முரசொலி கடிதங்கள் · 3605
நாம் தொடங்கிய நடமாடும் கோயில் திருப்பணி!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3605. நாம் தொடங்கிய நடமாடும் கோயில் திருப்பணி!
உடன்பிறப்பே,
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பது நமது திராவிட இயக்கத் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய நல்லுரையாகும். அந்த உரையைப் பின்பற்றி ஏழைகளுக்கு உதவிட, ஏழைகளின் இன்னல் நீக்கி அவர்கள் முகத்தில் சிரிப்பைக் கண்டிட, நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து வருகின்ற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கழகத்தினுடைய ஆட்சி நடைபெறுகின்ற நேரத்தில் எல்லாம் பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
நான் ஆரம்பப் பள்ளியிலே படித்த போதும் சரி - உயர்நிலைப் பள்ளியிலே கல்வி கற்ற நேரத்திலும் சரி - எங்கள் திருவாரூரில் இருக்கின்ற அகலமான - உயரமான கோவில் சுவர்களின் ஓர் அழகான விளம்பரம் எழுதப்பட்டிருக்கும். என்ன விளம்பரம் என்றால் “நடமாடும் கோவில் திருப்பணி” என்று அதிலே தலைப்பு தீட்டப்பட்டிருக்கும். நடமாடும் கோவில் திருப்பணி என்றால், ஏதோ கோயிலை நடமாடுகின்ற கோயில்களாக கட்டப் போகிறார்கள் என்று பொருள் அல்ல. அல்லது சிலர் அதற்கு விளக்கம் தந்தார்கள் - “மொபைல் ஆஸ்பிடல்” என்று! என்னுடைய தமிழ் ஆசிரியர், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் அவர்கள், அதற்கு உரைத்த பொருள் என்னவென்றால், மனிதனின் உடலே நடமாடும் கோயில்தான் - அதிலே ஏற்படுகின்ற பழுதுகளைப் பார்ப்பதற்கு “திருப்பணி” என்று சைவ சித்தாந்தப்படி நாங்கள் சொல்கிறோம் - ஆகவே நடமாடும் கோயில் திருப்பணி என்றால் மருத்துவ உதவிதான் என்று அவர்கள் சொன்னார்கள். அந்த நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு எவ்வெப்போதெல்லாம் தமிழகத்திலே அமைகிறதோ, அப்போதெல்லாம் ஆற்றிக் கொண்டிருந்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தை 1971ஆம் ஆண்டு தொடங்கினோம் - கண் ஒளி வழங்கும் திட்டத்தை 1972இல் தொடங்கினோம் - இலவச சைக்கிள் ரிக்ஷா திட்டத்தை 1973இல் தொடங்கினோம் - ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டத்தை 1974இல் தொடங்கினோம் - கருணை இல்லங்களை 1975இல் தொடங்கினோம் - மூவலூர் மூதாட்டியார் நினைவாக ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை - நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டத்தை - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை உருவாக்கிய தி.மு. கழக ஆட்சிதான் “உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை”யும் தொடங்கியது.
இதயத்தைப் பாதுகாக்க இளஞ்சிறார்களுக்கு - பள்ளிச் சிறார்களுக்கு “இருதயப் பாதுகாப்புத் திட்டம்” தி.மு. கழக ஆட்சியினால் தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதின் மூலம் - கழக ஆட்சியில் - 13 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் - 653 இளம் சிறார்களுக்கும், 1663 பள்ளி மாணவர்களுக்கும் இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டன. அவர்களும் உயிர் பிழைத்து நம்மிடையே நன்றி பாராட்டி உலவிக் கொண்டிருக்கின்ற காட்சியைப் பார்த்து நாமெல்லாம் உவகை கொள்கிறோம்.
