அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3535

முரசொலி கடிதங்கள் · 3535

கமழும் கல்வி நீரோடை - 3

நாள் 10.3.2011சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3535. கமழும் கல்வி நீரோடை - 3

உடன்பிறப்பே,

பள்ளிக் கல்வித்துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன்.

சமச்சீர் கல்வி

சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடை முறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

2011-2012 கல்வியாண்டில் சமச்சீர்க் கல்விமுறையில் இதர வகுப்புகளுக்கான பொதுப்பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டு பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டு, தமிழகத்தில் வாழ்ந்து வரும் மொழிவழிச் சிறுபான்மையினர் தமிழை ஒரு பாடமாகக் கற்பதோடு, அவர்தம் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கூடுதலாக தமது தாய்மொழியையும் ஒரு பாடமாகக் கற்கவேண்டும் என்றும்; அதில் தேர்ச்சி பெறுவதற்கு, தமிழ்ப் பாடத்திற்கு நிர்ணயித்திருப்பதைப் போல குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம்

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம்

வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம் 2009 இயற்றப்பட்டு 7.12.2009 முதல் செயல்படுத்தப்பட்டது.

இலவச மிதி வண்டி

இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் 2006- 2007ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் 487 கோடியே 35 இலட்ச ரூபாய்ச் செலவினத்தில் 21 இலட்சத்து 28 ஆயிரத்து 938 மாணவ மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின்கீழ் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1250/- மாணவியருக்கு ரூ. 1500/- தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதே போன்று 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1750/-, மாணவியருக்கு ரூ. 2000/-ம் வழங்கப்பட்டு வருகிறது.

2006-2007 ஆம் ஆண்டு முதல்

2009-10 ஆம் ஆண்டு முடிய மொத்தம்

20 கோடியே 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்

1 இலட்சத்து 24 ஆயிரத்து 702 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழிக் கல்வி 1-ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயம் என 31.5.2006 அன்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவ மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.3,000 வழங்கிட ஆணை பிறப்பிக் கப்பட்டு வழங்கப்படுகிறது.

தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு

அளிக்கப்பட்டு ஆண்டுக்கு ஏறத்தாழ 10 இலட்சம் மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர்.

தேர்வில் கூடுதல் நேரம்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் தங்களது வினாத் தாட்களை முறையாக படித்திடவும், விடைத்தாட்களை ஒழுங்குபடுத்திடவும், கூடுதலாக 15 நிமிடங்கள் நமது கழக அரசு பதவியேற்றதற்குப் பிறகு அனுமதிக்கப்பட்டது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

சிறப்புக் கட்டணம் ரத்து

மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு 2008-2009 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்த வேண்டிய சிறப்புக் கட்டணத்தை இரத்து செய்து 21 கோடியே 40 இலட்ச ரூபாயினை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 50 இலட்சம் மாணவ மாணவியர் மாணாக்கர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகள் பள்ளியில் இருந்து நின்று விடுவதைத் தவிர்க்கும் பொருட்டு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின

16 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத மாணவியர்கள் பெயரில் தலா ரூ.3000/- வீதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இத்திட்டத்தின் கீழ் வைப்பீடு செய்யப்படும்.

2008-09ம் கல்வி ஆண்டில் மத்திய அரசால் ரூ. 36.38 கோடி செலவில் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 292 மாணவிகள்; 2009- 10ம் ஆண்டில் 32 கோடியே 75 இலட்சம் ரூபாய்ச் செலவில் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 170 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வந்துள்ள 150 மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், வேலை வாய்ப்புப் பெறவும் “O” level தேர்வுகள் தமிழக அரசுத் தேர்வுத் துறையின் உதவியுடன் நடத்தப்பட்டன.

11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள கடினப்பகுதிகள் நீக்கப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் 2006-2007 முதலே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி நாள்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாள்” எனக் கொண்டாட வேண்டும் என்று தமிழகச் சட்டப் பேரவையில் கழக அரசு ஒரு சட்டம் இயற்றி, அதைக் கொண்டாடும் வகையில், 2007-08 முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காமராஜர் அவர்களின் புகழ் போற்றப்படுவதுடன், கல்வி பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே வளர்க்கப்படுகின்றன.

