முரசொலி கடிதங்கள் · 3369
புதியதோர் விதி செய்வோம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3369. புதியதோர் விதி செய்வோம்!
உடன்பிறப்பே,
“சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் அறிக்கை அவையிலே வைக்கப்பட்டது” என்று அடிக்கடி செய்தி வருவதைப் பார்த்திருக்கலாம். அது என்ன பேரவை விதி 110? சட்டமன்றம் நடைபெறுவது பற்றியும், அப்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகள் பற்றியும் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் புத்தகத்தில், ஒவ்வொரு விதியாக வரிசையாக அச்சிடப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. அந்த விதிகளைத்தான் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். அந்த வரிசையிலே பேரவை விதி 110 என்ன சொல்கிறது?
விதி 110 :-
(1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.
(2) அவ்வறிக்கையின் மீது அப்போது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.
(3) உள் விதி 1இன் கீழ் அறிக்கை யளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்த நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும், பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே பேரவைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.
இதுதான் பேரவை விதி 110. இந்த விதியின் கீழ்தான் பேரவையில் முதல் அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் குறித்து பல அறிக்கைகளை அவையிலே வைத்திருக்கிறார்கள். அதுவும் கடந்த கால
ஜெயலலிதா ஆட்சியில் நாள் தவறினாலும், விதி 110இன் கீழ் அறிக்கை அளிக்கத் தவறுவதில்லை. அரசின் சார்பாக எந்த அறிவிப்பு செய்வதாக இருந்தாலும், அதற்கு விதி 110இன் கீழ் அறிக்கை வைத்து விடுவார்கள். காரணம் அதன் மீது யாரும் கேள்வி கேட்க முடியாது. எந்த உறுப்பினர் அதைப் பற்றிக் கேள்வி கேட்க எழுந்தாலும், உடனே பேரவைத் தலைவர் விதி 110இன் கீழ் அறிக்கை வைக்கப்பட்டுள்ளது, அதன் மீது கேள்வி கேட்க யாருக்கும் அனுமதி கிடையாது, உட்காருங்கள் என்பார். உறுப்பினர்களும் அமர்ந்து விடுவார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் அவை நடவடிக்கை குறிப்பிலே தேதிவாரியாக உண்டு. யார் வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக ஒன்றைக் காட்ட வேண்டுமானால் - 1.4.2002 அன்று பேரவை நடவடிக்கை புத்தகத்தின் 152வது பக்கத்தில் காணலாம். அப்போது பேரவைத் தலைவர் கூறிய வாசகம் என்ன?
“மாண்புமிகு பேரவைத் தலைவர்:- போலீஸ் கடவுச் சீட்டு பிரச்சினையில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குவைத் பெண் தலால் ஆஸ்மி குறித்து சிறப்புக் கவன ஈர்ப்பாக திரு. சி. ஞானசேகரன், திரு. போளூர் வரதன், திரு. எ.வ. வேலு மற்றும் திரு லா. சந்தானம் ஆகியோர் அறிவிப்புக் கொடுத்துள்ளார்கள். கவன ஈர்ப்பாக திரு. ஜே. ஹேமச்சந்திரன், திரு. டி. மணி, செல்வி பாலபாரதி, திரு. வை. சுப்பிரமணியம் மற்றும் திரு. ஜி.கே. மணி ஆகியோர் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருதி மாண்புமிகு முதலமைச்சர் (ஜெயலலிதா) அவர்கள் விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கை அளிக்கிறார்கள்.”
