அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3428

முரசொலி கடிதங்கள் · 3428

காக்கும் கரங்களுமன்றோ?

நாள் 1.11.2009சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3428. காக்கும் கரங்களுமன்றோ?

உடன்பிறப்பே,

காவல் துறையைப் பொறுத்தவரையில் என்னுடைய கருத்து; எதிரிக் கட்சியில் நான் இருக்கும்போது ஒரு விதமாகவோ, ஆளுங் கட்சியில் இருக்கும்போது இன்னொரு விதமாகவோ என்றைக்கும் இருந்ததில்லை. பொதுவாக நம்முடைய நாட்டில் அரசியல் வாதிகள் சிலருக்கு; ஏன்; இன்னும் சொல்லப்போனால் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கே போலீஸ் என்றால் ஒரு காழ்ப்பு - ஒரு வெறுப்பு - அவர்களைக் கண்டனம் செய்வதிலே தனி விருப்பு என்ற நிலை இன்னும்கூட மாறாமல் இருக்கின்றது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இதற்கு மாறாக, ஆளுங்கட்சியாக இருந்த போதிலும்; எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும் காவல் துறையினர் பற்றி கொண்டிருந்த கருத்துகளை இந்தக் கடிதத்தின் முகப்பிலேயே உன் போன்றோருக்கு தொகுத்தளிக்க விரும்புகிறேன்.

1962ஆம் ஆண்டு எதிரிக் கட்சித் துணைத் தலைவராக இருந்தபோது காவல் துறை மானியத்தில் சட்டமன்றத்தில் 12-7- 1962 அன்று நான் பேசியது வருமாறு:-

“கடும் மழையிலும் கொடிய வெயிலிலும், நள்ளிரவிலும் தங்கள் பணியினை கொலைகாரர்கள் மத்தியிலும், கள்வர்களிடையிலும் தங்கள் உயிரைப் பற்றிய கவலை இல்லாமல் மரணத்தைத் துச்சமாக மதித்து கடமைக்காகப் போராடி வருகின்ற அந்தத் தியாக சீலர்களை திராவிட முன்னேற்றக் கழகம் பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறது.”

இந்த என் கருத்தை யார் மறந்தாலும் காவல் துறை நண்பர்கள் மறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காவல் துறையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து தி.மு. கழகம் எதிரிக் கட்சியாக இருந்தபோது, “உதயசூரியன்” நாடகத்திற்காக போலீசாருக்குச் சார்பாக நான் இயற்றி, தடை செய்யப்பட்டிருந்த

ஒரு தாலாட்டுப் பாடலையே பேரவையிலே பதிவு செய்ய அங்கே பாடிக் காட்டினேன்.

“ஆராரோ! ஆரிராரோ! ஆணழகா கண் வளராய்! அஞ்சு பத்து சம்பளத்தில் மிஞ்சுவதில் வரை வந்த அஞ்சுகமே கண் வளராய்!

போலீசு வேலைக்கென்று போகின்ற வெறுப்பனுக்கு புத்திரனாய் வந்துதித்த தரித்திரமே கண் வளராய்! துப்பாக்கி எடுத்துக் கிட்டு போகின்ற வெறுப்பனிடம் பழம்பாக்கி கேட்டுக்கிட்டு வழி மறிக்கும் கடன்காரன் வருகின்ற காட்சிகளைக் காணாமல் கண் வளராய்!

நாடாளுமன்ற மந்திரிகள் நலியாமல் வாழ்வதற்கு ஓடாகத் தேய்கின்ற அப்பாவின் புத்திரனே குருவிக் கூடான வீட்டுக்குள்ளே தவழுகின்ற குல விளக்கே! கொசுக்கடிக்கு அஞ்சாமல் குவளை மலர் கண் வளராய்! காக்கி உடை போட்டுக்கிட்டு சேப்புத் தொப்பி மாட்டிக்கிட்டு நாட்டைக் காக்கும் வீரனுக்கு

உன்னைப் போல நாலு வந்து பிறந்து விட்டா...... காவி உடை வேணுமடா...... கமண்டலமும் தேவையடா.... கண்மணியே, கண் வளராய்!”

உடன்பிறப்பே, இதன் தொடர்ச்சியாகத்தான் 1969ஆம் ஆண்டு நான் முதல்வராகப் பொறுப்புக்கு வந்ததும், காவலர் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்த வேண்டுமென்று கருதி, தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் காலத்திலிருந்து அதுவரை உருவாக்கப்படாத காவல் துறைக்கான தனிக் குழு (போலீஸ் கமிஷன்) ஒன்றையே ஏற்படுத்தி, அதன் பரிந்துரைகளைப் பெற்று நடைமுறைப்படுத்தினேன். அதற்குப் பிறகும் தி.மு.

