முரசொலி கடிதங்கள் · 3484
அம்மணியின் ஆதாரமற்ற
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3484. அம்மணியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டும், ஆணித்தரமான பதிலும்! (3)
உடன்பிறப்பே,
ஜெயலலிதா தனது கோயமுத்தூர் பேச்சில் “ஊழலின் ஊற்றுக்கண்” என்று நம்மைச் சொல்லியிருக்கிறார்.
வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து 66 கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்து, அதற்காகவே ஏழாண்டுப் காலமாக ஜெயலலிதா மீது வழக்கு நடைபெறுகிறதே; அந்த வழக்கிலே, “நீதி பரிபாலன முறையின் புனிதத்தையும், அதன் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நிலைநாட்ட இந்த வழக்கு விசாரணையை கர்நாடக மாநில நீதி மன்றத்திற்கு மாற்றுகிறேன்” என்று உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் எஸ்.என். வரியவா மற்றும் எச்.கே. சேமா ஆகியோர் 18-11-2003 அன்று தீர்ப்பு வழங்கினார்களே, அந்தத் தீர்ப்பைப் பெற்ற ஜெயலலிதா அல்லவா; ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறார்!
1993-94 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்ய வில்லை என்று வருமானவரித் துறையே அவர் மீது வழக்கு தொடுத்து - அந்த வழக்கில் 24-2-2006 அன்று ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போதே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஏ.கே. மாத்தூர் ஆகியோர் “You (Jayalalithaa) are making a mockery of the Judicial Process. How long you can drag the proceedings?” என்று விமர்சனம் செய்தார்களே, அதை ஜெயலலிதாவே மறந்து விடலாமா? இந்த விமர்சனத்திற்கு ஆளான ஜெயலலிதா அல்லவா; ஊழலின் ஊற்றுக்கண்ணாவார்! - ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசுக்குச் சொந்தமான “டான்சி” நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கிய குற்றச்சாட்டிலே அந்த நிலத்தைத் திரும்பவும் ஜெயலலிதா; அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், அந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, நிலப் பத்திரத்தில் உள்ளது தன்
கையெழுத்தே இல்லை என்று கூறும் அளவுக்கு ஜெயலலிதா சென்றுள்ளார் என்றும், மனச்சாட்சிப்படி நினைத்துப் பார்த்து ஜெயலலிதா பரிகாரம் தேட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். ராஜேந்திரபாபு, திரு.பி.வி. ரெட்டி ஆகியோர் தீர்ப்புக் கூறினார்களே, இதிலிருந்தே யார் ஊழலின் ஊற்றுக்கண் என்று ஊருக்கும் உலகிற்கும் தெரியுமே!
ஜெயலலிதாவின் வீட்டைச் சோதனையிட்ட போது கிடைத்த பொருள்களும், அதன் மதிப்பும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஏடுகளிலும் ஒரு பட்டியலாகவே வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவாறு -
ஜெயலலிதாவின் 86 வகையான நகைகள் மதிப்பு 17 லட்சத்து 50 ஆயிரத்து 31 ரூபாய்.
சசிகலாவின் 62 வகையான நகைகள் மதிப்பு - 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.
ஜெயலலிதாவின் 26 வகையான நகைகள் - 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய்.
ஜெயலலிதாவின் 41 வகையான நகைகள் - 1கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.
ஜெயலலிதாவின் 394 வகையான நகைகள் - 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.
சசிகலாவின் 34 வகையான நகைகள் - 1 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய்.
1116 கிலோ எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்கள் - 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.
இந்தியன் வங்கி, அபிராமபுரம் கிளையில் முதலீடு - ஒரு கோடி ரூபாய்.
சொகுசு பேருந்து எண் டி.என். 09-எப். 2575 - 32 இலட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.
91 கைக்கடிகாரம் - 6 இலட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய்.
7 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் - 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்.
914 புதிய பட்டுச் சேலைகள் - 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய்.
6195 மற்ற புதிய சேலைகள் - 27 லட்சத்து, 8 ஆயிரத்து 720 ரூபாய்.
2140 பழைய சேலைகள் மற்றும் துணி மணிகள் - 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய்.
389 ஜோடி காலணிகள் - 2 இலட்சத்து 902 ரூபாய்.
உடன்பிறப்பே,
இந்தப் பட்டியலையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமென்று நான் எண்ணவில்லை தான்! ஆனால் ஜெயலலிதாதான் இந்தப் பட்டியல்களையெல்லாம் வெளியிட்டு மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டுமென்று நம்மைத் தூண்டுகிறார்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் வெளியிட்ட விவரப்படி எடுத்துக்கொண்டால் 1-7-1991 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பீடு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய். 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு மே திங்கள் வரையில் ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல் அமைச்சர். 30-4-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய். எப்படி வந்தது இந்த 66 கோடி ரூபாய் சொத்துக்கள்? ஊழலின் ஊற்றுக்கண் யார்? ஆனாலும் இதுவரை நாம் அவரை இப்படியெல்லாம் விமர்சனம் செய்தது உண்டா?