இதற்குப் பிறகு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து ஓர் அறிக்கையினை விதி 110இன் கீழ் படிக்கிறார். அதற்குப் பிறகு எந்த உறுப்பினருக்காவது அந்த அறிக்கை பற்றியோ, அந்தப் பிரச்சினை பற்றியோ கேள்வி எழுப்புவதற்கோ, பேசுவதற்கோ பேரவைத் தலைவரால் அனுமதி கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை. ஆனால் நேற்றையதினம் பேரவையில் பிரச்சினையைக்
கிளப்பிய பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இப்படி அறிக்கை படிக்கப்பட்ட போது, அவையிலே இருந்த அதே பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள்தான். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அப்போது விதி 110இன் கீழ் படிக்கப்பட்ட அறிக்கை குறித்து விவாதம் நடத்திட அனுமதிக்கப்பட்டார்களா என்றால் கிடையாது. அதை அப்போது மட்டும் ஏற்றுக் கொண்டார்களா என்றால், ஏற்றுக் கொண்டார்கள். இப்போது மட்டும் எழுந்து இவ்வளவு கேள்வி கேட்கிறார்களே, விவாதம் நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறார்களே, அவையிலிருந்து வெளியேற்றக் கூடிய அளவிற்கு நடந்து கொள்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன காரணம்? 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியிலே விதி 110இன் கீழ் அறிக்கை வைத்தால், அதன் மீது விவாதம் நடத்துவதற்கோ, பேசுவதற்கோ அன்றைய ஆளுங் கட்சியான அ.தி.மு.க. அனுமதி கொடுத்ததே கிடையாது. ஆனால் இப்போது அதே கட்சியினர் விதி 110இன் கீழ் தி.மு. கழக ஆட்சியிலே அறிக்கை கொடுத்தால் மட்டும் எழுந்து பேச அனுமதிக்க வேண்டுமென்று பிரச்சினை கிளப்புகிறார்களே, அது சரியா? அது நியாயமா? இது தான் இன்று மக்கள் முன் உள்ள கேள்வி.
110வது விதியின் கீழ் அறிக்கை படிக்க விடாமல், அந்தப் பொருள் மீது விவாதம் நடத்தி, பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று வாதாடிய பா.ம.க. நண்பர்கள் வெளியிலே வாயைப் பொத்திக் கொண்டு தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விதி 110இன் கீழ் அவர் அறிக்கை படித்தபோது, அதிலே எழுந்து விவாதம் நடத்த முன் வராமல் கையால் வாயைப் பொத்திக் கொண்டு தற்போது போராட்டம் நடத்துவதைப் போல நடத்தாமல், வெறுமனே வாயை மூடிக் கொண்டிருந்ததற்கும், தற்போது எவ்வளவு வேகமாக போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பா.ம.க.வைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கூட, முதலமைச்சர் கலைஞர் அவையிலே இருந்திருந்தால், வெளியேற்றப்பட்ட எங்களை மீண்டும் அவைக்கு அழைத்திருப்பார் என்று கூறினாராம்.
உண்மைதான். நானே அழைத்திருப்பேன். அல்லது உறுப்பினர்கள் இந்தப் பொருள் குறித்து பேச வேண்டுமென்று என்னிடம் கூறியிருப்பார்களேயானால், அவர்களையும் சிறிது நேரம் அந்தப் பொருளிலே பேச விட்டு, 110இன் கீழ் படிக்கப்பட்ட அறிக்கையினை பதிலாகவே அளித்திருக்கச் செய்திருப்பேன். விதிப்படி நடக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இராமல், கொஞ்சம் நீக்கு போக்கு தெரிந்து நடந்து கொண்டிருப்பேன். ஆனால் நான் இல்லாத நிலையில் ஆளுங்கட்சியும், பேரவைத் தலைவரும் விதியை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அது அவர்கள் மீது தவறு கிடையாது. அவை மரபுப்படி நடக்க வேண்டுமென்பதில் உள்ள அக்கறைதான் காரணம் என்று கூறலாம். அவையில் அமளியை உருவாக்கிய உறுப்பினர்கள் அவை விதிகளை அறியாதவர்கள் அல்ல; அப்படியிருந்தும் இப்படி நடந்து விட்டதே என்பதுதான் எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும்! என்ன செய்வது? அரசியல் குறுக்கிடும் போது, அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
