முரசொலி கடிதங்கள் · 3483
அம்மணியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டும், ஆணித்தரமான பதிலும்! (2)
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3483. அம்மணியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டும், ஆணித்தரமான பதிலும்! (2) உடன் பிறப்பே,
ஜெயலலிதா தனது கோபப் பேச்சிலே மன்னிக்கவும் கோவைப் பேச்சிலே பெரும் பகுதியினை விலைவாசி உயர்வு பற்றியும் - குறிப்பாக பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டது பற்றியும் அதனால் மற்ற பொருள்களின் விலைகள் உயருகின்றன என்றும் சொல்வதற்கே செலவிட்டிருக்கிறார். விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் முக்கிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு என்பதும், மாநில அரசுக்கு ஓரளவுதான் பொறுப்பு உண்டு என்பதும் சாதாரண அரசியல்வாதிக்குக் கூட தெரிந்த ஒன்று. ஆனால் விலை உயர்வு பற்றியும், பெட்ரோலியப் பொருள்களின் உயர்வு பற்றியும் நீண்ட நேரம் பேசிய ஜெயலலிதா, அதற்குக் காரணமான மத்திய அரசு பற்றியோ, அந்த அரசின் முக்கியப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை - முக்கிய நாளேடுகள் சில “ஜெயலலிதா தனது உரையில், காங்கிரசை விமர்சிக்கவே இல்லை, மத்திய அரசை விமர்சிப்பதையும் தவிர்த்தார் “ என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து - ஜெயலலிதாவின் உள்கிடக்கை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். நாம் புரிந்து கொள்வதை விட - காங்கிரஸ் கட்சியோடு தி.மு.கழகம் தோழமையாக இருப்பதால்தான், கழகத்தோடு உறவுகொள்ள முடியாத நிலை என்று சொல்லிக் கொள்கிறார்களே நமது இடதுசாரி நண்பர்கள், அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா இடதுசாரி நண்பர்களை ஏமாற்றுவதுகூட பிறகு இருக்கட்டும் - அவருடைய கட்சித் தொண்டர்களையே ஏமாற்றுவதற்காகக் கோவையிலே பேசும்போது கூட்டணியைப்
பற்றி அவரே கவனித்துக் கொள்வதாக உறுதியளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியையும், மத்திய அரசையும் விமர்சிப்பதைத் தவிர்த்திருக்கிறார். இப்படி யெல்லாம் செய்து இடதுசாரிகளை ஏமாற்ற நினைக்கலாம், கட்சித் தொண்டர்களை ஏமாற்றலாம். ஆனால் ஜெயலலிதா ; திருமதி சோனியாகாந்தியைப் பற்றி பதிபக்தி இல்லாதவர், இந்தியாவை ஆளத் தகுதியற்றவர் என்றெல்லாம் விமர்சனம் செய்ததை காங்கிரஸ் கட்சி நண்பர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்கமாட்டார்கள்.
மாநில தி.மு. கழக அரசின் மீது முக்கிய விமர்சனமாக கோவையில் ஜெயலலிதா பேசியிருப்பது மனிதன் உணவு இல்லாமல் வாழ முடியாது, நீங்கள் எல்லோரும் உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்காடிக்குச் செல்கிறீர்கள். சாப்பிடுவதற்கு அரிசி மட்டும் இருந்தால் போதாது, பருப்பு தேவைப்படுகிறது. உப்பு தேவைப்படுகிறது, மிளகாய் தேவைப்படுகிறது, மசாலா பொருட்கள் தேவைப்படுகின்றன, காய்கறிகள் தேவைப்படுகின்றன. இவற்றைச் சமைப்பதற்கு மண்ணெண்ணெய் அல்லது சமையல் எரிவாயுவும் தேவைப்படுகிறது. இந்தப் பொருட்களின் விலைகள் எல்லாம் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை ஏறிவிட்டன” என்றதோர் பெரிய கண்டுபிடிப்பினை எழுதிக் கொடுத்தபடி அதனை அந்தக் கூட்டத்திலே படித்திருக்கிறார்.
விலைவாசி உயர்வு என்பது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ள ஒன்றுதான். இந்த விலைவாசி உயர்வு தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும், ஏன் உலக அளவிலும் இருந்து கொண்டுதான் உள்ளது. விலைவாசி உயர்கின்ற அதே நேரத்தில் மக்களின் வாங்கும் சக்தியும் பெருகிக்கொண்டு வருகிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண, சாமானிய ஏழைமக்கள் மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், கழக அரசு பொறுப்பேற்ற பிறகு 15.9.2008 இல் இருந்து, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது.
பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் உயரும் போக்கைக் கூர்ந்து கண்காணித்து, 2007ஆம் ஆண்டு மே திங்களிலிருந்தே துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் பிற மாநிலங்களிலிருந்து வாங்கியும் இப்பொருள்களின் சீரான விநியோகம் தமிழகத்திலே உறுதி செய்யப்பட்டுள்ளது. பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ‘மலிவு விலையில் மளிகைப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ், 10 மளிகைப் பொருள்கள் ரூபாய் 50க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் மறந்துவிட்டுச் சாப்பிடுவதற்கு பருப்பு தேவைப்படுகிறது. உப்பு தேவைப்படுகிறது என்று கோவையில் பேசியிருக்கிறார். கழக அரசின் சார்பில் மேலே தெரிவித்தவாறு விலைகள் குறைக்கப்பட்டிருப்பதை அவர் மறந்து விட்டாரா அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறாரா?
இவ்வாறு நமது நாட்டில் எந்த மாநிலமும் செய்யாத அளவிற்கு, 2009-2010 ஆம் நிதியாண்டில் ரூபாய் 4,000 கோடி நிதி ஒதுக்கி, நியாயவிலைக் கடைகள் மூலம், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த அரசு வழங்கி வருகிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை குறைந்து வருவதையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு உணவு மானியத்திற்காக ரூபாய் 3,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விலைவாசி குறித்துப் பேசியிருக்கும் ஜெயலலிதா ஆட்சியின் இறுதி ஆண்டான 2005-2006இல் இதற்காக ஒதுக்கிய தொகை வெறும் 1,200 கோடி ரூபாய் மட்டுமே!
சர்க்கரையினுடைய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக - சர்க்கரை விலை உயர்வு ஏற்பட்ட நிலையில், கணிசமாக உயர்ந்த உணவு மானியத்தைப் பொருட்படுத்தாமல் - மத்திய அரசு 10,832 டன் சர்க்கரையை
மட்டும் லெவி விலையில் வழங்கினாலும்; கூடுதலாக மக்களுக்குத் தேவைப்படும் சர்க்கரையை வெளிச் சந்தை விலையிலே வாங்கி, மாதம் 34,000 டன் அளவு சர்க்கரையை கிலோ ரூபாய் 13.50 என்ற விலையிலேயே அனைத்து அட்டைதாரர்களுக்கும் இந்த அரசு வழங்கிவருகிறது.
இந்த ஆட்சியிலே விலைவாசி உயர்வு என்று பேசுகின்ற ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே விலைவாசி விவரம் என்ன?
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற (2001ஆம் ஆண்டு பொன்னி புழுங்கல் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் என்றி ருந்தது - அவரது ஆட்சிக் காலத்திலேயே 2005ஆம் ஆண்டு 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. 2001 ஆம் ஆண்டு ஜெயா ஆட்சிக் காலத்தில் துவரம் பருப்பு கிலோ விலை 27 ரூபாய் என்றிருந்தது, 2004ஆம் ஆண்டு 33 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்தது.
கடலை எண்ணெய் 2001ஆம் ஆண்டு ஜெயா ஆட்சியில் கிலோ ரூபாய் 38 என்றிருந்தது, அதே ஜெயா ஆட்சியில் 2003ஆம் ஆண்டிலேயே 56 ரூபாயாக விலை உயர்ந்தது.
நல்லெண்ணெய் 2001இல் 34 ரூபாயாக இருந்தது, 2003இல் 65 ரூபாயாக உயர்ந்தது. தேங்காய் எண்ணெய் 2001இல் 45 ரூபாயாக இருந்தது, 2005இல் 88 ரூபாயாக உயர்ந்தது.
புளி 2001இல் கிலோ 22 ரூபாயாக இருந்தது, 2005இல் 41 ரூபாயாக உயர்ந்தது. இவ்வாறு ஜெயலலிதா ஆட்சியிலும் விலைவாசி ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டுபோனது. நான் அதனைத் தவறு என்று சொல்லவில்லை. இவ்வாறு விலை உயர்ந்து கொண்டு போனபோது - இப்போது தி.மு. கழக அரசு விலையைக் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கை போல விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஏதாவது இந்த அம்மணியின் ஆட்சியிலே எடுக்கப்பட்டது உண்டா ?