கழகம் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் மேலும் இரண்டு முறை காவல் துறைக்கான கமிஷன் அமைக்கப்பட்டது. இவற்றின் பரிந்துரைகளின் விளைவாகத்தான் 1967ஆம் ஆண்டிலே காவலர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ. 70 ஆகவும், பஞ்சப்படி ரூ. 59 ஆகவும் இருந்தது; தற்போது காவலர்களுடைய அடிப்படை சம்பளம் 7,300 ஆகவும், அகவிலைப்படி உட்பட; மொத்தம் 10,300 ரூபாய் என உயர்ந்துள்ளது.

மக்கள் தொண்டில் 150ஆம் ஆண்டினைக் கொண்டாடும் தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து மாநிலத்தில் பெரிய அளவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் ஊனம் ஏதும் நிகழாமல் காத்திட தன்னால் இயன்ற அளவிற்குப் பாடுபட்டு வருகிறது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடம் இல்லை. குறிப்பாக கடந்த ஓராண்டிலே மாத்திரம் எடுத்துக்கொண்டால், அதாவது 2009ஆம் ஆண்டில் பல்வேறு சமயங்கள் சார்ந்த திருவிழாக்கள் - பல்வேறு கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் - போராட்டங்கள் - முக்கிய நபர்களின் வருகைகள் அனைத்துமே அமைதியாகவே நடந்து முடிந்துள்ளன.

சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் எதுமின்றி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதற்கு பெரிதும் காரணம் காவல் துறை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கொடைக்கானல் வனப் பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றை அமைக்க முற்பட்ட தீவிரவாதிகளின் முயற்சி களை தமிழ்நாடு காவல் துறையினர்தான் முறியடித்தனர். சரியான தருணத்தில் 22 பேரை கைது செய்து, அவர்களில் 12 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததன் மூலம் பிரிவினை சக்திகள் மேற்கொண்ட மத நல்லிணக்கத்தைத் தகர்க்கும் வன்முறை முயற்சிகளை காவல் துறையினர்தான் தடுத்து உள்ளனர்.

மக்கள் போர்ப்படைக்குழுவின் நிறுவனரும், நான்கு நிலக்கிழார் கொலைகளில் சம்பந்தப்பட்டு, கடந்த 37 வருடங்களாக தலைமறைவாக இருந்தவருமான நக்சலைட் தீவிரவாதி தமிழ்வாணனை 12.04.2009 அன்றும், 1980-ல் ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் மற்றும் மூன்று நக்சலைட்டுகளை கொன்று விட்டு, காவலில் இருந்து தப்பித்து, கடந்த 38 வருடங்களாக தலைமறைவாக இருந்த ஜோலார்

பேட்டையைச் சேர்ந்த நக்சலைட் தீவிரவாதி சிவலிங்கம் (எ) சிவா என்பவரையும், அவரது சகா சாமி (எ) சாமிநாதன் ஆகியோர்களை 10.05.2009 அன்றும், ஆயுள் தண்டனை அடைந்து, பரோலில் சென்று, கடந்த 22 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த நக்சலைட் தீவிரவாதி என்.கே.கோபால் என்பவரை 24.6.2009 அன்றும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மாநிலத்திலிருந்து இலங்கைக்கு வெடி பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை கடத்த முயற்சித்தவர்கள் மற்றும் இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் மீது காவல் துறையினர் கடந்த மூன்றாண்டுகளாக 70 வழக்குகள் பதிவு செய்து, மொத்தம் 299 நபர்களை கைது செய்துள்ளனர். இவர்களில் 45 நபர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

07.01.2009 முதல் 09.01.2009 வரை, இந்திய குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர் மற்றும் உலகளவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட ‘ஏழாவது பிரவாசி பாரதிய திவஸ்’ சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டின் போது, தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்கள் இருந்தும், காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அம்மாநாடு அமைதியாக முடிய வழிவகை செய்தனர்.

குற்றவாளிகளை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்து வருவதாலும், நமது மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு; அதனால், 2006ஆம் ஆண்டு 89 சதவீத குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, களவுபோன சுமார் 34.8 கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதே போன்று, 2007ஆம் ஆண்டு 87 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 48.7 கோடி ரூபாய் மதிப்புள்ள 83 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டும், 2008-ம் ஆண்டு 82 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 47.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 76 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டும், இவ்வாண்டும் செப்டம்பர் வரை 72 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 39.7 கோடி ரூபாய் மதிப்புள்ள 66 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு சில வழக்குகள் வருமாறு:-

சென்னை நகரில், மின்ட் தெருவிலுள்ள சந்திரபிரபு ஜெயின் கோவிலில், பூசாரி ஒருவரை கொலை செய்து, சுமார் 1.2 கோடி மதிப்புள்ள 22 கிலோ கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், ஆறு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, 9.2 கிலோ தங்க நகைகள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையில் கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, 15 வருடங்களாக தலைமறைவாக இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த குப்பன் என்பவரும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த மன்னார் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த மணியரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, 88 சவரன் தங்க நகைகள் உட்பட சுமார் 21 லட்சம் மதிப்புள்ள களவு போன பொருட்கள் மீட்கப்பட்டன.

