அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3599

முரசொலி கடிதங்கள் · 3599

அய்யரின் மனசாட்சியே அதைக் சொல்லும்!

நாள் 8.11.2011சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3599. அய்யரின் மனசாட்சியே அதைக் சொல்லும்! உடன்பிறப்பே,

தமிழ் மாநிலத் தேர்தல் ஆணையர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு மாநில முதலவர் தனது செல்வாக்கால் தேர்தல் பணிகளில் குறுக்கிடாம இப்படியொரு உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியுமான்னு தேர்தலைப் பார்வையிட வெளிமாநிலங்களிலிருந்து வந்த தேர்தல் ஆணையர்களே ஆச்சரியப்பட்டாங்க” என்று கூறியிருக்கிறார். அவர் அவ்வாறு தமிழக முதல் அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்திருப்பதிலிருந்தே, அவர் யார் என்பதை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

ஓர் அரசு அதிகாரியைப் பற்றி, அவர் ஒரு பதவியிலே அமர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு அவரது நடவடிக்கைகளைக் கண்ட பிறகு தான் அவர் நடுநிலையாக நடக்கவில்லை, ஒருதலைப் பட்சமாக நடக்கிறார் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அய்யரைப் பொறுத்த வரையில், தேர்தல் ஆணையர் பதவியில் அமர வைக்கப்பட்டவுடனேயே அவரைப் பற்றி அனைத்துக் கட்சிகளும், அவர் அ.தி.மு.க. ஆளாயிற்றே, அவரைப் போய் தேர்தல் ஆணையராக நியமிக்கிறார்களே, விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் வரப்போகிறதல்லவா, அதனால்தான் அவரை ஆளுங் கட்சிக்கு அனுசரணையாக நடப்பதற்காக என்றே, அ.தி.மு.க. அரசு அவரைத் தேர்ந்தெடுத்து, தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் ஏடுகளில் வெளி வந்ததை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால், தேர்தல் ஆணையரைக் கேள்வி கேட்ட “குமுதம்” செய்தியாளரே -- “ஆளுங்கட்சிக்கு ஆதரவா நீங்க செயல்பட்டீங்கங்கிற விமர்சனமும் ஒரு பக்கம் இருக்கே?” என்றும் - “தமிழ்நாடு அமைதிப் பூங்காவா இருக்கிறதா

தேர்தலுக்கு முன்னும் பின்னும் சொன்னீங்க, இது தேர்தல் ஆணையருக்கான வரம்பை மீறிய பேச்சு இல்லையா?” என்றும் - கேட்டிருப்பதிலிருந்தே அய்யா எப்படிப்பட்ட அதிகாரி என்பதையும் அவர் தனது பொறுப்புக்கான வரம்புகளையெல்லாம் மீறி எந்த அளவிற்கு தமிழக அரசைப் புகழ்ந்து தள்ளுகிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறதா அல்லவா?

தேர்தல் ஆணையர் எந்த அளவிற்கு ஆளுங் கட்சியான அ.தி.மு.க.விற்கு வேண்டியவர் என்பதைப் பற்றி கழகத்தின் சார்பில் ஆளுநரிடமே புகார் மனு தரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆளுங்கட்சிக்கும், ஆளுங்கட்சியினருக்கு வேண்டியவர்களுக்கும் உதவி செய்ய வேண்டுமென்பதற்காகவே திரு. அய்யர் அவர்கள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். உள்ளாட்சி மன்றத் தேர்தலில், இந்த அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாளராக இருந்த காரணத்தினால்தான், ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தெரிவித்துவிட்டு - மற்றக் கட்சிகளையெல்லாம் இருளிலே ஆழ்த்திடும் வகையில், 22-9-2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்க இருக்கையில்,

21-9-2011 அன்றுதான் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தேர்தல் அட்டவணையை அறிவித்தபோது தனித் தொகுதிகள், பெண்களுக்கான தொகுதிகள் எவை எவை என்பதை அறிவிக்கவில்லை. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் வாக்காளர்களும் தேர்தல் பற்றிய விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்த நேரத்தில் ஆளுங்கட்சி பல நலத் திட்டங்களை அறிவித்ததை, தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தவிதமான நடவடிக்கையையும் ஆணையர் எடுக்கவே இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக தமிழக அரசின் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டார்கள். அதையும் தேர்தல் ஆணையர் கண்டுகொள்ளவில்லை.

