முரசொலி கடிதங்கள் · 3367
திருமணத்திற்காக எடுத்த பட்டுப் புடவைதான்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3367. திருமணத்திற்காக எடுத்த பட்டுப் புடவைதான்!
உடன்பிறப்பே,
2009-2010ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை நேற்றையதினம் நிதியமைச்சர் பேராசிரியர் அவர்களால் தமிழகச் சட்டப் பேரவையிலே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வணிகர்களும் பொதுமக்கள் பிரதிநிதிகளும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் நிதி நிலை அறிக்கை படிக்கப்படும்போது அவையையே புறக்கணித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் அதற்கான காரணத்தை விளக்கி ஒரு அறிக்கையும் கொடுத்துள்ளார்கள். அந்த அறிக்கையிலே “மைனாரிட்டி தி.மு.க. அரசு” என்று மூன்றாண்டு காலமாக தொடர்ந்து பாடி வரும் பல்லவியையே இதிலும் பாடியிருக்கிறார்கள். மூன்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு அரசை, அ.தி.மு.க. இவ்வாறு மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று சொல்லுகின்ற வரையில் கழகத்தின் சார்பில் அ.தி.மு.க.வைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் சாம்ராஜ்யம் நடத்திய அ.தி.மு.க. என்றே சொல்லலாம்.
ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அ.தி.மு.க. சார்பில் தரப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பாக இலங்கை ராணுவத்தால் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை கழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், போர் நிறுத்தம் ஏற்பட எந்தவிதமான உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் கண் துடைப்பு நாடகம் நடத்தி வருகிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா 17.1.2009 அன்று சென்னையில்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம், போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்” என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகக் கூறி, அது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டு சரியல்ல என்று அவர்கள் அணியிலே உள்ள தோழர் தா. பாண்டியனே மறுநாள் அறிக்கைவிடுத்தார்.
இப்படியெல்லாம் இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதாவின் கட்சியினர் தான் - இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, பிரமாண்டமான மனிதச் சங்கிலியை நடத்தி, சட்டமன்றத்திலே மூன்று முறை தீர்மானம் தீட்டி, டெல்லி சென்று அனைத்துக் கட்சியினரும் பிரதமரைச் சந்தித்து போரை நிறுத்தக் கோரிக்கை வைத்து, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்பச் செய்து, இலங்கை அரசையே 48 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்யச் செய்து, இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரண நிதி திரட்டி, அந்த நிதியிலிருந்து உணவுப் பண்டங்களையும், உடைகளையும், மருந்துகளையும் வாங்கி செஞ்சிலுவை சங்கம் மூலமாக இலங்கைக்கு அனுப்பி அவை அங்கே முறையாக அவர்களுக்குக் கிடைக்கச் செய்து, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்றொரு அமைப்பையும், நீதியரசர்களைக் கொண்ட அதன் துணை அமைப்பையும் ஏற்படுத்தி இன்றளவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நாம் நாடகம் நடத்துகிறோமாம்.
அம்மையார் மூன்று மாத காலமாக ஓய்வெடுத்து விட்டு - அரசு சார்பிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளிலே மட்டுமல்லாமல், அவர்களுடைய அணியிலே இருக்கின்ற கட்சியினர் நடத்திய உண்ணா விரதம் போன்ற நிகழ்ச்சிகளிலேகூட அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, இன்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தன்னை கை விட்டு விடுவார்களோ என்பதற்காக திடீரென்று போர் நிறுத்தம் செய்வதற்காக மத்திய மாநில அரசுகள் குரல் கொடுக்காமல் நாடகமாடுவதாக அறிக்கை விடுத்துவிட்டு நிதிநிலை அறிக்கையை புறக்கணிக்கச்
செய்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியிலே ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் என்று சிரிப்பாய் சிரித்த நிலை மறந்து போய், தற்போது எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாக ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்று அறிக்கையிலே கூறியிருக்கிறார்கள். ஒருவேளை அந்த அறிக்கையைத் தயாரித்தவர் கிண்டலாக “ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அ.தி.மு.க. இப்போது அறிக்கை என்ற பெயரால் தலை விரித்து ஆடுகிறது” என்று எழுதியிருக்கிறாரோ என்னவோ? மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கழக அரசின் சாதனைகளை அன்றாடம் அனுபவித்து வரும் தமிழ்நாட்டு மக்கள்; வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டனவா என்பதை தெளிவாக அறிவார்கள். ஒரேயொரு உதாரணம் மட்டும் கூற வேண்டுமேயானால் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று வாக்குறுதி அளித்தோம். ஆனால் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று வழங்கி வருகிறோம். நாட்டு மக்களுக்கு இது தெரியாதா?
