முரசொலி கடிதங்கள் · 3597
அந்த இதயம்; இதையும் தாங்குமோ?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3597. அந்த இதயம்; இதையும் தாங்குமோ? உடன்பிறப்பே,
மொழிக்கும் நாட்டுக்கும் தம்மையே அர்ப்பணித்து சரித்திரத்திலே சாகாத இடம் பெற்றோர், ஆன்ற தமிழ்ச் சான்றோர், கொள்கை மறவர்கள், குணக்குன்றுகளாய்க் குவலயம் போற்ற வாழ்ந்தோர், அகிலம் புகழ்ந்தேத்திடும் அறிஞர்கள், கலைஞர்கள், மக்கள் பணியில் மகத்தான சாதனை புரிந்த மாண்புக்குரிய பெரியோர் - ஆகியோர் தம் அரிய பெயர்களை வாழும் சமுதாயத்தின் உள்ளத்தில் ஒளி விளக்கேற்றிடும் வகையில் நினைவுபடுத்துவது; பண்பாடு போற்றிடும் ஓர் அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று! எனவேதான் ஒவ்வொரு முறையும் கழக ஆட்சி தமிழகத்திலே மலரும் போதெல்லாம் அந்தப் பண்பாடு போற்றிப் பேணப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை எந்தவொரு அரசுக் கட்டிடத்திற்கும் சூட்டக் கூடாது என்பது எம்.ஜி.ஆர். அரசின் கொள்கையாக இருந்தாலும், அவருடைய ஆட்சிக் காலத்திலேயே மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அதன் தொடக்க விழா நடைபெற்ற நேரத்தில் எம்.ஜி.ஆர். மறைந்துவிட்டார். அதன் பிறகு ஜானகி அம்மையார் ஆட்சியிலும், ஆளுநர் ஆட்சியிலும் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு நல்ல இடம்கூட ஒதுக்கப்படவில்லை. தரமணி என்ற இடத்திலே ஒரு சிறிய வாடகை வீட்டில் அது அனாதையாக இயங்கி வந்தது.
ஆனால் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று; 24-6- 1989 அன்று சென்னை பிரசிடெண்ட் ஓட்டலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் “மருத்துவப் பல்கலைக் கழகம், மருத்துவப் பல்கலைக் கழகம்” என்று குறிப்பிட்டார்களே அல்லாமல், “எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்” என்று
யாருமே குறிப்பிடவில்லை. அதனைச் சுட்டிக்காட்டி நான் பேசும்போது, “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் மிக விரைவில் நல்ல உயர்ந்த மாட மாளிகை போன்ற கட்டிடங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடிய அளவிற்கு அமையும்” என்று அறிவித்தேன்.
நான் அறிவித்தவாறு 31-8-1989 அன்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் தொடக்க விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தமிழக ஆளுநராக இருந்த அண்மையில் மறைந்த திரு. அலெக்சாண்டர் தலைமை வகித்தார். அப்போது குடியரசு தலைவராக இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன் பல்கலைக் கழகத்தினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். நான் உரையாற்றும்போது, “40 ஆண்டுக் காலம் கலைத்துறை, அரசியல் துறை ஆகிய இரண்டு துறைகளிலும் என்னோடு தோளோடு தோள்நின்ற எனது அருமை நண்பர், மறைந்த முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரால் தொடங்கப்பட்டு - ஆனால் அதிகாரபூர்வமாக இதுவரையில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்து இன்று நடைபெறுகிறது.
“முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத் தகநக நட்பது நட்பு” என்ற வள்ளுவரின் குறள் மொழிப்படி, நட்பின் இலக்கணத்தை இதயத்தில் பதித்து இன்று தமிழகத்தின் தி.மு.க. அரசின் சார்பில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது” என்று கூறித்தான் என் உரையைத் தொடங்கினேன்.