உள்ளாட்சித் தேர்தல்களை பாரபட்சமின்றி நேர்மையாக நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் வழக்கு தொடர்ந்தபோது, தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால்

அவர்களும், நீதிபதி சிவஞானம் அவர்களும் 14-10-2011 அன்று வழங்கிய தீர்ப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்குப்பதிவை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டனர். மற்ற இடங்களைப் பொறுத்தவரை பதற்றமான வாக்குச்சாவடிகளை வீடியோ பதிவு செய்வதுடன், உள்ளூர் காவலர்களுக்கு சரிசமமாக வெளிமாநிலக் காவல்துறையினரையும் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். “வெப்-காமரா” மூலம் வாக்குப் பதிவை பதிவு செய்து நேரடியாக ஒளிபரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர். ஆனால் அய்யர் தலைமையிலான தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகளின்படி செயல்படவே இல்லை. சென்னை மாநகரில் பல வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படவே இல்லை என்பதை சென்னை வாழ் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கண்டார்கள். ஏடுகள் எல்லாம் அதைப் பற்றி விரிவாக எழுதின. பிற மாநிலங்களிலிருந்து போதுமான காவல் துறையினர் பெறப்படவில்லை.

19-10-2011 அன்று சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் இதுபற்றி பிறப்பித்த உத்தரவில் “சென்னை மாநகர மேயர் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களும், கவுன்சிலர் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களும் உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும். எந்தெந்த வாக்குச் சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்பட்டதோ அதனை நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் இது குறித்து இரண்டு வார காலத்திற்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்கள் என்றால், தேர்தல் ஆணையர் தேர்தல் முறையாக நடைபெற்றது என்று சொல்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும் வாக்குப் பதிவின்போது சென்னை யிலும் மற்றும் பல்வேறு நகரங்களிலும் ஆளுங் கட்சியினர் பயங்கரமான வன்முறைகளிலே ஈடுபட்டார்கள். கழகத்தினர் பலர் தாக்கப் பட்டார்கள். அவைகளைப் பற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வாக்குப் பதிவை வீடியோ எடுக்கும் பணிக்காக 85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், வெறும் ஏழு இலட்ச ரூபாய் மட்டுமே அதற்காக செலவிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரமே தவறானது என்றும், சுயேச்சைகளின் வெற்றியை எல்லாம் அ.தி.மு.க.வின் வெற்றியாக கணக்கிலே எடுத்துக் கொண்டு வெளியிட்டிருக்கிறது என்றும் “நக்கீரன்” தெரிவித்த செய்திக்கு தேர்தல் ஆணையம் இன்றுவரை ஏன் பதிலளிக்கவில்லை என்பதில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் தகுதி எத்தகையது என்று தெரிகிறது அல்லவா?

நடுநிலையோடு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையர், ஒரு கட்சிக்காரரைப் போல அளித்த பேட்டியில், கடந்தகாலத்து உள்ளாட்சித் தேர்தலில் ஒரு நகராட்சியில் நகராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க காலையில் நகராட்சி உறுப்பினர்கள் கூடியார்கள் என்றும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் ஆனால் ஓட்டுப்போட்டது சம்பந்தப்பட்ட நகராட்சியின் ஆணையர் என்றும், அதற்கு அவர் சொன்ன காரணம் நகராட்சி உறுப்பினர்கள் 16 பேருக்கும் பார்க்கும் திறன் இல்லை என்றும், அவர்களுக்காக நான் ஓட்டுப் போட்டு உதவி செஞ்சேன் என்றும் கூறினார் என்றும் சொல்லியிருக்கிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த நகராட்சியில் இவ்வாறு நடைபெற்றது, அதற்கு என்ன ஆதாரம், ஏதாவது ஏடுகளிலே அப்படி செய்தி வந்ததா என்பதையும் எழுதியிருந்தால் எது உண்மை என்பது தெரிந்திருக்கும்! ஒரு நகராட்சியில் வெற்றி பெற்ற அத்தனை கவுன்சிலருக்கும் பார்க்கும் திறன் இல்லை என்று ஒரு நகராட்சியின் ஆணையரே சொல்லுவாரா? பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்ல வேண்டாமா? எந்த அளவிற்கு இன்றைய தேர்தல் ஆணையர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? இப்படியெல்லாம் இந்த அய்யர் சொல்வார் என்பதால்தானே இவரைத் தேடிப் பிடித்து இந்தப் பதவியிலே அ.தி.மு.க. அரசு நியமித்திருக்கிறது!