பேரவை விதி 56இன் கீழ் உறுப்பினர்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு குறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரி தீர்மானம் கொடுத்தால், அதனை எடுத்துக் கொண்டே ஆக வேண்டுமென்று ஏதாவது விதியில் கூறப்பட்டிருக்கிறதா என்றால் அப்படியும் கிடையாது. பேரவையில் குறிப்பிடப்பட்ட பொருளை எழுப்புவதற்கு பேரவைத் தலைவர் தமது இசைவைத் தர மறுக்கலாம் என்றும், பேரவைத் தலைவர் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்வதென்று முடிவு செய்தால், அவரது முடிவே இறுதியானதாகும் என்றும், பேரவை முன் அதே பொருளை எவ்வகையிலும் எழுப்ப முயலக் கூடாது என்றும் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வினர் ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதிலே உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாமலேயிருக்க வேண்டி விதி 110இன் கீழ் அறிக்கை கொடுத்து வந்தார்கள். நேற்றைய தினம் அமைச்சர் அந்தப் பொருள் குறித்து அறிக்கை படிக்கவிருக்கிறார் என்று தெரிந்த பிறகு - கேள்வி
நேரத்தையே ஒத்தி வைத்து விட்டு விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?
கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டு மென்றால், அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் ஒத்தி வைக்கலாம். யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால்கூட, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க இயலாது. ஆனால் நேற்றையதினம் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, அதனை ஒத்தி வைத்து விட்டு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டு அதற்காக பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறார்கள். உறுப்பினர்களை வெளியேற்றினார்கள் என்று சொல்லப்படுவதுகூட, கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதனை நடக்க விடாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பிய காரணத்தால்தான், பேரவை முறையாக - அமைதியாக நடக்க - கூச்சல் எழுப்பியவர்களை வெளியேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத நிலை பேரவைத் தலைவருக்கு ஏற்பட்டுள்ளது போலும்!
இடையில் பேரவைத் தலைவர் அவர்கள்கூட - வினா, விடை நேரத்திற்குப் பிறகு என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தினமணி நாளிதழிலேயே செய்தி வந்துள்ளது. ஆனாலும் உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இந்தப் பதிலால் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதாக அந்த ஏட்டிலே செய்தி உள்ளது. விதி 110-ன் கீழ் படிக்கப்படும் அறிக்கை குறித்து ஏதாவது கருத்து கூற வேண்டுமென்றால், அப்போதே அதனை தெரிவிக்க இயலவில்லையென்றால், பிறகு அதே நாளில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும்போது, அவர்கள் கட்சியின் சார்பில் யார் பேசுகிறார்களோ அவர்கள் மூலமாக அந்தக் கருத்தைப் பேச செய்யலாம்.
எப்படியோ நடந்தது நடந்து விட்டது. இனியாவது அவை அமைதியாக - முறையாக நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நீதி
மன்றத்திலே நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முறைப்படி விசாரணை நடைபெறும். தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதிலே வழக்கறிஞர்களா, காவல் துறையினரா என்ற வேறுபாடு கருதாமல் இருவரும் நம்மவர்கள் என்ற எண்ணத்தோடு செயல்படுவோம். ஒருவர் காக்கி உடையிலும், ஒருவர் கருப்பு உடையிலும் இருக்கும் நம்முடையவர்களே! இப்போதுள்ள சட்டமன்ற விதிமுறைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டவை; அதில் சில மாற்றங்கள் வேண்டுமென்றால் சட்டசபைக்கான விதிகளைத் தயாரிக்கும் குழுவினர் கலந்து பேசி அந்தப் புது விதிகளைத் தயார செய்யலாம். எனவே புதியதோர் விதி செய்வோம் - இருக்கும் விதியை இப்போது மதிப்போம்!
அன்புள்ள, மு.க. 22-2-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 42 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065826_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_42.pdf; PDF பக்கம் 50–55. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.