பிரதான எதிர்க்கட்சிதான் நிதி நிலை அறிக்கை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறதென்றால், அவர்களுடன் தோழமை பூண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும், ம.தி.மு.க.வும் பேரவை நடவடிக்கைகளிலே கலந்து கொண்டு ஜனநாயக முறையிலே நிதி நிலை அறிக்கை பற்றி தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதற்காக நன்றி செலுத்துகின்ற அதே நேரத்தில் நிதி நிலை அறிக்கை குறித்து அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு முறையான பதிலளிக்க வேண்டிய கடமை உணர்வோடு பதிலளிக்க விரும்புகிறேன்.
விவசாயிகள் வாங்கும் கூட்டுறவுக் கடன்களுக்கு இனி வட்டி கிடையாது என்றும், அந்த வட்டித் தொகையை அரசாங்கமே விவசாயிகளுக்காகச் செலுத்தும் என்றும் நிதி நிலை அறிக்கையிலே அறிவித்திருப்பதை ஜெயலலிதா வழக்கம் போல் மிகப் பெரிய ஏமாற்று வேலை என்று சொல்லியிருக்கிறார். கழக அரசு தீட்டியுள்ள ஒவ்வொரு திட்டத்தையும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஏமாற்று வேலை என்று கூறுவதும், பிறகு அது மிகப் பெரும் வெற்றியாக அமைவதும் தமிழகத்திலே நாம் கண்டு வருகின்ற ஒன்று தான். புதிய பயிர்க் கடன்கள்
இந்த ஆண்டு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதி நிலை அறிக்கையிலே சொல்லப்பட்டிருப்பது பற்றி ஜெயலலிதா, விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகளில் பயிர்க் கடன்கள் கிடைக்க வில்லை என்று நிதி நிலை அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமலே சொல்லியிருக்கிறார். 2006-2007ஆம் ஆண்டு 1,250 கோடி ரூபாயும், 2007-2008இல் 1,360 கோடி ரூபாயும், நடப்பு நிதியாண்டில் இதுவரை 1,325 கோடி ரூபாயும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று எழுதப்பட்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை போலும்!
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், புதிய சட்டமன்ற வளாகம், நவீன மாநில நூலகம் போன்ற திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே மட்டும் இடம் பெறுவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா ஒரு நாள் தனது காரை எடுத்துக்கொண்டு இந்தப் பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பார்த்தால் நேரிலேயே அந்தப் பணிகள் நடைபெறும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகளும், ம.தி.மு.க.வும் இந்த நிதி நிலை அறிக்கையை பாராளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு தீட்டப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று சொல்லியிருப்பதிலிருந்தே, அவர்கள் எல்லாம் இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்கக் கூடிய நிதி நிலை அறிக்கை என்றும் மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய நிதி நிலை அறிக்கை என்றும் கருதுகிறார்கள் என்பது திட்டவட்டமாக தெளிவாகிவிட்டது. ஆனால் இப்படிப்பட்ட நிதி நிலை அறிக்கை வெளியீக் காரணம் பாராளுமன்றத் தேர்தல்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். திருமணத்திற்கென்று எடுத்த பட்டுப்புடவையை, திருவிழாவிலே கட்டிக் கொள்வதில் தவறில்லையே! குடும்பப் பெண்கள் அப்படிச் செய்வது வழக்கம்தானே? பாராளுமன்றத் தேர்தலுக்காகவோ என்னவோ, நிதி நிலை அறிக்கை நல்லதொரு அறிக்கை என்று அவர்கள் ஒப்புக் கொண்டமைக்காக நன்றி.
