அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3603

முரசொலி கடிதங்கள் · 3603

மறைமலையார் கருத்தை மறைப்பதோ?

நாள் 1.1.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3603. மறைமலையார் கருத்தை மறைப்பதோ?

உடன்பிறப்பே,

கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது முதல், மக்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்கிறார்களோ இல்லையோ, தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய திட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திசை திருப்பும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். அது எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால், சட்டமன்ற, நாடாளுமன்ற - உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டமன்ற அலுவலகம், நாடாளுமன்ற அலுவலகம் என்பதைக் கூட மீண்டும் கைப்பற்றக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறது. வாழ்க அவர்களுடைய பரந்த சிறந்த உள்ளம்!

அந்த வரிசையில் ஒன்றாக நேற்றையதினம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுவிலே சிறப்புக்குரிய ஒரு தீர்மானமாக, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்திலே சட்டம் இயற்றியதை மாற்றி விட்டு, சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றிட பேரவையில் மசோதா ஒன்றினை அறநிலையத் துறை அமைச்சர் மூலமாக தாக்கல் செய்து குரல் வாக்கின் மூலம் நிறைவேற்றியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதன் மூலமாக தி.மு. கழகத்திற்கோ அது நடத்திய ஆட்சிக்கோ அவமானமா என்றால் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், “பெரும்

புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921ஆம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு “தனி ஆண்டு” தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே “தமிழ் ஆண்டு” எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள். அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்தது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புதுஎழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்” என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார். எனவே அந்த அறிவிப்பினைக் கூட கழக அரசின் அறிவிப்பாக ஆளுநர் அவர்கள்தான் தன் உரையிலே தெரிவித்தார்.

மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தப் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது;

2. அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது;

3. வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதை மேற்கொள்வது என்பனவாகும்.

அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் தீர்மானித்தது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்;

“நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு! அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தைமுதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”

என்று எழுதியிருக்கிறார் என்றால், தற்போது அ.தி.மு.க. பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழகத்திலே உலவிய அந்தத் தமிழறிஞர்களுக்கெல்லாம் இழைக்கப்படுகின்ற அவமானம் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொண்டால் அதுவே போதும்!

ஆளுநரின் அறிவிப்பு பேரவையில் படிக்கப்பட்ட மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் “தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும்

சார்ந்தும் விவசாய வாழ்வு சார்ந்தும் தைத்திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும். மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறிஞர்கள் தைத்திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்” என்று தெரிவித்திருந்தார்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ “தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், “தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித்திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடுகிறார்கள். எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு. தமிழர்களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடையாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரை கருத்துலகத்தின் அளவுகோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலாகவும் திருவள்ளுவரைக் கருத்துச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களுக்குத் தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற எதிர் மனையானதொரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக்கின்ற புலவர்கள் ஒரிருவர் இருந்திருக்கிறார்கள். இதோ ஒரு கதை! நான்

ஏற்கனவே எழுதிய கதைதான்; இருந்தாலும் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்.

நக்கீரன் காலத்திலே குயக்கொண்டான் என்று ஒருவன் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்திலே “ஆரியம் நன்று, தமிழ் தீது” என்று சொல்ல - உடனே நக்கீரனுக்குக் கோபம் வந்து, “தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ, சாகக் கடவாய்” என்று அறம் பாடினாராம். உடனே குயக் கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறான். உடன் அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்து குயக் கொண்டானைப் பிழைக்க வைக்கக் கேட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்ட நக்கீரன், “ஆரியம் நன்று தமிழ் தீதென்றுரைத்த காரியத்தால் காலன்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந்தமிழே தீர்க்க சுவாகா” என்று பாட, குயக் கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம். இப்படி ஒரு கற்பனைக் கதை! பழங்காலத்தில் உலவிய கதை!

தமிழக அரசின் அறிவிப்பு வந்த நேரத்திலேயே மிகச் சிறந்த தமிழ் ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன் அவர்கள், “இன்றைய பஞ்சாங்கங்களை வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் - ஆராய்ந்துத் திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுபது நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே” என்றார்.

ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்து, 1-2-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று அது நிறைவேறியது.

இப்போது மலேசியா நாட்டில் தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், “முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாளில் புதிய

ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மணல் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” என்று விளக்கியுள்ளார்.

தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது இருக்கலாமா என்று அதற்கு முடிவுகட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா பேரவையிலே அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அதற்காகவும் தற்போது அ.தி.மு.க. பொதுக் குழுவிலே நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிக்கையில்; அ.தி.மு.க. அரசின் இந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா தனது பேரவை உரையிலே கழக ஆட்சி நிறைவேற்றிய சட்டம் யாருக்கும் பயன் அளிக்காத ஒன்று என்றும், அந்தச் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கருணாநிதியின் “துதிபாடிகள்” அனைவரும் அதனைப் போற்றினர் என்றும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகத்தான் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டதென்றும் பேசியிருக்கிறார். “துதிபாடிகள்” என்று அம்மையாரால் வர்ணிக்கப்படும் பேரு பெற்றவர்கள் யார் யார் தெரியுமா? நமது பேராசிரியர் அன்பழகனார், அண்ணா பல்கலைக் கழகத்திலும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் துணை வேந்தராக இருந்து பெரும்புகழ் பெற்ற வா.செ. குழந்தைசாமி, முனைவர் தமிழண்ணல், முனைவர் வ.அய். சுப்பிரமணியம், முனைவர் அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராசன், முனைவர் இரா. நாகசாமி, தவத்திரு ஊரன் அடிகள், பேராசிரியர் கண. சிற்சபேசன், முனைவர் அ. அறிவொளி, முனைவர் சுதா சேஷயன், இலங்கை இ. ஜெயராஜ், முனைவர் சரசுவதி ராமநாதன், வழக்கறிஞர் த. ராமலிங்கம், பேராசிரியர் தி. ராசகோபாலன், முனைவர் இராம. சவுந்தரவல்லி, முனைவர் இரா. செல்வ கணபதி, புலவர் கோ. சாரங்கபாணி ஆகியோர்தான்!

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில் தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்தான். அதே நேரத்தில் சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை நாம் வேண்டாமென்று தடுக்கவும் இல்லையென்று அப்போதே அறிவித்துள்ளோம். நம்மைப் பொறுத்த வரையில் நாம் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிடுவோம்.

அன்புள்ள, மு.க. 01-01-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 95–101. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்