அந்தப் பல்கலைக் கழகத்திற்கான கட்டிட வடிவமைப்பைக்கூட நானேதான் வரைந்து கொடுத்தேன். ஆனால் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற அடுத்த ஆண்டே கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்ட காரணத்தால், அந்தப் பணிகள் அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியிலே; எனது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது என்ற காரணத் தாலோ என்னவோ - விரைவாக நடைபெறவில்லை. மீண்டும் 1996இல் நான்காவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கட்டிடப் பணிகளைத் துரிதப்படுத்தி, 31-7-1998 அன்று குடியரசுத் துணைத் தலைவராக இருந்த திரு. கிருஷ்ணகாந்த் அவர்களை அழைத்து ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட
எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப் பட்டன. கட்டிட முகப்பில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையினை நான் திறந்து வைத்து உரையாற்றினேன். மேலும் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவைப் போற்றிடும் வகையில் திரைப்படத் துறையினர் நீண்ட காலமாக வைத்த கோரிக்கையினை ஏற்று தமிழக அரசின் திரைப்பட நகருக்கு அவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன். நனி நாகரிகம் போற்றும் இதே நல்ல எண்ணத்தோடுதான், “கடற்கரை சாலை” என்று அழைக்கப்பட்டு வந்த நீண்ட சாலைக்கு பெருந்தலைவர் பெயரால் “காமராஜர் சாலை” என்று பெயரிட்டு அழைக்கச் செய்தேன். இன்னும் சொல்லப்போனால், சென்னை மாநகர மேயர் பொறுப்பிலே தி.மு. கழகம் இருந்த தொடக்கக் காலத்திலேயே சென்னை மாநகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. காமராஜர் பிறந்த நாளை தமிழகமெங்கும் நினைவுகூர்ந்திடும் வகையில் “கல்வி வளர்ச்சி நாள்” என்ற பெயரில் அனைத்துக் கல்விக் கூடங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவித்து, அதனை அடுத்து வருகின்ற ஆட்சியினர் மாற்றி விடக் கூடாதே என்பதற்காகவே சட்டமாகவே இயற்றினேன். சாதி மத பேதங்கள் நீங்கிடவும், அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் சுமுகமாக வாழ்ந்திடவும் கழக ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்ட சமத்துவபுரம் திட்டத்திற்கு - “பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்” என்று பெயர் சூட்டியதோடு, ஒவ்வொரு சமத்துவ புரத்திலும் அவரது சிலையினை அமைக்கச் செய்தேன். மேலும் பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை பெரியார் நினைவைப் போற்றிடும் வகையில் கழக ஆட்சியில் நிறைவேற்றினோம். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று “தாடியில்லாத பெரியார்” என்று போற்றப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பெயரால், சென்னை அரசினர் தோட்டம், “ஓமந்தூரார் வளாகம்” என்று என்னால் பெயர் சூட்டப்பட்டதோடு, ஓமந்தூரில் அவருக்கு நினைவகம் ஒன்று எழுப்பப்பட்டு, சென்னையில் அமைச்சர்கள் வாழும் சாலைக்கு “ஓமந்தூரார் சாலை” என்றும் என்னால் பெயர் சூட்டப்பட்டது.
சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் கழக ஆட்சியில் கட்டப்பட்ட பத்து மாடிக் கட்டிடத்திற்கு தேசியக் கவிஞர் நாமக்கல்லார் பெயரைச் சூட்டி, “நாமக்கல் கவிஞர் மாளிகை” என்று அழைக்கச் செய்ததோடு, அந்த மாளிகையின் உச்சியில் அவர் எழுதிய உணர்ச்சி வரிகளான “தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா” என்பதை எழுதி ஒளியூட்டச் செய்தேன்.
கோட்டம் முதல் குமரி வரை என்றமைத்திடும் வகையில் சென்னையில் “வள்ளுவர் கோட்டம்” என்றும், குமரி முனையில் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் அழகிய சிலை ஒன்றும், - பூம்புகாரில் எழுநிலை மாடத்துடன் கூடிய சிலப்பதிகாரக் கலைக் கூடம் என்று ஒன்றும் எழுப்பி - தமிழக வரலாற்றோடு வளர்த் தெடுக்கப்பட்ட கலைகளில் ஒன்றான சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்ட என்னால் இயன்ற பணியாற்றினேன்.
பாஞ்சாலங்குறிச்சியில்; பரங்கியரை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களின் நினைவு நிலைத்திடும் வகையில் கோட்டை ஒன்றை எழுப்பியதோடு, கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பெயரால் — அழகிய நகரம் ஒன்றும் என்னால் உருவாக்கப்பட்டது.
சென்னையில் அம்பேத்கார் மணி மண்டபம்,
குமரியில் காமராஜர் மணி மண்டபம்
மூதறிஞர் ராஜாஜி நினைவிடம்
திருமங்கலத்தில் தியாகி விசுவநாததாஸ் நினைவில்லம்
நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் நினைவு மண்டபம்
நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ஜீவாமணி மண்டபம்
பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம்
மணி மண்டபம்
உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் நாராயணகவி மணி
மண்டபம்.
இளந்தலைவர் ராஜீவ் காந்தி பெயரில் தகவல் தொழில்
நுட்ப நெடுஞ்சாலை
சென்னையில் பெரியவர் பக்தவத்சலம் நினைவில்லம் இடையன்குடியில் அறிஞர் கால்டுவெல் நினைவகம் பசும்பொன் தேவர் பெயரில் கல்லூரிகள் மற்றும் மாபெரும் சிலை குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு மண்டபம் திருப்பத்தூரில் மருது பாண்டியர் நினைவிடம் தில்லையாடி வள்ளியம்மை நினைவில்லம் எட்டையபுரத்தில் பாரதியார் மணி மண்டபம் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் மொழிப்போர் காவலர்களுக்கு மணிமண்டபம், தியாகிகள் மணி மண்டபம், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மணி மண்டபம் நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கனார் நினைவில்லம் மதுரை மாவட்டம் தும்பப்பட்டியில் தியாகி கக்கன் நினைவு மண்டபம் மருதூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நினைவில்லம் நேதாஜி - சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் - தீரன் சின்னமலை
- தியாகி சங்கரலிங்கனார் - தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம் -
புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் - ராமசாமி
படையாச்சியார் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற எண்ணற்றோர் நினைவைப் போற்றும் வகையில் திருவுருவச் சிலைகள்!