2006-07 ஆம் ஆண்டு முதல் சத்துணவுடன் வாரம் 2 முட்டைகள்; 2007-2008 முதல் வாரத்திற்கு 3 முட்டைகள்; 2008-09 ஆம் ஆண்டு முதல் மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை உண்ணாத மாணவர்களுக்கு வாழைப் பழங்கள் ; 2009-2010ஆம் ஆண்டு முதல் வாரம் ஐந்து முட்டைகள் வீதம் வழங்கப்படுகின்றன.

இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயண திட்டமும், 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருவாய்ச் சான்று ஆகியன பள்ளியிலேயே வழங்கும் திட்டமும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நன்கொடையாளர்கள் மூலம் புதிய பள்ளிக் கட்டடங்கள்

அரசு தொடக்கப் பள்ளிகளில் 2 வகுப்பறைகள் அல்லது 5 இலட்ச ரூபாய்; நடுநிலைப் பள்ளிகளில் 3 வகுப்பறைகள் அல்லது 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; உயர்நிலைப் பள்ளிகளில் 4 வகுப்பறைகள் அல்லது 15 இலட்ச ரூபாய்; மேல்நிலைப் பள்ளிகளில் 6 வகுப்பறைகள் அல்லது 20 இலட்ச ரூபாய்; அளவுக்கு தங்கள் சொந்த செலவில் நிதி வழங்கி கட்டடங்கள் கட்டிக் கொடுக்க முன்வரும் நன்கொடையாளர்கள் அவர்கள் விரும்பும் பெயரை அந்தக் கட்டடத்தில் பொறித்திட அனுமதித்து

1998ஆம் ஆண்டில் அன்றைய கழக அரசு பிறப்பித்த ஆணையை 9.2.2005 அன்று வெளியிடப்பட்ட அரசாணை மூலம் முந்தைய அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. 2006இல் பொறுப்பேற்ற இந்த அரசு, அரசுப் பள்ளிகளுக்கு நிலமாகவோ, நிதியாகவோ கட்டடம் கட்டிக் கொடுத்தல் மூலமாகவோ நன்கொடை வழங்கும் நன் கொடையாளர் விரும்பும் பெயரினை அப்பள்ளிக் கட்டடத்தில் பொறித்துக் கொள்ள 22.6.2006 அன்று ஆணை பிறப்பித்தது.

இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் உடற்கல்வி பாடப்பிரிவில் உடற்கல்வி பாடத்துடன் யோகாசன கல்வியும் முழுமையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 7,210 உடற்கல்வி ஆசிரியர்க்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு யோகா பயிற்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களைகொண்டு மாணாக்கர்க்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 46 இலட்சத்து 60 ஆயிரத்து 812 மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த, சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம்.

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையின் மூலம் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பட்டுவரும் 1200 பள்ளிகளுக்குத் தலா

ரூ. 1250/- வீதம் மாநில அரசிடமிருந்து நிதியுதவி பெற்று வழங்கப்படுகிறது.

தேசிய பசுமைப்படை மன்றம் செயல்பட்டு வரும் 7500 பள்ளிகளுக்குத் தலா ரூ. 2500/- வீதம் மைய அரசிடமிருந்து நிதியுதவி பெற்று வழங்கப்படுகிறது.

இத்திட்டச் செயல்பாட்டிற்காக மாநில அளவில் ஓர் உதவி இயக்குநர் (சுற்றுச்சூழல்) பணியிடம், மாவட்டக் கல்வி அலுவலர் நிலையிலும், மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர் பணியிடம் முதுகலைப்பட்ட ஆசிரியர் (தாவரவியல்/உயிரியல்) நிலையிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1960 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருது;

1997 ஆம் ஆண்டு முதல் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என வழங்கப்பட்டு வருகிறது.

