அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3602

முரசொலி கடிதங்கள் · 3602

அறவழி - அமைதி வழி - அதுவே அண்ணா வழி!

நாள் 12.12.2011சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3602. அறவழி - அமைதி வழி - அதுவே அண்ணா வழி!

உடன்பிறப்பே,

கேரள அரசும், மத்திய அரசும் கேரளாவில் தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாக நடைபெறும் வன்முறைச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், வன்முறைகள் கேரளாவில் தொடருமேயானால், கழகத்தின் செயற்குழு கூடி, உரிய முடிவெடுக்கும் என்று நான் செய்தியாளர்களிடம் கூறியதற் கிணங்க, கடந்த 9ஆம் தேதியன்று கழகச் செயற்குழு கூடி, இந்தப் பிரச்சினையிலே தமிழகத்தின் உறுதிப்பாட்டை நிலைநாட்டி, மத்திய அரசின் உடனடி கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள மாநகரங்களிலும், நகரங்களிலும், 12-12-2011 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதென்றும், அதற்கடுத்து முல்லைப் பெரியாறு அணையினால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 15ஆம் தேதியன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாபெரும் மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், அண்ணா அறிவாலயத்தில், வடசென்னை, தென் சென்னை மாவட்டங்களின் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தை நமது கழகப் பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் அவர்கள் துவக்கி வைக்கவும், அன்று மாலையில் உண்ணா விரதத்தை முடித்து வைத்து உரையாற்றவும் இருக்கிறேன். காலை 8 மணி முதலே உண்ணா விரதத்தில் உன்னோடு அமர்ந்திருக்க எனக்கு விருப்பம்தான்! ஆனால் கழகத்தின் உடன்பிறப்புகள் எனது வயது கருதி, முழு நாளும் உண்ணாவிரதம் இருப்பது உடல்நலத்திற்கு

நல்லதல்ல என்று என்னைக் கேட்காமலேயே அவர்களாகவே முடிவு செய்திருக்கிறார்கள். என் உடல் உண்ணாவிரதத்திற்கு ஒத்துழைப்பு தருகிறதோ இல்லையோ, என் உள்ளம் எல்லாம் உண்ணா விரதத்திலேதான் ஊன்றி நிலைத்திருக்கும் என்பதை நீயும் அறிவாய், நானும் அறிவேன்.

கழகத்தின் சார்பில் எத்தனையோ அறப்போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். இலங்கைத் தமிழர்களுக்காக, காவேரி பிரச்சினைக்காக, மொழிப் பிரச்சினைக்காக என்று எத்தனையோ முறை உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம், கைது என்றெல்லாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்; வெற்றி கண்டிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒருமைப்பாட்டைப் போற்றிப் பாதுகாக்க அன்றாடம் பாடுபட்டு வரும் நமது இந்தியாவில், நமது தமிழர்கள், நமக்கு பக்கத்திலே உள்ள அண்டை மாநிலத்திற்குள் செல்ல முடியாத நிலையில் ஒருசில சமூக விரோதிகளால் தடுக்கப்படுகின்ற நிலையை மத்திய அரசும், கேரள அரசும் கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் விபரீத நிலை இருக்கிறதே என்பதற்காக, அவர்களது உடனடியான கவனத்தைக் கவரும் வகையிலேதான் இந்த அறப்போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

இந்த அறப்போர் அறிவிப்புக்கான தீர்மானத்தை எழுதும்போது, கேரளாவிற்கும் நமக்கும் உள்ள சகோதர உறவுகளையெல்லாம் ஓரளவுதான் குறிப்பிட்டிருக்கிறோம். கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழகத்திலே பல முக்கிய பொறுப்புக்களிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே பலர் உயர்நிலை அதிகாரிகளாக இருக்கிறார்கள். ஏன், கேரள மாநிலத்தின் இன்றைய தலைமைச் செயலாளராக உள்ள திரு.பிரபாகர், ஐ.ஏ.எஸ்., அவர்களே தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். நான் கடந்த ஆண்டு திருவனந்தபுரம் சென்றிருந்த போது தங்கும் விடுதிக்கே வந்து என்னைச் சந்தித்தவர்தான். எனவே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல பாசப் பிணைப்போடு பழகிக் கொண்டிருக்கும் இரு மாநிலத்தவரிடையே பேத உணர்வு வந்துவிடக் கூடாதல்லவா?

