அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3591

முரசொலி கடிதங்கள் · 3591

அடங்காமை ஆறிருள் உய்த்து விடும்!

நாள் 27.9.2011சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3591. அடங்காமை ஆறிருள் உய்த்து விடும்!

உடன்பிறப்பே,

பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையிலே பூட்டும் இந்த ஆட்சியினரின் கொடுமைக்கு ஆளாகி கடைசியாக கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு முன்னாள் அமைச்சர் தம்பி கே.பி.பி. சாமி. மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மாநிலமெங்கும் அந்தச் சமுதாய மக்களுக்காக அரும்பணியாற்றி வந்தார்.

“உள்ளாட்சித் துறைக்கான தேர்தல்கள் விரைவில் வரவிருக்கிறதே? கே.பி.பி. சாமி இருக்கலாமா? இருந்தால் தேர்தல் பணியாற்றுவாரே? உடனடியாக போடு! அவர் மீது ஒரு கொலை வழக்கு!” என்று அவரையும் அ.தி.மு.க. அரசினர் கைது செய்துவிட்டார்கள்.

அவர் மீனவர் அல்லவா? நில அபகரிப்பு வழக்கிலே அவரை கைது செய்வதற்கு வழியே இல்லை என்று காவல் துறையினர் மறுத்துப் பார்த்தும், கேட்காமல் அவர் மீது கொலை வழக்கே போட்டிருக்கிறார்கள். அதுவும் அவர் எந்தச் சமுதாய மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டாரோ, அந்தச் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பேரைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக வழக்கு! அந்த வழக்கிலே ஏற்கனவே அவருடைய தம்பிகள் உட்பட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துவிட்டார்கள். இவரது தம்பிகளை காவல் துறை தேடிக் கொண்டிருக்கின்றது என்று தெரிந்தவுடன், அவர்களாகவே 23-8-2011 அன்று காவல் துறையிடம் சரணடைந்திருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியின் காரணமாக அவர்களை வளர்த்த அண்ணியான கே.பி.பி. சாமியின் மனைவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 25-8-2011 அன்று மறைந்து விட்டார்கள். நல்லவேளை! தம்பிகள் கைதையே தாங்க முடியாமல் சாவின் முகட்டுக்குச் சென்றவர், கணவரின் கைதைக் கேட்டால் என்னவாகி இருப்பார்? கே.பி.பி. சாமி; தம்பிகளின் கைதை நினைத்து அழுவாரா? அவருடைய மனைவி மறைந்தே

போய்விட்டதை எண்ணி கண்ணீர் விடுவாரா? ஆனால் அவரது கண்ணீர் காய்வதற்குள், ஜெயலலிதாவின் அரசு, அவரையே கைது செய்திருக்கிறது. அவர் மீதான வழக்கு, 2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி அமைந்த சில நாட்களுக்குப் பிறகு சாமியும், அவருடைய தம்பிகளும், வேறு சிலரும் சேர்ந்து இரண்டு மீனவரைக் கடத்திச் சென்று கொன்று விட்டார்களாம்!

சாமியை கைது செய்து அழைத்துச் சென்ற போது, செய்தியாளர்களிடம் அவர், “தி.மு.க.வினரை குறி வைத்து அ.தி.மு.க. அரசு கைது செய்து வருவதை மக்கள் அறிவர். நடை பெறாத ஒரு சம்பவத்தை, நடந்ததாக போலீசார் சித்தரித்து, பொய் வழக்கு போட்டுள்ளனர். என் மீது இரண்டு மூன்று கொலைகள் என போலீஸ் தொந்தரவு செய்த அதிர்ச்சியில், என் மனைவி இறந்துவிட்டார். இரு தம்பிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைச் சட்டப்படி சந்தித்து, நாங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நடவடிக்கை பற்றி செய்தி வெளியிட்ட நாளேடு ஒன்று, “திருவொற்றியூர் போலீசார் இந்தக் கொலை வழக்கை, சரியாகப் புலன் விசாரணை செய்யாமல், அலட்சியம் காட்டி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்.ஐ.க்கள் கற்பகமணி, கமலக் கண்ணன், ராஜராஜன், ஏட்டுக்கள் செந்தில் சரவணன், முருகன் என ஆறு பேர் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் வடக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது” என்றும் எழுதியிருக்கின்றது.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டு - தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இவ்வாறு காவல் துறையினரை ஒட்டுமொத்தமாக இந்த அரசு எவ்வாறு மாற்றியது? யாரைக் கேட்பது? மாநிலத் தேர்தல் ஆணையம் இருக்கிறதா? நாம் ஜனநாயக நாட்டிலேதான் இருக்கிறோமா? தி.மு.கழக ஆட்சியிலே அமைச்சராக இருந்ததே குற்றமா? ஏன் இந்த அரசு இப்படி வெறியாட்டம் போடுகிறது? இதே போன்றதொரு நிலை 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி

பதவியேற்ற போதும் நிலவியது. ஆம், அப்போது “பாலா! என்ன நடக்கிறது இந்த நாட்டில்?” என்ற தலைப்பில் 21-3-2002 அன்று முரசொலியில் நான் ஓர் உடன்பிறப்புக் கடிதம் எழுதினேன்.

யார் அந்த பாலா? அப்போது நான் எழுதிய கடிதத்தில் சில வரிகள்....

“கோயில் கொடி மரம் போல் நெடிதுயர்ந்த வடிவும், வைரம் பாய்ந்த தேக்கு மரமெனத் தேகமும், “காலா! உன்னைக் காலால் மிதிக்கிறேன் வாடா!” எனப் பாடிய பாரதிக்கு நிகராக நெஞ்சுரம் வாய்ந்த பாலா! எனப் பெருமை கொள்ளும் பாலன் எனும் பெயரும் பூண்டு; உறையிலிருந்து உருவியெடுத்த வாள் உயிர் பெற்று நடப்பது போல் கம்பீரமும் கொண்டு; கழகப்பணி புரிந்த காளையன்றோ நீ!

மூன்று மாத காலமாக உன்னைக் காணவில்லை; இதோ! அதோ! இன்று கண்டுபிடிப்போம்; நாளை கண்டுபிடிப்போம்! என்று காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்த வண்ணமிருந்தனர்.

மனைவி மக்கள் கதறினர், கண்ணீர் வடித்தனர். மூத்த மகன் செல்வன் மணிமாறன் நீதி மன்றத்தில் முறையிட்டுக் கொண்டான். அதற்குள்ளாகப் பழி; நீ உலவிய பாசறை மீதே போடப்பட்டது! யாரோ தெருவில் போவோர் வருவோர், போட்ட பழியல்ல! தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித் தலைவியே கட்டிவிட்ட பொய்ப் பழி; இப்படியும் எண்ணத் தோன்றுகிறதென்று!

அதனால்தான் போலும்! நீ மறைந்தாய் என்றோர் சேதி இப்போது வந்துள்ளதெனினும், ஏழு நாட்களுக்கு முன்பே; அவை நடுவே ‘மறைந்த பாலன்’ என்ற வார்த்தை தெரிந்தோ தெரியாமலோ வெளிப்பட்டு; பின்னர் உள்ளுக்குள் போய்விட்டது!

பாலா! நாங்கள் இப்போது என்ன செய்வது?

தீயிட்டுக் கருக்கிச் சாம்பலாக்கி விட்டனர் உன்னை; என்ற தகவலை நம்பி அழுது சோர்வதா? இல்லை; உன் மகன் மணி மாறன் அடித்துச் சொல்வது போல் நீ இருக்கிறாய் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஆறுதல் பெற்று, தேடுதலைத் தொடர்வதா?