விருதுத் தொகை 1000 ரூபாய் என்பது 2000 ரூபாய் என 1997 முதலும்; 2000 ரூபாய் என்பது 5000 ரூபாய் என 2007 முதலும் உயர்த்தப்பட்டு; விருதுபெறும் ஆசிரியர்களுக்கு விருதுத் தொகையுடன் வெள்ளிப்பதக்கமும், நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

2006-2007 முதல் இதுவரை 3 கோடியே 80 இலட்சம் ரூபாய்ச் செலவில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் எல்காட் நிறுவனம் மூலம் 76 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளன.

2008-2009 மற்றும் 2009-2010 முடிய 1 கோடியே 56 இலட்சம் ரூபாய்ச் செலவில் 1500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் கணினி மையங்களை மொழி ஆய்வகங்களாக மாற்றி மாணவ மாணவியரின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திட எல்காட் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2008-09 மற்றும் 2009-10 முடிய இதுவரை 2 கோடி ரூபாய்ச் செலவில் 200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

2009-10 ஆம் ஆண்டில் ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு குரல் ஒலி பயிற்சித் திட்டம் 20 இலட்சம் ரூபாய்ச் செலவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து ஆங்கில மொழி ஆசிரியர் களுக்கும் முறையான பயிற்சி வழங்கப்பட்டது.

பொது நூலக இயக்ககம்

பொது நூலகத் துறையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் பகுதி நேர நூலகர்களாகவும், ஊர்ப்புற நூலகர்களாகவும் ரூ.1500/- மாதாந்திர தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1282 நூலகர்கள் முறையான ஊதிய விகிதத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக ரூ.3200-85-4900 என்ற சம்பள விகிதத்தில் 28.10.2006 முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு நிர்வாகக் காரணங்களால் தினக்கூலி பணியாளர்களைக் கொண்டு ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது 865 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு தற்காலத்திற்கேற்ற நவீன நூலக வசதிகள் வழங்கும் பொருட்டு கன்னிமாரா பொது நூலகம், 30 மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் மாநகராட்சி / நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 100 நூலகங்கள் என

131 நூலகங்களில் கணிப்பொறி வசதி மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களைத் தரம் உயர்த்துவதன் மூலம் சிறப்பான நூலகச் சேவை வழங்கும் பொருட்டு 166 பகுதி நேர நூலகங்களை ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தியும், புதிதாக 169 ஊர்ப்புற நூலகங்கள் திறக்கவும் அரசாணை வெளியிடப்பட்டு நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேற்படி நூலகங்களை நிர்வகிக்க 335 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நூல்கள் வாங்குதல்

அறிவியல் செய்திகளை அறியவும், பொது மக்களின் ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடவும் ஏதுவாக ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் நூலகங்களுக்கு வாங்கி வழங்கப்படுகின்றன. 2006-2007 முதல் இந்த நிதியாண்டு வரை தமிழ் நூல்கள் 11 ஆயிரத்து 837 தலைப்புகளில் - 45.14 கோடி ரூபாய்க்கும் - ஆங்கில நூல்கள் 5466 தலைப்புகளில் 6.03 கோடி ரூபாய்க்கும், ஆக மொத்தம் 51.17 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.

மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வாணையம், வங்கித் தேர்வாணையம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளில் சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் இளைய தலைமுறையினர் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் ஏற்கனவே செயல்பட்டுவரும் 150 குடிமைப் பணி மையங்களுடன் மேலும் 50 மையங்கள் மாவட்ட மைய நூலகங்களிலும், நகராட்சிப் பகுதிகளில் உள்ள நூலகங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய நூலகக் கட்டடங்கள் கட்டுதல்

வாடகைக் கட்டடங்களில் போதிய வசதியின்றிச் செயல்பட்டு வந்த நூலகங்கள் வசதியான கட்டடங்களில் செயல்படும் வகை

யில், தமிழகத்தில் உள்ள பொதுநூலகங்களுக்கு 10.56 கோடி ரூபாயில் 93 நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கன்னிமாரா பொது நூலகப் பழைய கட்டடம் புனரமைப்பு

110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னிமாரா பொது நூலகக் கட்டடம் மத்திய / மாநில அரசுகளின் நிதி உதவியோடு இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் 1 கோடியே

21 இலட்ச ரூபாய்ச் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பொது நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் அதிகபட்சமாக 600 படிகள் வாங்கப்பட்டு வந்தன. தற்போது தமிழ் நூல்கள் 1000 படிகள் வாங்கப்படுகின்றன.