ஜெயலலிதா கோவையில் மேலும் பேசும்போது, “காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரையில், பிரீமியத் தொகை 2000 கோடி ரூபாய். இதற்கான ஏஜெண்ட் கமிஷன் 400 கோடி ரூபாய். இந்த 400 கோடி ரூபாய் ஏஜெண்ட் கமிஷன், யாருக்குச் சென்றுள்ளது? கருணாநிதியிடமா? அல்லது அவரது மகனிடமா? இந்த 400 கோடி ரூபாய் கருணாநிதி குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டிருந்தால் அந்தப் பணம் எங்கே? வருமானவரித் துறை சோதனை நடத்தினால் அவர்களுடைய வீடுகளில் கிடைக்குமா?” என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பத்தி 45இல் “கலைஞர் தலைமையிலான இந்த அரசின் நான்காண்டுச் சாதனைகளின் மணி மகுடமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. இந்தப் புரட்சிகரமான திட்டத்தில் ஒரு கோடியே 44 லட்சம் ஏழை எளிய குடும்பங்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். இதுவரை 54,145 பேர் ரூபாய் 165 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசே காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்காக இந்த வரவு செலவு திட்டத்தில் ரூபாய் 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க் கட்சித் தலைவர் - நிதி நிலை அறிக்கை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியவர் - இவ்வளவு அபத்தமாக பிரீமியத் தொகை 2000 கோடி ரூபாய் என்றும், அதிலே ஏஜெண்ட் கமிஷன் 400 கோடி ரூபாய் என்றும் ஒரு பொதுக் கூட்ட மேடையிலே மக்களிடம் கூறி யிருக்கிறார் என்றால் அவர் மக்களை ஏமாற்ற நினைக்கிறாரா அல்லது அவருக்கு தெரிந்ததே இவ்வளவு தானா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
இத்திட்டத்திற்கான பிரீமியத் தொகை 2000 கோடி என்றும் - அதிலே ஏஜெண்ட் கமிஷன் 400 கோடி ரூபாய் என்றும் ஜெயலலிதா கோவையிலே பேசியதை நிரூபிக்க அவர் தயாராக இருக்கிறாரா? அரசின் சார்பில் இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடே 750 கோடி ரூபாய் என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில், 2000 கோடி ரூபாய் பிரீமியத் தொகை என்றும் 400 கோடி ரூபாய் கமிஷன் என்றும் ஜெயலலிதா சொல்லியிருப்பது எப்படிப்பட்ட புளுகுமூட்டை என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். வருமான வரித் துறை சோதனை நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். வருமான வரித் துறைக்கு சொத்து வரி குறித்து கணக்கே தாக்கல் செய்யாமல், அதற்காக நீதிமன்றத்திலே தன்னை விடுவிக்க வேண்டுமென்று மனு போட்டுக் கொண்டிருப்பவர் என்பதால், தன்னைப் போல பிறரும் இருப்பார்கள் என்று அவர் நினைக்கிறாரோ என்னவோ?
இதய நோய், சிறுநீரக நோய், புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் காத்திருப்போரின் எண்ணிக்கை கடந்த
காலத்தில் அதிகரித்து வந்தது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அதிக செலவு செய்து சிகிச்சை பெற இயலாது. மேற்கண்ட ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனைகளில் ஏழை, எளிய நோயாளிகளும் தரமான சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதிலே கூட ஏதோ எனக்கு வேண்டிய ஒரு நிறுவனத்திற்கு அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக ஜெயலலிதா ஏற்கனவே ஒருமுறை கூறி, அதற்கு மறுப்பு கூறி விவரமாக பதிலளிக்கப்பட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் சொல்லியிருக்கிறார்.
அரசாங்கத்தின் விதிமுறைப்படி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திறந்தவெளி ஒப்பந்தம் கோரப்பட்டு - ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சுரன்ஸ் என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதே தவிர, - தன்னிச்சையாக ஒருவருக்கு வழங்கப்பட்டுவிடவில்லை.
இந்த நிறுவனம் இந்திய இன்சுரன்ஸ் காப்பீட்டு ஆணையத்தின் விதிமுறைகளின்படி இயங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த இந்த இன்சுரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமியம் தொகையாக ரூ.569.54 கோடியும் சேவை வரியாக ரூ.58.66 கோடியும் ஆக மொத்தம் ரூ.628.20 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது; ஆனால் அ.இ.அ.தி. மு.க. பொதுச் செயலாளர் கோயம்புத்தூரில் ரூபாய் இரண்டாயிரம் கோடி அரசுப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு வடிகட்டிய பொய்யை பொதுமக்களை திசை திருப்பும் வகையில் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் 14.07.2010 வரை 1,45,054 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளார்கள். இதற்காக இன்சுரன்ஸ் நிறுவனம் ரூ.394.72 கோடியை காப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உறுப்பினர் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்கும் பணிக்கான செலவினத்தையும் மேற்கண்ட தொகையிலிருந்து இன்சுரன்ஸ் நிறுவனம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு நான்காண்டுகளுக்கு
ஒரு இலட்சம் ரூபாய் வரை சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் ஜெயலலிதா இத்திட்டத்தையே தவறு என்கிறாரா? ஏழையெளிய மக்களின் அறுவை சிகிச்சைக்காக ஒரு இலட்ச ரூபாய் வழங்குவதை கூடாது என்கிறாரா? இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்ற - பயன்பெறும் தமிழ்நாட்டு மக்கள்தான் ஜெயலலிதாவின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். ஜெயலலிதா ஆட்சியிலே இத்தகைய திட்டத்தை மேற்கொண்டு உண்டா என்றால் இல்லை, இல்லவே இல்லை! அவரும் நிறைவேற்ற வில்லை, தற்போது நிறைவேற்றுவதையும் கெடுக்கப் பார்க்கிறார் என்றால் அத்தகையவரின் உள்நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்புள்ள, மு.க. 18-07-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 24–29. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.