விவசாய வளர்ச்சிக்கு - வேளாண்மைக்கு - நிதி நிலை அறிக்கையிலே எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியத் திரு நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு
விவசாயிகள் பெறும் கூட்டுறவு கடன்களுக்கு இனி வட்டியே கட்ட வேண்டியதில்லை என்றும், விவசாயிகளுக்குப் பதிலாக அந்த வட்டித் தொகையை அரசாங்கமே செலுத்தும் என்றும் அறிவித்திருப்பது விவசாயிகளுக்காகச் செய்யப்பட்ட சாதனை இல்லையா?
எத்தனையோ ஆண்டுகளாக - நம் நினைவு தெரிந்த நாள் முதல் இருந்த வரி “நில வரி.” அந்த நில வரி இனிமேல் பெயர் அளவில் - அந்த நிலத்திலே உரிமை கோருவதற்காக மட்டும் இருந்தால் போதும் என்று கூறி இது வரை புன்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ரூபாய் என்பதிலிருந்து இரண்டு ரூபாயாகவும், நஞ்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்பதிலிருந்து 5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறதே, அது விவசாயிகளுக்காக செய்யப்பட்ட நன்மை இல்லையா?
இந்த அளவிற்கு குறைக்கப்பட்ட நில வரியைக் கூட, இந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களுக்கு அறவே கிடையாது என்று நிதி நிலை அறிக்கை கூறுகிறதே, அது நன்மை இல்லையா?
விவசாயிகளுக்கு தல வரி, தல மேல் வரி என்பது இனிமேல் அறவே கிடையாது என்று அறிவித்திருக்கிறோமே, அது நன்மை இல்லையா? கம்யூனிஸ்ட் கட்சிகளின் பழைய நண்பர்களே, விவசாயிகளுக்கு இவைகள் எல்லாம் சாதனை இல்லை என்றால் வேறு எதைத்தான் சாதனை என்று கூறுவீர்கள்? விவசாயிகளுக்கு இந்த ஆண்டு புதிதாக கடன் கொடுப்பதற்காக மட்டும் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோமே, அது சாதனை இல்லையா?
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள காப்பீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை அரசாங்கமே செலுத்துகிறதே, வேறு எந்த மாநிலத்திலே இந்தத் திட்டம் இருக்கிறது? வரும் ஆண்டிலே 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள அரசு மானியம் அளிக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையிலே பத்தி 13 கூறுகிறதே, அது சாதனை இல்லையா? விவசாயிகளுக்காக சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்துவதோடு புதிய குழுக்களுக்கு சுழல் நிதியும்
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே அது சாதனை இல்லையா?
ம.தி.மு.க. சார்பில் நிதி நிலை அறிக்கை மீது கருத்துக் கூறியுள்ள தம்பி மு. கண்ணப்பன், இலங்கையில் போரை நிறுத்த மைய அரசை அழுத்தம் கொடுக்கவில்லை என்று சொல்லியிருப்பது கட்சிக் கட்டுப்பாட்டின்படி என்று கருதுகிறேன். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நிதி நிலை அறிக்கையில் பத்தி 5இல் கூறப்பட்டுள்ளது. அதில் “இரு சாராரும் போரை நிறுத்தி நியாயமான உடன்பாட்டிற்கு வந்திடத் தேவையான தீவிர முயற்சிகளை இந்தியப் பேரரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் சக்திக்கு உட்பட்ட வரை, ஒரு மாநில அரசு எந்த அளவிற்கு வலியுறுத்த முடியுமோ அந்த அளவிற்கு இலங்கையிலே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் நாம் குரல் கொடுத்துள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர், விலைவாசியைக் குறைக்க எந்தவிதமான திட்டமும் நிதி நிலை அறிக்கையிலே கூறவில்லை என்று சொல்லியிருக்கிறார். ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கும் திட்டம், மலிவு விலையில் மளிகைப் பொருள்களை 50 ரூபாய்க்கு வழங்கும் திட்டம், ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு சலுகை என்ற நிலையில் இரண்டு பொங்கலுக்கு அரிசி, பருப்பு, வெல்லம் வழங்கியது, 100 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகை அளித்தது, உழவர் சந்தைகளை பொலிவுடன் நடத்துவது போன்ற திட்டங்கள் எல்லாமே விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்தான்.
