அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3537

முரசொலி கடிதங்கள் · 3537

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஐந்தாண்டு சாதனைகள்!

நாள் 12.3.2011சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3537. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஐந்தாண்டு சாதனைகள்! (நேற்றைய தொடர்ச்சி)(2)

உடன்பிறப்பே,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

பிப்ரவரி 2006-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 13.05.2006 வரையில் 3 கோடி ரூபாயாக இருந்த செலவினம், ஜனவரி 2007-ல் ரூபாய் 111 கோடியாகவும், தற்போது ரூபாய் 5440.98 கோடிக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 66.29 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு, 76,312 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயன்பெறுவோரில், 82 சதவீதம் பெண்கள் ஆவர். மேலும், 56 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களைச் சார்ந்த பயனாளிகள் ஆவார்கள். ஊரகப் பகுதிகளில் பெண் தொழிலாளர்களுக்கான ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது. மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தினை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளதோடு, மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. தேசிய அளவில் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதில் சிறந்த 22 மாவட்டங்களில் கடலூர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று 2.2.2009 அன்று புதுடில்லியில் 2007-08-ம் ஆண்டிற்கான விருதைப் பெற்றுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைப் போன்ற 26 மாவட்டங்கள் தேசிய அளவில் 2008-09-ம் ஆண்டிற்கான

விருதினை 2.2.2010 அன்று புதுடில்லியில் பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாட்டிற்கென 5098 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.

சமூக நீதியை மேம்படுத்தவும், சாதி சமயமற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்கவும் மக்கள் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் செய்தியை பரப்பவும், இந்த அரசு 1997-98 ஆம் ஆண்டு முதல் 145 சமத்துவ புரங்களை அமைத்துள்ளது. 2006இல் இத்திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி, புதிதாக 95 சமத்துவபுரங்கள் அமைக்கவும்; புதிதாக கட்டப்படும் 95 சமத்துவபுரங்கள் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட 145 சமத்துவபுரங்களின் நுழைவாயிலிலும் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைகளை நிறுவிடவும் திட்டமிடப்பட்டது. மொத்தம் 240 சமத்துவபுரங்களில் இதுவரை 210 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன; எஞ்சிய சமத்துவபுரங்களின் கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

2010-2011ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடியிருப்பையும் மத்திய அரசு வழங்கும் 33 ஆயிரத்து 750 ரூபாயுடன், தமிழக அரசு வழங்கும் 26 ஆயிரத்து 250 ரூபாயையும் சேர்த்து, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அளவுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு குடியிருப்புக்கு தமிழக அரசு வழங்கும் நிதி 26 ஆயிரத்து 250 ரூபாய் என்பதில், மேலும் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் சேர்த்து, 41 ஆயிரத்து 250 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படுமென 27.8.2010 அன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் அறிவித்தபடி, ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு குடியிருப்பும் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழக அரசு வழி வகுத்தது.

2006ஆம் ஆண்டுக்குப் பின் இத்திட்டத்தின் கீழ், 2,337 கோடியே 42 இலட்சம் ரூபாய்ச் செலவில் 4 இலட்சத்து 26 ஆயிரத்து 527 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, 79 ஆயிரத்து 481 கச்சா வீடுகள் 113 கோடியே 22 இலட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுள்ளன.

2007-2008 முதல் இவ்வரசால் தொடங்கப்பட்ட

இத்திட்டத்தின்கீழ் பல ஆண்டுகளாக இம்மாநிலத்தில் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையிலிருந்த ஏறத்தாழ 22,000 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிகள் மற்றும் 4,500 நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அரசு ஆணையிட்டு; 24 ஆயிரத்து 649 பள்ளிகளில் 353 கோடியே 11 இலட்சம் ரூபாய்ச் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2007-2008 முதல் 106 கோடியே 42 இலட்சம் ரூபாய் மக்கள் பங்களிப்புடன் 239 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 132 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு; 7 ஆயிரத்து 254 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சாலைகள் -

13.5.2006-க்குப் பிறகு பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், நபார்டு ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, 12வது நிதிக்குழு மானியம் மற்றும் இதர திட்டங்களின் கீழ், 3 ஆயிரத்து 854 கோடியே 29 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 33,066 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள் எடுக்கப்பட்டு; 29 ஆயிரத்து 235 கிலோ மீட்டர் நீளச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு எஞ்சிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

