சுரேஷின் வீட்டிற்கு சென்று வீட்டின் ஜன்னல்கள் கண்ணாடிகளை உடைத்து வாசலில் இருந்த சைக்கிள், நாற்காலி போன்ற பொருட்களை உடைத்து நொறுக்கி பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து
வீட்டிற்குள் இருந்த டி.வி, விலை உயர்ந்த நாற்காலி, சோபா, மின்விசிறி, கட்டில் போன்ற பொருட்களை உடைத்து ‘பூஜை’ அறைக்குள் சென்று அங்கிருந்த படங்கள் - பூஜை பொருட்களை உடைத்து படுக்கை அறைக்குள் புகுந்து இரண்டு பீரோக்களை உடைத்து பீரோவில் இருந்த பொருட்களை அள்ளி வீசி அதில் இருந்த 7 பவுன் நகை, 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களையும் திருடிக் கொண்டும் சமையல் அறையில் இருந்த வீட்டு சாமான்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
சுரேசின் வீட்டுக்கு வந்த அவரது தந்தை ராமலிங்கத்தை உருட்டுக் கட்டையால் தாக்கி சுரேசின் குழந்தைகளையும் அடித்துள்ளனர். பின்னர் பக்கத்து வீடான சுரேசின் சகோதரர் வீட்டையும் அ.தி.மு.க. ரவுடி கும்பல் உடைத்துள்ளது. அப்போது கிராமமக்கள் திரண்டதால் அ.தி.மு.க. கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசில் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ளனர். நடவடிக்கை இல்லை.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் “இருக்கை” ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதில் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் இஸ்லாமிய சமுதாயத்தினர் தி.மு.க. விற்கு வாக்கு அளித்ததால்தான் தாங்கள் தோற்றதாகக் கூறி 22ம் தேதி அதிகாலை தொழுகையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த “இருக்கை” பள்ளிவாசலில் உலமாவான (அஜரத்) சதக்கத்துல்லா (வயது 35) வீட்டு வாசலில் வழி மறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை தி.மு.க. பிடித்ததற்கு இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்று கூறி தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பள்ளிவாசல் உலமா சதக்கத்துல்லா நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருவாரூர் ஒன்றிய பள்ளிவாரமங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, தி.மு.க.வைச் சேர்ந்த சேகரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதனும் போட்டியிட்டனர். இதில், தி.மு.க. வேட்பாளர் சேகர் அதிக வாக்குகள் பெற்ற போதிலும், அ.தி.மு.க.வின் ஜெகநாதன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்துள்ளதால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி, பள்ளிவாரமங்கலம் பகுதி மக்கள் அங்குள்ள கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த துரைராஜ் வெற்றி பெற்றார். இங்கு தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர், தி.மு.க. வினரின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அய்ரசி என்பவர், திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை படம் எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களையும், எதிர்க் கட்சியினர் கண்மூடித்தனமாக தாக்கி, கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
உத்திரமேரூர் அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர், ஏ. கணேசன் அடாவடி நடவடிக்கைகள் மீது வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற 12வது வார்டு தி.மு. கழக வேட்பாளர் ரமேஷ் புகார் அளித்தும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், தூண்டுதல் பேரில், சங்கர், திவாகர் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. வினர் கும்பலாக கழகத் தோழர் ரமேஷின் வீட்டிற்கு வந்து ரமேஷின் தாயாரை ஆபாசமாக பேசி ரகளை செய்தனர். அது பற்றியும் ரமேஷ் வாலாஜாபாத் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். காவல் துறையினர் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்த காரணத்தினால், அதிர்ச்சியடைந்த ரமேஷ் அங்கேயே இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
சேலம் மாவட்டத்தில் முத்தாம்பட்டி ஊராட்சி மன்ற 8வது வார்டு உறுப்பினராக செட்டி என்பவரும், 4வது வார்டில் பழனி என்பவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று அவர்களின் வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மல்ல மூப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராணி 19 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் வழங்காமல் அ.தி.மு.க. வைச் சேர்ந்த குமார் வெற்றி பெற்றதாக மீண்டும் அறிவித்து, சான்றிதழை அவரிடம் வழங்கி விட்டார்கள்.
இந்தப் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்தபோது, அதனை ஏற்க மறுத்ததோடு, அந்தப் புகாரை
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறலாம் என்றும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் தேர்தல் ஆணையர் கூறி விட்டாராம்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இருக்கும் தும்மலப்பட்டி ஊராட்சித் தலைவருக்கு தி.மு.க. கதிரேசனும், அ.தி.மு.க. நாட்டுதுரையும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணப்பட்ட போது 41 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. கதிரேசன் வெற்றி பெற்றதாக பி.டி.ஓ. பழனியப்பன் அறிவித்தார். அப்போது மேலேயிருந்து அவருக்கு தொலைபேசிகள் தொடர்ந்துவர, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை இரவு 3 மணி வரை கதிரேசனுக்குத் தராமல் இழுத்தடித்த பி.டி.ஓ. ரகசியமாக அ.தி.மு.க. நாட்டுதுரையிடம் கொடுத்துவிட்டு போய்விட்டார்.
