முரசொலி கடிதங்கள் · 3536
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஐந்தாண்டு சாதனைகள்! (1)
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3536. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஐந்தாண்டு சாதனைகள்! (1)
உடன்பிறப்பே,
மனித உடம்பின் நாடி நரம்புகள் போல், மக்களாட்சி செழிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் வேர்களாகவும், விழுதுகளாகவும் திகழ்கின்றன. அவை செம்மையாகச் செயல் படுவதற்குத் தேவையான தலைமைகளையும் அவர்களின் கீழ் இயங்கும் நிலைமைகளையும் தேர்வு செய்வதற்காக 2006ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இந்த அரசு தமிழ்நாட்டில் உள்ள 12,618 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 29 மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தியது.
ஊரகப் பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 76 சதவீத மக்கள் வாக்களித்து, 29 மாவட்ட ஊராட்சி தலைவர்கள் 385 ஒன்றியக் குழு தலைவர்கள், 12,618 கிராம ஊராட்சித் தலைவர்கள் 656, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6570, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 97,458, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 1,07,716 மக்கள் பிரதிநிதிகள் வெற்றிகரமாக தேர்வு செய்யப்பட்டனர். 1996இல் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு, தமிழ்நாட்டில் முதல் முறையாக மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடுகளை அமல்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தியது.
அதே அடிப்படையில் 2006 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் ஏறத்தாழ 40 ஆயிரம் மகளிர் நான்கு மாநகராட்சி மேயர் பொறுப்பு உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்று மக்களாட்சிக் தத்துவத்தின் வெற்றி முத்திரைகளாக விளங்குகின்றனர்.
● பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம்,
கொட்டகச்சியேந்தல் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு அக்டோபர் 2006-ல் வெற்றிகரமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் கிராம சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை அழைத்து சென்னையில் 13.11.2006 அன்று ‘சமத்துவப் பெருவிழா’ நடத்தி சிறப்பிக்கப்பட்டது.
● உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் வழங்குவதற்காக, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் இரண்டு உயர் நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் 10.12.2007 அன்று 39 பொருள்களில் அளித்த 99 பரிந்துரைகளில், 61 பரிந்துரைகள் மீது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
● ஊரக உள்ளாட்சிகளின் எல்லைகளை வரையறை செய்தல் - ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிலை உயர்த்துதல், அவற்றின் எல்லைகளை மாற்றியமைத்தல், அவைகளைப் பிரித்தல் தொடர்பாக மக்களின் கருத்துகள் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 397 பரிந்துரைகள் வரப்பெற்று அவை குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
● விவசாயிகளின் வரிச் சுமையைக் குறைத்திட 2009 டிசம்பரில் சட்டம் இயற்றப்பட்டு தலவரி மற்றும் தலமேல் வரி வசூலிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.
● பல உறுப்பினர் வார்டுகளை ஓர் உறுப்பினர் வார்டுகளாக மாற்றம் செய்தல் - கிராம ஊராட்சிகளில் நடைமுறையில் இருந்த பல உறுப்பினர் வார்டுகளை நீக்கம் செய்து, அவற்றிற்குப் பதிலாக ஓர் உறுப்பினர் கொண்ட வார்டுகளாக மாற்றி 2009இல் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
● பாரம்பரியமாக, சிறு குளங்களை ஊராட்சி ஒன்றியங்களே பராமரித்து வந்தன. குட்டை பராமரிப்புப் பணிகளைக் கிராம ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக ஒப்படைத்திடவும் குளங்களின் பராமரிப்புப் பணிகளை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒப்படைத்திடவும் 2009-ல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
● பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையம், தனது ஏழாவது
அறிக்கையில் “நாடாளுமன்றம், சட்டமன்றப் பேரவை, மாநகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றைப் பொறுத்த அளவில், பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்றிருப்பவர்களை உடனடியாகப் பதவிப் பொறுப்பிலிருந்து அல்லது பதவியிடத்திலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்; மற்றும் சட்டத்தின்படி வகை செய்யப்பட்டுள்ள தண்டனை வழங்கப்படுவதுடன் குறைந்தது 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்படுதல் வேண்டும்”- என அளித்த பரிந்துரையை ஏற்று 2009இல் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
● தேர்தல் நடக்கும் நாளிற்கு முதல் நாள் மாலை 5.00 மணி வரை தபால் வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்த தேர்தல் விதியில் திருத்தம் செய்து தபால் வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என 2.1.2009 அன்று ஆணையிடப்பட்டது.