1.4.2008 முதல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதால், சிறு கட்டடங்கள், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்தவும், அவைகளை நீடித்து நிலைத்திருக்கக் கூடியதாக மாற்றவும் 2008-2009ஆம் ஆண்டு, “ஊரக கட்டமைப்புத் திட்டம்” என்ற புதிய திட்டம் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகளான சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள், மயான வசதி, தெரு விளக்குகள், கட்டடப் பணிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2010-2011ஆம் ஆண்டில் 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 47 ஆயிரத்து 478 பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

2010-2011ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் ஊராட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கட்டடங்களை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும், புதுப்பிக்கவும் 100 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, 10 ஆயிரத்து 907 பணிகள் நடப்பாண்டில் எடுக்கப்பட்டு ஊராட்சிகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

உடன்பிறப்பே, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதி மக்கள் கோரும் மேம்பாட்டுத் திட்டங்களை அமைத்துச் செயல்படுத்துவதற்காக 1997ஆம் ஆண்டில் அன்றைய கழக அரசு தலா 25 இலட்ச ரூபாய் வீதம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் அமைத்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு பாடுபடும் வாய்ப்பை உருவாக்கியது. 2006-2007இல் 1 கோடி ரூபாயாக இருந்த இத்திட்ட நிதி படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2010-2011ஆம் ஆண்டில் 1.75 கோடியாக இந்த அரசினால் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் 2006-க்குப்பின் 1727 கோடியே 25 இலட்சம் ரூபாய்ச் செலவில் 1,59,583 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1 இலட்சத்து 50 ஆயிரத்து 263 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டம்

இத்திட்டத்தின்கீழ் 570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18,500 பணிகள் மேற்கொள்ளப்பட்டு; 17,055 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முழு சுகாதார இயக்கம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டமைக்காக 2006-2007 முதல் நான்காண்டுகளில் 2213 கிராம ஊராட்சிகளில் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளைப் பெற்றன. இத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிச் சாதனை படைத்ததில் 2007-2008இல் தமிழகம் இந்தியாவில் இரண்டாம் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள 5 பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மத்திய திட்டக் குழுவால் செயல்படுத்தப்பட்ட ராஷ்ட்ரிய சம்விகாஸ் யோஜனா, மத்திய ஊராட்சித் துறை அமைச்சகத்திற்கு 2006-2007இல் மாற்றப்பட்டு அத்திட்டம் பிற்படுத்தப்பட்ட

பகுதிகளுக்கான மானியநிதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சியில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைச் சரிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமான பணிகளை உள்ளாட்சி நிறுவனங்கள் சிறப்பாக செயல் ரீதியாக நடைமுறைப்படுத்தத்தக்கவகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பின் தங்கிய மாவட்டங்களாகக் கருதப்படும் கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2007-2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து பெற்று பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உதவி இயக்குநர் முதல் மக்கள் நலப் பணியாளர்கள் பணியிடம் வரை இருந்த 17,819 காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு; 17,549 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 270 காலிப் பணி இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - வேலை வாய்ப்பகம் மூலம் விரைவில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையில் தொழில்நுட்பப் பிரிவை வலுவூட்டும் வகையில் மொத்தம் 3380 அலுவலர்கள் தொழில்நுட்பப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் முழு நேர ஊராட்சி உதவியாளர்களுக்கு ரூ.1300-20-1500-25-2000 என்ற காலமுறை ஊதியத்தையும், பகுதிநேர ஊராட்சி எழுத்தர்களுக்கு ரூ.625-10-725-20-925 என்ற காலமுறை ஊதியத்தையும் 5.12.2006 அன்று அரசு ஆணையிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள் நிலை 2 பணியிடங்களை ரூ.2500-5000 என்ற ஊதிய விகிதத்தில் ரூ.500 தர ஊதியத்துடன் ஊராட்சி உதவியாளர் பணியிடங்களாக உயர்த்தி 1.6.2009 அன்று அரசு ஆணை பிறப்பித்தது. ஏறத்தாழ 11,000 இரண்டாம் நிலை ஊராட்சி உதவியாளர்கள் பயனடைந்துள்ளனர்.

இத்துறையின் 2,544 விரிவாக்க அலுவலர் பணியிடங்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் மக்கள் நலப் பணியாளர்களை ஈர்த்துக் கொள்ளுதல் குறித்து 27.11.2008 அன்று ஆணை வெளியிடப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர்களால் இதுவரை 280 அலுவலக உதவியாளர் பணியிடங்களும், 56 இரவுக் காவலர் பணியிடங்களும் மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன.