கோயில் அம்மாப்பட்டி ஊராட்சியில் 16 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. வேலவனுக்கு பதிலாக, தோற்றுப்போன அ.தி.மு.க. சக்திவேல் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
வந்தவாசி பகுதியில் உள்ள எரமலூர் ஊராட்சி மன்றத் தலைவராக, தி.மு.க. வைச் சேர்ந்த மீராதேவி அறிவிக்கப்பட்டார். அப்போது அ.தி.மு.க. பிரமுகரான ரமேஷ், “நடப்பது எங்கள் ஆட்சி, அதனால் என் மனைவி ரமா வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்”என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். தி.மு.க. மீராதேவிக்கு விழுந்த வாக்குகளில் சிலவற்றை கிழித்தெறிந்து விட்டு, மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை என்று கூறி, அதிலே அ.தி.மு.க. ரமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாம்சேத்தி ஊராட்சி தேர்தலில் சி.பி.ஐ. தோழர் ஆசைத்தம்பி 2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காலையில் சான்றிதழைப் பெறலாம் என்று கூறியதால் அவர் வீடு சென்றார். காலையில் சான்றிதழ் பெற அவர் வந்தபோது, முதல் நாள் இரவே ஆளுங்கட்சியினர் மிரட்டலுக்குப் பயந்து, அ.தி.மு.க. ராசேந்திரன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்கள். ஆசைத்தம்பி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று சொன்னதால், அவரிடமும் ஒரு வெற்றிச் சான்றிதழை பி.டி.ஓ. கொடுத்தார். இருவரிடமும் வெற்றிச் சான்றிதழ் இருந்ததால் யார் பதவி ஏற்பது என்ற
பிரச்சினை எழுந்தபோது, பி.டி.ஓ. இருவருக்கும் தொலைபேசி செய்து, ஒருவர் சான்றிதழை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால், நீண்ட போராட்டத்திற்குப் பின் ஆசைத்தம்பி, (சி.பி.ஐ.) அங்கே பதவியேற்றார்.
மன்னார்குடி ஒன்றியத்தில் 5வது வார்டுக்குப் போட்டியிட்ட தி.மு.க. சுப்பையன் 945 வாக்குகள் பெற்று தனக்கு பின்னால் வந்த அ.தி.மு.க. சேகரை தோற்கடித்தார். இந்தச் செய்தி தேர்தல் ஆணையத்தின் இணையதளம் முதல் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. மறுநாள் வெற்றி சான்றிதழ் வாங்கச் சென்ற தி.மு.க. சுப்பையனுக்கு அதிர்ச்சி. 927 வாக்குகள் மட்டுமே பெற்ற அ.தி.மு.க. சேகர் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கப்பட்டார். தீக்குளிக்கப் போன சுப்பையனை நண்பர்கள் சமாதானம் செய்துள்ளனர். அதிகாரிகளோ, “நாங்கள் என்ன செய்றதுங்க, ஆளுங்கட்சிக்காரர்கள் மிரட்டி வெற்றிச் சான்றிதழை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டத்தில், தாரமங்கலம் ஒன்றியத் தலைவர் பதவிக்கு மாதேஸ் என்பவர் அ.தி.மு.க. சார்பில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ மாதேசுக்கு சீட்டு கொடுக்காமல், காங்கேயன் என்பவரை தலைவர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். மாதேஸ் தனது ஆதரவாளர்களோடு சுயேச்சையாக களம் இறங்கியதோடு, அமைச்சரின் வேட்பாளரான காங்கேயன், அதே ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக இருப்பதாக நிரூபித்து, அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வைத்து விட்டார். ஒன்றியக் குழுவுக்கு தேர்வு பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் தனக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்பதை புரிந்துகொண்ட அமைச்சர் பழனிச்சாமி, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த ஆறு அ.தி.மு.க. உறுப்பினர்களையும் கடத்திக் கொண்டு வரும்படி தாரமங்கலம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சின்னச்சாமிக்கு உத்தரவிட்டார். அவரது கடத்தலுக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு காவல்துறையினருக்கும் அமைச்சரே உத்தரவிட்டார். அதன்படி 25ந்தேதி காலையில் ஓமலூர் துணை கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன், மற்றும் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்களை கடத்த
காவல் துறையினர் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருந்தனர். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சின்னசாமியின் ஜீப் மற்றும் ஒரு “ஸ்கார்ப்பியோ” காரை மட்டும் அலுவலக வளாகத்திற்குள் செல்ல காவல் துறையினர் அனுமதித்திருக்கிறார்கள்.
ஒன்றியக் குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டு முதலில் வெளியே வந்த அ.தி.மு.க. பெண் உறுப்பினர்களான சுமதி, சாந்தி ஆகியோரையும், மாணிக்கம் என்ற கவுன்சிலரையும் போலீசார் ஒன்றியச் செயலாளரின் ஜீப்பில் ஏறும்படி கூற, அதற்கு அவர்கள் மறுக்க, இறுதியாக போலீசார் அவர்களை குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் ஜீப்பில் ஏற்றியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த மாதேஸ், கூச்சலிட, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து அடித்து உதைத்திருக்கிறார்கள். இதைக் கண்ட மாதேசின் ஆட்கள் போலீசாரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அதைப் பயன் படுத்திக் கொண்டு ஜீப்பில் அடைபட்டிருந்த பெண் கவுன்சிலர்கள் போலீசாரை தள்ளி விட்டு விட்டு வெளியே வந்துவிட்டார்கள். இந்த நிலையில் மாதேசுக்கு எதிராக காங்கேயனை விட்டு போலீசில் ஒரு புகாரையும் அமைச்சர் கொடுத்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற “திருவிளையாடல்”களில் ஒரு சிறு துளி இது!
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை அ.தி.மு.க. அரசு நடத்திய லட்சணம்தான் இந்த விவரங்கள்!
அன்புள்ள, மு.க. 1-11-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 50–56. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.