பாலா! நீ இன்னும் இருக்கின்றாய் என்ற நினைப்புடனே; உன் மனைவி; ஆம், அந்த சகோதரியின் மாங்கல்யம் அவர் -

கழுத்திலே தொங்கிக் கொண்டிருக்கிறது! நீ இல்லை; போய் விட்டாய்; உன் உயிரைப் போக்கிவிட்டனர் உன்மத்தர்கள் என்று உறுதிபட எண்ணிடவும் என் இதயத்துக்கு வலிவு இல்லை! வருவாய் என் முன்னால்; வந்து வழக்கம் போல் குனிந்த தலை நிமிராமல் என்னிடம் பேசுவாய் என்று நம்பிக் கொண்டு நானுமிருக்கிறேன். சண்டாளர்கள் உன் மேனியைக் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார்கள் என்றால்; அவர்களுக்கும், அவர்களை ஏவி விட்டவர்களுக்கும் அந்தச் சாம்பல் தூளே சகாரா பாலைவனப் புயலாக விளம்பி சமாதி எழுப்பட்டும். இந்தச் சாபத்திற்கெல்லாம் வேலையில்லாமல் சடுதியில் வரமாட்டாயா? வந்து எங்களைக் காண மாட்டாயா?”

என்று நான் அப்போது எழுதியிருந்தேன்.

அதிகாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து நடைபயணம் சென்ற கழகச் செயற்குழு உறுப்பினர் எம்.கே. பாலன், சிலரால் கடத்திச் செல்லப்பட்டு பிறகு அவர் கொல்லப்பட்டாரா என்ன ஆனார் என்றே தெரியாத அளவிற்கு அவரது மகனே நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தார். 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது எம்.கே. பாலன் போன்ற கழகக்காளைகள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் அடிக்கப்பட்டார்கள். 2011ஆம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்து 2006ஆம் ஆண்டு இரண்டு மீனவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்ற வழக்கில் கழகத்தினரை, முன்னாள் அமைச்சரை கொலைக்குற்றம் சாட்டி கைது செய்திருக்கிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் காணாமல் அடிக்கப்பட்ட அண்ணாநகர் ஜெயக்குமார் எங்கே? ஈரோடு மாவட்டத்தில் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியவரும், மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கத்தின் சகோதரருமான ஜோதி கிருஷ்ணன் ஆகியோரெல்லாம் என்ன ஆனார்கள்? அந்த வழக்குகள் என்னவாயிற்று? காணாமல் போன இரண்டு மீனவர்களை கொலை செய்ததாகக் கூறி கழகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதில் முனைப்பு காட்டுகின்ற அ.தி.மு.க. அரசு - குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் அ.தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் என்றால் மட்டும் முனைப்பு காட்ட மறுப்பது ஏன்?

நேற்றையதினம் கூட சென்னை உயர்நீதி மன்றத்தில் - அ.தி.மு.க. வைச் சேர்ந்தவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் நில அபகரிப்பு புகார் ஒன்று காவல்துறைக்கு கொடுக்கப்பட்டதை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகவும், ஆனால் போலீசார் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றும் தொடுத்த வழக்கில் - நீதிபதி திரு. சி.பி. செல்வம் அவர்கள், கடந்த ஐந்து மாதங்களாக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நில அபகரிப்பு புகாரில் மற்றவர்கள் மீது மட்டும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கிறார்கள். அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வரும் திங்கள்கிழமை போலீசார் பதில் அளிக்க இறுதி கெடு விதிக்கிறேன். ஏற்கனவேயே மூத்த போலீஸ் அதிகாரிகளை நியமித்து இந்த வழக்கை விசாரிக்க போலீசாருக்கு கெடு விதித்தேன். அப்போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டித்திருக்கிறார். எனவே சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. கழகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாத்திரம் அது பயன்படுத்தக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் தான் நடந்ததே; அப்போது இதைப் போல பொய் வழக்குகள் யார் மீதாவது திணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது உண்டா? ஆட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் பொறுப்பு வரும்போது அடக்கம் வேண்டும். அதனால்தான் அய்யன் வள்ளுவரும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆறிருள் உய்த்து விடும்” என்றார். ஆட்சியாளர்கள் இனியாவது வள்ளுவரின் இந்தக் குறள் வழி நடப்பார்கள் என்று நம்புவோமாக! வள்ளுவரின் உருவப்படமே பாடப் புத்தகங்களில் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்களா, அவர் எழுதிய குறளை நினைக்கப் போகிறார்கள்?

அன்புள்ள, மு.க. 27-9-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 397–401. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்