இன்னும் சொல்லப் போனால் கழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக ஒரு சில அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைந்து வருகிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு நடுநிலை நாளேடு ஒன்றில் வெளிவந்த விவரத்தை அப்படியே தெரிவிக்க விரும்புகிறேன். அந்தச்
செய்திக்குத் தலைப்பே “பருப்பு, எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிவு - இல்லத்தரசிகளுக்கு ஆறுதல்” என்பதாகும். அந்தச் செய்தியின் சுருக்கம் வருமாறு : “விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. ஆன் லைன் பதுக்கலுக்கு மத்திய அரசு தடை விதித்ததோடு வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளன. ... கிலோ 100ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு 65 ரூபாயாகக் குறைந்தது. சர்க்கரை விலையும் 30 ரூபாய்க்கு இறங்கியது... கடந்த மாதம் குவிண்டால் 6,900 ரூபாய்க்கு விற்ற முதல் ரக துவரம் பருப்பு 6,200 ஆகவும், இரண்டாம் ரகம் 6,500 லிருந்து 5,700 ரூபாயாகவும் குறைந்துள்ளது. முதல் ரக உளுத்தம் பருப்பு குவிண்டால் 8000 லிருந்து 7600 ரூபாயாகக் குறைந்துள்ளது. சில்லரையில் முதல் ரகம் 79 ரூபாய்க்குக் கிடைக்கிறது. கடந்த மாதம் முதல் ரக பாசிப் பருப்பு, குவிண்டால் 9,400 லிருந்து 8000 ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த வாரம் 44க்கு விற்ற பாமாயில் 42 ரூபாய், சன் பிளவர் எண்ணெய் 52 லிருந்து 49, அக்மார்க் நல்லெண்ணெய் கிலோ 110 லிருந்து 105, தேங்காய் எண்ணெய் கிலோ 75லிருந்து 70 எனக் குறைந்துள்ளது.” எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தச் செய்திகளையெல்லாம் மறைத்து விட்டு கோவையிலே விலைவாசி உயர்வு பற்றி நீண்ட நேரம் பேசி, அதற்குக் காரணம் கழக அரசுதான் என்று பேசியிருக்கிறார். அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையிலும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
குறிப்பாக துவரம்பருப்பின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 26.67 சதவிகித அளவிற்கும், மிளகாய் 22.22 சதவிகித அளவிற்கும், மல்லி 20.83 சதவிகித அளவிற் கும், கடுகு 16.67 சதவிகித அளவிற்கும் எனப் பல பொருள்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் நான் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
அரிசி மட்டும் வழங்கினால் போதாது என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்த அரசைப் பொறுத்தவரையில் அரிசி மட்டும் வழங்கப்பட வில்லை. மக்களை விலைவாசி தாக்கத்திலிருந்து காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும் பொறுப்புணர் வோடும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பும், உளுத்தம் பருப்பும், மேலும் பாமாயிலும், பத்து பொருட்கள், அதாவது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடலை பருப்பு, வெந்தியம், கடுகு, சோம்பு அல்லது வெள்ளை உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, பட்டை , இலவங்கம் அல்லது கரம் மசாலா, ஆகிய பொருட்கள் அடங்கிய ஒரு பொட்டலமும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1.80 கோடி பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தின்கீழ் 2006-2007 ஆம் ஆண்டு முதல் 2009-2010ஆம் ஆண்டு வரையில் ரூ. 521.45 கோடி செலவில் 23 இலட்சம் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 2010- 2011ஆம் ஆண்டில் ரூ.140 கோடி செலவில் 6 இலட்சம் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்குவதற்காக மத்திய அரசு மாதந்தோறும் மத்தியத் தொகுப்பிலிருந்து 2.96 இலட்சம் டன்கள் அரிசி வழங்கி வருகிறது. இந்த அரிசி நிர்ணயிக்கப் பட்ட தரத்திலேயே உள்ளது என்பதைப் பரிசோதித்த பின்னரே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் அரவை செய்யப்பட்டு மத்திய தொகுப்பிற்கு ஈடு செய்யும்போதும் நிர்ணயிக்கப்பட்ட தரம் பரிசோதிக்கப்பட்ட
பின்னரே வழங்கப்படுகிறது. எனவே, பொது விநியோகத்
திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி தரம் குறைந்த அரிசி அல்ல.
ஒவ்வொரு நாளும் இந்த அரிசியைப் பெற்று வயிறார பசியாறும்
தமிழ்நாட்டு ஏழையெளிய மக்கள் அரிசியின் தரம் என்ன,
அதைப்பற்றி விமர்சிக்கும் ஜெயலலிதாவின் தரம் என்ன என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அன்புள்ள,
மு.க.
17-07-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 394–400. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.