பேரறிஞர் அண்ணா - மறைமலை அடிகளார் - திரு.வி.க. - கலைவாணர் - மூப்பனார் போன்ற பெரியவர்களின் பெயரால் பாலங்கள்! இத்தனையும் கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்தான்!
இவையெல்லாம் என் புகழை உயர்த்துவதற்காக அல்ல - கழக ஆட்சியினை விளம்பரப்படுத்துவதற்காகவும் அல்ல - வீரமும், ஈரமும் செறிந்த தமிழக வரலாறு, நாகரிகம், கலை, பண்பாடு
இவைகள் எல்லாம் சிறக்கவும், இறவாமல் என்றென்றும் இருக்கவும் பணியாற்றியவர்கள், துணை நின்றவர்கள், அவர்தம் பெயரில் இக்காலத்திலும் எக்காலத்திலும் நன்றியுள்ள மக்களால் நெஞ்சம் மணக்க நினைவு கூர்ந்திடப்பட வேண்டும் என்பதற்காகவே! இந்த உணர்வுகளையெல்லாம் எனக்கும் தன்மானம் உள்ள தமிழ் மக்கள் எங்கெங்கே வாழ்கிறார்களோ அவர்களுக்கும் பரப்பி, தமிழ் இனம் காக்க - தமிழ் மொழி காக்க - தளராது உழைத்தவரும், பூவிதழினும் மென்மையான புனித உள்ளம் கொண்டு - என் போன்றவர்களை ஆளாக்கியவரும் - பெரியார் வழி நின்று, மூட நம்பிக்கையெனும் இருள் விலக - முழு நிலவாய்த் தோன்றியவருமான - பேரறிஞர் அண்ணாவின் நினைவு தமிழர் உள்ளங்களில் என்றென்றும் தங்கிட வேண்டுமென்ற தணியாத தாகத்தால் - அண்ணா பெயரால் எத்தனையெத்தனையோ நினைவுச் சின்னங்களை அமைத்தேன். 1990ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அப்போது பிரதமராக இருந்த சமூக நீதிக் காவலர்
திரு. வி.பி. சிங் அவர்கள் வந்தபோது, விழா மேடையிலேயே - சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானத்தளத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும்; பன்னாட்டு விமானத் தளத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டிடச் செய்தேன். எனினும் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல அகிலம் புகழ் அறிவுப் பண்ணையாக அவரது நினைவு போற்றும் வகையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஒன்றை ஆசியாவிலேயே முதன்மையானதாக 172 கோடி ரூபாய்ச் செலவில் - சென்னையில் அமைத்தேன்.
உலகின் பல பகுதிகளிலே இருந்து இங்கே வந்து கண்டோர் வியக்கவும், வியந்து பாராட்டவும் எழில் மாடமாக மட்டுமின்றி என்னரும் திராவிட மக்களின் அறிவு வளர் கூடமாகவும், அந்த நூலகம் விளங்குகிறது என்பதைக் கண்டும் - கேட்டும் கழி பேருவகை கொண்டேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மரணப் படுக்கையில் அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் இருந்தபோது அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் அழைத்த நேரத்தில், தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலே ஒரு சில பக்கங்கள் மீதமுள்ளன என்றும், அதை படித்து முடித்துவிட்டு வருவதாகவும்
தெரிவித்தார்கள். அந்த அளவிற்கு புத்தகங்களைப் படிப்பதிலே அவர்களுக்கு ஆர்வம் இருந்ததை நேரடியாக அறிந்த நான், அவரது நூற்றாண்டு நிறைவினையொட்டி எழுப்பிய நினைவுச் சின்னமாக நூலகம் ஒன்றே அமைய வேண்டுமென்று விரும்பினேன். நூலகம் திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அதனைக் காண நான் சென்றபோது, அங்கே படித்துக் கொண்டிருந்த சுமார் 100 மாணவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் உள்ளத்திலே வழிந்தோடிய மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்தி நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால் அந்த நூலகத்தை காழ்ப்புணர்வு காரணமாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்று இன்றைய முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் என்றால், எந்த அளவிற்கு அவரிடம் குரோதம் குடி கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஆறு மாத காலத்தில் தொடர்ந்து கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட - ● சமச்சீர் கல்வித் திட்டம், ● புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், ● பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், ● அண்ணா பல்கலைக் கழகங்கள் - ஒழிப்பு, ● தொல்காப்பியப் பூங்கா முடக்கம், ● சென்னை புறநகர் காவல் துறை ஆணையரகம் ரத்து, ● செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகை மறைப்பு போன்ற பல திட்டங்களுக்கு மூடுவிழாக்களை தொடர்ந்து நடத்தி தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களையெல்லாம் ஒவ்வொன்றாக அழித்து வருகிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. ஆனால்; அண்ணனே! அந்த இதயம் இதையும் தாங்குமோ?
அன்புள்ள, மு.க. 4-11-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 57–63. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.