● ஊரகப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளுக்கான உரிமம் வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்தவும், விளம்பர பலகைகள் நிறுவுதலைக் கண்காணிக்கவும், நகர்ப்புற சட்டத்திற்கு இணையாக, விளம்பர பலகை நிறுவ உரிமம் வழங்குதல் மற்றும் விளம்பர வரி விதிப்பு செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வழங்கி, 18.5.2009 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
● தமிழக ஊராட்சிகள் திறமையாகவும் பொறுப்பாகவும் செயல்படுகின்றன என்பதற்காக மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தினால் 2006க்குப்பின் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. 2006-07 ஆம் ஆண்டில் இத்துறை நான்காவது இடம் பெற்றமைக்காக 82.64 இலட்சம் ரூபாயையும்; 2007-08 ஆம் ஆண்டில் முதல் இடம் பெற்றமைக்காக 1 கோடி ரூபாயையும், 2008-09ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தையும், 2009-10ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தையும் பெற்றமைக்காக தலா 1.5 கோடி ரூபாய் வீதம் 3 கோடி ரூபாயையும் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் பரிசாக வழங்கிப் பாராட்டியது.
உடன்பிறப்பே, 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற
பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து சி.என்.என். - ஐ.பி.என். செய்தி நிறுவனம் “வைர மாநில விருதுகள்” வழங்குகிறது. அதன்படி, 2010ஆம் ஆண்டிற்காக தமிழ்நாட்டுக்கு இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் 23.2.2011 அன்று வழங்கிப் பாராட்டியுள்ளது.
ஆண்டுதோறும் சிறப்பான மற்றும் புதுமையான முயற்சிகளைச் செயல்படுத்தும் 15 கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து “உத்தமர் காந்தி ஊராட்சி விருது” வழங்கும் திட்டம் 2006 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு; விருது பெறும் கிராம ஊராட்சிகளுக்கு கேடயமும், ரூபாய் 5 இலட்சம் ரொக்கப் பரிசும், கிராம ஊராட்சித் தலைவர்களுக்குப் பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப்பொறுப்பின் ஒரு பகுதியாக பாராட்டத்தக்க வகையில், பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 2007- 8 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு நிரந்தர பயணப்படி வழங்க 1997இல் ஆணையிட்டு வழங்கி; 1999-ம் ஆண்டில் அதில் மேலும் 10 சதவீதம் உயர்த்தி வழங்கியதுடன் 28.9.2007 அன்று வெளியிடப்பட்ட ஆணையின் படி கிராம ஊராட்சித் தலைவர் களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்ட பயணப்படி 330 ரூபாய் என்பதை 500 ரூபாய் என்றும்; ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட பயணப்படி 550 ரூபாய் என்பதை 750 ரூபாய் என்றும்; ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்ட பயணப்படி
220 ரூபாய் என்பதை 400 ரூபாய் என்றும்; மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட பயணப்படி 1100 ரூபாய் என்பதை 1500 ரூபாய் என்றும்; மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட பயணப்படி 330 ரூபாய் என்பதை 500 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கியது.