அய்யர் தனது பேட்டியில், இந்தத் தேர்தலில் ஒரு மோசடி நடந்ததுன்னு யாராவது சொல்லட்டும் பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார். அய்யர் ஆணையராக இருந்து செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு இதோ ஒருசில உதாரணங்கள் :-

பழனி அருகே அ.தி.மு.க.வினர் வாக்குச் சாவடியை உள்புறமாக பூட்டிக் கொண்டு கள்ள வாக்குகளைப் போட்டார்கள். நெல்லை அருகே சுயேச்சை வேட்பாளர் ஒருவரை தாக்கி விரட்டி விட்டு, அ.தி.மு.க.வினர் கள்ள வாக்குகளை பதிவு செய்தார்கள். சென்னையில் திரு.வி.க. நகர் 76வது வார்டில் அடக்குமுறை அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மேலும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி வன்முறையிலே இறங்கினர். எதிர்க்கட்சியினர் பலர் வெட்டி தாக்கப்பட்டனர். மன்னார்குடி அருகே அ.தி.மு.க.

வேட்பாளரின் அட்டூழியத்தால் மக்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலர்களிடமிருந்து அ.தி.மு.க.வினர் பூத் சிலிப்புகளை பறித்து தங்கள் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே அவற்றை விநியோகித்தனர். இவ்வளவிற்கும் பிறகு தேர்தல் ஆணையர், தேர்தல் மிக அமைதியாக நடந்தது என்று செய்தியாளர்களுக்கு அறிவித்தார். 239 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டுமென்று வைத்த கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் ஏதோ ஒப்புக்காக ஏழு வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடை பெற்றது. பழநி நகர மன்றத் தலைவருக்கான தி.மு.கழக வேட்பாளர் வேலுமணி அ.தி.மு.க. வினரின் தூண்டுதல் பேரில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 6வது வார்டு உறுப்பினர் க. முத்துகுமார் 125 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாநிலத் தேர்தல் ஆணையப் பட்டியலிலேயே வெளியிடப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. தலையீட்டின் காரணமாய், மறு வாக்கு எண்ணிக்கை நடத்திட உத்தரவிட்டு, தி.மு.க. வேட்பாளரையும் முகவர்களையும் மிரட்டிவிட்டு, அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் 8வது வார்டு ஊராட்சிக் குழு - 9வது வார்டு ஊராட்சிக் குழு - காளையார்கோவில் 7வது வார்டு ஊராட்சிக் குழு ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, தி.மு.க. வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை, அ.தி.மு.க. வேட்பாளருக்கு கிடைத்த

வாக்குகளுடன் சேர்த்து எண்ணி, அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியத்தில், தெசவிளக்கு ஊராட்சித் தலைவராக போட்டியிட்ட எம்.எஸ்.கிருஷ்ணன் 30 வாக்குகளில் வெற்றி பெற்றார். ஆனால் அ.தி.மு.க. வினரின் தலையீட்டின் காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் பூந்தோட்டம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் இரா. செல்வகுமார் 14 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அது மாநிலத் தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்ட பிறகு, அ.தி.மு.க. தலையீட்டின் காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தில் வளையாத்தூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருமதி ஆர். சாந்தி, மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவித்துவிட்டு, இரவு 11 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளர் 9 வாக்குகள் அதிகம் பெற்றதாகக் கூறி, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் 16வது வார்டு ஒன்றியக் குழுவில் தி.மு.க. வேட்பாளர் டி.சி. சக்திவேல் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அ.தி.மு.க. வைச் சேர்ந்த பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. பொன். ராஜா வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்து, அதிகாரிகளை மிரட்டி, அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்தார்.