385 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு புதிதாக ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களைத் தோற்றுவித்து 12.05.2008 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 385 ஓட்டுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் மற்றும் பதிவுமுறை எழுத்தர் - அலுவலக உதவியாளர் - இரவுக் காவலர் ஆகிய பிரிவுகளிலிருந்து பதவி உயர்வின் மூலமாகவும் நிரப்பப்பட்டுள்ளன.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி - விசைப் பம்பு இயக்குபவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2007-08 ஆம் ஆண்டு முதல் போனஸ் தொகையாக ரூபாய் 300லிருந்து ரூபாய் 1,000/- ஆக உயர்த்தி வழங்க 12.1.2009இல் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல, 2008-09-ம் ஆண்டிற்கும் 2009-2010ஆம் ஆண்டிற்கும் தலா 1000 ரூபாய் வீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 12,653 மக்கள் நலப் பணியாளர்களும், 1.6.2006 முதல் மீண்டும் இந்த அரசினால் நியமனம் செய்யப்பட்டனர். மக்கள் நலப்பணியாளர்கள் ரூ.950/- தொகுப்பூதியமாகவும், ரூ.50/- பயணப்படியாகவும் பெற்று வந்தனர். இவர்கள் 1.6.2009 முதல் ரூ.2500-5000 மற்றும் ரூ.500 தர ஊதியம் என்ற காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். அரசின் சிறப்பான நடவடிக்கை மூலம் ஏறத்தாழ 12,653 மக்கள் நலப் பணியாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.

2007-08 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் (ஊராட்சி), உதவி இயக்குநர்கள் (தணிக்கை) ஆகியோர்களுக்கு 121 புதிய ஈப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2007-2008-ம் ஆண்டு, ஒருமுகப்படுத்தப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியிலிருந்து ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு 385 புதிய ஈப்புகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் புதிதாக தோற்று விக்கப்பட்ட உட்கோட்ட உதவி செயற்பொறியாளர்களுக்கு 664 ஈப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 1170 ஈப்புகள் 52 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கானப் பல்வேறு மேம்பாட்டிற்கான திட்டங்களைச் சிறப்பாகவும் நல்ல ஒருங்கிணைப்புடனும் செயல்படுத்தும் வகையில் சூலை 2006 முதல் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 31.12.2010வரை 75,66,497 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 4,88,970 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவர்களின் மொத்த சேமிப்பு ரூபாய் 2658 கோடி ஆகும். இவற்றுள் 26,94,682 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 1,75,493 புதிய சுய உதவிக் குழுக்கள் சூலை 2006-க்குப்பின் உருவாக்கப்பட்டன.

இதுவரை, சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படாத பகுதிகளில் குழுக்கள் அமைப்பதும் சுய உதவிக் குழுவில் இதுவரை இணையப்படாத மகளிரை குழுக்களில் இணைப்பதும் அரசின் குறிக்கோளாக உள்ளது. மேலும் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் அனைத்து பெண்களையும் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை சுய உதவிக் குழுவில் சேர்ப்பதே முக்கிய நோக்கமாகும்.

அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 2006-07 மற்றும் 2007-08 ஆம் ஆண்டுகளில் புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் 43,304 சுயஉதவிக் குழுக்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 23,886 சுயஉதவிக் குழுக்கள்; குழுக்கள் அதிகம் அமைக்கப்படாத கிராம ஊராட்சிகளிலும், 41,373 சுயஉதவிக் குழுக்கள் நகர்ப்புறத்தில் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

2006-07 ஆம் ஆண்டு முதல், நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டுகளில் 96,699 நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 96.70 கோடி சுழல்நிதி மானியமாக வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் பொதுவாக 25,000 முதல் 30,000 சுய உதவிக் குழுக்களுக்கு மட்டுமே சுழல்நிதி வழங்கப்பட்டது. ஆனால்,

2008-09ஆம் ஆண்டில் அதுவரை சுழல்நிதி பெறாத தகுதி வாய்ந்த ஒன்றரை இலட்சம் சுய உதவிக் குழுக்களுக்கும் சுழல்நிதி மானியம் வழங்க அரசு முடிவு செய்து அதன்படி, சுழல் நிதி மானியம் பெறாத, அனைத்து 1,50,000 சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கிக் கடனுடன் 150 கோடி ரூபாய் சுழல்நிதி வழங்கப்பட்டது.