சென்னை, பூக்கடை, செளகார்பேட்டை நகை வியாபாரி சுரேஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 2.15 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளி நேமிசந்த் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து, களவு போன சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

சென்னை, செளகார்பேட்டையில் ரத்தன் ஆர். ஜெயினி என்பவரிடமிருந்து ரூ.50 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஆறு எதிரிகள் கைது செய்யப்பட்டு, ரூ.44.5 லட்சம் கைப்பற்றப்பட்டது.

சென்னை நகரில், கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு மற்றும் கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரி சுஹேல் அகமது என்பவர் கைது செய்யப்பட்டு, 25 வழக்குகளில் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 301 சவரன் தங்க நகைகள், 14 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.

சென்னை காவல் துறையினர், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மல்மன்னன் என்ற குற்றவாளியை கைது செய்து, 45 வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 325 சவரன் தங்க மற்றும் வைர நகைகள் மற்றும் 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர்.

சென்னை, அண்ணாநகரில் அசோக் மால்பானி மற்றும் அவரது மனைவியிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் பணம் ரூ.10 லட்சம் ஆகியன கைப்பற்றப்பட்டன.

சென்னை, தியாகராய நகர், Broad Line Computers System என்ற நிறுவனத்திலிருந்து Wescos Properties and Developers உரிமை யாளர் சரவணன் என்பவர் மோசடி செய்து பெற்ற ரூ.1.27 கோடி மதிப்புள்ள 250 கணினிகளையும், 300 மடிக்கணினிகளையும் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் எதிரியை கைது செய்து, அப்பொருட்களை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், 52 கன்னக்களவு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் ஆறு குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள 300 சவரன் நகைகளை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஸ்ரீதர் மற்றும் ஐந்து நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நான்கு கார்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், உமா மகேஸ்வரி மற்றும் மூன்று நபர்களை கைது செய்து, சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தொன்மை வாய்ந்த 24 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.

200 வழக்குகளில் சம்பந்தப்பட்டு, ஏற்கெனவே ஐந்து முறை குண்டர் தடைக் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷையும், அவருடன் சேர்ந்த மூன்று குற்றவாளிகளையும் 20-5-2009 அன்று சென்னை புறநகர் காவல் துறையினர் கைது செய்து 70 சவரன் தங்க நகைகளையும், வெள்ளி ஆபரணங்களையும் கைப்பற்றினர்.

கடலூர் மாவட்டத்தில், வேப்பூர் அருகில் திருச்சியிலிருந்து வந்த லாரியை வழிமறித்து ரூ.3.72 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், இருளாண்டி மற்றும் 12 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2.85 கோடி பணத்தைக் கைப்பற்றினர்.

வேலூர் மாவட்ட காவல் துறையினர், 13 வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூர்த்தி என்பவரை கைது செய்து சுமார் 1 கோடி மதிப்புள்ள 8 மினி லாரிகள் மற்றும் 5 கார்களை கைப்பற்றினர். மேலும், 25 கன்னக்களவு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பாபு மற்றும் இரண்டு எதிரிகளை கைது செய்து சுமார் 30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கைப்பற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், ராமா விலாஸ் ஆயில் கம்பெனி கணக்காளரை கடத்தி அவரிடமிருந்து ரூ.56,60,000 பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் எதிரிகள் விஜி மற்றும் 18 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.36 லட்சத்தை கைப்பற்றினர்.

சேலம் நகரில் பணத்திற்காக ஆட்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு 11 வழக்குகளில் தொடர்புடைய 27 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.9.33 லட்சமும், 47 சவரன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் நான்கு நாற்சக்கர வாகனங்களும், மூன்று இருசக்கர வாகனங் களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட 18 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் 15 வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆண்டிப்பட்டி முத்து என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 100 சவரன் நகைகளும், நான்கு கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட யோகேஷ், சரவணன், குணா, மனோகர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 11 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன.

கோவை நகர காவல் துறையினர், Victory Equities and Forex India Limited என்ற நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் நான்கு பேர் 256 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1.53 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்து, முழு பணத்தையும் கைப்பற்றி முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்கினர்.