மூன்றாண்டு காலமாக அரசுக்கு நிதி நிலையில் எவ்வளவோ சிரமங்கள் இருந்தபோதிலும், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது, மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது, புதிதாக வரிகளைப் போடாமல் இருப்பது, வரிச் சலுகை அளிப்பது எல்லாமே விலைவாசி மேலும் மேலும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள்தான். தமிழகத்திலே வேறு
ஒரு ஆட்சி அமைந்திருந்தால் இந்த மூன்றாண்டு காலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருப்பார்களா? மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருப்பார்களா? என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் எல்லாம் திரும்பத் திரும்ப இவைகளை உயர்த்த வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில் எல்லாம் வெவ்வேறு வழிகளைக் கண்டு பிடித்து பாமர மக்களுக்கு பளுவினைத் தந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறோம்.
பா.ம.க. சட்டமன்றத் தலைவர், நண்பர் கோ.க. மணி அவர்கள் கூட இந்த நிதி நிலை அறிக்கை பா.ம.க. வெளியிட்ட “மாதிரி நிதி நிலை” அறிக்கையைப் போல உள்ளது என்று கூறிவிட்டு, முடிக்கும்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதி நிலை அறிக்கை போல இருந்தாலும், அற்புதமாக பாராட்டும் வகையில் இல்லை என்று முடித்திருக்கிறார். அந்த வார்த்தைகள், சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தைகளாகத்தான் தெரிகின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், நண்பர் திரு. கே.வி. தங்கபாலு, எம்.பி., சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பெரியவர் திரு. சுதர்சனம், தாய்க் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழகச் சார்பில் அருமை நண்பர் ஆர். எம். வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் அறிக்கை விட்டுள்ள தம்பி ரவிக்குமார், ஹைதர் அலி, ஜெகத்ரட்சகன், திருப்பூர் அல்தாப், செல்லமுத்து, ஏ.சி. சண்முகம் மற்றும் அரசு அலுவலர் உட்பட பல்வேறு சங்கங்கள், அமைப்புகளைச் சார்ந்தோர் இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்று பாராட்டியிருப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்” - ஆனால் நம்முடைய எண்ணம் எல்லாம் நிதி நிலை அறிக்கையிலே குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல என்னுடைய எண்ணங்களும், இந்த அரசின் செயல்பாடுகளும், இந்த நாட்டிலே வாழும் அடித்தட்டு மக்களையே சுற்றிச் சுற்றி சுழன்று வருகின்றது
என்பது தான் உண்மை என்பதற்கு அடையாளமே இந்த நிதி நிலை அறிக்கை.
இந்த நிதி நிலை அறிக்கையிலே தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் இந்த மருத்துவமனையிலே சிகிச்சை படுக்கையிலே இருந்து கொண்டு, ஒரு கடிதத்திலே எழுதி விட முடியாது. அவைகளை யெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு, அருமை உடன்பிறப்பே, உன் கையில்தான் உள்ளது. அதற்கான முயற்சிகளிலே ஈடுபட வேண்டும். அதற்கான நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். தற்போது இளைஞர் அணி சார்பில் அத்தகைய கூட்டங்களை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்கள். அவர்களுடன் இணைந்து தமிழகம் எங்கும் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்திட கேட்டுக் கொள்கிறேன். இறுதி எஜமானர்களாகிய மக்கள் எப்போதும் போல இந்த திட்டங்களுக்கு தங்கள் மதிப்பெண்களை தந்தே தீருவார்கள்.
அன்புள்ள, மு.க. 19-2-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 33–40. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.