முல்லைப் பெரியாறு பாசன திட்டம், அப்போதைய திருவிதாங்கூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே

999 ஆண்டுகளுக்குக் குத்தகை அடிப்படையில் 29.10.1886 அன்று கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்த திட்டமாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏறத்தாழ 8000 ஏக்கர் நிலம் தமிழ்நாட்டிற்குக் குத்தகையாக வழங்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கான குத்தகைக் தொகை ரூபாய் 5/- என நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் 29.5.1970-ல் தமிழ்நாடு கேரளா அரசுகளுக்கிடையே இரண்டு துணை ஒப்பந்தங்கள் உருவாகின.

அவற்றில் ஒரு துணை ஒப்பந்தமானது, தமிழ்நாடு மின்உற்பத்தி செய்துகொண்டு அந்த மின் உற்பத்தி செய்ததற்கான இராயல்டி தொகையை கேரள அரசுக்கு அளிப்பதற்கு வழிவகை செய்கிறது.

மற்றொரு துணை ஒப்பந்தத்தில் ஒரு ஏக்கருக்கு குத்தகைத் தொகை ரூ.5/- என்பதிலிருந்து ரூ.30/- என உயர்த்துவதும், மீன்பிடிக்கும் உரிமையை அனுமதிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979-ம் ஆண்டு பெரியாறு அணைக்கு அபாயம் ஏற்படும் என்று கேரள அரசு அச்சம் தெரிவித்தது. அதன் காரணமாக, மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவர், 25.11.1979 அன்று அணையினைப் பார்வையிட்டு பெரியாறு அணை நல்ல முறையில் உள்ளது என்றும், தற்பொழுதுள்ள வடிவமைப்பிற்கு ஏற்றவாறு பலப்படுத்தலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

அணையைப் பலப்படுத்துவது தொடர்பாக (1) அவசரகால நடவடிக்கை; (2) இடைக்கால நடவடிக்கை; (3) நீண்டகால நடவடிக்கை, என நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்றும், அதன் பொருட்டு அணையின் நீர்மட்டத்தைத் தற்காலிகமாக 136 அடி வரையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அவசரகால நடவடிக்கை மற்றும் கேபிள் நிறுவும் பணிகள் முடிவுற்றவுடன் அணையின் நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் என்று மத்திய நீர்வளக் குழுமம் 29.4.1980ல் தெரிவித்தது.

எனினும், கேரள அரசு; அணை பலப்படுத்தப்பட்ட பின்னரும் 136 அடி வரையிலேயே நீரைத் தேக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில், இப்பிரச்சனை குறித்து சென்னை மற்றும் கேரள உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை தமிழக அரசு உச்சநீதி மன்றத்திற்கு மாற்றி, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசைச் சார்ந்த முல்லைப் பெரியாறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு தாக்கல் செய்திருந்த ரிட் மனுவுடன் சேர்க்கவும், உச்சநீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு அணுகியது.

19.5.2000ல் தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களிடையே மத்திய நீர் ஆதார அமைச்சரின் முன்னிலையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் ஒரு வல்லுநர் குழு அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து அவ்வாறே குழுவும் அமைக்கப்பட்டு, அக்குழுவும் தனது அறிக்கையினை மார்ச் 2001ல் அளித்தது.

முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடிவரையில் தமிழ்நாடு நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்றும், தமிழ்நாடு மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை செய்து முடிக்கலாம் என்பது போன்ற பரிந்துரைகளை இந்த வல்லுநர் குழு பரிந்துரைத்தது.

அதுமாத்திரமல்ல; முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று அளித்த தீர்ப்பின் முக்கிய விவரங்கள்:-

(i) அணை பலமிழந்துவிட்டது என்ற கேரளாவின் கூற்றிற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை;

(ii) வல்லுநர் குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாடு 142 அடிவரையில் நீரை தேக்கிக் கொள்ளலாம் - மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மத்திய நீர்க் குழுமத்திற்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் செய்து முடித்தவுடன், வல்லுநர் குழு அணையை ஆய்வு செய்த பின்னர் உச்சமட்ட அளவான 152 அடிவரையில் தமிழ்நாடு நீரை தேக்கி வைக்கலாம்;

(iii) கேரள அரசு மற்றும் அதன் அதிகாரிகள்; தமிழ்நாடு அரசின் சார்பில் பணிகளை செய்வதை தடுத்து நிறுத்தும்

போக்கினை கைவிட வேண்டும், (we see no reason for the State of Kerala to cause any obstruction / The State of Kerala and its officers are restrained from causing any obstruction)