திருப்பூர் காவல் துறையினர், ஜெயமணி என்ற பெண் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் ஏழு ஆதாயக்கொலை

வழக்குகள், இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொள்ளை வழக்கு மற்றும் 16 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சேலத்தைச் சேர்ந்த எதிரி சங்கர் என்பவரை கைது செய்து, களவு போன பொருட்களை கைப்பற்றினர்.

திருச்சி மாவட்ட காவல் துறையினர், ஹெளரா விரைவு ரயில் வண்டியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.5.5 கோடி மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி சகாயராஜ் உள்ளிட்ட இரு எதிரிகளை கைது செய்தனர்.

கரூர் மாவட்ட காவல்துறையினர் ஒரு வெடி மருந்து கடையில் இருந்து 32,522 மின் டெட்டனேட்டர்கள் மற்றும் 4,532 சாதாரண டெட்டனேட்டர்களை திருடிய எட்டு குற்றவாளிகளை கைது செய்து, வெடிபொருட்களை மீட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில், கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கருப்பசாமி, ராஜா மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 60 சவரன் தங்க நகைகள், பணம் உட்பட சுமார் ஆறு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர், ஆதாயக் கொலை, ஒன்பது கன்னக்களவு மற்றும் ஐந்து வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல குற்றவாளிகளான ஈஸ்வரன் மற்றும் ஏழு எதிரிகளை கைது செய்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள 193 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ரூ.45 ஆயிரம் மற்றும் 50 கைபேசி ஆகியவற்றை கைப்பற்றினர்.

இரயில்வே காவல்துறையினர், ராஞ்சியை சேர்ந்த ராஜன் ராம் மற்றும் அமர்நாத் ஜெய்ஸ் வால் ஆகியோரை கைது செய்து 34 இரயில் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 சவரனுக்கும் அதிகமான தங்க நகைகள் கைப்பற்றினர்.

மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர், திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரன் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினர் விஜயன் கொலை வழக்கிலும் திறமையாக புலன் விசாரணை செய்து எதிரிகளை கைது செய்தனர்.

மேலும், Gold Quest International Pvt. Ltd., சம்பந்தப்பட்ட தங்கக்காசு மோசடி வழக்கில் இத்துறையினர் திறமையாக விசாரணை செய்து, 25 எதிரிகளை கைது செய்து, சுமார் ரூ.192 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி வைத்து, எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவினர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் வலங்கைமானைச் சேர்ந்த செந்தில் ஆகியோரை கைது செய்து, திருவாரூர், திருத்துறைப்பூண்டி அருள்மிகு மருந்தீஸ்வரர் உடனுறை பெரிய நாயகி அம்மன் கோவிலில் எட்டு மாதங்களுக்கு முன்பு களவு போன கோடிக்கணக்கில் மதிப்புள்ளதெனப்படும் தொன்மைவாய்ந்த மரகத லிங்கத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மூன்றாண்டு காலக்கட்டத்திலேயே தங்கள் உயிரைப் பணயம் வைத்து சமூக எதிரிகளோடும், கள்வர்களோடும் போராடி, காவல் துறையினர் பெற்றிருக்கும் வெற்றிகளின் காரணமாக விளைந்துள்ள சாதனைகளை நாம் பாராட்டிட வேண்டும். சமுதாயப் பாதுகாப்புக்காக - சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பதற்காக - மனித உயிர்களையும் உடைமைகளையும் காப்பதற்காக; காவல் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் எண்ணற்றவை மட்டுமல்ல; எண்ணிப்பார்த்திடவே இயலாதவை. குற்ற நிகழ்வுகளில் கடைப்பிடிக்கப்படும் உயர் தொழில் நுட்பங்கள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன. எனவே காவல் துறையினர் ஆற்றி வரும் கடமையைப் பொதுவாக நாம் போற்றிடத்தான் வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்ந்து விடும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு, காவல் துறையினரையே குற்றஞ் சொல்லிக் குறை காண்பது, அவர்களின் நீண்ட நெடிய தொண்டற வாழ்க்கையில் திடீரென்று ஒரு கறும்புள்ளியைக் குத்தி அவர்கள் தொடர்ந்து சீரிய பணியாற்றுவதற்கு தயக்கம் ஏற்படுத்த முயல்வதும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல என்பதோடு; சமுதாயக்கேடாகவே அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுவது எனது கடமையென்பதால் இந்த நீண்ட கடிதம் எழுத நேரிட்டது.

அன்புள்ள, மு.க. 1-11-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 24–32. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்