அடக்கம்

முரசொலி · தொகுதி 42 · கடிதம் 3427

முரசொலி கடிதங்கள் · 3427

மேலும் பயன்படுகின்ற சந்திப்பு!

நாள் 30.10.2009சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3427. மேலும் பயன்படுகின்ற சந்திப்பு!

உடன்பிறப்பே,

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பின் சார்பில், 27.10.2009 அன்று பேரணி ஒன்று நடத்த இருப்பதாகவும், பேரணியின் முடிவில் நடுப்பகல் 12 மணிக்கு என்னைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்து, அதற்கு ஒப்புதல் அளிக்கக் கேட்டு, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தோழர் என். வரதராஜன் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் கண்டவுடன், அதற்கு நான் ஒப்புதல் தெரிவித்திருந்தேன். அதன்படி, திரு.என். வரதராஜன், திரு. கே.வரதராசன், திரு. பி. சம்பத், செல்வி பாலபாரதி, எம்.எல்.ஏ., திரு. கே. மகேந்திரன், எம்.எல்.ஏ., திரு. பி. சண்முகம், திரு. கே.ஆர். கணேசன், திரு. ஜக்கையன், திரு. சிவலிங்கம், திரு. மோகன் ஆகிய 10 பேர் என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவைப் பார்த்ததும், அவர்களிடம் நான், “நீங்கள் அமர்ந்திருக்கக்கூடிய இடத்தில், நான் அமர்ந்திருந்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக என்னென்ன கோரிக்கைகளை வைத்திருப்பேனோ, அந்தக் கோரிக்கைகளைத்தான் நீங்கள் என்னிடம் வைத்திருக்கிறீர்கள். இவை அனைத்தையும் கழக அரசு ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு; பலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது; ஒருசிலவற்றில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது” என்று விளக்கிச் சொன்னேன். என்னைச் சந்திக்க திரு.வரதராஜன் அவர்களோடு வந்திருந்த அருந்ததிய சமுதாயத் தோழர் ஒருவர் என்னைப் பார்த்து, “எங்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கியுள்ளதால், உங்களை எங்களது இனம் மதுரை வீரனாக - கடவுளாக எண்ணிப் போற்றுகிறது” என்று உணர்வு பொங்கச் சொன்னது, அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த அருந்ததியத் தோழர் மேலும் தொடர்ந்து பேசுகையில், “அருந்ததிய குல வீரன், மாவீரன் ஒண்டிவீரன் பகடை நினைவைப் போற்றும் வகையில் சிலை அமைத்திட வேண்டும்” என்று கோரிக்கை ஒன்றை வைத்தார். நானும் அதைப் பரிசீலித்து ஆவன செய்வதாகத் தெரிவித்தேன். அதுடன் அருந்ததியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கும் மேம்பாட்டுக்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தேசிய அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆணையம் ஒன்றை அமைத்திருப்பதைப் போல, மாநில அளவிலும் அது போன்றதொரு ஆணையத்தை அமைத்திட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்கள். அதற்கு நான் அதுபோன்றதொரு ஆணையம் என் வீட்டிலேயே இருக்கிறது என்றவுடன் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து ஆமாம், ஆமாம் என்று ஒப்புதல் அளித்தனர். எனினும் அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து ஆவன செய்வேன் என்று நான் உறுதியளித்தேன்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று அய்யன் திருவள்ளுவர் வகுத்த வாக்கிற்கிணங்க, தமிழகத்தில் சாதி சமய வேறுபாடுகளை அகற்றி, சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்னும் உணர்வுடனும், உறுதியுடனும் செயல்பட்டு வரும் கழக அரசு; சமுதாயத்தின் அடித்தளத்தில் ஆண்டாண்டு காலமாக விழுந்து கிடக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு சீரிய திட்டங்களைச் சிறப்புடன் செயல்படுத்தி வருவதை அனைவரும் அறிவர். இத்திட்டங்களின் மூலம் சமுதாய, பொருளாதார, அரசியல் விடுதலைகளை ஏழை எளிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எய்தி, முன்னேற்றம் கண்டிட வேண்டுமென்பதே இந்த அரசின் லட்சியம். அதன் அடிப்படையில், வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடுகள் ஏராளமான கல்விச் சலுகைகள், பல நிதிஉதவித் திட்டங்கள் என பல்வேறு முனைகளிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1969 வரை ஆதிதிராவிடர் நலத்துறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் இணைந்திருந்தது என்பதையும்; 2.5.1969-ல்தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்பது முழுக்க முழுக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவே செயல்படும் நிலைமையைக்

கழக அரசு உருவாக்கியது என்பதையும்; பின்னர், 31.3.2000 அன்று பழங்குடியினர் நலனில் தனிக்கவனம் செலுத்திட வேண்டுமென்பதற்காகவே, கழக அரசு பழங்குடியினர் நலத்துறை என்ற ஒன்றைத் தனியே உருவாக்கியது என்பதையும்; யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

ஆண்டாண்டு காலமாக மண் குடிசைகளிலே வாழ்ந்துவரும் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு அடித்தளம் அமைத்திடும் சீரிய முயற்சியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்திலேதான் “ஆதிதிராவிடர் இலவச வீட்டு வசதிக் கழகம்” 15.2.1974 அன்று கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இத்திட்டம்தான் “இந்திரா வீட்டு வசதித் திட்டம்” என மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஓட்டு வீடுகளே கட்டப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு 1989-ல் அமைந்த கழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, கான்கிரீட் வீடுகள் கட்ட ஆணையிட்டது. மத்திய அரசில் உணவு அமைச்சராகத் திகழ்ந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள், 1975 ஆம் ஆண்டு ஜனவரியில், செங்கல்பட்டு-காட்டுப்பாக்கத்தில், அரிசன வீட்டுவசதிக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளைத் திறந்துவைத்து உரையாற்றியபோது, “வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக இந்த வீடுகளை அரிசனச் சகோதரர்களுக்கு வழங்குவது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் முடிவு செய்திருப்பது, அவருடைய சீரிய சமத்துவ மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்தச் சிறந்த முன் உதாரணத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற முயலும் என்று நம்புவோமாக!” - என்று பாராட்டியது இன்றைக்கும் பழைய நாளேடுகளில் அப்படியே உள்ளது. இவையெல்லாம் நடைபெற்று 35 ஆண்டுகள் ஆகி விட்டன என்பதால், அவற்றை மறந்து விட்டவர்களுக்கு இப்போது நினைவூட்டுகிறேன்.

இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டினை, 1971ஆம் ஆண்டில் 18 விழுக்காடாக உயர்த்தியது கழக அரசுதான்.

1990-ல் பழங்குடியினருக்குத் தனியே ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தற்போது 2009, மார்ச் மாதத்திலிருந்து அருந்ததியினருக்கு தனியே 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்தவர்களில், முதல் தலைமுறைக்கு மட்டும் வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகை, ஆதிதிராவிட கிறித்தவர்களின் எல்லா தலைமுறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இடஒதுக்கீடு செய்யப்பட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை, இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கும் முறையை கழக அரசு 1989-ல் தடை செய்தது.

பழங்குடியினரின் மேம்பாட்டைப் பற்றி தற்போது பேசுபவர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பழங்குடியினருக்கெனத் தனியே செய்யப்பட்ட ஒரு சதவீத இடஒதுக்கீட்டின் காரணமாகவே, தற்போது 2009-2010ஆம் ஆண்டில் பி.இ., எனப்படும் பொறியியல் பட்டப்படிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 58 பழங்குடியின மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 45 பேரும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 170 பேரும் இடங்களைப் பெற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைப்போலவே, ஒரு சதவீத இடஒதுக்கீட்டின் காரணமாக, எம்.பி.பி.எஸ். எனப்படும் மருத்துவப் பட்டப்படிப்பில் 18 பழங்குடியின மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். இது இந்த ஆண்டு மாத்திரம் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு அல்ல; இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து 1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்று, ஆயிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் அனுமதி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளனர்.

சாதி, சமய பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி, சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ்நிலை உருவாகும் வகையில், இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி 1997ஆம் ஆண்டில் கழக அரசு

உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமான திட்டம் “பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.” அப்போது தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், 145 சமத்துவ புரங்கள் உருவாக்கப்பட்டன. 2006க்குப்பின் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை நிறுவ திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் 100 வீடுகளில்; 40 வீடுகள் ஆதிதிராவிடர்களுக்கும், 25 வீடுகள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 10 வீடுகள் இதர பிரிவினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆதிதிராவிடர் வீட்டின் இருமருங்கிலும் பிற சமுதாயத்தினரின் வீடுகள் அமையுமாறு இத்திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய, ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு, பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கவர்னகிரியில் அடிப்படை வசதிகளுடன் 200 வீடுகளைக் கட்டிக் கொடுத்து, வீரன் சுந்தரலிங்கம் நகர் என்ற பெயரில் அழகிய நகரை உருவாக்கி, 18.4.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவைப் போற்றும் வகையில் - வியாசர்பாடி கலைக் கல்லூரிக்கும், சென்னை சட்டக் கல்லூரிக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது; 20.9.1997 அன்று அம்பேத்கர் பெயரில் சென்னையில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. கே.ஆர். நாராயணன் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது; 4 கோடி ரூபாய்ச் செலவில் சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபம் உருவாக்கப்பட்டு, 10.6.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது; தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி, ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கும் திட்டம் 1998ஆம் ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் நூற்றாண்டு விழா 1990ஆம் ஆண்டில் கழக அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மதுரையில் தியாகி கக்கன் சிலை, தும்பைப் பட்டியில் தியாகி கக்கன் அவர்களுக்கு நினைவு மண்டபம் ஆகியவை 31.8.1997 அன்று திறந்து வைக்கப்பட்டன; 10.10.2009 அன்று தும்பைப் பட்டியில் மத்திய அமைச்சர் தம்பி மு.க. அழகிரி தலைமையில் தியாகி கக்கன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்வதில் கழக அரசு எவ்வளவு முற்போக்கான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது என்பதை பின்வரும் ஒப்பீடுகளின் மூலம் உணர்ந்து கொள்ளலாம் :

1991-1996 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 696 கோடியே 16 இலட்ச ரூபாய்;

1996-2001 ஐந்து ஆண்டுகால கழக ஆட்சியில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 2 ஆயிரத்து 170 கோடி ரூபாய்;

2001-2006 ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 2 ஆயிரத்து 219 கோடியே 16 இலட்சம் ரூபாய்;

2006-2009 நான்கு ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கையில் கழக ஆட்சியில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 3 ஆயிரத்து 86 கோடியே 35 இலட்சம் ரூபாய்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்குக் கழக அரசு ஆற்றியுள்ள பணிகள் ஏராளம். அவை அனைத்தையும் இந்த ஒரு கடிதத்தில் இடம்பெறச் செய்வதென்பது இயலாத காரியம். ஒருசிலவற்றையாவது நான் நினைவுகூர்ந்திடவும், உன்போன்ற என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நினைவூட்டிடவும், 27.10.2009 அன்று நடைபெற்ற சந்திப்பு பயன்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பயன்படுகின்ற சந்திப்பு!

அன்புள்ள, மு.க. 30-10-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 396–401. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 42-இல் மேலும் கடிதங்கள்