முரசொலி கடிதங்கள் · 3366
உள்ளமும் - பள்ளமும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3366. உள்ளமும் - பள்ளமும்!
உடன்பிறப்பே,
பத்துக்கு மேற்பட்ட டாக்டர்களின் மேற்பார்வையுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நான்; தொலைக்காட்சிச் செய்திகளில் இலங்கைத் தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதைக் கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன்.
அந்தப் பேரணிகளிலும், கூட்டங்களிலும் நாமும் கலந்து கொள்ள முடியாமல் உடல் நலிவுக்கு ஆளாகியிருக்கிறோமே என்ற கவலை என்னை வாட்டுவதை விட, நான் இரண்டு நாளைக்கு முன்பு; “ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!” என்ற தலைப்பில் எல்லாக் கட்சிகளிலுமுள்ள உடன்பிறப்புகளுக்கும் விடுத்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல; பிறிதோர் அணியின் கூட்டங்களில் பேசியோரும் - பேட்டி கொடுத்தோரும் என்னை மிக இழிவுபடுத்தித் தூற்றியிருக்கிறார்கள். அதனால் எனக்கு அணுவளவு வருத்தமும் இல்லை. அவர்கள் பேசுவது அவர்கள் மனச்சாட்சிக்கே சரியென்று பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
என்னையும் - இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் முன்னணியினரையும்; இப்படி ஒரு சிலர் தூற்றுகிறார்கள் - மேடையில் நின்று நமது அணுகுமுறையை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதற்காக - இந்தப் பேரவையில் உள்ள யாரும் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை; பதில் சொல்ல வேண்டாமென்றும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” - அண்ணாவின் அறிவுரை இது! இன்றைய நிலையில் “என் உடல் தாங்குகிறதோ - இல்லையோ; உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும் - இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க!”
அன்புள்ள, மு.க. 9-2-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 32–32. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.