சோழவரம் ஒன்றியக் குழு 8வது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, தி.மு.க. வேட்பாளர் ஜே. கிருபாவதி வெற்றி பெற்றதை மாற்றி, அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் 2வது வார்டு உறுப்பினர் தேர்தலில், தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மா. ரகு அவர்களையும் அவரது முகவர்களையும் தேர்தல் அதிகாரிகள், மற்றும் காவல் துறை அதிகாரிகள் மிரட்டி

அப்புறப்படுத்திவிட்டு, அ.தி.மு.க.வினரை மட்டுமே வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியக்குழு 2வது வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருமதி சரோஜா வாக்கு எண்ணிக்கையின் போது மூன்று வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தபின், ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வின் தூண்டுதலின்பேரில் மறுவாக்கு எண்ணிக்கை என்று அறிவித்து, அந்த மறு வாக்கு எண்ணிக்கையிலும் தி.மு.க. வேட்பாளர் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனாலும் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

குன்னூர் ஒன்றியம் 8வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் திருமதி லட்சுமி வெற்றி பெறும் சூழ்நிலையில், உதய சூரியன் சின்னத்தில் விழுந்த வாக்குகளை இரட்டை இலை சின்னத்தின் கட்டில் சேர்த்து, அ.தி.மு.க.வினர் மிரட்டலுக்குப் பணிந்து அதிகாரிகள் துணையுடன் இரண்டாவது முத்திரையை குத்தி செல்லாத வாக்குகளாக செய்து, அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், 17-10-2011 அன்று மதியம் 2.30 மணிக்கு மேல் அமைச்சர்கள் செந்தமிழன், கோகுல இந்திரா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி. கலை ராஜன், வெற்றிவேல், பா. வளர்மதி ஆகியோர் தலைமையில் பல வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ளவாக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அவ்வாறு தவறுகள் நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையிடம் கழகத்தின் சார்பில் கழக வழக்கறிஞர்கள் முறையீடு செய்தும் தேர்தல் ஆணையம் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது - சென்னை மாநகராட்சியில் “மஸ்டல் ரோல்” ஊழல் நடைபெற்றதாக பேரவையில் எதிர்க்கட்சியிலே இருந்த டாக்டர் ஹண்டே அவர்கள் குற்றஞ்சாட்டிய போது, “அதுபற்றி விசாரித்து உண்மையாக இருந்தால், மாநகராட்சியிலே ஆண்டு கொண்டிருப்பது தி.மு. கழகம் என்றாலும், மாநகராட்சியைக் கலைத்து விட உத்தரவு

பிறப்பிக்கப்படும்” என்று நான் கூறியதோடு, அவ்வாறே பிறகு சென்னை மாநகராட்சியைக் கலைத்து, தி.மு. கழகத்தைச் சேர்ந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்தேன் என்பது வரலாறு.

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதைப் போல, தேர்தல் ஆணையர் அய்யர் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கு ஒரேயொரு உதாரணம் கூற வேண்டுமேயானால் இதுவரை இல்லாத அளவிற்கு - 1-11- 2011 அன்று நடைபெற்ற 11வது அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் அய்யருக்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால் -- “அம்மாவை குளக்கரையிலே பார்த்தால், மகளை வீட்டிலே போய்ப் பார்க்க வேண்டுமா” என்ற பழமொழிதானே ஞாபகத்திற்கு வருகிறது!

தந்துள்ள இந்தப் பட்டியலில்; எது தவறு என்பதை “ஆண்டவன் அறிய” அய்யரே சொல்லட்டும். அதன்பிறகு அவரது நேர்மை - நடுநிலை பற்றி அவரது மனசாட்சியே அவருக்குச் சொல்லும்!

அன்புள்ள, மு.க. 8-11-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 67–74. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்