ஆனால் இந்தத் தீர்ப்பினை அப்போதே மதிக்காமல் கேரள அரசு அதற்கடுத்த 16வது நாளில், நீர்ப்பாசன மற்றும் நீர்பாதுகாப்பு சட்டத்திற்குத் திருத்தங்களை மேற்கொண்டு, 18.3.2006 அன்று முதல் திருத்திய சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து, பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக நிர்ணயம் செய்துள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்தில் 31.03.2006 அன்று தமிழக அரசால் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியிலே, அந்த வழக்கு பதிவுகூட செய்யப்படாமல் இருந்த நிலையில், மே திங்களில் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு. கழக அரசு, இந்தப் பிரச்சினையிலே முயற்சித்து, அதற்கான பதிவெண் 31.08.2006 அன்றுதான் பெறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையின்படி இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேராசிரியர் சைபுதின் சோஸ் அவர்கள் தலைமையில் 29.11.2006 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.

அதில் தமிழக விவசாயிகளின் நிலை குறித்தும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்தும் நான் விளக்கியதோடு, கேரள அரசு அதன் திருத்திய சட்டத்தை ரத்து செய்ய பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். ஆனால் அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து கேரள முதல் அமைச்சருக்கும், மத்திய அமைச்சருக்கும், இந்தியப் பிரதமருக்கும் நான் எழுதிய பல கடிதங்களின் தேதிவாரியான பட்டியல் இதோ :-

14-9-2006, 4-10-2006, 26-10-2006 ஆகிய நாட்களில் கேரள முதல் அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்;

31-10-2006, 15-11-2006, 16-11-2006 ஆகிய நாட்களில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்;

23-11-2006 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்;

அதே 23-11-2006 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்;

27-11-2006 அன்று மீண்டும் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

2-1-2007, 25-3-2007, மற்றும் 19-5-2007 ஆகிய நாட்களில் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

18-12-2007 அன்று பிரதமரை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு பற்றி விளக்கிய போது தான், பிரதமர் என்னையும், கேரள முதல்வரையும் ஒரு முறை நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென்று கூறி, அவ்வாறே நாங்கள் சந்தித்துப் பேசினோம்.

20-12-2007 அன்று மீண்டும் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன்.

4-2-2008 அன்றும், 13-7-2009 அன்றும் கேரள முதல் அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

8-10-2009 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். இந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை அவ்வப்போது ஏடுகளிலும் வெளிவந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆணித்தரமான வாதங்கள் எடுத்து வைத்து வாதாடப்பட்டது. அதையொட்டித்தான், 10-11-2009 அன்று ஐந்து பேர் கொண்ட அதிகாரமுள்ள குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இக்குழுவிற்கு டாக்டர் ஏ.எஸ். ஆனந்த், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தலைவராக உள்ளார். இதையொட்டி 14-11-2009 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த

27-2-2006 அன்று தீர்ப்பளித்த அந்தத் தீர்ப்பு என்னவாயிற்று? உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் எல்லாவற்றிற்கும் உச்சக் கட்டம் என்று சொல்லப்படுகிறதே, அப்படியானால் உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதா? கேரள அரசு, உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்து, 15-3- 2006இல் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது

சரியான நடை முறைதானா? ஒரு மாநில அரசே இவ்வாறு செய்தால் அதற்கு என்ன பரிகாரம்? ஒவ்வொரு மாநிலமும் நீதிமன்றங்களின் தீர்ப்பை மீறி சட்டத் திருத்தங்களை நிறைவேற்றினால், ஜனநாயகம் என்ன ஆவது? என்றெல்லாம் கேட்டிருந்தேன். இன்றளவும் அந்தக் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கவில்லை.

உச்சநீதிமன்றம் அப்போதே அதைப்பற்றி கேள்வி கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் மத்திய அரசும், கேரள அரசும் அங்கேயுள்ள மக்களும் சிந்திக்க வேண்டுமென்பதற்காகவும், நமது கோரிக்கைகளான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில், மத்திய பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் விடவேண்டும் - அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டுமென்று 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டதை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் - ஆகியவற்றை வலியுறுத்தியும் தி.மு. கழகம் இந்த அறப்போராட்டத்தை அறிவித்திருக்கிறது. கழகம் அறிவிக்கும் அறப் போராட்டங்களையெல்லாம் வெற்றியாக மாற்றித் தரும் கழக உடன்பிறப்புகள் இந்த முறையும் இந்த போராட்டங்களை வெற்றியாக்கிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உள்ளது. இந்த அறப்போர்; அறவழி - அமைதி வழி - அதுவே அண்ணா வழி என்பதை மறந்து விடாதீர்கள்!

அன்புள்ள, மு.க. 12-12-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 88–94. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்