மக்களுக்கும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதியன்று “உள்ளாட்சிகள் அமைப்புகள் தினம்” கடைப்பிடித்திட 26.10.2007 அன்று ஆணையிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கிராம ஊராட்சிகள், பொது நிதியிலிருந்து மேற்கொள்ளும் ஒரு பணிக்கு ரூபாய் 1 இலட்சத்திற்கும் மிகாமல் நிர்வாக அனுமதி வழங்கலாம் என்பதை ரூபாய் 2 இலட்சம் வரை ஒரு பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கலாம் என்றும்; ஊராட்சி ஒன்றியம் ஒரு பணிக்கு ரூபாய் 5 இலட்சத்திற்கும் மிகாமல் நிர்வாக அனுமதி வழங்கலாம் என்பதை ரூபாய் 10 இலட்சம் வரை அனுமதி வழங்கலாம் என்றும்; மாவட்ட ஊராட்சி ஒரு பணிக்கு ரூபாய் 10 இலட்சத்திற்கும் மிகாமல் நிர்வாக அனுமதி வழங்கலாம் என்பதை ரூ.20 இலட்சம் வரை அனுமதி வழங்கலாம் என்றும்; நிறைவேற்றப்படும் பணிகளுக்குத் தொழில் நுட்ப அனுமதி வழங்குவதற்குப் பொறியாளர்களுக்கான அதிகாரத்தினை உயர்த்தவும் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளைப் பொறுத்தவரை பொறியியல் பிரிவு அலுவலர்களுக்கான அளவீடு மற்றும் மேல் அளவீடு செய்யும் அதிகாரத்தினைச் சீரமைத்திடவும் 20.12.2007 அன்று இந்த அரசு ஆணையிட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கும் தொலைபேசி வசதியையும்;
2006-07 மற்றும் 2007-08ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஊராட்சிகள் திறமையாகவும் பொறுப்பாகவும் செயல்படுவதை ஊக்குவிக்கும் திட்டநிதியினைக் கொண்டு, 29 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 385 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்களின் அலுவலக உபயோகத்திற்காக கணினி மற்றும் அச்சுப் பொறிகளையும்;
2008-2009ஆம் ஆண்டிற்கான இத்திட்ட நிதியினைக் கொண்டு, 29 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 385 ஊராட்சி ஒன்றியங்களின் உபயோகத்திற்காக இன்வெர்ட்டர்களையும் (Invertors) அரசு வழங்கியுள்ளது.
2009-2010 ஆம் ஆண்டிற்கான இத்திட்ட நிதியைக் கொண்டு 385 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 385 கணினி மற்றும் அச்சுப் பொறிகளை அரசு வழங்கியுள்ளது.
2007-09ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கம்பியில்லாத தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டன.
கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் அல்லது ஊராட்சி ஒன்றிய, மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரிபாதி என்பதைக் குறைந்தபட்சம் ஐந்தில் மூன்று பங்கு எனவும், தீர்மானத்தை நிறைவேற்ற தற்போது உள்ள மூன்றில் இரண்டு பங்கு என்பதை ஐந்தில் நான்கு பங்கு எனவும் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மேற்படி சட்ட திருத்தப்படி, கிராம ஊராட்சிகளின் துணைத் தலைவர்கள் அல்லது தலைவர்கள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள்ளாகவோ, பதவிக்காலம் முடியும் இறுதி ஆண்டிலோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இயலாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
மாநில அரசின் சொந்த வரி வருவாயிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி 2007-2008-ம் ஆண்டில் 8 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகவும் மேலும் இதுநடப்பு நிதியாண்டில் 2009-2010-ல் 9.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு 2010-2011ஆம் ஆண்டில் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 2006-07-ம் ஆண்டில் ரூ.1,225 கோடியிலிருந்து 2010-11 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 2,674.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குடிநீர் வழங்குதல், சுகாதாரம், சாலைகள் மற்றும் தெருவிளக்குகளை பராமரித்தல் போன்ற அடிப்படை வசதிகளை
நிறைவு செய்யும் பொறுப்பு கிராம ஊராட்சிகளைச் சார்ந்தது. ஆனால் பல கிராம ஊராட்சிகள் போதிய நிதி வசதியின்றி அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய சிரமப்படுவதால், இந்நிலையினைச் சரிசெய்ய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:-
2007-08-ம் ஆண்டிலிருந்து மாநிலநிதி ஆணைய நிதிப் பகிர்வில், கிராம ஊராட்சிகளின் பங்கு 47 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நிதிப் பங்கீடு செய்யப்படும்போது, பல சிறிய ஊராட்சிகளுக்கு போதுமான நிதி கிடைப்பதில்லை. இந்நிலையினை மாற்ற மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து அனைத்து ஊராட்சிகளுக்கும் குறைந்தபட்ச நிதியாக தலா ரூபாய் 3 இலட்சம் வீதம் சமமாக வழங்கவும், மீதமுள்ள தொகையை மக்கள் தொகை அடிப்படையில் வழங்கவும் ஆணையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சமச்சீராக நிதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2008-09-ம் ஆண்டு முதல் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து விடுவிக்கப்படும் நிதியில் குறைந்தபட்ச நிதியாக தலா ரூ.30 இலட்சம் வீதம் சமமாக வழங்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி நிதி விடுவிக்கப் படுகிறது.