பொதுமக்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொது மக்களின் பங்களிப்பின் மூலமாக நூலகங்களின் வசதியை மேம்படுத்திட

1)கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 29.09.2007 அன்று கோயம்புத்தூரில் நூலகச் சீரமைப்பு மாநாடு நடத்தப்பட்டு மேற்படி 3 மாவட்டங்களிலும் முறையே ரூ.1 கோடியே 90 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய், 47 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மற்றும் 33 இலட்சத்து

94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் மாவட்ட நூலகங்களுக்குப் பெறப்பட்டன.

2)தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 17.02.2008 அன்று தேனியில் நடத்தப்பட்ட நூலகச் சீரமைப்பு மாநாட்டில் 3 மாவட்டங்களிலும் முறையே 92 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய், 1 கோடியே 23 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மற்றும் 1 கோடியே ஒரு இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் மாவட்ட நூலகங்களுக்குப் பெறப்பட்டன.

3)திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் சேர்த்து 29.02.2008 அன்று திருச்சிராப்பள்ளியில் நூலகச் சீரமைப்பு மாநாடு நடத்தப்பட்டு 4 மாவட்டங்களிலும் முறையே 1 கோடியே

10 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய், 78 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய், 69 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய், 78 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் மாவட்ட நூலகங் களுக்குப் பெறப்பட்டன.

நலவாரியம்

புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் அத்துறையில் பணிபுரிவோர் நலன் காத்திட அவர்களுக்கென தனி நல வாரியம் 10.8.2009 அன்று அமைக்கப்பட்டு

2646 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு

236 பேருக்கு 3 இலட்சத்து 38 ஆயிரத்து 900 ரூபாய் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

சமத்துவபுரங்களில் நூலகங்கள் திறத்தல் மாவட்டங்களில் அமைந்துள்ள 147 சமத்துவபுரங்களில், பொதுநூலகத் துறையின் கீழும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழும், வளர்ச்சித் திட்டத்தின் மூலமும் நூலகச்சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

100 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டு, அந்நூலகங்களை நிர்வகிக்க 100 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை, கோட்டூர்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டு, 15.9.2010 அன்று திறக்கப்பட்டது. இந்நூலகம் 12 இலட்சம் நூல்கள் இடம்பெறத் தேவையான இட வசதியும், 1200 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கத்தக்க வகையில் இருக்கை வசதியும், பசுமைக் கட்டடத்திற்கு உரிய அமைப்புகள் கொண்டதாகவும், உணவகம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கும் விடுதி வசதியுடனும், 1280 பேர் அமரும் வசதி கொண்ட அதிநவீன கலையரங்கம் மற்றும் 850பேர் அமரும் வகையில் திறந்த வெளி அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடனும் 3 இலட்சத்து 75 ஆயிரத்து 770 சதுர அடி பரப்பளவில் 8 மாடிகள் கொண்டதாகும். சர்வதேசத் தரத்தில் அமைந்துள்ள இந்நூலகம் தமிழக மக்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையிலும் தேசிய அளவில் முக்கியத்துவம்

வாய்ந்ததாகவும் திகழ்கிறது. இந்நூலகம் 172 கோடி ரூபாய்ச் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் 60 கோடி ரூபாய்ச் செலவில் புத்தகங்கள், மின் இதழ்கள், மின் புத்தகங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்காக 195 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.

உடன்பிறப்பே, பள்ளிக் கல்வித் துறை சார்பில் தம்பி தங்கம் தென்னரசின் அயரா உழைப்பின் காரணமாக அந்தத் துறையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளின் தொகுப்பு இது.

அன்புள்ள, மு.க. 10-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 381–390. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்