இந்தத் திட்டத்தின் அடுத்தவொரு பணியாகத்தான் - காப்பீட்டுத் திட்டத்தை கழக அரசு ஆண்டு ஒன்றுக்கு 517 கோடி ரூபாய் செலவழிக்கும் வகையில் தொடங்கினோம். இந்த ஒரு திட்டம் மாத்திரமல்ல; இந்தத் துறையின் சார்பிலே மாத்திரம், “வருமுன் காப்போம் திட்டம்” - “ஏழைச் சிறார்கள் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம்” - “பள்ளிச் சிறார்களுக்கான இருதய அறுவை சிகிச்சைத் திட்டம்” - “ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள 6000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம்” - “ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கும் திட்டம்” - “அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்” என்பன போன்ற பல திட்டங்கள் தி.மு. கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழையெளியோர் பயன் அடைந்தனர். குறிப்பாக உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பதிவு
செய்து கொண்டு, 31-3-2011 வரை 3 இலட்சத்து 3 ஆயிரத்து 328 நோயாளிகளுக்கு 781 கோடியே 40 லட்ச ரூபாய்ச் செலவில் அங்கீகரிக்கப்பட்ட 702 மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அவர்கள் பயனடைந்தனர்.
தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரத்தில் எல்லாம் இவ்வாறு புதிய புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்திய கண்ணியில்; கழக ஆட்சிப் பொறுப்பிலே இல்லாத காலங்களில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நிறைவேற்றிய நல்ல திட்டங்களையும் வரவேற்று, யார் ஆட்சிக் காலத்தில் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்றெல்லாம் எண்ணிடாமல், அந்தத் திட்டத்தினால் பயனடைவோரின் நலன்களை எண்ணிப் பார்த்து, அந்தத் திட்டங்களையும் செம்மையாகவும் சிறப்பாகவும் நடத்திடுவதற்கான முனைப்பிலே ஈடுபட்டது என்பதற்கும் பல்வேறு சான்றுகளைக் கூற முடியும்.
குறிப்பாக ஒன்றைக் கூறவேண்டுமேயானால், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்” - தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டமல்ல. எனினும் அந்தத் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு. கழக ஆட்சிதான் தீவிரமாகச் செயல்படுத்தியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் உள்ள திட்டமாயிற்றே, அதைத் தொடர்ந்து நடத்தலாமா? பெயரை வேண்டுமானால் மாற்றி விடலாமா? என்றெல்லாம் தி.மு. கழகம் கருதியதே இல்லை.
2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு தி.மு. கழகம் வந்த பிறகு அத்திட்டத்தின் விரிவாக்கமாக 15-7-2006 முதல் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினோம். பின்னர் 15-7-2007 முதல், வாரம் ஒன்றுக்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலேதான்! 17-9-2010 முதல் வாரம் ஐந்து முட்டைகள் தி.மு. கழக ஆட்சியில்தான் வழங்கப்பட்டன. இதன் மூலமாக மட்டும் 57 இலட்சத்து 74 ஆயிரத்து 673 பள்ளி மாணவ, மாணவியர் பயன் பெற்றனர். முட்டை சாப்பிடாத 37,249 குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலேதான்.
அ.தி.மு.க. ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகிய அனைவருமே தி.மு. கழக ஆட்சியிலேதான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்றார்கள். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அகவிலைப்படி தவிர ஏனைய படிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான், அவர்களுக்கு முதல் முறையாக 1-6-2009 முதல் மாதந்தோறும் வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி ஆகியவைகளும், 100 ரூபாய் மருத்துவப்படியும், 2000 ரூபாய் பண்டிகைக் கால முன் பணமும் வழங்கப்பட்டது. இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். எனவே தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், திட்டங்களின் பயன்கள்தான் கருதப்பட்டதே தவிர, அந்தத் திட்டம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது என்றெல்லாம் குறுகிய மனப்பான்மையோடு கருதியதில்லை.