மத்திய அரசிடமிருந்து பெறப்படும் பன்னிரெண்டாவது நிதிக் குழு மானியம் முழுமையையும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது 2006-07 ஆம் ஆண்டு இரண்டாவது அரையாண்டு முதல் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், 2010-11-ம் ஆண்டிற்கான பதிமூன்றாவது நிதிக் குழு மானிய நிதி 286 கோடி ரூபாய் கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
தலவரி, தலமேல் வரி, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி இவை மூலமான வருவாய் இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் மாவட்ட அளவில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளுக்கு ஈடு செய்யப்பட்டது.
ஒருமுகப்படுத்தப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய்க்குமுள்ள சிறப்புத் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களுக்கு
385 வாகனங்களும், 664 வாகனங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட உபகோட்டங்களின் உதவி செயற் பொறியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மிகவும் பழுதடைந்துள்ள 87 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களுக்குப் பதிலாக ஒவ்வொரு கட்டடமும் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
மிகவும் அவசியமான சாலைப் பணிகள், ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், தெரு விளக்குகள், பாலங்கள் போன்ற பணிகள் இந்நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடிசைகளில்லாக் கிராமப்புறங்கள், குடிசைப் பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓலைக்குடிசை வீடுகளையும் கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய நிலையான வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” 2010- 11 முதல் 2015-16 வரையிலான 6 ஆண்டு காலத் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கான முதலாம் ஆண்டில் 3 இலட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பயனாளி ஒருவருக்கு மாநில அரசு 75 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. 28.2.2011 வரை 75,000 கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 31.3.2011-க்குள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகளும், 15.4.2011-க்குள் 2 இலட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு இதுவரை 1082 கோடி அரசு செலவிட்டு உள்ளது. மேலும், 12 இலட்சம் பயனாளி களுக்குத் தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, மேலும், 3 இலட்சம் குடிசைகள் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு, 2011 பிப்ரவரியில் பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனவரி 2007-ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டமே மாநில அரசுத் திட்டங்களில் மிகப்பெரிய திட்டமாகச் செயல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் குளம், நூலகம், விளையாட்டு மையம், சுடுகாடு-
இடுகாடு, குடிநீர்த் திட்டப் பணிகள் ஆகிய கட்டாயப் பணிகளும், தெரு விளக்குகள், மீன் வளர்ப்பு குளங்கள், சிமெண்ட் சாலைகள், கிராமச்சந்தைகள் ஆகிய பணிகள் உள்ளூர்த் தேவையின் அடிப்படையிலும் எடுக்கப்படுகின்றன. இத்திட்டத்திற்காக 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளுக்கும் மொத்தம் 2,548 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டதுடன் மாநில அரசின் வேளாண்துறை, கல்வித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை போன்ற பிற முக்கிய துறைகளின் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் கிராம ஊராட்சி அனைத்திலும் 12 ஆயிரத்து 746 கோடியே 19 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய்ச் செலவில் 31 இலட்சத்து 20 ஆயிரத்து 320 பணிகள் நிறைவேற்றப்பட்டு கிராம ஊராட்சிகள் வளம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், விளையாட்டு மையம், குளம், சுடுகாடு-இடுகாடு, குடிநீர் ஆதாரப் பணிகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமையப் பெற்ற ஒரே மாநிலம் என்ற பெருமையைப் பெரும் வகையில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி நாளை)
அன்புள்ள, மு.க. 11-3-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 391–399. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.