2009-10 ஆம் ஆண்டில் 70,000 சுய உதவிக் குழுக்களுக்கு 70 கோடி ரூபாய் சுழல்நிதி மானியமாக வழங்க அனுமதி தந்து, 69,000 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.

2010-11 ஆம் ஆண்டில் 50,000 ஊரக சுய உதவிக் குழுக்களுக்கும் 20,000 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கும், சுழல்நிதி மானியம் வழங்க 70 கோடி ரூபாய் அமைக்கப்பட்டு; இதுவரை, 63,967 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது.

30.9.2010 அன்றைய அளவில், சுய உதவிக் குழுக்களுக்கு 1989ஆம் ஆண்டு முதல் ரூபாய் 9521.37 கோடி வங்கிக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் சூன் 2006-க்குப்பின் ரூபாய் 7756.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது வழங்கப்பட்ட மொத்தக் கடனில் 81 சதவீதமாகும்.

அரசின் முயற்சியினால் 25.3.2008 அன்று கூடிய மாநில அளவிலான வங்கியாளர்களின் குழுமம் சுய உதவிக்

குழுக்களுக்குக் கடன் இணைப்பு வழங்கும்போது மானியம் நீங்கலாக பின்வரும் அளவில் கடன் தொகையினை வழங்கிட வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியது.

முதல் இணைப்பு : சுய உதவிக் குழு ஒன்றிற்கு ரூ.50,000

இரண்டாவது இணைப்பு: சுய உதவிக் குழு ஒன்றிற்கு ரூ.1,00,000

மூன்றாவது இணைப்பு: சுய உதவிக் குழு ஒன்றிற்கு ரூ.1,50,000

நான்காவது மற்றும் பிந்தைய கடன் இணைப்புகள்: சுய உதவிக் குழுக்களின் தேவையின் அடிப்படையில் உயர்ந்ததொகை.

இம்மாநிலத்தின் வரலாற்றில் முதல் முறையாக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்பு வழங்க மாநில அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முறையாகக் கண்காணிக்கப்படுகிறது.

2010-11 ஆம் ஆண்டில் 62 மாவட்ட அளவிலான பொருட்காட்சிகளும், 134 வட்டார அளவிலான பொருட்காட்சிகளும் நடைபெறுகிறது. இதில் மொத்த சுய உதவிக் குழுக்களும் தயாரித்த பொருட்களின் விற்பனைத் தொகை ரூ.34.88 இலட்சம் 2 மாவட்ட அளவிலும், 165 இலட்சம் 51 வட்டார அளவிலும் விற்பனைகள் செய்யப்பட்டன. மேலும், மாநில அளவில் 2 சுய உதவிக் குழு பொருட்காட்சி நவராத்திரி, கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய பண்டிகைகளில் நடைபெறும்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ரூ.15.33 கோடி செலவில் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு நிரந்தர சந்தை வளாகம் கட்டப்பட்டு அதற்கு அன்னைதெரசா மகளிர்வளாகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இதைப்போல சுய உதவிக் குழு உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குச் சிறந்த முறையில் ஊரகப் பகுதியில் ஒரு மாவட்டத்திற்கு மூன்று என்ற விகிதத்தில் 86 கிராம விற்பனை மையங்கள் ரூ.12.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன.

2006-07 ஆம் ஆண்டில், பயிற்சிக்கு வருகை தரும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்படும் பயிற்சித்தொகை ரூபாய் 7.50 லிருந்து ரூபாய் 45 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கான பயிற்சித்தொகை ரூபாய் 20-ல் இருந்து ரூபாய் 45 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

சிறப்பாகச் செயலாற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களையும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளையும் ஊக்குவிக்கும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகளை அரசு அறிவித்துள்ளது. மாநில அளவில் ஐந்து சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும், 10 சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் ஒரு சிறந்த சுயஉதவிக் குழு கூட்டமைப்பு மற்றும் 3 சிறந்த சுயஉதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. வட்டார அளவில் சிறப்பாக செயல்படும் ஒரு சுயஉதவிக் குழுவிற்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

2006-07 முதல் நான்கு ஆண்டுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

2009-10 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுத் தொகையினை அரசு உயர்த்தியுள்ளது. மாநில அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுத் தொகை ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து ரூபாய் 3 இலட்சமாகவும், சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு இலட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுத் தொகை ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் ஆகவும், சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

(தொடர்ச்சி நாளை)

அன்புள்ள, மு.க. 12-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 24–33. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்