ஆனால் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காக ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள தலைமைச் செயலகக் கட்டிடம், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாள், செம்மொழித் தமிழாய்வு பாவேந்தர் நூலகம் போன்றவைகளை இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இருக்கக் கூடாது என்ற உயரிய குறிக்கோளோடு கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை அ.தி.மு.க. அரசு மூடி விட்ட போதிலும், அந்தத் திட்டத்திற்குப் பதிலாக வேறொரு பசுமை வீடு வழங்கும் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அதைப் போலவே கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மூடி விட்டு, அதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அதைப் பொறுத்த வரையில் நான் தொடங்கிய திட்டத்தை மூடி விட்டார்களே என்று எனக்கு வருத்தமில்லை. எந்தப் பெயரிலோ, எப்படியோ திட்டம் நடைபெற்று மக்கள் பயன் பெற்றால் போதுமென்றுதான் எண்ணுகிறேன், விரும்புகிறேன். தி.மு. கழக அரசால் தொடங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 642 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு மாறாக, தற்போது 1016 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறார்கள் என்றால்,
அதிலே எனக்கு மகிழ்ச்சிதான். ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருந்து பழைய அட்டைகளை வைத்திருப்பவர்களும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும் - ஏற்கனவே கழக ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் உதவி என்றால், தற்போது ஒரு குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு நான்கு இலட்சம் ரூபாய் உதவி என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதற்காக இந்தத் திட்டத்தை வரவேற்கிறேன்.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டத்தை நான் வரவேற்கும் அதே நேரத்தில், தி.மு. கழக அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார் என்பதை “தினமணி” தனது 12-1-2012 தேதிய தலையங்கத்திலேயே, “தி.மு.க. அரசில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்பும் கூட, இத்திட்டத்தால் மக்கள் பயனடையவில்லை என்றும், காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன் பெற்றன, இதற்கு பின்னணியில் ஆட்சியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் குற்றம் சாட்டினார்” என்றெல்லாம் நினைவு படுத்தியதோடு, தற்போது ஜெயலலிதாவால் தொடங்கப்படும் திட்டத்தை வரவேற்று பாராட்டியிருக்கிறார்கள். அன்றும் இதே “தினமணி” தான்! இன்றும் அதே “தினமணி” தான்! கழக அரசு இத்திட்டத்தைத் தொடங்கிய போது அதனை அம்மையார் குற்றஞ்சாட்டியதைப் போல நான் இந்தத் திட்டத்தை இப்போது குறை கூறாமல் வரவேற்கிறேன். அதே நேரத்தில் அம்மையார் அவர்கள் தி.மு. கழக அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களையும் பகைமை நோக்கோடு பார்க்காமல், அந்தத் திட்டங்களையெல்லாம் நான் என்னுடைய சொந்தப் பணத்திலிருந்தோ, கழகத்தின் பணத்திலிருந்தோ நிறைவேற்றியது அல்ல, அதுவும் அரசின் பணம்தான் என்பதை மனதிலே கொண்டு, சற்று பரந்த நோக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். அனைத்துமே அரசின் திட்டங்கள்தான்! எந்தத் திட்டத்தையும் தி.மு. கழக அரசின் திட்டம் என்றோ, அ.தி.மு.க. அரசின் திட்டம் என்றோ தனித்துப் பார்ப்பது நல்லதல்ல!
உதாரணத்திற்காகச் சொல்ல வேண்டுமே யானால், தலைமைச் செயலகம் ஒன்று புதிதாக கட்டப்பட வேண்டும் என்று ஜெயலலிதா அம்மையாரே பேரவையிலேயே ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த எண்ணம் தி.மு. கழக ஆட்சியிலே நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதற்காக, அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதனால் யாருக்கு நஷ்டம்? அந்தத் தலைமைச் செயலகத்திலே பணியாற்றுகின்ற அதிகாரிகளும், அலுவலர்களும் இடப்பற்றாக்குறை காரணமாக எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? “அம்மையார் ஒருவரின் பிடிவாதம் காரணமாக நாமெல்லாம் அவதிக்கு ஆளாகிறோமே” என்று நாளும் நாளும் அவர்கள் பேசிக் கொள்வது அம்மையாரின் காதிலே விழுமா? ஆட்சி இன்று வரலாம், அடுத்த தேர்தலில் வராமல் போகலாம், மீண்டும் வரலாம். ஆனால் ஆட்சியிலே இருக்கின்ற நேரத்தில் - எதிர்க்கட்சியைப் பற்றியே குறுகிய நோக்கில் எண்ணிச் செயல்படாமல், மக்களின் நல்வாழ்க்கைக்காக நமது நேரத்தைச் செலவிடுவதுதான் சிறந்த ஜனநாயகம் என்பதை அம்மையார் அவர்கள் இனியாவது புரிந்து கொண்டு, கொஞ்சம் பெருந்தன்மையோடு செயல்பட வேண்டுமென்று விரும்புகிறேன், செயல்படுவார் என்று நம்புகிறேன். பார்க்கலாம்! நடமாடும் கோயில்களின் திருப்பணியே ஆட்சியாளர்களின் குறிக்கோளாக ஆகட்டும்!
அன்புள்ள, மு.க. 14-1-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 108–113. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.